search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    • தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக மேலும் 5 கேள்விகள் கேட்டு விழுப்புரம் மாவட்ட காவல்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
    • முதல் மாநாடு குறித்து சேலம் மாவட்டம் ஆத்தூரில் நாளை காலை ஆலோசனை நடைபெற உள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக்கழக மாநாடு வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. மாநாட்டிற்கு மிக பிரமாண்டமான மாநாட்டு மேடை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

    கனமழை காரணமாக தாமதமான பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

    தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக மேலும் 5 கேள்விகள் கேட்டு விழுப்புரம் மாவட்ட காவல்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    ஏற்கனவே 33 நிபந்தனைகளில், 17ஐ கட்டாயம் கடைபிடிக்க அறிவுறுத்திய போலீசார், மீண்டும் 5 கேள்விகள் எழுப்பி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக முதல் மாநாடு குறித்து சேலம் மாவட்டம் ஆத்தூரில் நாளை காலை ஆலோசனை நடைபெற உள்ளது.

    தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. ஒருங்கிணைப்புக் குழு தலைவர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர்.

    • பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
    • எடுத்த செயலில் எல்லாம் வெற்றியுடனும் திகழ விழைகிறேன்.

    சென்னை:

    பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், வலிவுடனும், எடுத்த செயலில் எல்லாம் வெற்றியுடனும் திகழ விழைகிறேன்.

    இவ்வாறு அந்த பதிவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.
    • குறைந்த அளவிலான மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    வேதாரண்யம்:

    மிககனமழை எச்சரிக்கை காரணமாக நாகை மீன் வளத்துறை மூலம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறையினர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

    இதனை அடுத்து வேதாரண்யம் தாலுக்காவை சேர்ந்த 5000 மீனவர்கள் தங்களது பைபர்படகுகளை கடற்கரையோரம் பாதுகாப்பாக நிறுத்திவிட்டு மீன் பிடிக்க செல்லாமல் இருந்தனர்.

    மழை இல்லாததாலும், வானிலை சீராக உள்ளதாலும் இன்று முதல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லலாம் என மீன்வளத்துறை அனுமதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து மீன்வளத்துறை அனுமதி அளித்ததால் 3 நாட்களுக்கு பிறகு இன்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    தென் வங்ககடலின் மத்திய பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதை தொடர்ந்து நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.

    மேலும் வானிலை மையம் அறிவிப்பை தொடர்ந்து நாகை மாவட்ட பைபர் மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருந்தனர்.

    இந்நிலையில் வங்ககடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை புதுச்சேரி நெல்லூருக்கு இடையே கரையை கடந்ததை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் குறைந்த அளவிலான மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    • வெடிகுண்டு மிரட்டல் விடுத்த எண் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
    • வீட்டை விட்டு வெளியேறிய அன்பழகன் தூத்துக்குடிக்கு சென்றாரா என்ற கோணத்தில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பஸ்நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியாகும். இங்கிருந்து கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கும், சபரிமலை உள்ளிட்ட கேரளாவுக்கு செல்லும் முக்கிய சந்திப்பாகவும் உள்ளது. இதனால் பல்வேறு நகரங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டுனர்கள் கடந்து செல்லும் நெருக்கடியான பகுதியாக உள்ளது.

    நேற்று இரவு சென்னை அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் வத்தலக்குண்டு பஸ்நிலையத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

    இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் குறித்து உடனடியாக சோதனை நடத்த திண்டுக்கல் எஸ்.பி.பிரதீப்புக்கு அறிவுரை வழங்கப்பட்டது. எஸ்.பி. உத்தரவின் பேரில் நிலக்கோட்டை டி.எஸ்.பி. செந்தில்குமார், வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் சிலைமணி, சப்-இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்லா மற்றும் போலீசார் இரவு 2 மணியளவில் வத்தலக்குண்டு பஸ்நிலையம் வந்தனர். அங்கு பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருசில கடைகள் மட்டும் திறந்திருந்தன.

    மேலும் கொடைக்கானல் மலை கிராமங்களுக்கு காலையில் முதல் பஸ்சுக்கு செல்லும் தொழிலாளர்களும் பஸ்நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை எழுப்பி பஸ் நிலையத்தில் இருந்து வெளியேற்றி கடைகளையும் அடைக்குமாறு தெரிவித்தனர். மேலும் பஸ் நிலைய நுழைவாயிலில் பேரிக்காடுகள் மூலம் தடுப்பு அமைக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் அனைத்து பகுதிகளிலும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது.

