சிறப்புக் கட்டுரைகள்

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்!

Published On 2024-10-06 10:45 GMT   |   Update On 2024-10-06 10:45 GMT
  • உலகம் எண்ணற்ற இளைஞர்களாலும், இணையான முதியவர்களாலும் நிறைந்திருக்கிறது.
  • மூத்தவர்களிடம் மன்னிப்புக் கேட்பதும், தவறுக்கு வருந்துவதும் ஆகச் சிறந்த மரியாதைக் குணமாகக் கருதப்பட வேண்டியதாகும்.

மூத்த குடிமக்களுக்கு மரியாதை செலுத்துவதில் ஆர்வமுன்னுரிமை காட்டும் இனிய வாசகர்களே வணக்கம்!.

உலகம், மரம், செடி, கொடி, போன்ற தாவர இனங்களாலும், சிங்கம், புலி, யானை, கரடி போன்ற விலங்கினங்களாலும், பறப்பன, ஊர்வன போன்ற பல்வகை உயிரினங்களாலும் சூழப்பட்டுள்ளது; இவ்வகை உயிருள்ள ஜீவ ராசிகளால் மட்டுமல்ல… மலைகள், பாறைகள், மண், நீர், நெருப்பு, காற்று எனும் பலவகை உயிரற்ற பொருள்களாலும் கலந்து இருப்பதே உலகம். இவற்றில் ஆறாவது அறிவுகொண்ட மனித இனமும் தோன்றி வாழ்ந்து, ஆளுமை செலுத்தி வருவதே சிறப்பு.

மனித இனம் உட்பட, உயிருள்ளதும் உயிரற்றதுமாக இயங்கும் இந்த உலகில், அனைத்துமே ஒரே வயதும் பருவமும் கொண்டவை அல்ல; காலத்துக்குத் தக்கபடி, தோன்றுவது, இருப்பது, பிறகு மடிந்து அழிந்து போவது ஆகிய மூன்றுவகையான செயல்இயக்க விதிகளுக்கும் இவை ஆளாகக் கூடியவையே ஆகும். அதனால் எல்லா உயிரினங்களிலும் இளமை, வளமை, முதுமை எனும் மூவகைத் திறமும் வயது அடிப்படையில் உண்டு. சார்ந்து வாழ்வது, அரவணைத்து வாழ்வது, சேர்ந்து வாழ்வது, கூட்டமாக வாழ்வது போன்ற வாழ்நிலைகள் மனிதர்களைப் போலவே மற்ற ஜீவராசிகளுக்கும் உண்டு.

எத்தனை விதமான உயிரினங்கள் இந்த மண்ணில் தோன்றி வாழ்ந்தாலும், மனிதர்களுக்கு மட்டுமே மனம் மொழி மெய்களால் சிந்திக்கவும் செயல்படவும் உதவுகிற ஆறாவது அறிவு படைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆறாவது அறிவுகொண்டு அவன் வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிமுறைகள் பலவற்றைப் பல ஞானியரும் மேதையரும் பலவகைப் போதனைகளாகவும் இலக்கியங்களாகவும் படைத்து வழிகாட்டியிருக்கின்றனர். அவற்றில் இன்றியமையாச் சிறப்பினவாகத் திகழும் ஒன்றுதான், வயதிலும் அனுபவத்திலும் மூத்த பெரியவர்களை மதித்தல் என்பது ஆகும்.

"மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக் காயும் முன்னர்க் கசக்கும் பின்னர் இனிக்கும்" என்கிற தமிழ்ப் பழமொழி, மூத்தோர் சொல்லில் திகழக்கூடிய அமரத் தன்மையை எடுத்தியம்புவதாகும். இந்த உலகம் எண்ணற்ற இளைஞர்களாலும், இணையான முதியவர்களாலும் நிறைந்திருக்கிறது. இளைஞர்கள், பொங்கி வழியும் ஆற்றலுடனும், முதியவர்கள் ஆற்றுப்படுத்தும் அனுபவத்துடனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இளைஞர்களை ஒரு காட்டாற்று வெள்ளத்தோடு ஒப்பிட்டால், பல காட்டாறுகள் வழிப்படுத்தப்பட்ட பழமைமிகு ஆற்றோடு முதியவர்களை ஒப்பிடலாம். கரைகளுள்ள ஆற்றுவழி செல்லாத காட்டாறுகளால் அழிவுதான் மிஞ்சுமேயொழிய, வளமான வயல்களுக்கு நீர்போய்ச் சேராது. அதுபோல முதுமையால் நெறிப் படுத்தப்படாத இளமையால் ஆற்றல் வீணடிப்பே பெரிதும் நிகழும்.

