சிறப்புக் கட்டுரைகள்

உழைப்பு என்றும் கைவிடாது!

Published On 2024-06-24 09:40 GMT   |   Update On 2024-06-24 09:40 GMT
  • காலத்திற்கேற்ற சில மாறுதல்கள் அவசிய மாகின்றது.
  • சுற்றி நடப்பவைகளை கூர்ந்து கவனியுங்கள்.

காலத்திற்கேற்ற சில மாறுதல்கள் அவசிய மாகின்றது. நம் முன்னோர்கள் வளர்ந்த முறை, வாழும் முறை என்பது அதிக பண்புடன் கூடியவைகளாக இருந்தது. இன்னமும் இருக்கின்றது.

ஆனால் நியாயமற்ற வாழ்க்கை வாழும் மக்கள் மத்தியில் இவை எல்லாம் எடுபடாது. நட்பு என்ற வார்த்தைக்காக தன் உயிரைக் கூட கொடுப்பவர்கள் இன்றும் உள்ளனர். ஆனால் அந்த நட்பு இவர்களுக்கு கடைசியில் அநேகமாக துரோகத்தினைச் செய்கின்றது. இதை தாங்க முடியாமல் உடல், பொருள், ஆவி என அனைத்தும் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு வலியைக் கொடுக்கிறது.

எனவே எதிலும் அதிக நட்பு என்பது இந்த காலத்தில் பிரச்சினைகளையும், மரியாதை இன்மையையுமே தருகின்றது. ஆகவே எந்த இடத்திலும் சற்று தள்ளி இருந்து பழகுவதே உங்கள் ஒளி சக்தியினைக் காக்கும். எதற்கும் ஒரு எல்லை கோடு வைத்துக் கொள்ள வேண்டும்.

* ஆசையும், கனவும் மட்டுமே வாழ்வில் எதனையும் பெற்றுத் தராது. அதற்கான கடும் உழைப்பு வேண்டும். உழைப்பு தரும் பலனை பரம்பரை சொத்து கூட தராது.

* உங்கள் உழைப்பிற்காக பிறர் உதவியினை எதிர்பார்க்க வேண்டாமே.

* ரொம்ப ரொம்ப அதிகமாக யோசித்துக் கொண்டிருந்தால் பிரச்சினை தானே உருவாகி விடும். பிரச்சினைக்கென தினமும் 10 நிமிடங்கள் ஆய்வு செய்யுங்கள், செயல்படுத்துங்கள். அவ்வளவு போதும். பிரச்சினை தானாகவே கரைந்து விடும்.

* சுற்றி நடப்பவைகளை கூர்ந்து கவனியுங்கள். இதுவும் ஒரு தவம்தான்.

* தரமற்ற நட்பு, உறவு வேண்டாமே!

* நீங்கள் உறுதி எடுத்தால் யாரால் உங்களை தடுக்க முடியும். வெற்றி உங்களுடையது மட்டுமே. இத்தோடு சில சின்ன சின்ன பழக்கங்களும் நமது வெற்றிக்கு கை கொடுக்கும்.

* காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர்.

* காலை வேலைகளை முடிக்கும் வரை செல்போனை தொடாது இருப்பது.

* 20 நிமிட தியானம் செய்வது.

* 20 நிமிட உடற்பயிற்சி செய்வது.

* காலையில் கூட சிறிது நேரம் படிக்கலாம்.

* பழக்கம் உள்ளவர்கள் 10 நிமிட பிரார்த்தனை செய்யலாம். சிறிய பழக்கங்கள்தான். ஆனால் பெரிய மாறுதல்களைத் தந்து விடும். சிலவற்றினை மனதில் செதுக்கி விடுங்கள்!

* நாம் எதை நினைக்கின்றோமோ, எதனை செயல்படுத்துகின்றோமோ அது பிரபஞ்சத்தினை அடைகின்றது. பிரபஞ்சத்தில் இருந்து நாம் கொடுத்ததே நமக்கு திரும்பி வருகின்றது.

* கடந்த காலத்தினையே திரும்பி பார்ப்பதாலும், அந்த நிகழ்வுகளில் மூழ்குவதாலும் மேலும் இழப்பே ஏற்படுகின்றது.

* எதை செய்தாலும் சிறப்பாக மட்டுமே செய்ய வேண்டும்.

