சிறப்புக் கட்டுரைகள்

யாரோடும் ஒப்பீடு செய்யாதீர்கள்

Published On 2024-05-19 10:00 GMT   |   Update On 2024-05-19 10:00 GMT
  • ஒப்பிட்டுப் பார்த்து வாழத்தொடங்கினால் பெரும்பாலும் துன்பமே மிஞ்சும்.
  • வாழ்க்கையில் மகிழ்ச்சி ஒன்றையே மூலதனமாக்கினால் எந்நாளும் வெற்றிதான்

ஒப்பீடு செய்வதால் உன்னதம் காணமுடியாது என்பதை நம்பும் இனிய வாசகர்களே! வணக்கம்.!.

நம் எல்லாருக்கும் வாழ்க்கை வழங்கப்பட்டிருக்கிறது; வாழ்க்கையை வாழ்வது என்பது பள்ளிக்கூடப் பாடங்களில் பரீட்சை எழுதுவதுபோலப் பல நேரங்களில் கடினமானதாகத்தான் இருக்கிறது.

வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் தேர்வு என்றால், அது ஒரே மாதிரியான தேர்வு அல்ல!; வழங்கப்பட்டிருக்கிற கேள்வித்தாளும் ஒரே மாதிரி கேள்வித்தாள் கிடையாது!; ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான கேள்வித்தாள்கள் வழங்கப் பட்டிருக்கின்றன.

எனவே நமக்கான தேர்வை நாம் மட்டுமே எழுதியாக வேண்டும். அடுத்தவரைப் பார்த்து எழுதவோ, அடுத்தவரோடு ஒப்பிட்டுப் பார்க்கவோ முடியவே முடியாத வினோதமானது நமது வாழ்க்கை.

அவர்களது வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து கொள்கிறார்கள்!. நம்முடைய வாழ்க்கையை நாம் வாழ்ந்துவிட்டுப் போவோமே!. அவரைப் போல வாழ்!;

இவரைப் போல வாழ்! என்று சிலரை முன்மாதிரிகளாகவோ, எடுத்துக் காட்டுகளாகவோ வைத்துக் கொள்ளலாமேயொழிய, அவரோடு நாம்!, இவரோடு நாம்! என்று ஒப்பிட்டுப் பார்த்து வாழத் தொடங்கினால் பெரும்பாலும் துன்பமே மிஞ்சும்.

ஒப்பீடு செய்வதன்மூலம் சிறந்தவற்றைக் கண்டறிய முடியும்! என்று சிலர் கூறலாம். ஆனால் எந்த வகையிலும் சமமாகவோ பொருத்தமாகவோ இல்லாதவரோடு ஒப்பீடுகள் நிகழ்த்தி நிகழ்த்தியே உருப்படாமல் போன கதைதான் இங்கு அதிகம்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்திருக்கும் ஒப்பிடும் குணத்தை அவனது குழந்தைப் பருவத்திலேயே, பெற்றோர்கள் உசுப்பிவிட்டு விடுகிறார்கள்." அண்ணனைப் பார்! தம்பியைப் பார்! அக்காவைப் பார்! தங்கையைப் பார்!" என்று உடன்பிறந்தோரில் தொடங்கி, அண்டை வீடு, அயல் வீடு, உடன் படிப்போர், ஊடகங்களில் வரும் சாதனைகள் புரிவோர் … என எந்த அளவீடுகளும் இல்லாமல் எல்லாருடனும் ஒப்பிடத் தொடங்கி விடுவார்கள்.

உயரமாக,குள்ளமாக, குண்டாக, ஒல்லியாக, வெள்ளையாக, கறுப்பாக, முடி அடர்த்தியாக, நீளமாக, என உருவத்தில் தொடங்கி, உண்ணுகிற உணவு, படிக்கிற படிப்பு, எடுக்கிற மதிப்பெண், விளையாடுகிற விளையாட்டு, சாதிக்கிற சாதனைகள் வரை எல்லாவற்றிலும் ஒப்பீடுகள்.

ஒப்பீடுகள் பெரும்பாலும் திட்டல்களில் தொடங்கி, 'நீ எங்கே உருப்படப் போறே!' என்று சாபங்களிலேயே நிறைவு செய்வார்கள்!. குழந்தைப் பருவத்தில் பெற்றோரிடமிருந்து பற்றிக்கொள்ளும் ஒப்பிடும் குணம் கடைசிவரை மாற மறுக்கிறது.