    முடிவில் வெடிகுண்டு மிரட்டல் என்பது புரளி என தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடை ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கி திறக்க அறிவுறுத்தினர். பஸ் நிலையத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ள போதிலும் சந்தேகப்படும் படியான நபர்கள் யாரேனும் வந்தால் அதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    இதனிடையே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த எண் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது தெரியவந்தது. அந்த எண் யாருடையது என போலீசார் விசாரணை நடத்தியதில் மதுரை விளாங்குடியை சேர்ந்த அன்பழகன் என்பவருக்கு சொந்தமானது என கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்மந்தப்பட்ட வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் அன்பழகனின் தாய் முத்துலட்சுமி மட்டுமே இருந்தார். அவர் தனது மகனுக்கு கடந்த சில நாட்களாகவே மனநிலை பாதிக்கப்பட்டு நாங்கள் சொல்வதை கேட்காமல் இருந்து வருகிறார்.

    இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை மேற்கொண்டு நேற்று காலையில் தான் வீட்டிற்கு அழைத்து வந்தோம். சிறிது நேரம் வீட்டில் இருந்துவிட்டு வெளியே சென்று வருவதாக என்னிடம் கூறிச்சென்றார். ஆனால் அதன் பிறகு தற்போது வரை வரவில்லை. எனது உறவினர்கள் அவரை தேடி வருகிறோம் என்றார். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய அன்பழகன் தூத்துக்குடிக்கு சென்றாரா என்ற கோணத்தில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரையில் கடந்த வாரம் அடுத்தடுத்து பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் மதுரையை சேர்ந்த வாலிபர் வத்தலக்குண்டு பஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் இப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வங்கக்கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது.
    • வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் கடல் நீர் மட்டம் தாழ்வு, சீற்றம், உள்வாங்குதல் போன்ற மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இன்று பவுர்ணமி என்ற நிலையில் நேற்றே கன்னியாகுமரியில் கடலில் மாற்றங்கள் ஏற்பட்டன. இன்று 2-வது நாளாகவும் காலையில் கடல் நீர்மட்டம் தாழ்வு நீடித்தது.

    இதனால் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது. இந்திய பெருங்கடல், அரபிக்கடல் ஆகியவை சீற்றமாக காணப்பட்டன. சுமார் 10 முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின.

    அதே நேரம் வங்கக்கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. அங்கு கடலுக்கு அடியில் இருந்த மணல் பரப்புகளும், பாசி படிந்த பாறைகளும் வெளியே தெரிந்தன. இந்த மாற்றங்களை தொடர்ந்து திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடல் பகுதியில் சுற்றுலா பயணிகள் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் சுற்றுலா போலீசார் 2-வது நாளாக தடை விதித்தனர்.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்தும தொடங்கப்படவில்லை. இதனால் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இன்று பகலும் கடலில் அதே நிலை நீடித்ததால் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் உள்ள கடற்கரை பகுதி மணல் பரப்பாகவும் பாறைகள் நிறைந்த பகுதியாகவும் காட்சியளித்தது. வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.

    • கல்லாறு மற்றும் அதற்கு மேல் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
    • ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

    இதனால் கடந்த சில நாட்களாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.

    குறிப்பாக மேட்டுப்பாளையம் வனச்சரத்துக்குட்பட்ட கல்லாறு மற்றும் அதற்கு மேல் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.

    இந்த கனமழையால், பவானி ஆற்றுக்கு தண்ணீர் வரும் கல்லார் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    வனப்பகுதியில் பெய்த மழையால் செந்நிறத்தில் கல்லாறு ஆற்றில் இதுவரை மிக குறைந்த அளவிலேயே தண்ணீர் வந்தது. நேற்று ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    பாராங்கற்க்களுக்கு மத்தியில் வளைந்து நெலிந்து இரைச்சல் சப்தத்துடன் தண்ணீர் பாய்தோடி வரும் காட்சிகள் ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

    சில சுற்றுலா பயணிகள் இந்த ஆற்றுக்கு சென்று அதனை பார்வையிட்டு ரசித்து புகைப்படமும் எடுத்து மகிழ்கின்றனர்.

    இதற்கிடையே இந்த ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் சென்று புகைப்படம் எடுப்பதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • மாநாட்டிற்கு வருகிற வாகனங்களை நிறுத்த சாலையின் இருபுறமும் தனியார் நிலம் 87 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • விஜய் மாநாடு மேடைக்கு வர தனிவழி அமைக்கப்பட்டு வருகிறது.

