இந்தியா

பெங்களூரில் 13-ந்தேதி நடக்க இருந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் திடீர் ரத்து

Published On 2023-07-03 04:28 GMT   |   Update On 2023-07-03 06:59 GMT
  • பெங்களூரு ஆலோசனை கூட்டம் தள்ளிப்போவதற்கு வேறு சில முக்கிய காரணங்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
  • பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

புதுடெல்லி:

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதாவை வீழ்த்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளன.

ஆனால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் ஒருமித்த கருத்துடன் ஒன்று திரளுமா? என்பதில் தொடர்ந்து சந்தேகம் நிலவுகிறது. குறிப்பாக காங்கிரஸ் தலைமையை ஏற்க சில மாநில கட்சி தலைவர்கள் இன்னமும் தயங்குகிறார்கள்.

எதிர்க்கட்சிகள் இடையே நிலவும் கருத்து வேற்றுமைகளை விலக்கி ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சிகளை பீகார் முதல்-மந்திரியும், ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ்குமார் மேற்கொண்டார். அவரது தொடர் முயற்சி காரணமாக கடந்த மாதம் 20-ந்தேதி பீகார் மாநிலம் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் சந்திப்பு நடந்தது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ராஸ்டீரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், தேசிய மாநாட்டு கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட 16 கட்சிகள் பங்கேற்றன. அப்போது தேசிய அளவில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

அடுத்த கட்டமாக மாநில அளவில் கூட்டணிகளை உருவாக்குவது, நாடு முழுவதும் 450 தொகுதிகளில் பொது வேட்பாளர்களை நிறுத்துவது மற்றும் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை வகுப்பது ஆகியவற்றை முடிவு செய்ய 2-வது முறையாக மீண்டும் சந்தித்து பேச எதிர்க்கட்சிகள் தீர்மானித்தன. 2-வது முறையாக சிம்லாவில் சந்திக்க முதலில் திட்டமிடப்பட்டது.

ஆனால் பருவமழை காரணமாக அந்த கூட்டத்தை கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரில் நடத்த முடிவு செய்தனர். வருகிற 13, 14-ந்தேதிகளில் பெங்களூரில் எதிர்க்கட்சி தலைவர்கள் மீண்டும் கூடி ஆலோசனை நடத்த இருந்தனர்.

இந்த நிலையில் பெங்களூரு ஆலோசனை கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ஐக்கிய ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த கே.சி.தியாகி உறுதிப்படுத்தினார். பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ந்தேதி தொடங்குவதால் பெங்களூரு கூட்டத்தை ஒத்திவைப்பதாக அவர் கூறினார்.

ஆனால் பெங்களூரு ஆலோசனை கூட்டம் தள்ளிப்போவதற்கு வேறு சில முக்கிய காரணங்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. பீகார் மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அதுபோல கர்நாடகா சட்டசபை கூட்டமும் இன்று தொடங்கி வருகிற 14-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த இரு சட்டசபைகள் கூடும் நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர்களை ஒரே இடத்தில் ஒன்று திரட்டுவது சாத்தியம் இல்லாததால் எதிர்க்கட்சிகளின் கூட்டம் ரத்தாகி இருக்கிறது. காங்கிரஸ், தி.மு.க. கட்சிகளும் பெங்களூரு கூட்டத்தை ஒத்திவைக்க வலியுறுத்தியதாக தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் திடீரென தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கட்சி தலைவர் சரத்பவார் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளார். பாட்னா கூட்டம் முடிந்த நிலையில் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளுக்கு வெவ்வேறு வகைகளில் சிக்கல் எழுந்துள்ளது.

இதன் காரணமாகவே பெங்களூரு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது. எனவே அதுவரை எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்காது என்று கூறப்படுகிறது.

இதனால் எதிர்க்கட்சி தலைவர்கள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக புதிய தேதி எப்போது அறிவிக்கப்படும் என்று தெரியவில்லை.

Tags:    

Similar News