சிறப்புக் கட்டுரைகள்

பட்டுக்கோட்டையார் திறமையைக்கண்டு வியந்த எம்.எஸ்.வி.

Published On 2024-06-21 09:33 GMT   |   Update On 2024-06-21 09:33 GMT
  • 1947ம் ஆண்டு நடிக்க வந்தவர்.
  • இந்திய உச்சரிப்பில் பாடுவது இயல்பிலேயே இவருக்கு கை வந்தது.

மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடனான நடிகர் ஜெ.பி.சந்திரபாபுவுடைய அபூர்வ நட்பைப் பார்த்தோமில்லையா..?

ஜெ.பி.சந்திரபாபு தூத்துக்குடியில் கிருத்துவ குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய அப்பா ஜெ.பி.ரோட்டரிக்ஸ் ஒரு விடுதலைப் போராட்ட வீரர் என்பதால் அவரை கைது செய்து, விடுதலையானவுடன் இலங்கைக்கு நாடு கடத்தியதாம் பிரிட்டிஷ் அரசு.

தனது கல்லூரி படிப்பை கொழும்புவில் முடித்தார் சந்திரபாபு. பின்னர் இந்தியா திரும்பியது அவரது குடும்பம். அந்தக் காலத்திலேயே கல்லூரியில் படித்தவர், கிருத்துவர் என்பதினாலும் ஜெ.பி. சந்திரபாபுவின் நடை, உடை, பாவனைகள் மிகவும் நவநாகரிகமாக இருந்தன.

ஒரு படப்பிடிப்பு தளத்தின் உள்ளே சென்று நடிக்க வாய்ப்புத்தேட அனுமதிக்கப்படாததால் தற்கொலைக்கு முயன்றவர் இவர். திரைப்படத்துறையின் மீது அப்படியொரு ஈர்ப்பு! 1947ம் ஆண்டு நடிக்க வந்தவர்.

1950ம் ஆண்டில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராக ஆனார். நடித்த படங்களில் எல்லாம் சொந்தக் குரலில் பாடி நடித்தார். இவரது குரல் லேசான அதிர்வுடன் கூடிய ஒரு தனித்தன்மையாக இருக்கும். மேற்கத்திய இசையில் வந்த பாடல்களை ஆங்கிலோ-இந்திய உச்சரிப்பில் பாடுவது இயல்பிலேயே இவருக்கு கை வந்தது!

எம்.எஸ்.வி. திரைப்படத்திற்கு இசையமைக்க வந்தபோது, கர்நாடக சங்கீதம் தெரிந்தவர்கள் மட்டுமே பாடிக் கொண்டிருந்த நேரம். பாடல்கள் கர்நாடக சங்கீத பாணியில் தான் வர முடியும். இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் கொஞ்சம் இசையை மெல்லிசைப் படுத்தினார். கே.வி.மகாதேவன் கர்நாடக அடிப்படையிலும், ஆதி நாராயண் ராவ் (நடிகை அஞ்சலி தேவியின் கணவர்) இந்துஸ்தானி மெட்டில் பாடல்தந்து புகழ்ப் பெற்றார்கள்.

1953ல் "குலேபகாவலி" படத்தில் ஜெ.பி.சந்திரபாபுவுடன் மோதல் ஏற்பட்டாலும் பிறகு மிகவும் நட்பு பாராட்டிய எம்.எஸ்.வி. 'புதையல்' படத்தில் 1957ல் மீண்டும் ஒன்றாக வேலை செய்யும் வாய்ப்பு வருகிறது. சந்திரபாபுவின் மேற்கத்திய பழக்கம் புரியவந்ததில், அவருக்காகவே பொருந்துகிற மாதிரியானப் பாடல்களை தருகிறார்.

முன்பு "ராக் ராக் ராக் & ரோல்" என்ற பாடலில் ராக் & ரோல் இசையும், கர்நாடக இசையும் சேர்ந்த இணைவு இசை வகைப் பாடலாக அமைந்ததைப் பார்த்தோம். 1957ல் வெளிவந்த "புதையல்"- என்றப் படத்தில் தஞ்சை ராமைய்ய தாஸ் எழுதியப் பாடல், "ஹல்லோ மை டியர் ராமி, எங்கம்மா உனக்கு மாமி"- என்றப் பாட்டு.