    விக்கிரவாண்டி:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதியக்கட்சியை தொடங்கியுள்ளார். இதற்கான கொடியும் அறிமுகப்படுத்த உள்ளது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகிற 27-ந்தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் நடைபெறவுள்ளது. மாநாட்டிற்கு வருகிற வாகனங்களை நிறுத்த சாலையின் இருபுறமும் தனியார் நிலம் 87 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வாகனங்கள் நிறுத்து இடம் போதாது கூடுதல் இடம் தேவை.

    மாநாட்டிற்கு வரும் வாகனங்களால் சாலை போக்குவரத்துக்கு இடையூறு இருக்க கூடாது. நடிகர் விஜய் மாநாடு மேடைக்கு வர தனிவழி ஏற்படுத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து நடிகர் விஜய் மாநாடு மேடைக்கு வர தனிவழி அமைக்கப்பட்டு வருகிறது.

    போலீசாரின் அறிவுறுத்தலை தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கூடுதல் இடம் தேடினர். அப்போது விக்கிரவாண்டி அடுத்த கீழகொந்தை பைபாஸ் கிழக்கு பகுதியில் கேரளா மாநிலத்தை சேர்ந்தவரும் தற்போது சென்னை அண்ணாநகரில் வசித்து வருபவருமான பொதுவால் என்பவருக்கு சொந்தமான 120 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    விக்கிரவாண்டி அடுத்த ஏழாய் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன்(வயது36) பெயிண்டர். தமிழக வெற்றிக் கழக தொண்டராகவும் இருந்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர் நேற்று மாலை 6 மணியளவில் தனது மகன்கள் அரவிந்த், அஸ்வின் மற்றும் அவரது தம்பி மகன் கவின் ஆகியோருடன் வி.சாலை மாநாடு திடலுக்கு வந்தார். அங்கு அகல் விளக்கேற்றி வழிப்பட்டார். இது குறித்து பாண்டியன் கூறும்போது, த.வெ.க. மாநாடு மழையால் பாதிக்கக்கூடாது. மாநாடு நடைபெறும் வரை மழை இருக்ககூடாது என வேண்டி வழிப்பட்டேன் என்றார்.

    • கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
    • கர்நாடக- தமிழக எல்லையில் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

    மேட்டூர்:

    கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிந்து அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் தண்ணீர் போதுமான அளவு நிரம்பிய பிறகே உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படுகிறது. இந்த உபரி நீர் காவிரி ஆறு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது.

    தற்போது கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    அதுபோல் கர்நாடக- தமிழக எல்லையில் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,531 கன அடியாக இருந்தது. இதையடுத்து நேற்று நேற்று காலை நீர்வரத்து 16,196 கன அடியாக அதிகரித்தது.

    தொடர்ந்து இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 19,495 கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து தமிழக காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீரும், கிழக்கு- மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 300 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. நேற்று 92 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 93.35 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 56.56 டி.எம்.சி. உள்ளது.

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து மூவாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    சென்னை:

    சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க நினைப்போர் கவலை அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில், தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,160-க்கும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,280-க்கு விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து மூவாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    16-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,120

    15-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,760

    14-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960

    13-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960

    12-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    16-10-2024- ஒரு கிராம் ரூ. 103

    15-10-2024- ஒரு பவுன் ரூ. 103

    14-10-2024- ஒரு கிராம் ரூ.103

    13-10-2024- ஒரு பவுன் ரூ. 103

    12-10-2024- ஒரு பவுன் ரூ. 103

    • மாணவிக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி (22), இவர் சேலம் டவுன் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். வீரமணி 16 வயதான பிளஸ்-1 மாணவியை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவி வீட்டில் இருந்தவர்களிடம் பள்ளிக்கு சென்று வருவதாக கூறி விட்டு வெளியில் சென்றார். அப்போது அந்த மாணவியை வீரமணி தனது மோட்டார் சைக்கிளில் கொல்லி மலைக்கு சுற்றுலா அழைத்து சென்றார். அவருடன் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வீரமணியின் நண்பர்களான கல்லூரி மாணவர்கள் கவியரசன் (20), அக்பர் (20) ஆகியோரும் சென்றனர்.

    பின்னர் அங்கு அவர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று சுற்றி பார்த்தனர். தொடர்ந்து கொல்லி மலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து அந்த மாணவியுடன் வீரமணி தங்கினார். பின்னர் அந்த மாணவியை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து வீட்டில் இறக்கி விட்டு சென்றார்.

    இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர். அப்போது அவர்களிடம் வீரமணி தன்னை கொல்லிமலைக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சேலம் டவுன் போலீசில் புகார் கொடுத்தனர்.

