சிறப்புக் கட்டுரைகள்

கண்ணதாசன் பாடலை திருத்தம் செய்த எம்.எஸ்.வி

Published On 2024-06-07 07:43 GMT   |   Update On 2024-06-07 07:43 GMT
  • புது பாடலாசிரியராக வந்த இளைஞர் தான் கவியரசு கண்ணதாசன்.
  • அந்த கால கட்டத்தில் நாடகங்களில் ஆண்களே பெண் வேடமிட்டு நடித்தார்கள்.

"இசை!

இசை எப்போது உருவாகியிருக்கும்?

குகைகளில், மரக்கிளைகளில் மனிதன் தங்கியிருந்தபோது, விலங்குகளிடம் இருந்தும், ஊர்வன விஷப்பூச்சிகளிம் இமிருந்தும் தங்களை காத்துக் கொள்ள, இரவின் இருள் பயத்தால் ஒருவருக்கொருவர் தங்கள் இருப்பை தெரிவித்துக் கொள்ள ஏதோ ஓசை, சத்தம், சீழ்க்கை ஒலி (விசில்) போன்ற ஒலிகளை எழுப்பியிருக்கக்கூடும்.

தாங்கள் வேட்டையாடிக் கொன்ற விலங்குகளின் தோல்களை குளிருக்கும் வெயிலுக்கும் போர்த்திக் கொண்டு உடையாய் மாற்றியதைப் போல, தோலை மரக்கட்டைகளில் சேர்த்துக்கட்டி, குச்சிகளால் ஒலி எழுப்பி விலங்குகளை விரட்டியிருப்பார்கள். இவையே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு மேம்பட்டு, பக்குவப்பட்டு இசைக் கருவிகளாக தோன்றியிருக்கும்!

வாங்க, கொஞ்சம் கால இயந்திரத்தில் ஏறி பின்னோக்கி போகலாம்.

1918-ல் தென்னிந்தியாவின் முதல் அசையும் திரைப்படம், ஆனால் மவுன திரைப்படம் "கீசகவதம்". 14.3.1931-ல் இந்தியாவின் முதல் பேசும்படம் "ஆலம் ஆரா" திரையிடப்பட்டதாம். தமிழகத்தில் 1931ல் வெளிவந்த முதல் பேசும் படம் "காளிதாஸ்".

அப்போதைய கட்டுப்பெட்டியான காலக்கட்டத்தில் திரைப்படங்கள் பார்ப்பதற்கு வீடுகளில் ஏகப்பட்ட கெடுபிடி, தடை. அதனால் பக்தி படங்கள், புராணக் கதைகளை சொல்லும் திரைப்படங்கள் மட்டுமே தயாரிக் கப்பட்டது. சுதந்திரம் அடையாத காலம். அதனால் ஆங்கிலேய அரசுக்கு எதிரான படங்கள் எதுவும் எடுத்துவிட முடியாது. அரசின் தணிக்கைக் கட்டுப்பாடும் இருந்தது.

அதன் பிறகு அரசர்கள் கால கதைகளைக் கொண்ட திரைப் படங்கள் வந்தன. பெண்கள் யாரும் நடிக்க முன் வராத அந்த காலக்கட்டத்தில் நாடகங்களில் ஆண்களே பெண் வேடமிட்டு நடித்தார்கள். திரைப்படங்கள் பக்திப் படங்களாக இருக்கவே கொஞ்சமாக பெண்களும் திரைத்துறைக்கு வந்தனர்.

இன்னொரு புறம், அப்போது பின்னணி பாடல்கள் ஒலிப்பதிவு செய்யும் தொழில் நுட்ப வளர்ச்சி இல்லை. நடிகர்கள், நடிகைகள் நடிக்கும் போதே காமிராவுக்கு தெரியாதவாறு கூடவே ஹார்மோனியம் போன்ற குறைந்த இசைக் கருவிகள் மட்டுமே வைத்துக் கொண்டு, பேசியும் பாடியும் நடிப்பதை படமாக்குவார்கள். அதனால், பாடத்தெரிந்த ஆண், பெண்கள் மட்டுமே நடிக்க முடியும்.

