சிறப்புக் கட்டுரைகள்

விநாயகர் வழிபாட்டால் விலகும் தோஷங்கள்!

Published On 2024-06-25 09:32 GMT   |   Update On 2024-06-25 09:32 GMT
  • நவக்கிரக தோஷங்கள் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.
  • வன்னிமரம் சனி பகவானுக்கு உகந்த மரமாகும்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் திறந்த வெளியில் சோலைகளின் நடுவில் வன்னி மரத்தடியில் காட்சி தருகிறார் விநாயகர். அவரைச் சுற்றிலும் வன்னி, வேம்பு, மந்தாரை, அத்தி, நெல்லி, அரசு, வில்வம், பவளமல்லி, நாவல் ஆகிய ஒன்பது மரங்கள் காணப்படுகின்றன.

ஒன்பது விருட்சங்களுடன் கூடிய இந்த விநாயகரை தரிசிப்பதால் நவக்கிரக தோஷங்கள் நீங்கி நல்வாழ்வு பெறலாம் என்பது ஐதீகம்.

வன்னிமரம் சனி பகவானுக்கு உகந்த மரமாகும். சனி தோஷம் ஏற்படாமல் இருக்க இவர் இந்த மரத்தடியில் அமர்ந்து பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பதாகவும் கூறுகிறார்கள்.

சனி திசை, சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வன்னி இலையால் அர்ச்சனை செய்தால் நிவர்த்தியாகும்.

மதுரை தெப்பக்குளம், வண்டியூர், அனுப்பானடி - ஆகிய 3 சந்திகள் கூடும் இடத்தில் குளம் தோண்டும்போது 7 அடி உயரமுள்ள ராட்சத விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டது. அதை மன்னர் திருமலை நாயக்கர் மீனாட்சி கோவிலில் பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது.

முக்கு தெருக்களில் ஊரணி தோண்டும் போது கிடைத்ததால் முக்குருணி விநாயக ராக வணங்கப்பட்டார். 3 குருணி அரிசியால் செய்யப்பட்ட கொழுக்கட்டை படைத்து விநாயகர் சதுர்த்தியின்போது வழிபடுவதால் முக்குருணி விநாயகர் என பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

இவ்விநாயகர் தெற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். இவரை வணங்கினால் கண் திருஷ்டி தோஷம் விலகும். இடையூறுகள் விலகி காரியம் ஜெயம் ஆகும்.

மதுரை அருகே 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருப்புவனம். அங்கு வைகை ஆற்றுப்பாலத்தை கடந்து நடந்து சென்றால் மடப்புரம் விலக்கு, ஆர்ச் எதிரில் 4 கோட்டை சுவர் போன்ற அமைப்பு காணப்படும். அந்த பகுதியில் விசாலாட்சி ஜோதிட மந்த்ராலயத்தில் திசை மாறி தெற்கு முகமாக விசாலாட்சி விநாயகர் அருள் பாலித்து வருகிறார்.

இங்கு செவ்வாய், வியாழன், வெள்ளிக் கிழமைகளிலும் சங்கடஹரசதுர்த்தி அன்றும் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பக்தர்கள் வருகை தந்து 7 பெரிய தேங்காய் மாலையாக சமர்ப்பித்து 7 லட்டு, 7 எலுமிச்சம்பழம் வைத்து 108 முறை வலம் வந்து வழிபாடு செய்கிறார்கள்.

இதனால் முன்னோர் சாபங்களால் உருவான தோஷங்கள் நீங்கி தொழில் வளம் பெருகும் என்கிறார்கள். அதோடு கடன் தொல்லை தீர்ந்து, திருமணத்தடையும் அகலும் என்பது ஐதீகம்.

கும்பகோணம் அருகில் உள்ள திருவலஞ்சுழியில் புகழ் பெற்ற வெள்ளை வர்ண விநாயகர் ஆலயம் உள்ளது. ஆவணி மாதம் சதுர்த்தி நாளில் வெள்ளை வர்ண விநாயகரை வணங்கினால் பாவ தோஷம் நீங்கப் பெறலாம் என்கிறது தல புராணம்.

இவர் கடல் நுரையால் செய்யப்பட்ட விநாயகர் என்பதால் இவருக்கு அபிஷேகம் கிடையாது. கற்பூரப் பொடி அபிசேகம் மட்டுமே செய்யப்படுகிறது. இவருக்கு கமலாம்பாள், வாணி என இரு மனைவியர் உண்டு. இவரை வணங்கினால் திருமணத் தடைக்கான தோஷங்கள் இருந்தால் அவை நீங்கும், குழந்தை செல்வம் உண்டாகும் என்பது ஐதீகம்.

திண்டுக்கல்லில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் மேலக் கோட்டையூர் இருக்கிறது. இந்த ஊரில் ஸ்ரீதலை வெட்டி பிள்ளையார் உள்ளார்.

ஒரு காலத்தில், இந்த பிள்ளையாரின் சிரசில் "தன் தலையை நீக்கி தனத்தை எடு" என்று ஒரு வாசகம் இருந்ததாம்.

அதன்படி விநாயகரின் தலை துண்டிக கப்பட்டதாம். அதுக்குள்ளே இருந்த வெள்ளிக் காசுகளையெல்லாம் எடுத்து, ஊருக்கு குளம் வெட்டவும். கிணறு வெட்டவும் பயன்படுத்தினார்கள். இந்த பிள்ளையார் அன்றிலிருந்து தலை வெட்டி விநாயகர் என்று எல்லோராலும் சொல்லப்படுகிறது.