    அதன் பேரில் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் கலைவாணி மாணவியை கொல்லிமலைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் பலாத்காரம் செய்த வீரமணி மற்றும் உடந்தையாக இருந்த கவியரசன், அக்பர் ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். பின்னர் 3 பேரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    மாணவிக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

    • நெல், மஞ்சள், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டாலும் புன்செய், நன்செய் பாசனத்துக்கு திறக்கப்படும்
    • எதிர்காலத்தில் அரசு விவசாயத் தொழிலை நேரடியாக செய்யும் நிலைமைக்கு தள்ளப்படும்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டத்தில் விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவது, போதிய விலை கிடைக்காததால் விவசாயத்தை விட்டு வெளியேறும் விவசாயிகள் போன்ற காரணங்களால் கடந்த 3 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டத்தில் நெல் சாகுபடி பரப்பு குறைந்து வருவது வேளாண்துறையின் புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வருகிறது.

    தமிழகத்தில் காவிரி நதி பாயும் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை போன்ற டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக அதிக பரப்பளவில் நெல் சாகுபடி செய்வது ஈரோடு மாவட்டத்தில் தான். ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு கீழ்பவானி, கொடிவேரி, காலிங்கராயன் பாசன வாய்க்கால்களில் பாசனம் நடைபெறுகிறது.

    நெல், மஞ்சள், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டாலும் புன்செய், நன்செய் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு அதிக பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுதோறும் அதிகரித்து வந்த நெல் சாகுபடி பரப்பு கடந்த 3 ஆண்டுகளாக குறைந்து வருவது விவசாயிகள் மத்தியில் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அண்மைக் காலமாக விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வந்த பல விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு நல்ல விலைக்கு பேசி விற்பனை செய்வதும், வேளாண் தொழிலில் போதுமான லாபம் கிடைக்காதது போன்ற காரணங்களால் நெல் சாகுபடி பரப்பு தொடர்ந்து குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் கீழ் பவானி, கொடிவேரி, காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நன்செய், புன்செய் உள்ளிட்ட 3 சீசன்களிலும் ஒவ்வொரு சீசனுக்கும் தேவைக்கேற்ப சராசரியாக 30 முதல் 35 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

    நெல் கொள்முதல் மையம் மூலமாக விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு அவற்றை தேவைக்கேற்ப மாடர்ன் ரைஸ் மில்களுக்கு அனுப்பி அரிசி உற்பத்தி செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இது தவிர தனியார் நெல் கொள்முதல் செய்பவர்களிடமும் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்கின்றனர்.

    இருப்பினும் பெரும்பகுதி நெல், அரசு கொள்முதல் மையங்கள் மூலமாக அரசு நிர்ணயித்த விலைக்கு வாங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2021-22ம் ஆண்டில் மாவட்டம் முழுவதும் 76 ஆயிரத்து 223 ஏக்கரிலும், 2022-23ம் ஆண்டில் 75 ஆயிரத்து 608 ஏக்கரிலும் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டில் 10 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி குறைந்திருந்த நிலையில் கடந்த 2023-24ம் ஆண்டில் நெல் சாகுபடி மேலும் 15 ஆயிரம் ஏக்கர் குறைந்து 60 ஆயிரத்து 198 ஏக்கர் மட்டுமே நெல் சாகுபடி ஆனதாக வேளாண் துறையின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

    அதேசமயம் கடந்த 2021-22ம் ஆண்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் அமைக்கப்பட்ட நெல் கொள்முதல் மையங்களில் இருந்து மொத்தம் 96 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் ஆனது. ஆனால் 2022-23ம் ஆண்டில் நெல் கொள்முதல் மையங்கள் மூலம் 71 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதலானதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    ஒரே ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து மட்டும் 15 ஆயிரம் மெட்டரிக் டன் நெல் கொள்முதல் குறைந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு 2024-25ம் ஆண்டில் தற்போது தான் நன்செய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு நெல் நடவு தொடங்கியுள்ளது. இந்த ஆண்டிலும் நெல் நடவு கடந்த ஆண்டை விட குறைந்திருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

    நெல் சாகுபடி பரப்பு குறைந்ததற்கான காரணம் குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக மேட்டூர் வலது கரை பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததால் மாவட்டத்தில் நெல் சாகுபடி பரப்பு சற்று குறைந்துள்ளது. இருப்பினும் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் விவசாய தொழில்களை கைவிட்டு மாற்றுத் தொழிலுக்கு சென்று விட்டனர்.