பெரும்பாலும் நமது ஒப்பிடும் குணம் நம்மில் இருந்தே தொடங்குகிறது; அடுத்தவர்கள் நம்மைவிட எவ்வளவு தூரம் நல்ல நிலையில் இருக்கிறார்கள்? என்று சிந்திக்கத் தொடங்கும் அடிப்படையிலேயே ஒருவிதப் பொறாமைகுணம் நம்மை அறியாமலேயே நம்மிடம் ஒட்டிக்கொள்ளத் தொடங்கி விடுகிறது.

பொறாமை எனும் தீக்குணம் நம்மிடம் வந்துவிட்டால், வஞ்சனை, கோபம், சூழ்ச்சி,பொய், களவு என அத்தனை பேய்க்குணங்களும் மனித மனத்தை ஆட்டிப் படைக்க ஆரம்பித்துவிடுகின்றன.

அடுத்தவரோடு நம்மை ஒப்பிட்டுநோக்கிப் பார்ப்பதன்மூலம், 'அவரைப்போல நாமும் உழைக்க வேண்டும்!, அவரைப்போலப் படித்து முன்னேற வேண்டும்!, அவரைப்போல நல்ல வேலையில் அமர வேண்டும்!,

அவரைப்போல செல்வந்தர் ஆகவேண்டும், அவரைப்போல நல்ல மனிதராக வலம் வர வேண்டும்!,அவரைப்போலச் சாதனைகள் புரிய வேண்டும்!' என நமக்கு நாமே ஊக்கம் அடைந்துகொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு என்று சிலர் கருதலாம். ஆனால் பெரும்பாலான தருணங்களில் ஒப்பீடுகள் நேர்முறை விளைவுகளைவிட எதிர்மறை விளைவுகளையே உண்டாக்கி விடுகின்றன.

ஒப்பிட்டுப் பார்ப்பதில் அடிப்படையில் தவறு இல்லை; ஆனால் ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கும்போதே ஒருவகை எதிர்மறைகுணம் நமக்குள் வந்து அமர்ந்து கொள்வதால், எதிர்மறைச் சிந்தனையோடு, அடுத்தவர்களைப் பற்றிய தவறான கணிப்புகளையும் நாக்கூசாமல் பேசவும், விரல்கூசாமல் எழுதவும் தொடங்கி விடுகிறோம். இதுவே நம்மைத் தீயவர்களாக மாற்றி விடுகிறது.

ஜப்பானிய சாமுராய் வீரர்கள் பெரும்பலம் பொருந்திய மகா வீரர்கள். நாட்டிற்காக உயிரையும் துச்சமென மதித்துப் போரிடுபவர்கள். அப்படிப்பட்ட சாமுராய் வீரர்களில் ஒருவன், அந்த ஊரில் இருந்த புகழ்மிக்க ஜென் மத குருவைக் காணச் சென்றிருந்தான். அதிகாலை நேரத்திலேயே மடத்திற்குச் சென்றுவிட்டான்.

குரு ஆசுவாசமாக எழுந்து காலைப் பிரார்த்தனை, தியானம் போன்றவற்றை வரிசைக் கிரமமாகச் செய்துவிட்டு சாமுராய் வீரனை மெல்லிய புன்னகையோடு வரவேற்று வந்த காரியத்தை வினவினார்.

கொஞ்சம் படபடப்போடு காணப்பட்ட வீரன் பேசத் தொடங்கினான், " குருவே நான் ஒரு சாமுராய் வீரன். நீங்கள் எப்படி இங்கிருந்துகொண்டு ஆன்மீக அடிப்படையில் நாட்டுமக்களின் அமைதிக்குப் பாடுபடுகிறீர்களோ, அதைப்போல நான் போர்முனையில் இருந்து கொண்டு நாட்டுமக்களின் அமைதிக்குப் பாடுபட்டு வருகிறேன்!.

நாலைந்துமுறை சாவின் விளிம்புவரை சென்று வந்திருக்கிறேன். கோழைகளாய் இருந்து சாவைச் சந்திக்க இருந்த பத்துக்கும் மேற்பட்டவர்களை எனது வாள்முனையில் காப்பாற்றி இருக்கிறேன்."