வாழ்க்கை மரபிற்கு வழிநெறி காட்டுகிற வள்ளுவப் பேராசானும், பெரியவர்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்!; பெரியவர்களை உற்ற துணையாக எப்போதும் கொண்டிருக்க வேண்டும்!; பெரியவர்களிடம் பிழைசெய்து விடாமல் வாழவேண்டும்! என்று வலியுறுத்துகிறார். வள்ளுவர் காலந்தொட்டு, இன்றைய கணினிக் காலம்வரை, மூத்தோர்களை மதிப்புடன் நடத்தவேண்டும்! என்று எல்லாரும் விடாமல் சொல்லிவருவதற்கு என்ன காரணம்?. வாழ்க்கை என்றால் எப்போதும் அது மரபுநிலை திரியாத வாழ்க்கையாக இருக்க வேண்டும்; "மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும்!" என்பது நமது ஆதித் தமிழ்நூலாகிய தொல்காப்பியத்தின் மரபுநிலை போற்றும் வாசகமாகும்.

சுந்தர ஆவுடையப்பன்


பெரியவர்களை மதிக்கவேண்டும் என்கிற கூற்று யாரை நோக்கியது? என்று பார்த்தால், அது முழுக்க முழுக்க இளம் தலைமுறையை நோக்கியதே ஆகும். வளரும் குழந்தை முதற்கொண்டு, பள்ளி செல்லும் சிறுவர்கள் தொடர்ந்து, கல்லூரி செல்லும் இளைஞர் வரையுள்ள அனைத்து இளம் தலைமுறையினருக்கான ஒரே வலியுறுத்தல் தான் பெரியவர்களை மதித்தல் என்பதாகும். ஒரு தலைமுறையின் பண்பாட்டு வளர்ச்சி என்பது இளைய தலைமுறையினரிடமிருந்தே துளிர் விடத் தொடங்குகிறது.

ஒரு குடும்பம் என்று எடுத்துக்கொண்டால், குடும்பத்திலுள்ள மூத்த உறுப்பினர்களான தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அத்தை, மாமா எனவுள்ள அனைவரையும் மதிப்புடனும் மரியாதையுடனும் இளம் தலைமுறையினர் நடத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு முன்பாக, இளம்தலைமுறை மதிக்கும் வண்ணம் மரியாதைப் பெருமையுடன் மூத்தவர்கள் நடந்து கொள்ள வேண்டும். சதா அப்பாவும் அம்மாவும் ஒருவரையொருவர் குறை கூறிக்கொண்டு சண்டையிட்டுக் கொள்ளும் குடும்பத்தில், பிள்ளைகள் பெற்றோர்களை மதிப்பதே கிடையாது. 'உங்க அப்பாவைப் பற்றித் தெரியாதா?' என அம்மாவும், 'உங்க அம்மாவைப் பற்றித் தெரியாதா?' என அப்பாவும் பிள்ளைகளிடம் எப்போதும் குற்றப்பத்திரிகை வாசித்துக் கொண்டே இருந்தால், அந்தக் குடும்பத்தில் எவருக்குமே எவரிடமும் மரியாதையென்பது துளியளவும் இல்லாமல் போகும்.

குழந்தைகள் முன்னிலையில், கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அன்புடனும் மரியாதையுடனும் அழைத்துக்கொள்ளும் பண்பு, அவர்களின் மதிப்பையும் மரியாதையையும் பிள்ளைகளிடம் உயர்த்திக்காட்டும். அதே போலக், குழந்தைகள் எதையுமே புதியதாகச் செய்யும்போது, அவற்றைப் பிழையின்றித் திருத்த வேண்டியதும், திருத்தியபடிக், குழந்தைகள் நடக்கிறார்களா? என்பதைக் கண்காணிக்க வேண்டியதும் மூத்தோர்களின் பெரும்கடமை ஆகிறது. இந்த இடத்தில் 'தவறுக்கு வருந்துதல்!' மன்னிப்புக் கேட்டல்!' ஆகிய மாபெரும் கடமைகளைக் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும். அதுவும் சகவயதுக் குழந்தைகள், இளைஞர்கள் இவர்களைத் தவிர்த்துத், தம்மிலும் மூத்தவர்களிடம் மன்னிப்புக் கேட்பதும், தவறுக்கு வருந்துவதும் ஆகச் சிறந்த மரியாதைக் குணமாகக் கருதப்பட வேண்டியதாகும்.