    விவசாய குடும்பத்திலேயே அடுத்த தலைமுறை விவசாயிகள் குறைந்து போவது கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. பலரும் நன்கு படித்து தொழிலதிபர்கள் ஆகவும் ஐ.டி., அரசுத் துறைகளில் உயர் பதவிகளுக்கு செல்கின்றனர். விவசாயத் தொழிலில் போதுமான லாபம் கிடைக்காததும் விவசாய தொழிலை கைவிட காரணமாக உள்ளது. எதிர்காலத்தில் அரசு விவசாயத் தொழிலை நேரடியாக செய்யும் நிலைமைக்கு தள்ளப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஊட்டியில் உள்ள சிறுவர் மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
    • மாணவிகள் தங்களால் வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாத பிரச்சனைகளை பெண் காவலர்களிடம் தெரிவிக்கலாம்.

    ஊட்டி:

    கோவை மாநகர காவல்துறை சார்பில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவையில் 'போலீஸ் அக்கா' திட்டம் துவக்கப்பட்டது.

    இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் பெண் காவலர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் அப்பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களுடன் தொடர்பு அலுவலராக இருப்பர்.

    இவர்கள் மாணவிகளுடன் ஒரு தோழியை போன்று பழகுகின்றனர். மாணவிகள் குடும்பத்தினர், ஆசிரியர்கள் அல்லது தோழிகளுடனோ பகிந்து கொள்ள முடியாத பிரச்சனைகளை இவர்களிடம் தெரிவிக்கின்றனர். அவர்களும் அந்த பிரச்சனைக்கு தீர்வு காண்கின்றனர். இதுவே இந்த திட்டத்தின் நோக்கம்.

    கோவையில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்திற்கு கல்லூரி மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த தமிழக அரசு அறிவுறுத்தியது.

    அதன்படி தற்போது நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் போலீஸ் அக்கா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    ஊட்டியில் உள்ள சிறுவர் மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    நீலகிரி மாவட்டத்தில் கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பிற்காக போலீஸ் அக்கா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் 16 பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    அவர்கள் தாங்கள் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள கல்லூரிகளுக்கு 2 வாரத்திற்கு ஒரு முறை நேரில் சென்று, போக்சோ சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்பு, சைபர் கிரைம், சாலை பாதுகாப்பு, போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். மாணவிகள் தங்களால் வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாத பிரச்சனைகளை பெண் காவலர்களிடம் தெரிவிக்கலாம்.

    குறிப்பாக உளவியல் ரீதியான பிரச்சனைகள், பாலியல் தொந்தரவுகள், கல்லூரி வளாகங்கள், பொது இடங்களில் மாணவிகளுக்கு நடக்கும் இடையூறுகள் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட பெண் காவலரிடம் தெரிவிக்கலாம்.

    மேலும் போதை பொருட்கள் விற்பனை, கேலி கிண்டல் சம்பவங்கள் தொடர்பாக தங்கள் கல்லூரிக்கு என நியமிக்கப்பட்டுள்ள பெண் காவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம்.

    மாணவிகள் தெரிவிக்கும் தகவல்கள் ரகசியமாக வைத்திருப்பதுடன், அது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    வரும் நாட்களில் கல்லூரி நிர்வாகங்களுடன் இணைந்து தற்காப்பு குறித்த வகுப்புகளும் நடத்தப்படும். இதற்கென ஒவ்வொரு கல்லூரி வளாகத்திலும் 'போலீஸ் அக்கா'வை தொடர்பு கொள்வதற்கு வசதியாக கியூ ஆர் குறியீடுடன் நோட்டீசும் ஒட்டப்பட்டிருக்கும். அதனை மாணவிகள் ஸ்கேன் செய்தும், அவர்களை தொடர்பு கொண்டு தங்கள் பிரச்சினைகளை தெரிவிக்கலாம்.

    நீலகிரியில் செயல்படுத்தப்பட உள்ள போலீஸ் அக்கா திட்டத்தை கூடுதல் எஸ்.பி. கண்காணிப்பார். நானும் திட்ட செயல்பாடுகள் குறித்து தொடர்ச்சியாக ஆய்வு செய்வேன்.

    பள்ளிகளில் பயில கூடிய மாணவிகளின் பாதுகாப்புக்கான திட்டங்களும் விரைவில் செயல்படுத்தப்படும்.

    பெண்கள் மற்றும் மாணவிகள் பாதுகாப்பிற்கு நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    பெண்கள் பாதுகாப்பிற்கென காவல் உதவி என்ற செயலி உள்ளது. தற்போது இந்த செயலியை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

    போக்சோ, போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் கூடுதல் எஸ்பி., சவுந்திரராஜன், புறநகர் டி.எஸ்.பி. நமச்சிவாயம், கல்லூரி முதல்வர்கள், நிர்வாகிகள், பெண் காவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    ×