இது ராக் & ரோல் உடன் கிராமியம் அதுவும் கானாப் பாடல் சேர்ந்த பாடல்! இதிலும் விசில், யோடிலிஸ், கைத்தட்டல்கள் என்று அந்தக் காலத்திலேயே புதுமையானப் பாடல்! வருடங்களை குறிப்பிட்டு சொல்லக் காரணம். அந்தக் காலக் கட்டத்திலேயே முதன் முதலில் பாடல்களில் பல்வேறு இசை வகைகளை கொண்டு வந்தவர்கள் மெல்லிசை மன்னர்கள் என்பது தான்.

இவர்கள் புதுமையாகவும், புரட்சியாகவும் பாடல்களை கொண்டு வர நினைத்தாலும், அந்த வகைப் பாடல்களை கற்றுக்கொண்டு, அதே வகையில் பாட சரியான பின்னணி பாடகர்களும் வேண்டுமில்லையா?

புதுப்புது வகை இசைகளை எப்படி முயற்சித்துப் பார்க்கமுடியும்? தொழிலின் ஆரம்ப காலத்திலேயே மேற்கத்திய இசை நுட்பங்களை கொண்டு வர முடிந்ததில் சுந்திரபாபுவின் ஆங்கிேலா-இந்திய உச்சரிப்பு, ராப் பாடல் போல் பாடும் முறை ஒரு கூடுதல் பலம் என்றே சொல்லலாம்!

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்,பாட்டாளிகளின் வாழ்க்கையை எல்லாப் பாடல்களிலும் வைத்து அக்கறையுடன் எழுதும், எளிய மனிதர்களுக்கான கவிஞர். நிறைய கண்திறப்புப் பாடல்களை "தூங்காதே தம்பி தூங்காதே", "சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா" "இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" போன்ற பல பாடல்களை எழுதியவர்.

30 வது வயதுக்குள்ளேயே தனது வாழ்க்கையைக் கூட "ஹைக்கூ" கவிதைப்போல் சிறுவயதிலேயே முடித்துக் கொண்டவர். இவர் திரைத்துறைக்கு வந்ததும் ஒரு சுவாரஸ்யமான கதை!

"பாசவலை" என்ற மார்டன் தியேட்டரின் படத்தில் கதையுடன் பொருந்திப் போகிற மாதிரி தத்துவப் பாடல் தேவை. அப்போதெல்லாம் ஒரே சூழலுக்கு இரண்டு பாடலாசிரியர்களைக்கூட எழுதச் சொல்வார்களாம். இரண்டில் இருந்து சிறந்த வரிகளை எடுத்துக்கொள்வார்களாம். அப்படி இரண்டு பாடலாசிரியர்களை வைத்து எழுதியும் எம்.எஸ்.வி. யோசித்திருந்த மெட்டுக்கு ஏற்ற பல்லவி வரிகள் அமையவில்லை.

நான்கு நாட்கள் கடந்தபடியால் நிறுவன மேலாளர் சுலைமான் என்பவர் எம்.எஸ்.வியிடம் ஒரு புதிய பாடலாசிரியரை அறிமுகம் செய்யட்டுமா என்று கேட்கிறார். எம்.எஸ்.வி. "என்னங்க அனுபவமுள்ளவங்களே எழுதியும் பல்லவி சரியா அமையலைன்னு நாங்களே பதட்டமாயிருக்கோம். நீங்க புதுசா பாட்டு எழுதுறவரை அழைத்து வரட்டுமான்னு கேட்கறீங்க. புதியவங்களை இப்ப அவசரமான நேரத்திலே எழுத வைக்க முயற்சிப் பண்ண முடியாதுங்க" என்று மறுத்துவிடுகிறார்.

பாடல் அமையவேயில்லை. சுலைமான் அப்போது ஒரு தாளை நீட்டுகிறார். "எதற்கும் இந்த பல்லவியை ஒருமுறை படிச்சு பாருங்க. பிடிக்கலேன்னா விட்டுடலாம்."

'கொடுங்க, பாக்கலாம்' வாங்கிப்படிக்கிறார்..

"குட்டி ஆடு தப்பி வந்தா குள்ளநரிக்கு சொந்தம்,

குள்ளநரி மாட்டிக்கிட்டா கொறவனுக்கு சொந்தம்,

தட்டுக் கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்,

சட்டப்படி பார்க்கப் போனா எட்டடிதான் சொந்தம்!"

-படித்தவர், நெக்குருகிப் போகிறார்.

