செய்திகள்

வங்காளதேசத்தில் போதை மருந்து வியாபாரிகள் 11 பேர் சுட்டுக்கொலை

Published On 2018-05-22 10:42 GMT   |   Update On 2018-05-22 10:42 GMT
வங்காளதேசத்தில் போதை பொருட்கள் வியாபாரம் செய்யும் கும்பலை குறிவைத்து போலீசார் நடத்திய என்கவுண்டரில் மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். #Bangladeshdrugwar
தாகா:

வங்காளதேசத்தில் ‘யாபா’ எனப்படும் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இவ்வகை போதை மருந்துகளை ஒழிக்க அந்நாட்டு அரசு பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறது. அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவின் உத்தரவின் அடிப்படையில், ஆயிரக்கணக்கான போதை மருந்து வியாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வங்காளதேச போலீசார் போதை மருந்து வியாபாரிகள் 11 பேரை என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் போதை மருந்து வியாபாரிகள் 33 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்கவுண்டர் சம்பவங்கள் அனைத்தும் போதை மருந்துகளுக்கு எதிரான போர் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியைச் சேர்ந்த ரிஜ்வி அகமது, ‘போலீசார் நடத்திய இந்த என்கவுண்டரில் எங்கள் கட்சியின் மாணவரணியைச் சேர்ந்த அஜ்மத் உசைன் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளார்’ என தெரிவித்துள்ளார்.

போதை மருந்துக்கு எதிரான போரை வரவேற்பதாகவும், ஆனால் இதுபோன்ற என்கவுண்டர் சம்பவங்கள் ஆளும் கட்சிக்கு எதிரானவர்களை கொல்ல பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போதை மருந்து விற்பனை மிகப்பெரிய குற்றமாகும், ஆனால் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர் நூர்கான் தெரிவித்துள்ளார்.

கடந்த 3 மாதங்களில் 9 மில்லியன் யாபா போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #Bangladeshdrugwar
Tags:    

Similar News