சிறப்புக் கட்டுரைகள்

எம்.எஸ்.வி. இசைத்த அபூர்வ ராகம்

Published On 2024-05-31 12:10 GMT   |   Update On 2024-05-31 12:10 GMT
  • இசைக்கு வசப்படாத உயிர்கள் ஏது?
  • திறமைகளுக்கு மரியாதைக் கொடுத்து பழகி வந்தவர் எம்.எஸ்.வி.

"இசைக்கு வசப்படாத உயிர்கள் ஏது? "இசை" என்றாலே கேட்கும் அல்லது எழுப்பப்படும் ஒலி நயமாக இருந்தால் நம்மையறியாமல் நாம் அந்த ஒலியுடன் ஒன்றிவிடுகிறோம்! இசைந்து விடுகிறோம். அதனுடன் நல்லிணக்கத்துடன் ஒன்றிப்போக செய்வதால் தான் அப்படி வாசிக்கப்படும் காற்று இசைக் கருவியை "ஹார்மோனியம்" என்கிறோம்.

மகாகவி பாரதியார் தான் பாடும் பாடல்கள் எந்த ராகத்தில் அமைந்துள்ளது என்பதையும் குறிப்பிட்டு விடுவாராம். 1890 முதல் 1973 வரை வாழ்ந்த இசை அறிஞர் பாபநாசம் சிவன் தான் இயற்றும் பாடல்கள் எந்த ராகங்களில் இருக்கிறது என்று குறிப்பிட்டு விடும் பழக்கம் இவருக்குமுண்டு.

இவர் திரைப்பட பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் இருந்தார். "மன்மத லீலையை வென்றார் உண்ேடா" என்ற புகழ்ப்பெற்றப் பாடலை எழுதியவர் இவர்தான். இப்படி பாரம்பரியமாக பாடல்கள் இசையமைக்கப்பட்ட காலங்கள் அவை!

அந்த காலத்தில் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமாக இருந்த "ஜீபிடர் பிக்சர்ஸ்" ஒரே சமயத்தில் நான்கு படங்கள் தயாரித்தார்கள். அப்படங்களுக்கு இசையமைக்க, கோயம்புத்தூ ருக்கு சென்னையில் இருந்து சி.ஆர்.சுப்பாராமன், டி.கே.ராமமூர்த்தி, டி.ஜி.லிங்கப்பா, சி.எஸ்.ெஜயராமன் ஆகியோர் போவார்கள்.

இசையமைத்துவிட்டு சென்னை திரும்பும் வரையில் அவர்களுக்கு சுரங்கள் எழுதித்தருவது, அரங்கம் ஏற்பாடு செய்வது, பாடல் ஒத்திகைக்கு உதவுவது என்று எல்லாப் பொறுப்புகளையும் நிர்வாகித்து வந்தவர் எம்.எஸ்.வி.

இதனால் அவர் பெற்ற இசை ஞானம், திறமை, அனுபவம் இசையமைக்கத் தேவையான எல்லா மேலாண்மையும் கைகூடி வந்தது என்றே சொல்லவேண்டும்.

இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பாராமனிடம் உதவியாளராக சேர்ந்த எம்.எஸ்.வி. விரைவில் தனது நேர்மையான உழைப்பால், தலைமை உதவியாளரானார். இதற்கிடையே 'ெஜனோவா' என்ற மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படத்திற்கு ஏற்கனவே ஞானமணி என்ற இசையமைப்பாளர் இருந்தாலும் எம்.எஸ்.வி. அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு தரப்பட்டது.

பகலில் சி.ஆர்.சுப்பாராமன் படத்திற்கு இசையமைப்புக்கான உதவிகள் செய்வதும், அவரிடம் ஆசிப் பெற்று, இரவுகளில் "ஜெனோவா" படத்திற்கு இசையமைப்பதுமான அவரது உைழப்பு எல்லோரையும் வியப்புடன் எம்.எஸ்.வி. யை திரும்பி பார்க்க வைத்தது. தனது உதவியாளர், படத்திற்கு இசையமைப்பாளராக முன்னேறியதில் சுப்பாராமனுக்கு மிகவும் மகிழ்ச்சி!

