சிறப்புக் கட்டுரைகள்

நல்வாழ்வுக்கு ஞான வைராக்கியம்

Published On 2024-05-18 10:25 GMT   |   Update On 2024-05-18 10:25 GMT
  • வைராக்கியம் என்றால் என்ன?
  • ஞான வைராக்கியம் என்பது ஆத்மா சார்ந்தது.

அன்பார்ந்த வாசகர்களே, கடந்த வாரம், வைராக்கியம் என்றால் என்ன? நாம் எந்த வைராக்கியத்தில் இருக்கிறோம் என்பதை பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டிய நேரம் இது என்று பார்த்தோம். நம்முடைய வேதாந்தம் சொல்வது என்னவென்றால் "கோப வைராக்கியா, துக்க வைராக்கியா, சிந்தனை வைராக்கியா, ஞான வைராக்கியா" என்கிறது.

கோப வைராக்கியம்: என்பது நாம் ஒருவர் மீது கோபம் வந்து விட்டால், வாக்கு வாதத்தில் இனி என் முகத்தில் முழிக்காதே, உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை என்று சொல்கிறோம்.

ஆனால் அந்த உணர்ச்சி நிலையில் இருந்து நாம் உணர்வு நிலைக்கு திரும்பியவுடன் அந்த வைராக்கியம் நம்மை விட்டு விலகுகிறது, ஆனால் வார்த்தைகள் மட்டும் விலகுவது இல்லை. எனவே கோப வைராக்கியத்தை நாம் விட்டுவிட வேண்டும். ஏனெனில் அது நிரந்தரம் அல்ல.

துக்க வைராக்கியம்: என்பது நம் வாழ்வில் ஏதாவது நடக்க கூடாதது நடந்து விட்டால் என் வாழ்க்கையே தொலைந்து விட்டது. இனி நான் எப்படி வாழ்வேன் என்று புலம்பி கொண்டும் அழுது கொண்டும் இருக்கிறோம்.

உதாரணத்திற்கு நமக்கு நெருங்கிய உறவுகள் யாராவது மரணம் அடைந்து விட்டால், நம் வாழ்வே பறிபோனது போல் ஒரு உணர்வுக்கு ஆட்பட்டு விடுகிறோம். ஆனால் ஒரு சில நாட்கள் செல்ல செல்ல, நாம் இயல்பு நிலைக்கு வந்து விடுகிறோம். அன்று ஏற்பட்ட துக்கம் இன்று எங்கே போனது என்பதை பற்றி நாம் சிந்திப்பது இல்லை.

வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். இன்பத்தை ஏற்று கொள்ளும் நாம் துன்பத்தை ஏற்று கொள்ள ஏன் மறுக்கிறோம்? எனவே துக்க வைராக்கியத்தை நாம் விட்டுவிட வேண்டும். ஏனெனில் அது நிரந்தரம் அல்ல.

சிந்தனை வைராக்கியம்: என்பது மனம் பற்றியது. மனம் அமைதி நிலையில் இருக்கும் போது சில முடிவுகளை எடுப்போம். உதாரணத்திற்கு இந்த புத்தாண்டில் இருந்து நான் இந்த இந்த விஷயங்களில் சில விதிமுறைகளை கடைபிடிப்பேன். சில பழக்கங்களை விட்டு விடுவேன் என்று சபதம் எடுக்கிறோம்.

ஆனால் அந்த வைராக்கியம் நிறைய மனிதர்களுக்கு நீண்ட காலம் நிலைப்பது இல்லை. வாழ்க்கை சக்கரத்தில், சுழற்சியில் மாட்டி கொண்டு, துன்பம் வரும் போது, மனம் துவண்டு விடும்போது நம் சபதம் எல்லாம் மறைந்து விடுகிறது.

எனவே சிந்தனையில் தெளிவு வேண்டும். இல்லை என்றால் சிந்தனை வைராக்கியத்தில் வெற்றி பெற முடியாது. மனம் எப்போதும் அமைதி நிலையில் இருந்தால் தான் வெற்றி பெற முடியும்.

ஞான வைராக்கியம்: என்பது ஒரு முடிவை எடுத்து விட்டால் அதில் வாழ்நாள் முழுவதும் என்ன துன்பங்கள் வந்தாலும் தான் எடுத்த கொள்கையில் மாறாது இருக்க வேண்டும். முதலில் சொன்னது எல்லாம் உடல், மற்றும் மனம் சார்ந்து வருவது ஆகும். ஆனால் ஞான வைராக்கியம் என்பது ஆத்மா சார்ந்தது.