கல்யாணத்தடையால் கலங்கி தவிப்ப வர்கள் இங்கு வந்து பொங்கல் படையலிட்டு ரோஜா சம்பங்கி மாலையை விநாயகருக்கு அணிவித்து பச்சரிசி, எள், வெள்ளம் எனக் கலந்த கலவையைக் கீழே சிந்தி யபடி விநாயகரை மூன்று முறை வலம்வர வேண்டும். பிறகு விநாயகரின் கழுத்தில் உள்ள மாலையை வாங்கி கழுத்தில் இரண்டு முறை எடுத்து போட்டுக் கொள்ள வேண்டும்.

பிறகு விநாயகரின் கழுத்திலேயே திரும்பவும் அந்த மாலையை அணிவித்து விட்டுத் திரும்பி பார்க்காமல் வந்து விட வேண்டும். இந்த பரிகார வழிபாடு காரணமாக முன் வினை தோஷங்கள் விலகி, விரைவில் திருமண யோகம் தேடி வரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் ஸ்ரீசர்ப்ப விநாயகர் கோவில் உள்ளது. இந்த விநாயகருக்கு சர்ப்பம் தன் ஐந்து தலைகளுடன் குடையாக விளங்குகிறது.

விநாயகரின் உடலில் 5 பாம்புகள் இடம் பெற்றுள்ளன. அரை ஞான் கயிறாக ஒன்று, இடையில் கட்டிய ஆடையின் மீது ஒன்று, பூணுலாக ஒன்று, கைக்கடங்களாக இரண்டு என்ற முறையில் ஐந்து சர்ப்பங்களும் அமைந்துள்ளன.

ராகு, கேது தோஷங்கள் இவரை வழி பட்டால் நீங்கும். நாக தோஷங்கள் நீங்கவும், நச்சுப்பிணிகள் தீரவும் இந்த சர்ப்ப விநாயகரைத் தரிசித்து பலன் பெறலாம்.

தஞ்சாவூருக்கு அருகே உள்ள திருக்கண்டிய ஸ்ரீ பிரம்மசிரகண்டீசுவரர் ஆலயத்தில் சப்த விநாயகர் என்ற பெயரில் ஏழு விநாயகப் பெருமான்கள் அருள் பாலிக்கின்றனர்.

"சப்த விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வணங்கினால், ஏழேழு ஜென்மத்தின் பாவங்கள் மற்றும் தோஷங்களில் இருந்தும் விமோசனம் பெறலாம்" என்பது ஐதீகம்.

திருச்சி பாலக்கரை சாலையில் உள்ள விநாயகர் கோவிலில் இரண்டு பிள்ளை யார்கள் காட்சி தருகின்றனர். சதுர்த்தி நாளில் இந்த இரட்டை விநாயகரை வணங்கினால் தீராத கவலையும் தீரும்.

வருடந்தோறும், இரண்டு முறை வரும் தூர்வர கணபதி விரத நாளும் இங்கு விசேஷம். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த நாளில் விநாயகர்களை தீபம் ஏற்றி வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

'நாக சதுர்த்தி' அன்று விநாயகருக்கு பாலாபிஷேகம் செய்து, அருகம்புல்லால் ஆன கிரீடம் மற்றும் ஆபரணத்தை அணிவித்து வேண்டிக் கொண்டால் நாக தோஷம் விலகும். இதே போல் கேது தோஷம் உள்ளவர்களும் இரட்டை விநாய கர்களை பிரார்த்தித்தால் பலன் நிச்சயம் என்கின்றனர் பக்தர்கள்.

இரட்டைப் பிள்ளையாருக்கு சந்தனக் காப்பு செய்து தரிசித்து வந்தால் கடன் தோஷம் பிரச்சினையில் இருந்து விடுபடலாம். திருவாதிரை நட்சத்திரத்தில் வில்வ தளங்களால் ஆன மாலையைச் சாற்றி வேண்டிக் கொண்டால், நோய்கள் தொடர்பான தோஷங்கள் தீரும். ஆரோக்கி யத்துடன் வாழலாம்.

விசாக நட்சத்திரத்தில் பூப்பாவாடை சார்த்தி இந்த விநாயகரை வழிபட்டால் உறவுகளுக்கு இடையிலான கிரக தோஷங்கள் சரியாகி விடும். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.

மதுரை தல்லாகுளம் பகுதியில் ஸ்ரீ இரட்டை விநாயகர் வீற்றிருக்கின்றனர். சுயம்பு மூர்த்தமாகத் தோன்றிய இந்த விநாயகரை தரிசித்தால், நல்லவை எல்லாம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

கல்யாண வரன் அமைய வேண்டும் என்று விரும்புவோர், குழந்தை பாக்கியம் கேட்டுப் பிரார்த்திப்போர், வழக்கில் நல்ல தீர்ப்புக்காக காத்திருப்போர் ஆகியோர் இங்கு வந்து, ஸ்ரீ இரட்டை விநாயகர்களுக்கும் தேங்காய் மாலை சார்த்தி வேண்டிக் கொண்டால், விரைவில் நினைத்தது நிறைவேறும்.

அதே போல், தங்களுக்கு என்ன வயதோ, (25 வயது என்றால் 25 விரலி மஞ்சள்) அந்த வயதைக் குறிக்கும் வகையில் விரலி மஞ்சளைத் தொடுத்து மாலையாக விநாய கருக்கு சாற்றினால், எல்லாவித தோஷங்கள், வினைகள் நீங்கி திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

விநாயகர் வழிபாட்டால் விலகும் தோஷங்கள் அடுத்த வாரம் தொடரும்...

Tags:    

Similar News