சாமுராய் வீரன் எதற்காக இந்தப் பீடிகை போடுகிறான்? என்ன கூற வருகிறான்? என்பதை முன்கூட்டியே ஊகித்தறியும் அவசரமில்லாமல் ஜென் குரு அமைதியான புன்னகையோடு செவிமடுத்துக் கொண்டிருந்தார்.

சாமுராய் மேலும் தொடர்ந்தான்." இவற்றை யெல்லாம் நான் ஏன் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றால், அடிப்படையில் நீங்களும் நானும் ஒரே நோக்கத்திற்கான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்! என்பதை விளங்க வைப்பதற்குத்தான். நாடும் மக்களும் அமைதியாக வாழவேண்டும் என்பதே நம் இருவரின் நோக்கமாகவும் இருக்கிறது!"

"இதில் இங்கு நான் வந்ததற்கான காரணம் என்ன வென்றால், என் மனத்தில் ஓடிக்கொண்டிருக்கிற அடிப்படையான ஒரு வினாவை உங்களிடம் கேட்டுத் தெளிவுபெற்றுச் செல்ல வேண்டும் என்பதுதான். "

"துறவியாகிய நீங்களும் போர்வீரனாகிய நானும் ஒரே நோக்கத்திற்காக வாழ்கிறோம் என்றாலும், நீங்கள் உங்கள் விருப்பப்படி எழுகிறீர்கள், எந்த வேலையும் செய்யாமல் தியானம் என்ற பெயரில் உட்கார்ந்தே அனுபவிக்கிறீர்கள்;

காலத்தைக் கழிக்கிறீர்கள், காலைமுதல் மாலை வரை ஏராளமான மக்கள் வந்து உங்களுக்கு வணக்கம் சொல்கிறார்கள்; உங்களிடம் கடவுளைப்போல ஆலோசனை கேட்டுப் போகிறார்கள்;

நீங்களும் எந்த சிரமமும்படாமல் சிரித்த முகத்தோடு ஆசீர்வாதங்களை அள்ளி வழங்குகிறீர்கள்!. நானோ அன்றாடம் வேகாத வெயிலில் போர்ப் பயிற்சியிலும், போர்முனைகளிலும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறேன்!. இது எந்த வகையில் நியாயம்?" என்று கேட்டான் சாமுராய்.

"இப்போது என்னைச் சந்தித்து ஆலோசனையும் ஆசீர்வாதங்களும் பெறுவதற்காக நிறைய அன்பர்கள் வந்து மடத்தில் காத்திருக்கிறார்கள். அவர்களைப் பார்த்துவிட்டு வந்து உன் கேள்விக்குப் பதில் சொல்கிறேன்;

மாலைவரை காத்திரு!" என்று கூறிவிட்டு ஜென்குரு அன்பர்களைக் காணச் சென்றுவிட்டார். அங்கே வந்திருந்த ஒவ்வொருவருக்கும் புன்னகை மாறாத முகத்தோடு ஆசி வழங்கினார் துறவி.

மாலைநேரம் கடந்து இருட்டத் தொடங்கிவிட்டது. துறவியைக் காணவந்திருந்த அனைவரும் சென்று விட்டனர். இப்போது துறவி, சாமுராயை உள்ளே தன் இடத்திற்கு அழைத்துச் சென்றார். அமைதியான இருள்; வானத்தில் நிலவு வந்து தன் வெளிச்சக் கிரணங்களைப் பரப்பத் தொடங்கியிருந்தது.

துறவி பேசினார்," வீரனே வா!. இந்த வானத்தை பார்! மெல்லிய வெளிச்சத்தை பூமி முழுவதும் பரப்புவதற்காக அமைதியாக வந்துகொண்டிருக்கும் நிலவைப் பார். இனி விடியும் வரை வானத்திலும் பூமியிலும் இந்த நிலவின் ஆட்சிதான். நாளை விடிந்தவுடன் சூரியன் வந்து விடும்;

அதன் ஒளியாட்சி தொடங்கிவிடும். பகலின் சூரிய ஒளியில் இப்போது மங்கலாகத் தெரிபவை எல்லாம் துல்லியமாகக் காட்சியளிக்கும். மலை, அருவி, கடல், வயல் என அனைத்தும் இரவின் நிலவொளியில் தெரிந்ததைவிடப் பன்மடங்குத் தெளிவாகச் சூரிய ஒளியில் தெரியும்."