ஆத்மா என்பது அழிவு இல்லாதது. நிரந்தரம் ஆனது. மற்றது அனைத்தும் ஒரு நாள் அழியக்கூடியது. எனவே வாழும் காலத்திலேயே பிறவி பயனை அடைவதற்கு உடல், மனம், உயிர், குணம், ஆத்மா சார்ந்து, இயற்கையோடு சேர்ந்து கொண்டு வாழ்ந்தால், ஞான வைராக்கியம் கிடைக்கும்.

வாழ்வில் எது நடந்தாலும் மனதை சமநிலையில் வைத்து பழகி கொள்ள வேண்டும். அதனால், புலன்கள் நம் கட்டுக்குள் இருக்கும். இதற்கு நாம் ஆன்மிகத்தையும் அறிவியலையும் இணைக்க வேண்டும்.

விஞ்ஞானமும், மெய்ஞானமும் சேர்ந்தால் உலகம் அைமதியாகும். ஏனெனில் விஞ்ஞானம் என்பது விண்பற்றிய அறிவியல். மெய் ஞானம் என்பது இறைவன் மற்றும் நம்மை பற்றிய அறிவாகும். இதை உணராமல் இருப்பதால் தான் கர்ம வினை பதிவுகளில் சிக்கி, நமது ஆயுளை நாமே குறைத்து கொள்கிறோம்.

ஒரு விஷயத்தை நாம் சிந்திக்க வேண்டும். அது என்னவென்றால், விஞ்ஞானம் என்றால் ஆராய்சி என்று பொருள். எனவே விஞ்ஞானத்திற்கு, ஒன்றை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றால், அதற்கு ஒரு பொருள் தேவை.

பொருள் என்கின்ற ஒன்று இருந்தால் தான் விஞ்ஞானத்தால் ஆராய்ச்சியை தொடரமுடியும். பொருள் இல்லாமல் ஆராய்ச்சி செய்ய முடியாது. விஞ்ஞானத்தின் ஆரம்பம் ஆனது பொருளில் தொடங்கி அதன் முடிவு இருளில் முடியும். இருள் என்பது இறைவன். அந்த இடத்திலே ஒன்றும் இல்லை.

அதனை தான் மகான்கள் பாழ், இருள், சூனியம், ஆதி, சுத்தவெளி, கடவுள், இறைவன், என்று நாம் சொல்கிறோம்.

ஆனால் மெய்ஞானம் என்பது, விஞ்ஞானம் எதில் முடிந்ததோ (இருள்) அதில் தான் தொடங்கும். இருளில் தொடங்கும் மெய்ஞானம் நமக்கு உள்ளே முடியும். முடிவு என்பது நானாக இருக்கும் போது,அண்டத்தில் என்னவெல்லாம் இருக்கிறதோ, அவை அனைத்தும் இந்த பிண்டத்தில் உள்ளது என்கின்ற உண்மை விளங்கும். இது தான் ஞான வைராக்கிய நிலையாகும்.

இந்த நிலை வந்து விட்டால் நமது எண்ணங்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். இதனால் மூச்சின் எண்ணிக்கையும் குறையும். இதனால் மனம் அமைதி நிலை பெறும்.

இந்த நிலையில், நம் மனதிலே உதிக்கின்ற எண்ணங்களின் வெளிப்பாடு, சொல்லாக மாறி, நல்ல செயலிலே முடியும். இதை தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், நமது மனம் ஆனது விரிந்த நிலையில், நல்ல எண்ணங்களும், மனம் குறுகிய நிலையில் தீய எண்ணங்களும் உருவாகும் என்று குறிப்பிடுகிறார்.

மனம் விரியும் போது, நமது எண்ணங்கள் நமக்கும் பிறருக்கும் எந்த தீங்கும் விளைவிக்காத எண்ணங்களாக மலர்கிறது. இது கர்ம வினை பதிவுகளில் இருந்து, நம்மை விடுவித்து கொள்ளும் வழியாகும்.

குறுகும் மனம் ஆசை, துன்பத்தை தரக்கூடிய எண்ணங்களாக மலரும் போது, நமக்கும் பிறருக்கும், தீமையை உருவாக்குகிறது. இதனால் நமக்கு தீமை தரக்கூடிய பதிவுகள் சேருகிறது.

எனவே எந்த ஒன்றுக்கும் ஆரம்பம் இறைவன் என்றால் அது முடியும் இடம் நம்முடைய மனம் ஆகும். அசையாமல் இருந்தால் சிவம். அது அசைந்தால் மனம். எனவே ஞான வைராக்கியத்திலே நமக்குள்ளாக அடிக்கடி நான் சிவமா? அல்லது மனமா என்ற கேள்வியை எழுப்பி கொண்டே இருக்க வேண்டும். இதை தான் அக ஆராய்ச்சி என்கிறோம்.

