செய்திகள்
திருப்பதியில் மாடவீதிகளில் பவனி வந்த தங்கத்தேர்.

திருப்பதியில் தங்க தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Published On 2018-10-17 06:01 GMT   |   Update On 2018-10-17 06:01 GMT
திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் தங்க தேரில் எழுந்தருளி மாடவீதிகளில் பவனி வந்தார்.
திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 10-ந் தேதி தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது.

தினமும் ஏழுமலையான் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 7-வது நாளான நேற்று இரவு சந்திர பிரபை வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா வந்தார்.

பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் தங்க தேரில் எழுந்தருளி மாடவீதிகளில் பவனி வந்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இரவு தங்க குதிரை வாகனத்தில் மாடவீதிகளில் பவனி வருகிறார்.

நாளை காலை 7 மணிக்கு சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது. தெப்பகுளம் அருகேயுள்ள வராஹி கோவிலில் பூஜைகள் செய்து பின்னர் தெப்பகுளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது.

சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி முடிந்தவுடன் பக்தர்கள் குளத்தில் புனித நீராடி சாமியை தரிசனம் செய்ய உள்ளனர். இதற்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

பிரம்மோற்சவ நாளில் வாடகை அறை முன்பதிவை தேவஸ்தானம் 50 சதவீதம் குறைத்தது. மேலும் பரிந்துரைக் கடிதங்களுக்கு வாடகை அறை முறையையும் ரத்து செய்தது.

அதனால் திருமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் வாடகை அறைகள் எவ்வித தடங்கல்களும் இல்லாமல் அளிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவத்தின்போது வாடகை அறைகள் மூலம் தேவஸ்தானத்திற்கு ரூ.61.44 லட்சமும், இந்த ஆண்டு நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவத்தின்போது ரூ.68.38 லட்சமும் வருவாய் கிடைத்தது. 2015ஆம் ஆண்டு நவராத்திரி பிரம்மோற்சவத்தின்போது ரூ.71.61 லட்சமும் நடப்பாண்டு நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 6 நாட்களில் ரூ.54.91 லட்சமும் வருவாய் கிடைத்துள்ளது.

வாடகை அறை பிரிவு- 2 மூலம் 2015 ஆம் ஆண்டு ரூ.1.39 கோடியும், தற்போது 6 நாட்களில் ரூ.1.01 கோடியும் வருமானமாக கிடைத்துள்ளது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News