'நான்' என்னும் ஆணவக் குணம் மனித உயிர் கருவாகும் காலந்தொட்டே உடன் வளரும் தீய குணமாகும். 'எல்லாம் என்னால் முடியும்!' என்பது ஒருவகையில் தன்னம்பிக்கைப் பேச்சு என்றாலும், மற்றொரு வகையில் 'என்னால் மட்டுமே முடியும்!' என்கிற தன்னை மையமிட்ட ஆணவப் பேச்சாக அது மாறிவிடும் ஆபத்தும் உண்டு. அதனால்தான் இளைய சமுதாயம், வெற்றிகளுக்கு மட்டுமல்ல, தோல்விகளுக்கும் தவறுகளுக்கும்கூட நாம்தாம் காரணம் என்று ஏற்றுக்கொள்ளும் சமுதாயம் ஆகவும், வயதிலும் அனுபவத்திலும் மூத்த பெரியவர்களிடம் பிழைக்கு வருத்தம் தெரிவிக்கிற சமுதாயம் ஆகவும் மாறவேண்டியது அவசியம் ஆகிறது. நெருப்பால் சுடப்படினும் பிழைத்துக் கொள்ளலாம்; ஆனால் பெரியவர்களிடம் தவறு செய்துவிட்டு, அவர்கள் கோபத்திற்கு ஆளாக நேரிட்டால் தப்பவே முடியாது என்கிறார் திருவள்ளுவர்.

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்

பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார்

ஒவ்வொரு வீட்டிற்கும் சில பெரியவர்கள் கட்டாயம் இருந்தாக வேண்டும்; இன்றைய நகர்மயக் குடும்ப வாழ்வியலில், கணவர் ஓரிடம்; மனைவி ஓரிடம்; பெற்றோர் தனித்தனிப் புகலிடம்; பிள்ளைகள் அவரவர் படிப்பிடம் என வாழ்ந்தால் மூத்தோரை எப்படிப் பேணிக் காப்பது? அவர்கள் அரவணைப்பில் எப்படிக் குடும்பம் நடப்பது?. நல்ல கேள்விதான். வாழ்விடம் தனித் தனியானாலும், அவ்வப்போது ஆலோசனைகளையும், அரவணைப்புகளையும் செய்து கொள்ளச் செல்பேசிகளையாவது பயன்படுத்தி அன்போடு மகிழ்வோமே!.

குடும்பத்தில் மட்டுமல்ல, அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், அரசாங்கங்கள் என எல்லா நிறுவனங்களிலும் சில பெரியவர்கள், மதிக்கத்தக்க உயரிடத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தப் பெரியவர்கள், ஏதோ சடங்கு சம்பிரதாயக் காலங்களில் வந்து அட்சதை தூவி ஆசி வழங்குவதற்காக மட்டுமன்று; இளைய தலைமுறை நெறிதவறிப் போகும்போது உரிய முறையில் தட்டித் திட்டி நெறிப்படுத்த வேண்டிய பெரும்பொறுப்பும் அந்த மூத்தோர்களுக்கு உண்டு; வீட்டுத் தலைவனாக இருந்தாலும் நாட்டுத் தலைவனாக இருந்தாலும் இடித்துத் திருத்த வேண்டிய உயரிய பொறுப்பில் இருப்பவர்கள் மூத்தவர்களே ஆவார்கள்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும்