தனது குருவிற்கு தான் இசையமைத்த படத்தின் பாடல்களை நேரில் போட்டுக்காட்டி ஆசி பெறவேண்டும் என நினைத்து அதற்கென ஒரு நாளும் குறித்து அரங்கமும் முன்கூட்டியே ஒப்பந்தம் செய்துவிட்டார்... அப்போதுதான், சுப்பாராமன் இறந்துவிட்ட செய்தி வருகிறது. நொந்து அழுதேவிட்டார் எம்.எஸ்.வி. ஏற்கனவே, சுப்பாராமனிடம் இசையமைப்பில் எல்லா பொறுப்பிலும் இருந்து வந்த எம்.எஸ்.வி.யிடம், சுப்பாராமன் பாதியில் இசையமைத்து நின்றுவிட்ட படங்களுக்கு இசையமைத்து முடித்து வைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள சொல்லி கேட்டார்கள் தயாரிப்பாளர்கள். எம்.எஸ்.வி. அவற்றை முடித்துக் கொடுத்தார்.

சுப்பாராமன் குழுவிலிருந்த டி.கே.ராமமூர்த்தி என்பவருக்கும் வாய்ப்புகள் வந்தன. டி.கே.ராமமூர்த்தி சிறந்த வயலின் மேதை. இவர் 72 மேளகர்த்த ராகங்களையும் வாசிக்கத்தெரிந்தவராம். அதுமட்டுமல்ல, இசையமைப்பில் வயலின்கள் வாசிக்கும் போது எந்த வரிசையில் இருக்கும் என்பதையும் கலைஞர் தவறாக வாசிக்கிறார் என்பதையும் துல்லியமாக சொல்லும் அளவிற்கு நுட்பம் ெதரிந்தவர். இவருடைய இந்த திறமைகளுக்கு மரியாதைக் கொடுத்து பழகி வந்தவர் எம்.எஸ்.வி.

"அபூர்வ ராகங்கள்" - என்றொரு திரைப்படம் 1975ல் வந்தது. இயக்குநர் சிகரம், கே. பாலசந்தர் இயக்கியிருந்தார். இந்த திரைக்கதையே ஒரு அபூர்வம். தன்னைவிட மூத்தவரான நடிகை ஸ்ரீவித்யாைவ நடிகர் கமல்ஹாசன் விரும்புவார். கமல்ஹாசன் தந்தையான மேஜர் சுந்தர ராஜனை, ஸ்ரீவித்யா மகளான நடிகை ஜெயசுதா விரும்புவார். ஒரு சிக்கலான கதை.

இயக்குநர் கே. பாலசந்தர், கதையை சொல்லும் போது, எனக்கு ஒரு அபூர்வமான பாடல் வேண்டும். வித்தியாசமான ராகத்தில் இருக்கணும் என்றார். இதுவரை யாரும் மெட்டு போடாததாக இருந்தால் சிறப்பு என்றார்.

எம்.எஸ்.வி. சரி என்று சொல்லிவிட்டு, சங்கீத வித்தகர் பாடகர் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணவிடம் சென்று, செய்தியை சொல்லி, "அண்ணே ஒரு அபூர்வமான ராகத்தை சொல்லுங்கள் " என்று கேட்டார்.

அவர், "மஹதி" என்றொரு ராகம், இருக்கிறது. அது நான்கே சுரங்கள் கொண்டது. அதில் மெட்டமைத்துப் பாருங்கள்" என்று சொல்லி விட்டார்.

'மஹதி ராகம்' - ச,க,ப,நி, என்ற நான்கே சுரங்கள் கொண்டது. நான்கு சுரங்களுக்குள் இசை அமைப்பது கடினம்.

கமல்ஹாசன் விரும்பும் ஸ்ரீவித்யாவின் பெயர் "பைரவி" .அது ஒரு ராகத்தின் பெயர்! இதனால் ஸ்ரீவித்யாவின் பெயரை பாடலில் நடுவில் வைத்து "அவளொரு பைரவி" - என்று எழுதியிருப்பார் கவியரசர்.