* எப்போதும் ஒருவர் தன்னை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

* மனதால் பலவீனமாக இருக்கும் போது வாக்குவாதங்கள் செய்யக் கூடாது.

* யார் எதிரிலும் அழக் கூடாது.

* தன்னைத் தானே நொந்து, தன்னைத் தானே திட்டி, தன்னை தானே தாழ்த்தி பேசி, தன்னைத் தானே ஒருவர் காயப்படுத்திக் கொள்ளக் கூடாது.

* அழிவுப்பூர்வமான சிந்தனை உடைய வர்களிடம் இருந்து ஓடி விடுங்கள்.

* அதிக சோக படங்கள், சோக பாடல்களை பார்க்க, கேட்கக் கூடாது. அவ்வாறே ஒருவர் வாழ ஆரம்பித்து விடுவார். கவனம் தேைவ.

* பிரபஞ்சம், பிரபஞ்ச சக்தி, பிரபஞ்ச இயக்கம் இவற்றினைப் பற்றி படிக்க வேண்டும்.

* தனக்கு எது அவசியம் தேவையோ அதனை தயக்கமின்றி செய்து கொள்ள வேண்டும்.

* எது நமக்குத் தேவையோ அதற்காக நாம் தினமும் 15 நிமிடமாவது பயிற்சி, முயற்சி செய்ய வேண்டும்.

* தினமும் காலையில் 20 நிமிடமாவது நடந்து பாருங்கள். உடலில் பல நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தும்.

* இன்று மாலையே நாளைய ஆரம்பத்திற்கான வேலை செய்வது பட படப்பினை நீக்கும்.

ஒரு குட்டி கதையினை படித்தேன். பயனுள்ளதாக இருந்தது. பகிர்ந்து கொள்கிறேன்.

காட்டில் புலியிடம் கழுதை ஒன்று சொன்னது

'புல் நீல நிறம்'

புலி: இல்லை, இல்லை புல் பச்சை நிறம்.

கழுதை: இல்லவே இல்லை. புல் நீல நிறம்தான்.

புலி: 'ராஜாவே, இவன் (கழுதை) புல் நீல நிறம் என்கின்றான்.

சிங்கம் பதிலளித்தது: 'ஆம், புல் நீல நிறம்தான்'

கழுதை: இதைத்தான் நான் சொன்னேன். சிங்க ராஜாவே.

ஆனால் புலி இதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். அவருக்கு தண்டனை கொடுங்கள்' என்றது.

சிங்கம் புலிக்கு தண்டனை வழங்க சம்மதித்தது.

பின் சிங்கம் சொன்னது. 'புலியே, நீ ஐந்து வருடங்கள் பேசக் கூடாது. மவுனமாக மட்டுமே இருக்க வேண்டும்' என்றது.

கழுதை மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஓடியது.

புலி தன் தண்டனையை ஏற்றுக் கொண்டது. இருப்பினும் அதன் மனம் வேதனைப்பட்டது.

'சிங்க ராஜாவே, நான் உங்கள் தண்டனையினை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் புல்லின் நிறம் பச்சை தானே' என்றது.

சிங்கம்: 'ஆம், புல்லின் நிறம் பச்சைதான்'

புலி: 'பின் ஏன் தண்டனை அளித்தீர்கள்?'

சிங்கம்: இந்த தண்டனை புல் பச்சை நிறமா? நீல நிறமா? என்பதற்காக அல்ல. வீரமும், புத்திசாலி தனமும் நிறைந்த நீ ஒரு முட்டாள் கழுதையுடன் வாதிட்டாய். அதற்கு மேல் என்னிடமும் வந்து என் நேரத்தினை வீணடித்தாய். அதற்கான தண்டனையே இது' என்றது.

இதன் மிகப்பெரிய பாடத்தினை அனை வரும் புரிந்து கொள்வோம்.

நாம் நல்லவரா? என்பதை அறிந்து கொள்ள சில சுய பரிசோதனைகள் இதோ:-

* நீங்கள் வீட்டிற்குள்ளோ, ஆபீசுக்குள்ளோ (அ) உறவினர் வீட்டிற்குள்ளோ நுழைகின்றீர்கள். அப்போது அங்கு அனைவரும் உங்களை பார்த்து சந்தோஷம் அடைகின்றனரா?