என்பது, அரசாளும் உதவிக்குப் பெரியவர்களை வைத்துக்கொள்ளாத மன்னவன் பகைவர்கள் இல்லாமலேயே தாமே கெட்டழிவான் என எச்சரிக்கும் வள்ளுவ வாசகம். இதை அப்படியே ஒவ்வொரு குடும்ப நிருவாகத்திற்கும் பொருந்துகிற வாசகமாகப் பொருத்திப் பார்க்கலாம். மூத்த அனுவசாலிகள் கூறுகிற ஆலோசனைகள், நமக்கு வழித்துணையாக வராவிட்டாலும், செல்கிற வாழ்க்கைப் பயணத்தில், துன்பச் சேற்றில், நம்மை வழுக்கிவிழாமல் காக்கின்ற ஊன்றுகோலாகவாவது உதவும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ஓர் ஊருக்கு ஒரு சாமியார் சீடர்களோடு வந்திருந்தார்; அவரைக் காண அந்த ஊரின் பொதுமக்கள் சிலர் வந்திருந்தனர். அவர்களை அந்த ஊரிலிருந்த ஒரு குளத்திற்கு அழைத்துச்சென்று, குளத்தங்கரையிலிருந்த ஓர் உருண்டைக் கல்லைக் காட்டி, அதனைக் குளத்திற்குள் தள்ளுமாறு சொன்னார்; அவர்களும் அவ்வாறே செய்ய, உருண்டைக்கல்லும் உருண்டு குளத்துக்குள் வீழ்ந்து மூழ்கிப்போனது. சாமியார் கேட்டார், "கல் தண்ணீரில் மிதக்குமா?". " மிதக்கவே மிதக்காது! கல் தண்ணீரில் மிதக்கவே மிதக்காது!" மக்கள் அனைவரும் ஒருமித்த குரலில் பதில் சொன்னார்கள். "சரி! நான் மிதக்க வைத்துக் காட்டுகிறேன். நீங்கள் அனைவரும் ஊருக்குள் சென்றுவிட்டு ஓர் அரைமணி நேரம் கழித்து அந்த அதிசயத்தைக் காண வாருங்கள்!" என்று கூறி மக்களை அனுப்பி வைத்தார் சாமியார்.

மக்கள் குளக்கரையை விட்டு நகர்ந்தவுடன், குளத்தங்கரையில் கிடந்த ஒரு மரக்கட்டையைத் தூக்கிக் குளத்துநீரில் போடுமாறு சீடர்களைப் பார்த்துச் சாமியார் கூறினார். சீடர்கள் போட்ட மரக்கட்டை குளத்தில் மிதந்தது; இப்போது கரையில் கிடந்த ஒரு பாறாங்கல்லைத் தூக்கி, மிதந்து கொண்டிருந்த மரக்கட்டையின் மீது போடுமாறு சீடர்களிடம் சாமியார் கூறினார். மரக்கட்டையின் மீது சேர்ந்து பாறாங்கல்லும் மிதந்தது. ஊருக்குள் சென்று திரும்பிய மக்கள் குளக்கரையில் சாமியாரைப் பார்த்தனர். " பார்த்தீர்களா அதிசயத்தை! பாறாங்கல் குளத்து நீரில் மிதக்கிறது!" சொன்னார் சாமியார்.

"இதிலென்ன அதிசயம் இருக்கிறது?. தண்ணீரில் இயல்பாக மரக்கட்டை மிதக்கும்; அதன்மீது இருப்பதனால் பாறாங்கல்லும் மிதக்கிறது!" மக்கள் கூறினர். "அதுவும் சரிதான். ஆனால் தனியாகப் போட்டால் கல் தண்ணீரில் மிதப்பதில்லையே! அது ஏன்?. கட்டைமீது வைத்ததும் மிதக்கிறதே! அது ஏன்?" சாமியார் விவரமாக ஒரு கேள்வியை மக்களின் சிந்தனைக் குளத்துக்குள் விட்டெறிந்தார்.

சாமியாரே விடையும் பகர்ந்தார்," வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதரும் கல் மாதிரி!; வாழ்க்கையென்னும் துன்பக் குளத்துக்குள் வந்தால், சேறு சகதிக்குள் மூழ்கத்தான் வேண்டும். கட்டை போன்றது ஞானிகள் அறிஞர்கள் போன்ற மூத்த பெரியவர்கள் சொல்லியிருக்கிற நல்ல உபதேசங்கள். கட்டைமீது கல் மிதப்பது போல, அறிவிலும் அனுபவத்திலும் சிறந்த பெரியவர்களின் வழிகாட்டல் இருந்தால், நாமும் துன்பச் சகதிக்குள் மூழ்கி விடாமல், மிதந்துகொண்டே கடந்து விடலாம்".

பெரியவர்களைத் துணையாகப் பற்றிக்கொள்வோம்.

தொடர்புக்கு 9443190098

Tags:    

Similar News