இந்த காலக் கட்டத்தில் தான் எம்.கே. தியாகராஜ பாகவதர் 1934ல், எம்.கே.ராதா -1936ல், பி.யு.சின்னப்பா 1938ல், டி.ஆர்.மகாலிங்கம் 1937ல் நடிக்க வருகிறார்கள். இவர்களின் பாடல்களுக்காகவே ஓடியத் திரைப்படங்கள் உண்டு.

நடிகைகளில் டி.பி.ராஜலட்சுமி 1931ம் ஆண்டில் முதல் பேசும் படமான காளிதாஸ் திரைப்படத்தில் நடித்தவர். அந்த காலத்திலேயே அஷ்டாவதானி என புகழப்பட்டவர். முதல் பெண் இயக்குநர்! கண்ணாம்பா 1938ல் நடிக்க வருகிறார். கே.பி.சுந்தராம்பாள் 1935ல் பக்த நந்தனார் பேன்ற திரைப்படத்தில் நந்தனாராக நடித்தார். அந்த நாளிலேயே தனது பாடல்களுக்காகவே பிரபலமானவர்.

திராவிட இயக்கத்தை சேர்ந்த பலர் நாடகங்கள் நடத்தி வந்தனர். நாடகங்களின் மூலம் சுதந்திரக்கால வரலாறு, மற்றும் தேசத் தலைவர்கள் போராடியக் கதைகள் எல்லாம் பொதுமக்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று நேரடியாக சேர்த்தது. திரையரங்குகளை விட நாடங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனால் மெல்ல மெல்ல சமூகக் கதைகளும் வர ஆரம்பித்தன.

கால இயந்திரத்தை விட்டு இறங்கி விடுவோம். திரும்ப அடுத்த தொடரில் தொடரலாம்!

"இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமனிடம் உதவியாளராகயிருந்த எம்.எஸ்.வி.

பாடலாசிரியர்களிடம் மெட்டுக் கேற்ற பாடல் எழுதி வாங்குவார் என்று பார்த்தோமில்லையா?

"கன்னியின் காதலி" என்றொரு திரைப்படம் 1949ல் வந்தது. அப்படத்திற்கு பாடல் எழுத ஒரு புதிய இளைஞன் தேர்வானார். அவரிடம் "தத்தகாரம்" சொல்லி பாடலுக்கு காத்திருந்தார் எம்.எஸ்.வி.

(இசை அமைக்க வேண்டிய மெட்டுக்கு தானா, தன்னன்னா, தையன்னா, தத்தத்னா" என்று சொற்கள் இல்லாத ஓசையை மட்டும் பாடிக்காட்டவேண்டும். அந்த ஓசைக்கு பொருத்தமான சொற்களை பாடலாசிரியர்கள் எழுதுவார்கள்.

"வறுமையின் நிறம் சிவப்பு" படத்தில் "முத்து இருக்குது சிப்பி இருக்குது"? என்ற பாட்டில் வருமே, அதுபோல் தானே என்று கேட்கறீங்க? அதுதான்! அதுவேதான்!)

புதுக் கவிஞரும் பாட்டு எழுதி தந்துவிட்டார். வாங்கிப் படித்துப் பார்த்த எம்.எஸ்.வி. "இதென்ன களி, கூத்து"ன்னு எழுதியி ருக்கீங்க? என்கிறார். அந்த இளைஞனோ, "ஏன் பாட்டு மெட்டில பொருந்துகிறதே" என்கிறார்.

"மெட்டுக்கு சரியா பொருந்துது, ஆனா... இந்த களி,கூத்து இதெல்லாம் சரியில்லை. மாத்திடுங்க", என்கிறார் எம்.எஸ்வி.

"அவைதான் சரியான சொற்கள், அதையேன் மாத்தணும்?"