`நாம் இப்போதைய இரவிலும் நிலவைப் பயன்கொள்கிறோம்; நாளைய பகலில் சூரியனையும் பயன்கொள்கிறோம். என்னுடைய பயன் குறைவு என்று நிலவோ என்னுடைய பயன் கூடுதல் என்று சூரியனோ எந்த நேரத்திலும் குறைப்பட்டுக் கொண்டதாகவோ, மார்தட்டிக் கொண்டதாகவோ இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. ஏனென்றால் அவை ஒன்றையொன்று ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதில்லை!" என்றார் துறவி.

படைப்புகள் அனைத்தும் அவ்வவற்றிற்கு வழங்கப்பட்டுள்ள வாழ்வியல் குறிக்கோள்களோடு வாழத் தொடங்கினாலே போதும். அவற்றின் பிறவிப்பயன் அடுத்தவர்க்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

அடுத்தவர் கட்டியிருக்கும் வீட்டையோ, வாங்கியிருக்கும் பொருள்களையோ, வாழுகின்ற வசதியான வாழ்க்கையையோ நம்முடையவற்றோடு ஒப்பிட்டுப் பார்ப்பதால் தேவையற்ற பொருள் விரயத்தையும் அதனால் பெரும்பான்மை நேர விரயத்தையும் நாம் சந்திக்க நேரிடும்.

பொறாமையில் பொசுங்கிடும் மனம் என்றுமே வளமாகச் சிந்திக்கும் திராணியற்றுப் போய்விடும். முடிவற்ற மகிழ்ச்சியின்மையைச் சந்திக்க நேரிடும். மொத்தத்தில் நம்மை அடுத்தவரோடு ஒப்பிடத்தொடங்கி விட்டால், நமக்கு நாமே பின்னோக்கி ஓடத் தொடங்கிவிட்டோம் என்று பொருள்.

வாழ்க்கையில் வெற்றி எனும் இலக்கு நமக்கு எப்போதும் முன்னோக்கியதாகவே இருக்கிறது. ஓடுகிற குதிரையின் பார்வை முன்னோக்கியதாக இல்லாமல் பக்கவாட்டுகளைப் பார்த்துக்கொண்டே ஓடுவதாக இருந்தால், அக்குதிரை நிச்சயம் ஊர்போய்ச் சேராது. அதுபோன்றதுதான் நமது வாழ்வியல் இலக்குநோக்கிய பயணங்களும்; பக்கவாட்டுகளைப் பார்த்துக்கொண்டு ஓடாமல் தேங்கிவிடுவதுதான் ஒப்பிடுகிற வாழ்க்கை.

அவர் வாழ்க்கையின் வடிவம் அப்படி; நம் வாழ்க்கையின் வடிவம் இப்படி என்று நமதைப் பற்றிய எண்ணங்களோடு வாழ்க்கையில் பயணப்பட்டால் நமக்குள் தாழ்வுமனப்பான்மை ஏற்படாது.

தம்மைப் பற்றிய கழிவிரக்கம்!, அடுத்தவர் பற்றிய உயர்வு நவிற்சி! இவை இரண்டையும் கை விட்டாலே போதும்; எல்லா ஒப்பீடுகளும் தூள் தூளாகிப் போகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே கணியன் பூங்குன்றன் சொன்னான்,' மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!'

பொதுவாக நமக்கு மேலே உள்ளவர்களைப் பார்த்தால் நமக்குப் பொறாமை வரும்!; நமக்குக் கீழே உள்ளவர்களைப் பார்த்தால் நாம் எவ்வளவோ பரவாயில்லையே என மகிழ்ச்சி வரும். இந்த இரண்டு உணர்ச்சிகளில் பொறாமையைப் போட்டியாக மாற்றும் உத்தியைக் கடைப்பிடிக்கத் தொடங்கினால், போதுமென்கிற மகிழ்ச்சியை மூலதனமாக்கி வெற்றி காணாலாம்.

அவரவர் பாதையில் அவரவர் பயணம் என்கிறபோது, இதில் போட்டி எதற்கு? பொறாமை எதற்கு?

வாழ்க்கையில் மகிழ்ச்சி ஒன்றையே மூலதனமாக்கினால் எந்நாளும் வெற்றிதான்!

போட்டிகள், ஒப்பீடுகள் விளையாட்டில் இருக்கலாம்!

வாழ்க்கையில் எதற்கு?

தொடர்புக்கு 943190098

Tags:    

Similar News