"அடடா, யாருப்பா இந்தப் பாட்டு வாத்தியார். உடனே கூப்பிடுங்க". (திரைப்பட பாடலாசிரியர்களை பாட்டு வாத்தியார் என்றுதான் அழைப்பார் எம்.எஸ்.வி.)

பல்லவி வரிகள் திரைக்கதைக்கு சரியாகப் பொருந்திப் போகிறவரிகள். மெட்டுக்குப் பொருந்தும் வீச்சமான வரிகள்!

நான்கு நாட்களாக பாடலெழுத வாய்ப்புக்கு காத்திருந்த அந்த இளைஞனோ இதற்கு மேல் எங்கே கூப்பிடப் போகிறார்கள் என்ற விரத்தியில் போய்விட்டார். எப்படியோ தேடி கண்டுபிடித்து அழைத்து வந்தார்கள்.

"இந்தப் பல்லவியை நீங்களா எழுதினீங்க தம்பி?

ஆமாங்க..!

இத்தனை நாளா எங்கிருந்தீங்க தம்பி?"என்று மகிழ்ந்து வாழ்த்திவிட்டு அடுத்த இருபது நிமிடங்களில் அந்த வரிகளுக்கு மெட்டும் போட்டுவிட்டார். எம்.எஸ்.வி. அந்த பாடலாசிரியர்தான் பட்டுக்கோட்டையார்.

இன்னொரு முறை, இவரிடம் கேட்டார்..

"அதென்ன தம்பி, எல்லோரும் ஆறடி என்று தானே சொல்வாங்க. நீங்க எட்டடி தான் சொந்தம்-னு ஏன் எழுதினீங்க?

அண்ணே, நானே ஆறடி உயரம், அதனால் எட்டடி என்று எழுதினேன்.

"குட்டி ஆடு தப்பி வந்தா"-பாடல் ஒலிப்பதிவு முடிந்த அன்று இரவு தூக்கம் பிடிக்காமல் தவிக்கிறார் எம்.எஸ்.வி. "எனக்கு கர்வம் வந்துவிட்டதோ? புதிய பாடலாசிரியரிடம் திறமை இருக்காது என்று எப்படி என்னால் தப்பாக முடிவெடுக்க முடிந்தது? எப்படிப்பட்ட ஒரு பாடலாசிரியரை திரைத்துறை இழக்க நான் காரணமாக ஆகியிருப்பேனே" - என்று இரவு புலம்பி அழுதாராம். இதை அவரே தொலைக்காட்சி பேட்டியில் சொன்னார்.

அன்று முதல் யாராவது புதியவர்கள் தன்னை சந்திக்க வந்தால் மறுக்காமல் அவர்களை சந்தித்து 10 நிமிடம் ஒதுக்கி பேச வேண்டும் என்பதை ஒரு பாடமாகக் கொண்டாராம்.

இவர்கள் கூட்டணியில் உருவான இன்னொரு அழகானப் பாடல் 1957ல் வந்த "புதையல்" படத்தில் வரும் இசைப்பேரரசி பி.சுசீலா குழுவினருடன் பாடியப் பாடல் "சின்னச்சின்ன இழைப் பின்னி பின்னி வரும் சித்திர கைத்தறி சேலையடி, நம்ம தென்னாட்டில் எந்நாளும் கொண்டாடும் வேலையடி". நெசவு நெய்துக் கொண்டே பத்மினி பாடுவதாக வரும் பாடல்! நெசவு செய்யும் இடத்திற்கே போய் நெசவு செய்யும் போது கட்டைகளில் ஏற்படும் ஒலிகளை கவனித்து, அந்த ஒலிகளுக்கு ஏற்ற தாளகதியில் தத்தகரம் சொல்லி பாடலை எழுதி மெட்டமைத்தப் பாடல் அது!

பல்லவியில் 14 சொற்கள். தொடர்ந்து இடையில் நிறுத்தம் செய்யாமல் பாடப்படும்!! கையோடு "தென்னாட்டில் எந்நாளும் கொண்டாடும் வேலையடி"-என்று நெசவுத் தொழிலைப் போற்றியும் வரிகளை வைத்திருக்கிறார். பாடல் முழுக்க மெட்டுகள் மாறிக்கொண்டே போகும் அழகானப் பாடலில், பறவைகளின் கீச்சொலி, பெண்களின் கும்மி சத்தம், தைய்யா தைய்ய தான்னா என்ற 'வெற்று சொற்களும்' அமைந்தது. "இதை ஓட்டும் ஏழைக் கூட்டுறவாலே உலகில் தொழில் வளம் உயரும்" என்று உலகளவில் புகழ்வாய்ந்த நம் நாட்டு கைத்தறியின் சிறப்பை சொல்லும் வரிகள் உள்ளப் பாடல்!

மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆன போது, "எனது பதவி நாற்காலியின் நான்கு கால்களில் ஒரு கால் பட்டுக்கோட்டையாரால் வந்தது" என்றார். எம்.ஜி.ஆருக்கு பட்டுக்கோட்டையார் எழுதிய தன்னெழுச்சி, தத்துவம் என எல்லாப் பாடல்களிலும் இருந்த வரிகள் மக்கள் மனதில் எம்.ஜி.ஆரை ஒட்ட வைத்தன! கட்டி வைத்தன என்பது உண்மை.

"பதிபக்தி" படத்தில் பட்டுக்கோட்டையாரின் ஒரு பாடல். ரிக்ஷா இழுப்பவர்கள் பாடும் பாடலை எழுதியிருப்பார். எளிய நிலை மக்கள் தங்களின் துன்பங்களைக் கூட தாமே நையாண்டி செய்துக் கொண்டு துள்ளளலாகப் பாடுவதாக அமைந்தப் பாடல்! இப்போது சொல்கிற கானாப் பாட்டு, குத்துப் பாட்டுக்கான அத்தனை வேக தாளகதிப் பாடல்!

எனக்குத் தெரிந்து தமிழ்த் திரைப்படத்தில் முதன் முதலில் வந்த நீள கானாப் பாடல் இது! "தாந்துனக்கடி, தக்கடி, அஜக், என்றெல்லாம் கானாப்பாடலுக்கே உரிய வெற்று சொற்கள் எல்லாம் சேர்த்து வந்தப் பாடல். இன்று கேட்டாலும் நேற்று வந்தப் பாட்டு போல தோன்றும்! 1958-ல் வந்து 66 ஆண்டுகளான பின்பும் நவீனமாக இருக்கும்.

வரிகளோ மனதை உலுக்கி கேள்வி கேட்கும். 1973க்கு முன் விலா எலும்பு துருத்தி தெரியும் ஒரு மனிதன், தொந்தி பருத்த மனிதனை உட்கார வைத்து கால்நடையைப் போல் இழுக்கும் அவலம் இன்றைய தலைமுறையினருக்குத் தெரியவேண்டுமென்றால், இந்தப் பாடலை அவசியம் பார்க்க வேண்டும்.

இதில் சந்திரபாபு பாடிய விதமும், நடனமும் பாடலை எங்கோ கொண்டு சென்றது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் ஆடி ஒயிலாக நடித்திருப்பார்.

பொதுவாகவே, சந்திரபாபுக்கு அசையாமல் துள்ளாமல் பாட வராது. இவர் பாடும் போது ஒலிப்பதிவில் நான்கு பக்கமும் சுற்றிலும் வெற்று மைக்கை வைத்தால்தான் பாடலை பதிவு செய்ய முடியுமாம்.

"ஜெனோவா" என்றத் திரைப்படம் ஈ.பி.ஈச்சப்பன் தயாரித்தார். இதில் எம்.எஸ். ஞானமணி என்பவர் இசையமைத்தாலும், எம்.எஸ்.வியும் சிலப் பாடல்களுக்கு இசையமைக்க வேண்டுமென தயாரிப்பாளர் விரும்பினார். ஆனால் கதாநாயகனான எம்.ஜி.ஆருக்கு எம்.எஸ்.வி. இசையமைப்பதில் விருப்பமில்லை.

வளர்ந்து வரும் புதியவரை சேர்க்கணுமா என நினைத்தாராம். தயாரிப்பாளரின் பிடிவாதத்தால் "ஜெனோவா"வில் எம்.எஸ்.வியும் இசையமைத்தார். பாடல் கேட்ட எம்.ஜி.ஆரே எம்.எஸ்.வி.யை நேரில் பாராட்டி வாழ்த்தினார், என்பதும் இனி நீ, என் படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்று சொன்னதும் வரலாறு!!

தொடர்ந்து புதையல் எடுப்போம்...

இணைய முகவரி:

banumathykrishnakumar6@gmail.com

Tags:    

Similar News