அப்போதெல்லாம் வடமொழி சொற்கள் கலந்தும் பாடல்கள் இருக்கும்! இவர்களின் முதல் சந்திப்பே வாக்குவாதம்! அப்போது ஜூபிடர் பிக்சர்சல் நிறுவன கவிஞராக இருந்த "உடுமலை நாராயண கவி" அந்த வழியாக வந்தார், புதுக்கவிஞரின் வரிகளை வாங்கிப் படித்துப் பார்க்கிறார். 'அட, சரியான தமிழ் வார்த்தைகள் தான் எழுதியிருக்கீங்க" என்று பாராட்டிவிட்டு, தம்பி இந்த களி, கூத்து இதெல்லாம் இவங்களுக்கு வித்தியாசமாக தெரியுது. அதற்கு பதில் "காரணம்தெரியாமல் உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதே'ன்னு போட்டு பாருங்க" என்கிறார்.

இது மெட்டுக்கு சரியாப் பொருந்துதுண்ணே என உற்சாகமாகிறார் எம்.எஸ்.வி. எல்லாருக்கும் புரிகிற மாதிரி இருக்கட்டுமேன்னு தான்... சொன்னேன்.

திரைப்படங்களில் காட்டப்படும் எழுதப்படாத சட்டம் போல "மோதலில் உருவான இவர்களது அன்பு" இறுதிக் காலம் வரை, "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்" என்று இரட்டையர்களாகவே திரையுலகில் கொடிக் கட்டிப் பறந்தார்கள். அந்த புது பாடலாசிரியராக வந்த இளைஞர் தான் கவியரசு கண்ணதாசன்.

உடுமலை நாராயண கவிப் பற்றி பார்த்தோமில்லையா? அவரின் வரிகளுக்கு சி.ஆர்.சுப்பராமன் பாடி, இசையமைத்த ஒரு பாடல்! "மருமகள்"என்றத் திரைப்படத்தில் இடம் பெற்ற "லாலி சுபலாலி, காதலர் ஜாலி வெகு ஜாலி".

கல்லூரி மாணவர்களில் ஒருஜோடி பதிவுத் திருமணம் செய்துக் கொள்கிறார்கள். மீதி தோழி, தோழர்கள் அவர்களை வாழ்த்திப் பாடுகிறார்கள். வழக்கமாக சம்பிரதாயமானப் பாடல்கள் என்றால் திருமணம் முடிந்தவுடன் வரும் நலுங்குப் பாடலை "ஆனந்த பைரவி" ராகத்தில் அமைப்பார்கள். இது கல்லூரி மாணவர்கள் பாடுவது இல்லையா? அதனால் ராக் அண்ட் ரோல், கைத்தட்டல் என்று ஜமாய்த்திருப்பார்கள்.

இதில் இன்னொரு புதுமையாக பாடலின் ஆரம்பத்திலும், கடைசி யிலும் "லாலி", "காதலர் வெகு ஜாலி" என்றவரிகள் வரும் போது பாடகர்கள் ஒரு மெட்டிலும், குழுவினர் லல்லல்லல்ல லல்லல்ல லா என்று வேறு ஒரு மெட்டிலும் பாடியிருப்பார்கள்.

இந்த பாடல் சி.ஆர்.சுப்பராமன் இசையமைத் திருந்தாலும், அவருக்கு உதவியாளராக எம்.எஸ்.வி. இருந்தார் என்பதும் பாட்டுப் புத்தகம் வழியே தெரிகிறது.

மேலே சொன்ன இசை வகை, "கவுண்டர் பாயிண்ட்" என்கிற மேற்கத்திய இசை முறையாகும். ஒருவர், பாடலில் ஒரு மெட்டில் பாடும்போது, இன்னொருவர் அதே நேரத்தில் அதே பாடலில் வேறு மெட்டில் பாடுவது. அந்தக் காலக் கட்டத்தில் இந்த இசையமைப்பு புதிது.

இந்த இசை முறை மிக மிக முன்னோடியாக சி.ஆர்.சுப்பராமன் அவர்களால் கையாளப் பட்டிருப்பது 1953-ல் வந்த 'மருமகள்' படத்தில் வந்த 'லாலி சுபலாலி' பாடலில் என்பது ஒருபுறம் இருந்தாலும், 1952ல் வெளிவந்த 'பணம்' என்றத் திரைப்படத்திலும் கூட 'ஏழை நின் கோவிலை நாடினேன், எழில் மின்னும் சிலை வண்ண தேவியே' என்றப் பாடலில் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி தங்களின் முதல் படத்திலேயே இந்த நுட்பத்தை கையாண்டு இருக்கிறார்கள்.

