இந்தியா

வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராகுல்- பிரியங்கா நேரில் ஆய்வு

Published On 2024-08-01 09:35 GMT   |   Update On 2024-08-01 09:47 GMT
  • மாநில அமைச்சர்கள் பலரை சம்பவ இடத்திற்கு முதலமைச்சர் பினராய் விஜயன் அனுப்பி வைத்துள்ளார்.
  • ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் பினராய் விஜயன் இன்று வயநாட்டிற்கு சென்றார்.

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அங்கு தோண்ட தோண்ட மனித உடல்கள் கிடைத்து வருகின்றன. கேரள மாநிலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவாக தற்போதயை நிலச்சரிவு மாறி வருகிறது.

நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட வயநாடு பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண நிதி வழங்குமாறு கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் அம்மாநில கவர்னர் ஆரிப் முகம்மதுகானும் அனைத்து மாநில மக்களும் இணைந்து நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலையை உடனடியாக அறிந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள வசதியாக மாநில அமைச்சர்கள் பலரை சம்பவ இடத்திற்கு முதலமைச்சர் பினராய் விஜயன் அனுப்பி வைத்துள்ளார்.

மேலும், நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அமைச்சர்கள் கூட்டத்தையும் நேற்று நடத்தினார்.

அதுமட்டுமின்றி இன்று அனைத்து கட்சி கூட்டத்தையும் நடைபெறுகிறது. அனைத்து கட்சியினரும் அதில் பங்கேற்றுள்ளனர். 

இந்நிலையில் நிலச்சரிவு பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் பினராய் விஜயன் இன்று வயநாட்டிற்கு சென்றார்.

அங்கு நிலச்சரிவு பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப்பணிகள் குறித்து முகாமிட்டுள்ள அமைச்சர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், மீட்புப்பணிகளை துரிதப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும், அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் மீட்புப் படையினருக்கு ஆணை பிறப்பித்தார். அது மட்டுமின்றி நிலச்சரிவில் குடும்பத்தினரை இழந்து தவிப்பவர்களையும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

வயநாட்டில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு பாதித்தவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று கேரள வருவதாக இருந்தது.

ஆனால் வயநாட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக அவர்கள் வர முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் அவர்கள் இருவரும் இன்று கேரள வந்தனர். கண்ணூர் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அவர்கள், ஒரே காரில் வயநாட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர்.

அவர்கள் நிலச்சரிவு பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுடன் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

Tags:    

Similar News