தமிழ்நாடு

விஜய் மாநாட்டிற்கு அனுமதி மறுப்பதா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Published On 2024-09-08 07:55 GMT   |   Update On 2024-09-08 07:55 GMT
  • அ.தி.மு.க ஆட்சியில் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.
  • உள்ளாட்சி தேர்தல் என்றாலும், சட்டமன்ற தேர்தல் என்றாலும் அதனை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் முத்துபேட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருச்சியில் இருந்து கார் மூலம் புதுக்கோட்டை வந்தார். மாவட்ட எல்லையில் அவருக்கு புதுக்கோட்டை அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதனை தொடர்ந்து புதுக்கோட்டைக்கு வந்த அவர் நிருபர்ளை சந்தித்தார்.

அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது அ.தி.மு.க. அரசு காலத்தில் கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் பயின்றவர்களில் 3 ஆயிரம் பேரின் டாக்டர் கனவு ஆண்டு தோறும் நனவாகி வருகிறது. இதற்கு காரணம் அ.தி.மு.க. அரசுதான்.

2018-19ம் ஆண்டில் அரசு பள்ளியில் பயின்ற 30 பேர் மட்டுமே மருத்துவ படிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்ட பிறகு அதிக அளவிலான மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பிற்கு வருகின்றனர்.

அ.தி.மு.க ஆட்சியில் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. இதன் காரணத்தால்தான் காவிரி-குண்டாறு திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதற்காக 14 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 70 கோடி ஒதுக்கப்பட்டு திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் இதனை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு உள்ளது. நான் ஒரு விவசாயி என்பதால் விவசாயத்திற்கு நீர் மேலாண்மை அவசியம் குறித்து நன்கு அறிவேன். எனவே அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் இந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். ஏனெனில் இத்திட்டம் நிறைவுற்றால் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் பலன் பெறுவார்கள்.

40 மாத கால தி.மு.க. ஆட்சியில் தினந்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்டவைகள் நடைபெற்று சட்ட, ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு, சந்தி சிரித்துக்கொண்டிருக்கிறது. நாங்கள் தேர்தலை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவெடுப்போம். 2026 வலுவான கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டு அ.தி.மு.க. ஆட்சியை கைப்பற்றும். தொழிற்சாலை நிறைந்த மாநிலமாக மாறினால்தான் பொருளாதாரம் மேன்மை அடையும். 2015ம் ஆண்டு ஜெயலலிதா தொழில் முதலீட்டு மாநாட்டை நடத்தினார். 2019ம் ஆண்டு எனது தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் 3 லட்சம் கோடி தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, பூர்வாங்க பணி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் ஆட்சி மாற்றம் வந்து விட்டது.

தற்போதைய தி.மு.க. ஆட்சியில் அதிக அளவில் புரிந்துணர்வு ஒப்பந்தம், தொழில் முதலீட்டை ஈர்த்து வருவதாக கூறுகிறார்கள். நான் உள்பட எதிர்கட்சிகள் கேட்பதை போல இது குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.

விஜய் கட்சி மாநாட்டிற்கு அனுமதி மறுப்பது கண்டிக்கத்தக்கது. எங்கள் ஆட்சியில் மாநாடு, பொதுக்கூட்டம் நடத்தினாலும் அனுமதி அளித்து, போலீஸ் பாதுகாப்பும் கொடுப்போம். ஆனால் தற்போது அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடத்த கூட தி.மு.க. அரசு அனுமதி அளிக்க மறுக்கிறது. நீதிமன்றம் சென்று அனுமதி பெறக்கூடிய நிலைஉள்ளது.

உள்ளாட்சி தேர்தல் என்றாலும், சட்டமன்ற தேர்தல் என்றாலும் அதனை சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News