சிறப்புக் கட்டுரைகள்

சினிமா முதல் அரசியல் வரை: இளைய தளபதி விஜய்யின் வெற்றிப் பயணம்!

Published On 2024-06-21 09:14 GMT   |   Update On 2024-06-21 09:14 GMT
  • தனக்கென தனி இடத்தைப் பிடித்து, இளைய தளபதியாக உயர்ந்துள்ளார்.
  • தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக அவதாரம் எடுத்துள்ளார்.

நடிகர் விஜய், திரையுலகுக்கு வந்து தனக்கென தனி இடத்தைப் பிடித்து, இளைய தளபதியாக உயர்ந்து, இன்று "தமிழக வெற்றிக் கழகம்" கட்சியின் தலைவராக அவதாரம் எடுத்துள்ள நிலையில் அவர் தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது இந்த சினிமா - அரசியல் பயணம் குறித்து பார்ப்போம்..

நடிகர் விஜய் 1974-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி பிறந்தார் . அனைத்து குழந்தைகளுக்கும் தனது தந்தைதான் முதல் ஹீரோவாக இருப்பார். ஆனால் விஜய்யின் பயணத்தில், மகனை ஹீரோவாக பார்த்து பார்த்து செதுக்கினார் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். சென்னையில் பிறந்து வளர்ந்த விஜய், விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் முடித்தவர்.

குழந்தை நட்சத்திரம்: எஸ்.ஏ. சந்திரசேகர் வெற்றிகரமான இயக்குநராக இருந்த காலகட்டத்தில் வெற்றி, குடும்பம், வசந்த ராகம், நான் சிகப்பு மனிதன், சட்டம் ஒரு விளையாட்டு போன்ற படங்களில் விஜய்யை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார். இப்படித்தான் விஜய்யின் சினிமா பயணம் தொடங்கியது.

1992-ம் ஆண்டு "நாளைய தீர்ப்பு" என்ற திரைப்படத்தின் மூலம் விஜய்யை முதன்முதலாக ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் எஸ்.ஏ. சந்திரசேகர். ஹீரோவாக அறிமுகமான போதும், அந்த படத்தில் விஜய்க்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்த சூழலில் நடிகர் விஜயகாந்துடன் விஜய்யை இணைத்து நடிக்க வைத்தது. எஸ்.ஏ.சி. இயக்கத்தில் விஜயகாந்த், விஜய் நடிப்பில் வெளியான "செந்தூரப்பாண்டி" திரைப்படம், எதிர்பார்த்தபடி விஜய்யை பிரபலமாக்கியது. விஜய் என்கிற நடிகனை தமிழ் ரசிகர்கள் அனைவரின் கவனத்திற்கும் கொண்டு சென்றது.

இதனைத் தொடர்ந்து, தந்தையின் பட்டறையிலேயே தொடர்ந்து பட்டை தீட்டப்பட்டார் விஜய். எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்திலேயே "ரசிகன்", "தேவா", "விஷ்ணு" என அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.

இந்த காலகட்டத்தில்தான் நடிப்பு, நடனம், பாடல், நகைச்சுவை, ரொமேன்ஸ், ஆக்சன் என்று கமர்ஷியல் ஹீரோவுக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் படிப்படியாகக் கற்றுக்கொண்டு மெறுகேறினார் விஜய்.

இளைய தளபதி: தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் நடித்து 1994-ம் ஆண்டு வெளியான 'ரசிகன்' படத்தில்தான் விஜய்யின் பெயருக்கு முன்னால் "இளைய தளபதி" பட்டம் முதன்முதலில் போடப்பட்டது.

சென்டிமெண்ட் இயக்குநர் விக்ரமன், விஜய்யை வைத்து இயக்கிய "பூவே உனக்காக" திரைப்படம் 1996-ஆம் ஆண்டு வெளியானது. நடிகர் விஜய்யின் முதல் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் இதுதான்.