உதாரணத்திற்கு நாம் உடலை அசைத்து நடந்து செல்லும் போது, நம்மோடு எந்த அசைவும் இல்லாமல், நமக்குள்ளாக ஒன்று வந்து கொண்டு இருக்கிறதே அது யார்? எனக்கு தலை வலி, உடல் வலி, காய்ச்சல் என்று சொல்கிறோமே, அது உடலுக்கா அல்லது உள்ளே உள்ள ஒன்றுக்கா?

எனக்கு பசி எடுக்கிறது என்று சொல்கி–றோமே எனக்கா அல்லது உள்ளே உள்ள ஒன்றுக்கா? -இப்படி என்றாவது நாம், நம் சுகத்தை நோக்கி ஆராய்ச்சி செய்து இருக்கிறோமா?

இதில் ஆச்சரியம் என்னவென்றால், மேலே நாம் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும், எந்த வித தொடர்பும் இல்லாமல், எந்த கர்ம வினை பதிவுகளோடும் தொடர்பு இல்லாமல், எந்த பொருள் மற்றும் உறவுகளோடு பற்றும் இல்லாமல் உள்ளே ஒன்று இருக்கிறதே அது யார்?

இதை அடிக்கடி நாம் நமக்குள்ளாக கேள்வியாக எழுப்பும் போது, அதுவே சர்வ வல்லமை பொருந்திய ஆத்மா என்பது தெரிய வரும்.

ஒரு கட்டத்தில் இந்த ஞான வைராக்கியம் மலரும் போது, இந்த உடல், மனம், உயிர், பொருள் அல்ல நான், ஏகமாக எங்கும் உள்ள இறைவனின் சொரூபமான ஆத்மாமே நான் என்பது விளங்கும். அப்படி தன்னை ஆத்மாவாக உணர்ந்தவர்களை தான் 'ஆத்மஸ்வருபி' என்று அழைக்கிறோம்.

அந்த நிலையில், நாம் காணும் காட்சிகள், பொருட்கள், நபர்கள் அனைத்தும் இறைவனின் பிம்பங்களாகவே தெரியும். இதை தான் 'சர்வம் பிரம்ம மயம்' என்று கூறுகிறோம்.

அப்படி ஞான வைராக்கியத்திலே எல்லாம் இறை காட்சிகளாக தெரிந்தால், நம்மோடு தினமும் நம்முைடய குடும்பத்திலே உறவாடி கொண்டு இருக்கின்ற உறவுகளான கணவர், மனைவி, குழந்தைகள், தாய், தந்தை, சகோதர சகோதரிகள் இவர்கள் எல்லாம் யார்? அனைவரும் இறைவனின் பிம்பங்களே!

இந்த நிலை வந்து விட்டால் நமக்குள்ளே எந்த பகையும், வெறுப்பும் வராது. குடும்பத்திலே சச்சரவுகள் எதுவும் வராது. இதை தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அமைதி என்பது தனி மனிதரில் ஆரம்பித்து, குடும்ப அமைதியாக மாறி, அது சுற்றத்தை மாற்றி, சுற்றம் ஆனது ஊரையே மாற்றி, ஊர் ஆனது உலகத்தை மாற்றி உலகம் முழுவதும் அமைதியை கொடுக்கும் வல்லமை படைத்தது தான் இந்த ஞான வைராக்கியம்.

இதை நம்மில் இருந்து தான் தொடங்க வேண்டும். தொடக்கம் என்னில் இருந்து என்றால், நான் எப்பேற்பட்டவன், எனக்குள் உள்ள பலம் என்ன என்பதை தெரிந்து கொண்டு, நமக்குள் உள்ள தெய்வீகத்தை முறையாக வெளிபடுத்த வேண்டும். அப்படி செய்தால் நான் வாழும் காலத்திலேயே ஞானம் அடைந்தவராக மாறுவோம் என்பதில் சந்தேகமே இல்லை.

இறைவன் நம்மை பல பிறவிகள் கடக்க வைத்து, இறுதி பிறவியான மனிதனாக ஒரு தாயின் வயிற்றில் நம்மை உருவாக்கி, அதனோடு நமக்கான கர்மாவையும் கொடுத்து இருக்கிறார் என்றால், நாம் எவ்வளவு புண்ணி யம் செய்தவர்கள்.

எனவே நான் ஏன் பிறந்தேனோ என்று சலிப்பு அடையாமல், இந்த பிறவியை கொடுத்த இறைவனுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். இதன் மூலம் நமது வாழ்க்கை முழுமையடையும். அந்த முழுமை பேறு பற்றி ஆராய்ச்சி தொடரும்.

மனவளக்கலை பேராசிரியர்கள்

கி. சௌமித்ரன்,

பொன்னி சௌமித்ரன்

போன்: 9444234348

Tags:    

Similar News