செய்திகள் (Tamil News)

குமரியில் நாளை மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் திடீர் மாற்றம்

Published On 2019-02-28 08:34 GMT   |   Update On 2019-02-28 08:34 GMT
எல்லையில் பதட்டம் ஏற்பட்டுள்ளதை அடுத்து பிரதமர் மோடி குமரியில் நாளை பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #BJP #PMModi
நாகர்கோவில்:

மத்திய அரசின் சார்பில் குமரி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மத்திய அரசின் திட்டங்களை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைப்பார் என்றும், இதற்கான விழா கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் மேடை அமைக்கும் பணி நடந்தது. பிரதமர் வருகைக்கான முன்னேற்பாடுகளும் தொடங்கியது.

பிரதமர் மோடி கன்னியாகுமரி வரும்போது, பாரதிய ஜனதா கட்சி சார்பில் இங்கு அரசியல் பிரசார கூட்டம் நடத்தவும், கட்சி தலைவர்கள் திட்டமிட்டனர். இதற்காக அரசு விழா நடைபெறும் மைதானத்தின் அருகிலேயே இன்னொரு தனி மேடை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகளும் வேகமாக நடந்து வந்தது.

இதற்கிடையே பிரதமர் மோடியின் வருகை குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை பகல் 2.30 மணிக்கு திருவனந்தபுரம் வருகிறார்.

திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைகிறார். அங்கிருந்து விழா மேடைக்கு காரில் செல்கிறார். பிரதமர் செல்லும் பாதைகள், அவர் பயணிக்கும் ஹெலிகாப்டர் ஆகியவற்றின் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. டெல்லியில் இருந்து வந்த பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த ஒத்திகையை நடத்தினர்.

விழா நடைபெறும் மைதானத்தில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், பாரதிய கட்சியின் மேலிட பார்வையாளர் முரளிதரராவ் ஆகியோர் பார்வையிட்டபோது எடுத்த படம்.


பிரதமரின் பாதுகாப்பு ஒத்திகை நடந்து வந்த நிலையில் விழா மைதானத்தில் அரசு மற்றும் கட்சி பிரசார கூட்ட மேடைகள் அமைக்கும் பணி இரவு பகலாக நடந்து வந்தது. நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

நேற்று இரவு திடீரென பிரதமரின் அரசியல் பிரசார கூட்ட மேடை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இது குறித்து கட்சி நிர்வாகிகள் கூறும்போது, இந்திய எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ளதால் பிரதமரின் பிரசார கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தனர்.

பிரதமரின் பாதுகாப்பு மற்றும் பொதுக்கூட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளும் அதிகாரிகளும், கட்சி கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தனர். தமிழகம் மற்றும் குமரி மாவட்டத்தில் திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் திட்டங்களை பிரதமர் மக்களுக்கு அர்ப்பணிப்பார்.

அரசு நிகழ்ச்சி முடிந்ததும், அவர் உடனடியாக டெல்லி திரும்பி விடுவார் என்று கூறினர். அதற்கேற்ப பிரதமரின் புதிய பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். இவர்கள் இருவரும் நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வருகிறார்கள்.

அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரி வருகிறார்கள். அவர்களை உயர் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் வரவேற்கிறார்கள்.

கன்னியாகுமரிக்கு பிரதமர் வருவதையொட்டி இன்றும், நாளையும் கன்னியாகுமரி கடலோர கிராமங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கருதி மீனவர்கள் யாரும் இன்று முதல் 2 நாட்களுக்கு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஆகியோர் கன்னியாகுமரியில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்து வருகிறார்கள்.

குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். #BJP #PMModi
Tags:    

Similar News