அதுவரை, 4 ஃபைட், 5 பாட்டு என்று வழக்கமான கமெர்ஷியல் ஃபார்முலா வளையத்திற்குள், சாதாரண ஹீரோ கதாபாத்திரத்திற்குள் சுற்றிக் கொண்டிருந்த விஜய்யை ஓவர் நைட்டில் சூப்பர் நடிகர் என அடையாளப்படுத்தினார் இயக்குநர் விக்ரமன்.

"பூவே உனக்காக" திரைப்படம்தான் விஜய்யின் குடும்ப வாழ்க்கைக்கு அச்சாரமிட்டது என்பது பலருக்கும் தெரிந்திருக்காது.

இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டு லண்டனில் படித்து வளர்ந்த ஈழத்தமிழர் பெண்ணான சங்கீதா சொர்ணலிங்கம், "பூவே உனக்காக" படத்தைப் பார்த்து விஜய்யின் தீவிர ரசிகை ஆனாராம். பின்னர் விஜய்யைப் பார்ப்பதற்காகவே லண்டனில் இருந்து கிளம்பி வந்தவர், ரசிகை என்று அறிமுகமாகி, தோழியாகி, காதலியாகி, பின் மனைவியும் ஆனார்.

1999-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் நாள், குடும்பத்தினர் ஆசிர்வாதத்தோடு சங்கீதாவின் கரம்பிடித்தார் விஜய். திருமணம் ஆனவுடனேயே விஜய்யின் சொந்த காஸ்ட்யூம் டிசைனராக மாறினார் மனைவி சங்கீதா.

ஸ்டார் நடிகர் அந்தஸ்து: 1998-ல் சங்கிலி முருகன் தயாரிப்பில், ஃபாசில் இயக்கத்தில் "காதலுக்கு மரியாதை" திரைப்படம் வெளிவந்தது. இதில், நடிகர் விஜய் மற்றும் ஷாலினியின் ஜோடி மக்களை பெரிதும் கவர்ந்தது.

"காதலுக்கு மரியாதை" திரைப்படத்தைத் தொடர்ந்து, சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பாலசேகரன் இயக்கத்தில் வெளியான "லவ் டுடே" திரைப்படமும் ஹிட் அடித்ததால், ஸ்டார் நடிகர்கள் பட்டியலுக்குள் நுழைந்தார் விஜய். இளைஞர்களிடம் விஜய்க்கான தனி இடத்தை உறுதிப்படுத்தியது "லவ் டுடே".

தொடர்ந்து காதல் கதைகளங்களில் கவனம் செலுத்தி அதில் வெற்றியும் பெற்ற விஜய், அந்த வெற்றியைத் தக்கவைக்க திட்டமிட்டார். அதற்காக தெளிவாக வியூகம் அமைத்தவர், " நினைத்தேன் வந்தாய்", "துள்ளாத மனமும் துள்ளும்" உள்ளிட்ட படங்களில் நடித்து, தமிழ்நாட்டில் அனைவரும் கொண்டாடும் ஜனரஞ்சக நாயகன் ஆனார்.

எஸ்.ஜே. சூர்யாவின் இயக்கத்தில் வெளிவந்த "குஷி" திரைப்படத்தின் மூலம் கல்லூரி மாணவர்களையும், இளைஞர்களையும் ஈர்த்தார். அத்துடன் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமை யாளர்கள் என அனைவரிடமும் "மினிமம் கேரண்டி ஹீரோ" என்ற பட்டத்தையும் பெற்றார்.

தமிழகத்தில் குழந்தைகளை கவர்ந்துள்ள முதன்மையான ஹீரோ யார் என்றால்? அது விஜய் என்றே சொல்லலாம். அதற்கு காரணம், பெரும்பாலான ஹீரோக்களுக்கு மிகவும் சிரமமான காமெடி மற்றும் நடனம், விஜய்க்கு கை வந்த கலை. சித்திக் இயக்கத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட படம் ஃப்ரெண்ட்ஸ்.