ஆனால், பாடல் கே.பி.சார். கேட்டபடி மஹதியில் தரவேண்டும். அவ்வாறே செய்து நடுவில் அவள் பெயரை பைரவி என்று குறிப்பிடும் இடத்தில் 'பைரவி' ராகத்தையும் காட்டியிருப்பார்.

திரைப்படங்களில் காட்சிகளை சொல்ல ஒரு சில உவமைகளை காட்டி குறிப்பால் உணர்த்துவார்கள். அதைப் போல அந்தப் பாடலின் சுட்டிக்காட்டும் வகையில் சிம்பாலிக் சுரம் கொண்டு வந்திருப்பார் எம்.எஸ்.வி. ஒரு புதிய உத்தி அது! இந்த இரண்டு ராகங்களை இணைத்திருப்பது என்பது எம்.எஸ்.வி. யின் படைப்புத்திறனுக்கு ஒரு மைல் கல்!

"நீ காதலிக்கும் பெண் யார்" என்று கமலிடம் ஸ்ரீவித்யா கேட்கிறார். கமல்ஹாசன் இசையிலே புதிர் போடுகிறார். தான் காதலிக்கும் பெண்ணின் சிறப்புகளை அதிசய ராகமான மஹதியில் வர்ணித்துக் கொண்டே வருகிறார்.

அதிசய ராகம்....

ஆனந்த ராகம்....

அழகிய ராகம்ம்ம்...

அபூர்வ ராகம்.... என்று பல்லவி பாடுகிறார்.

பல்லவி என்றால் பாடலின் முதல் 2 அல்லது 4 வரிகள். அனுபல்லவி என்றால் பல்லவி அடுத்து வரும் 2 வரிகள். அதற்கு பின் வரும் பத்திகளுக்கு சங்கீதத்தில் சரணம் என்று பெயர்.

அடுத்து வரும் சரணத்திலும் காதலியைப் பற்றிய புகழ்ச்சி தான். இரண்டாம் சரணம் முடிந்தவுடன் வரும் இசையிலே ஒரு மாற்றம் தருகிறார். இங்குதான் மெட்டும் மாறுகிறது.

"ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி!

மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி"

இந்த இருவரிகளையும் "பைரவி" ராகத்தில் அமைத்திருப்பார். எம்.எஸ்.வி.

கமல்ஹாசன், "நான் காதலிக்கும் பெண் 'பைரவி' யாகிய நீ தான் என்பதை புரிந்துக் கொள்ளேன் என்று சொல்லாமல் சொல்லும் விதமாக இசை ரீதியான துப்பு ஒன்று கொடுக்கிறார்.

ஸ்ரீவித்யாவிற்கு, திடீரென ஏன் பைரவி ராகத்தில் பாடுகிறார்? 'பைரவி' என்ற பெயரில் தன் மாணவிகளில் யாருமில்லையே என்ற சிந்தனையிலேயே இருப்பார், யோசிக்கையில் புருவம் சுருக்குவதை கூட காட்டுவார் கே.பி.

"இன்னுமா புரியலை" என்ற வசனம் பாடலின் நடுவில் கமல்ஹாசன் சொல்லிவிட்டு மறுபடியும் பாடுவார்.

"முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி:

முழுவதும் பார்த்தால், அவளொரு பைரவி,

அவளொரு பைரவி, அவளொரு பைரவி"என்று பைரவி ராகத்தில் பாடுவது மட்டுமில்லாமல் பெயரையும் அழுத்தந்திருத்தமாக மூன்று முறை சொல்வார்!

ஸ்ரீவித்யா விக்கித்து நிற்கிறார். தன்னைவிட இளையவரான கமல்ஹாசன் தன்னை காதலிக்கிறாரா என்ற சந்தேகம் கூட அதுவரை அவருக்கு வந்ததில்லை.