இந்தப் பாடலின் ஆரம்பத்தில் வரும் ஹம்மிங்கிலேயும், கடைசியிலும் கவுண்டர் பாயிண்ட் பாடல் வகையை பயன்படுத்தியிருப்பது மட்டுமில்லை, இந்த பாடலில் Over lapping என்ற முறை அதாவது ஒருவர் பாடும்போதே அந்த குரலின் கூடவே இன்னொரு குரலையும் பாட வைப்பது.

இரு குரலும் ஒரே மெட்டில் ஒரே நேரத்தில் பாடினால் அது ஓவர் லாப்பிங் இரு குரலும் வேறு வேறு மெட்டில் ஒன்றாக ஒரே நேரத்தில் பாடுவது கவுண்டர் பாயிண்ட். இந்த இரண்டு நுட்பமுமே தங்களது முதல் படத்திலேயே கொண்டு வந்துவிட்டார்கள். அதுமட்டுமல்ல, "ஏழை நின் கோவிலை" பாடல் வால்ட்ஸ் என்ற மேற்கத்திய வகைப்பாடல்.

24 வயது இளம் முதல் பட இசையமைப்பாளரான எம்.எஸ்.விஸ்வநாதன், அப்போதைய மிகப் புகழ்பெற்ற, கர்நாடக சங்கீதத்தில் பெயர் பெற்ற எம்.எல்.வசந்தகுமாரி (நடிகை ஸ்ரீவித்தியாவின் அம்மா) அவர்களை முற்றிலும் புதிய மேற்கத்தியம் பாடவைத்தது புதுமை, புரட்சி எனலாம்.

'குலேபகாவலி' என்றவொரு திரைப்படம் வந்தது. அந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த போது அதைக் கேட்ட ஜே.பி.சந்திரபாபு "இந்த மாதிரி இசைக்கு எப்படி ஆடமுடியும்? என்னால் ஆட முடியாது" என்று சொன்னதற்கு "நான் ஆடிக்காட்டுகிறேன் பாருங்கள்" என்று சொல்லி ஆடியும் காட்டினாராம் எம்.எஸ்.வி. அவர் சிறு வயதில் முறையாக நடனம் கற்றவராம். நடனத்தால் சந்திரபாபு அசந்துவிட்டாராம்.

முன்பு ஒரு முறை செண்ட்ரல் ஸ்டுடியோவில் எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடுவிடம் பாட வாய்ப்பு கேட்டு சந்திரபாபு போனபோது, "பாடவில்லை, முனகுகிறார்"என்று சந்திரபாபுவை மறுத்தவர் தான் உதவியாளராக இருந்த எம்.எஸ்.வி. பின்னாட்களில் இருவரும் உயிருக்கு உயிரான நண்பராகி விட்டார்கள்.

இரவில் பதினோரு மணிக்கு கூட எம்.எஸ்.வி.யின் தாயார் நாராயணிக்குட்டி அம்மாவை தோசை சுட்டுத் தர சொல்லி சாப்பிடும் அளவிற்கு நெருக்கமான சந்திரபாபுவின் கடைசி காலத்தில் மிகவும் உதவிகரமாக இருந்து கவனித்துக் கொண்டார்.

எம்.எஸ்.வி. "நான் இறந்துவிட்டால் எனது உடலை கொஞ்ச நேரம் விஸ்வநாதனின் வீட்டில் கிடத்தி விட்டு பிறகு மயானத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்" என்று ஜே.பி.சந்திரபாபு சொல்லியிருந்தாராம். அப்படியே நடந்ததாம். மோதலில் பூத்த இன்னொரு அழகான நட்பு இது!

தொடர்ந்து புதையல் எடுப்போம்...

கவிஞர்

கி.பானுமதி கிருஷ்ணகுமார்

இணைய முகவரி:banumathykrishnakumar6@gmail.com

Tags:    

Similar News