* உங்கள் கருத்திற்கு அதிக கவனம் கொடுத்து வருகின்றனரா?

* உங்கள் அறிவுரையும், வழி காட்டுதலும் தேவை என்று நினைக்கின்றனரா?

* அனைவரும் உங்களை கண்டவுடன் இதயத்தில் இருந்து புன்னகைக்கின்றனரா?

* நீங்கள் மன்னிக்கும் குணம் கொண்டவர், பழி வாங்க மாட்டீர்கள் என நம்புகின்றார்களா?

* எதுவும் மன்னிக்கக் கூடிய விஷயங்களுக்கு மட்டுமே மன்னிப்பீர்கள் என்று அறிந்து வைத்திருக்கின்றார்களா?

* மற்றவர் செய்யும் சிறிய உதவிகளுக்கு கூட நீங்கள் நன்றி உணர்வோடு இருக்கின்றீர்களா?

* உங்கள் அருகில் இருக்க நண்பர்கள், உறவினர்கள் ஆசைபடுகின்றனரா?

* கெட்ட நிகழ்வுகளை மனதில் தூக்கி அலை யாமல் உடனடியாக மறந்து விடுகின்றீர்களா?

* உயர் சக்தி (அ) மனசாட்சி இதற்கு கட்டுப்பட்டு நடப்பவரா?

* அமைதியை விரும்புபவரா?

* தர்ம சிந்தனை உங்களிடம் இருக்கின்றதா?

உங்களை நீங்களே முதுகில் தட்டிக் கொடுத்து இதே உணர்வோடு, குணத்தோடு, பண்போடு வாழ்வினை எளிதாய் தொடரலாம். இல்லையெனில் தன்னை மாற்றிக் கொள்ள முயற்சிக்கலாமே.

அடிக்கடி ஏதோ அழிவுப்பூர்வமான ஒன்றினை நினைத்து அது நடந்து விடுமோ என்று ரொம்பவும் பயப்படக்கூடாது. இப்படி பயந்தால் அது நிகழ்ந்து விடும் வாய்ப்புகள் அதிகம்.

* ஏதாவது பிரச்சினையா? குழம்புகிறதா? அந்த பிரச்சினையை பற்றிய விவரங்களை ஒரு ேபப்பரில் எழுதத் தொடங்குங்கள். தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் எழுதுங்கள். இப்படி எழுதும் பொழுதே தெளிவு பிறந்து பாதி பிரச்சினை தீர்ந்து விடும்.

* அறிவு, புத்தி, நுண்ணறிவு- இதனை கூர்மையாக்குங்கள். பொருள் வந்து சேரும். சில முயற்சிகளை சற்று புதிதாக செய்து பார்க்கலாமே

* ஒவ்வொருவருக்கும் சில இலக்குகள் இருக்கும். எத்தனை இலக்குகள் உங்களுக்குள் இருக்கும். சுமார் 20 அல்லது 25 இருக்குமா? பொதுவில் இவ்வளவு இருப்பது அதிகம்தான். எனவே 10 என்று வைத்துக் கொள்வோம். அதனை எழுத வேண்டும். தெளிவாக சுருக்கமாக எழுத வேண்டும்.

அதில் முதல் மூன்றினை எடுத்து அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். உங்கள் மனதில் அதிக முக்கியத்துவம் பெற்றதே முதல் மூன்றில் இடம்பெறும். அதற்கு அதிக முக்கியத்துவத்தினை கொடுங்கள்.

* 3-க்கு மேல் எழுதியுள்ளவற்றை அடித்து விடுங்கள். சிறிது கூட அவற்றிற்கு கவனம் தர வேண்டாம். ஏனெனில் முக்கிய மூன்றில் கவனம் செலுத்தும் பொழுது மற்றவை அதனை சிதறச் செய்யும்.

* எதனையும் எழுதுங் கள். கை, பேனா இவற் றின் பலம் மற்ற கருவி களை விட அதிகம் என்பதனை காலப் போக்கில் உணருவீர்கள்.

* தினமும் 10 நிமிட மாவது உங்கள் இலக் குக்கு செலவழிப்பதால் காலப்போக்கில் இது வளரும். செய்வோமா?


 

Tags:    

Similar News