இந்தியா

பாராளுமன்ற வளாகத்தில் சோனியா, ராகுல் காந்தி தர்ணா போராட்டம்

Published On 2023-03-17 10:09 GMT   |   Update On 2023-03-17 10:09 GMT
  • பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகின்றன.
  • பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி:

அதானி குழுமம் பங்கு மதிப்பை உயர்த்தி காட்டுவதற்காக மோசடியில் ஈடுபட்டதாகவும், இதற்காக வெளிநாட்டு போலி நிறுவனங்களை பயன்படுத்தியதாகவும் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் கடந்த ஜனவரியில் குற்றம் சாட்டின. இதன் எதிரொலியாக அதானி குழும பங்குகள் பெரும் அளவில் சரிவடைந்தன.

அதானி குழும விவகாரத்தில் மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் பல்வேறு கேள்விகளை எழுப்பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகின்றன. ஆனால் மத்திய அரசு இதற்கு செவி சாய்க்காமல் இருக்கிறது.

அதானி குழும முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த கோரி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி எதிர்க்கட்சியினர் நேற்று முன்தினம் பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

இதை தொடர்ந்து நேற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இன்றும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. பராளுமன்ற வளாகத்தில் நடந்த போராட்டத்தில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி பங்கேற்றனர்.

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட பிறகு பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒன்று கூடினார்கள். அதானி குழும விவகாரத்தில் பராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் தி.மு.க.வை சேர்ந்த டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினார்கள். கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கைகளில் பதாகைகளை வைத்தி ருந்தனர்.

அதானி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போரா ட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News