காதலிப்பதாக இவ்வளவு நேரம் பாடியது, இசை மூலமாக சொன்னது தன்னைத்தான் என்பதை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

இப்போது கமல்ஹாசன் மீண்டும் பழைய பல்லவியே பாடுகிறார் (மஹதி). "அதிசய ராகம், ஆனந்த ராகம், அழகிய ராகம், அபூர்வ ராகம்..."

இந்த வரிகளைப் பாடும்போது முடிவில் சரசரமாக வாசிக்கப்படும் வயலின்களில் அதிகமாகிக் கொண்டே போகும், ஒரு பரபரப்பு தொனிப்பதை உணரலாம்.

இந்தப் பாடலில் நான்கு சுரங்களுக்கு ஏற்றபடி முதல் நான்கு வரிகளில் நான்கு எழுத்து சொற்கள் ' அதிசய, ஆனந்த, அழகிய, அபூர்வ" என்றும்,

'இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்' என்ற வரியில் 72 ராகங்களில் அவள் பெயரும் ஒரு பாகம் என்பதையும்,

இணையில்லாமல் இருக்கும் நாயகிக்கு ஏற்றவாறு 'சக்கரவாகம்' என்ற சொல்லாடல் பயன்படுத்தியிருப்பதுவும் (சக்கரவாகம் பறவை இணை இழந்தால் சோகமாக பாடும்) என்று கவிதையில் சிலம்பம் ஆடியிருப்பார், கவியரசர் கண்ணதாசன்.

பாடலுக்கு சாஸ்திரிய சங்கீதமாக மட்டுமே மஹதியிலும், பைரவியிலும் அமைத்து, பாடகர் கே.ஜே.யேசுதாஸ் அவர்களை பாடவைத்ததில், கேட்கிற, நாம் மெய்மறக்கிறோம்!

பெண்களுக்குத் தெரியும் பார்ட்டி சேரிஸ் என்று ஒரு டிசைன் புடவை, புடவையின் துவக்கத்தில் ஒரு டிசைன், நடுவில் வேறு டிசைன், மீண்டும் முதலில் வந்த டிசைன் கலந்து முந்தாணை முடியும். அதுபோன்ற ஒரு டிசைன் பாடல் தான் இது! என்று சொன்னால் மிகையில்லை. 50 வருடங்களாக கோலோச்சி கொண்டிருக்கும் பாடல் இது!!!

கே.பாலசந்தரின் திரைப்படம் இயக்கும் திறன் எல்லோருக்கும் தெரிந்தது தானே? இப்படி சவாலாக திருப்பங்கள் அமைந்த தினால் தான் இந்தப் பாட்டில் இருவேறு ராகங்கள் எம்.எஸ்.வி. இசையமைத்தாரா என்றால்... அதுதானில்லை, இருவேறு ராகங்கள் மட்டுமல்ல. இருவேறு எதிரான இசை வகைகளையும் உள்ளடக்கியப் பாடல்களையும் நிறைய தந்திருக்கிறார்!!

"பதிபக்தி" என்று ஒரு திரைப்படம் நடிகர் திலகம் சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், சாவித்ரி, நடித்தது. அதில் ஒரு பாடல் காட்சியில் நாட்டியக் கலைஞராக ஜே.பி.சந்திரபாபு, தனது குழுவினரோடு "ராக் ராக் ராக்" என்று ராக் அண்ட் ரோல் பாணி நடனத்தை ஆடுவார். அதற்கு போட்டியாக இரு பெண்கள் பரத நாட்டியம் ஆடுவார்கள். இந்த பாடலை மேற்கத்திய இசையிலும் 'அடாணா' ராகத்தில் கர்நாடக இசையிலும் ஜமாய்த்திருப்பார்கள் எம்.எஸ்.விஸ்வநாதன்- ராமமூர்த்தி இருவரும்.

ஒரே பாடலில் இரு வகை இசை வந்தால் அதை இணைவு இசை என்பார்கள். 1958 லேயே இந்த உத்தியை மெல்லிசை மன்னர்கள் கையாண்டது புதுமை!!

தொடர்ந்து புதையல் எடுப்போம்...

இணைய முகவரி: banumathykrishnakumar6@gmail.com

Tags:    

Similar News