இதில் சூர்யா, ரமேஷ் கண்ணா, வடிவேலு, சார்லி உள்ளிட்டோருடன் இணைந்து காமெடியில் கலக்கியிருப்பார் விஜய். மேலும் சச்சின், வசீகரா திரைப்படங்களில், வித்தியாசமான காமெடி சென்சை வெளிப்படுத்தியிருப்பார் விஜய்.

இந்த படங்கள் முழுக்க நகைச்சுவை பட்டாசு வெடித்துக்கொண்டே இருக்கும்.

தொடர்ந்து "பிரியமானவளே", "பத்ரி", "ஷாஜகான்", "யூத்" என அடுத்தடுத்து கமர்ஷியல் ஹிட் கொடுத்து தனக்கான நிரந்தர இடத்தை தக்கவைத்துக்கொண்டதோடு, ரசிகர்களின் எண்ணிக்கையையும் பெருக்கிக்கொண்டார்.

நடனம் பாட்டிலும் அசத்தல்:

மற்ற ஹீரோக்களுக்கு ரசிகர்களாக இருப்பவர்களுக்கும் விஜய்யின் நடனம் கட்டாயம் பிடிக்கும். நடனத்தை போன்றே பாடலிலும் தனது தனி முத்திரையை பதித்துள்ளார் விஜய். தான் நடிக்கும் திரைப்படங்கள், நண்பர்களின் திரைப்படங்கள் என 30-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார் விஜய்.

நடிகனாக தன்னை நிலைநிறுத்தி மென்மையான காதல் கதைகளில் மட்டுமே நடித்துவந்த விஜய், ஆக்சன் ட்ராக்கிற்கு மாறி முதன் முதலில் நடித்த திரைப்படம்தான் "தமிழன்". இதனைத்தொடர்ந்து திருமலை, கில்லி, திருப்பாச்சி, சிவகாசி உள்ளிட்ட படங்களில் நடித்து பட்டி தொட்டியெங்கும் ரசிகர்களை தன் வசப்படுத்தினார்.

ஆக்சன் களத்தில் இறங்கியபோது "திருமலை" படத்தை இளம் அறிமுக இயக்குநர் ரமணா இயக்கிய நிலையில், அப்போதிலிருந்தே நிறைய புது இயக்குநர்களுடன் பணியாற்ற தொடங்கினார் விஜய். 'முதல்வன்', 'சாக்லேட்' ஆகிய படங்களை தயாரித்த ஆர்.மாதேஷ் 'மதுர' படத்தின் மூலம்தான் இயக்குநராக அறிமுகமானார். 'திருப்பாச்சி' படம்தான் பேரரசுவின் முதல் படம்.

மறைந்த பழம்பெரும் இயக்குநர் மகேந்திரனின் மகனான ஜான் மகேந்திரன், 'சச்சின்' படம் மூலம்தான் தமிழில் இயக்குநராக அறிமுகமானார். முன்னணி நடிகராக வலம் வந்த பிரபுதேவா 'போக்கிரி' படம் மூலம்தான் தமிழில் இயக்குநர் ஆனார். 'கில்லி', 'மதுர' படங்களுக்கு வசனம் எழுதிய பரதன், 'அழகிய தமிழ் மகன்' படத்தை இயக்கினார். 'குருவி' படத்திற்கு வசனம் எழுதிய பாபுசிவன் 'வேட்டைக்காரன்' படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார்.

"பாக்ஸ் ஆஃபிஸ் கிங்"

இன்று விஜய் படம் ரிலீசாகிறது என்றால், வீட்டிலுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் சகிதமாக திரையரங்குகளுக்குச் சென்று அதனை திருவிழா கூடமாக மாற்றிவிடுகின்றனர். அந்த அளவுக்கு நடனம், நகைச்சுவை, ரொமான்ஸ், ஆக்சன் என அனைத்திலும் சொல்லி அடிக்கும் கில்லியாக மக்கள் மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்டார் விஜய்.

ஆனால் இதே விஜய்யைதான் ரசிக்க முடியவில்லை என ஆரம்ப கால கட்டத்தில் பெரும்பாலான ஊடகங்கள் விமர்சித்தன. அத்தனை விமர்சனங்களையும், பலவீனங்களையும் தனது பலமாக மாற்றி இன்று தமிழ் சினிமாவின் "பாக்ஸ் ஆஃபிஸ் கிங்"காக ஜொலிக்கிறார் விஜய்.

இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை அப்லோட் செய்தவுடன் வெறும் 24 நிமிடங்களில் 4 மில்லியன் லைக்குகளைப் பெற்ற ஒரே நடிகர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராகவும் திகழுகிறார் அவர்.

திரையில் அரசியல்: சினிமாவில் தனது மகனுக்கு "இளைய தளபதி" பட்டத்தை சூட்டி ஜெயிக்க வைத்த எஸ்.ஏ. சந்திரசேகர், அரசியலிலும் தன் மகனை தலைவனாக்க துடித்தார். அதன் வெளிப்பாடாகவே 2010-ம் ஆண்டுக்கு பின்னர் வெளியான தனது படங்களில் அவ்வப்போது அரசியல் வசனங்களை மறைமுகமாக பேசி வந்தார் இளைய தளபதி விஜய்.

2017ல் மெர்சல் படத்தில் நேரடியாக அரசியல் பேசினார். அதன்பிறகு வந்த தெறி, சர்கார் போன்ற படங்களிலும் பல அரசியல் கருத்துகளைப் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

"என் நெஞ்சில் குடியிருக்கும்..": சினிமாவில் அரசியல் வசனங்கள் பேசுவதுடன், "என் நெஞ்சில் குடியிருக்கும்" என ரசிகர்களை அழைத்து குட்டிக் கதைகளை சொல்ல ஆரம்பித்த விஜய், விஜய் மக்கள் இயக்கம் மூலமாக நேரடியாக சமூக பணிகளில் ஈடுபடத் தொடங்கினார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். கடந்த டிசம்பர் மாதம் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினார்.

மேலும், மாணவர்களை கல்வியில் ஊக்குவிக்க, கடந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக 10, 12 -ம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை நேரில் அழைத்து, அவர்களுக்கு பரிசு தொகையுடன், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். விஜய்யின் இந்த சமூக பணிகள், அவரது அரசியல் வருகைக்கான எதிர்பார்ப்பைத் தூண்டின.

"தமிழக வெற்றிக் கழகம்"

விஜய்யின் அரசியல் பயணம் குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், அதிகாரப்பூர்வமாக தனது கட்சி பெயரை 02.02.2024 அன்று அறிவித்தார்.

"தமிழக வெற்றிக் கழகம்" என்று கட்சியின் பெயரை அறிவித்த விஜய், தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலைக் குறிவைத்தே தனது கட்சி செயல்படும் என அறிக்கை வெளியிட்டார். அதுமட்டுமல்லாமல், தீவிர அரசியலில் கவனம் செலுத்துவதற்காக சினிமாவிலிருந்து விலகப்போவதாகவும் அறிவித்தார்.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் G.O.A.T என்ற படத்தில் நடித்துகொண்டிருக்கும் விஜய், அடுத்ததாக விஜய் 69 படத்தில் நடிக்க உள்ளதாகவும், அத்துடன் சினிமாவுக்கு முழுக்கு போடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவருக்கெல்லாம் எதுக்கு சினிமா? ஹீரோவுக்கான தகுதியே இல்லை என்று தன் சினிமா என்ட்ரியின்போது தன்னை அவமானப்படுத்தியவர்களுக்கு எல்லாம் பேச்சால் பதில் சொல்லாமல், தனது உழைப்பின் மூலம் பதில் அளித்தார். அதாவது தமிழ் சினிமாவின் மிகப் பெரிய ஆளுமையாகவும், பாக்ஸ் ஆஃபிஸ் கிங்காவும் உயர்ந்து நெத்தியடி கொடுத்த இளைய தளபதி விஜய்யின் ஃபார்முலா, தற்போது அரசியல் களத்திலும் தொடர்வதால் அரசியல் களமும் பரபரப்பாக காணப்படுகிறது.

-நிரா

Tags:    

Similar News