search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு வழிபாடு"

    • தவெக மாநாடு விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வருகிற 27-ந்தேதி நடைபெற இருக்கிறது.
    • மாநாட்டுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

    தமிழக வெற்றிக் கழகத்துக்கு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த மாநிலம் தழுவிய முதல் அரசியல் மாநாட்டை நடத்த நடிகர் விஜய் முடிவு செய்துள்ளார்.

    அதன்படி தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது.

    மாநாட்டுக்காக நூற்றுக்கணக்கான ஏக்கரில் பார்வையாளர்கள் அமர தனி இடம், வாகனங்கள் நிற்க தனி இடம் என்று அனைத்து வசதிகளும் செய்யும் பணி கடந்த ஒரு மாதமாக நடந்து வந்தது. மாநாட்டுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

    லட்சக்கணக்கான மக்கள் பங்குபெற உள்ள தவெக கட்சியின் முதல் மாநாடு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் வெற்றிப்பெற வேண்டும் என்று விஜய்யின் ரசிகர்கள் கோவிலில் வழிபாடு செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், தவெக மாநாடு வெற்றி பெற, விஜய்யின் சொந்த கோவிலான கொரட்டூர் சாய் பாபா கோவிலுக்கு அவரது பெற்றோர் நேரில் வந்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

    மேலும், கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு விஜய்யின் தந்தை சந்திரசேகர் மற்றும் தாய் சோபா ஆகியோர் பிரசாதம் வழங்கினர்.

    • தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில் காலையில் இருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    • பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தான கோவில் நிர்வாகத்தினர் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய விரிவான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து பெருமாளுக்கு வழிபாடு செய்வார்கள். குறிப்பாக சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான இன்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், தேவராஜ முதலி தெரு சென்ன கேசவ பெருமாள் கோவில், புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோவில், விருகம்பாக்கம் சுந்தர வரதராஜ பெருமாள், நங்கநல்லூர் ஸ்ரீ லட்சுமி ஹயவர்தன பெருமாள், பள்ளிக்கரணை லட்சுமி நாராயண பெருமாள், நெற்குன்றம் கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் இன்று சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அதிகாலையிலேயே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார்கள்.

    இதே போல தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில் காலையில் இருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தான கோவில் நிர்வாகத்தினர் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய விரிவான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    வீடுகளிலும் பெருமாளுக்கு புளியோதரை, மிளகு சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம் உள்பட 5 வகையான சாதங்களை தயார் செய்து சாமிக்கு படையல் வைத்து வழிபட்டார்கள். 

    • விநாயகர் முன்பு பல்வேறு வகையான உணவு பதார்த்தங்களும் வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஈச்சனாரி விநாயகர் கோவிலிலும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    கோவை:

    தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது.

    அதிகாலையிலேயே பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    கோவை புலியகுளத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இன்று விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில் நடை வழக்கமான நேரத்திற்கு முன்பாகவே திறக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து விநாயகருக்கு பால், தயிர், இளநீர் உள்பட 16 வகை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டும், 40 கிலோ சந்தனத்தில் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    விநாயகர் முன்பு பல்வேறு வகையான உணவு பதார்த்தங்களும் வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை முதலே புலியகுளம் விநாயகர் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர். கோவை மாவட்டம் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் வந்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரித்து சென்றனர். பக்தர்களுக்கு பிரசாதாமாக சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டன.

    கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஈச்சனாரி விநாயகர் கோவிலிலும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் வந்து விநாயகரை வழிபட்டு சென்றனர்.

    இதேபோல் கோவை ஒலம்பஸ் பகுதியில் உள்ள சித்தி விநாயகர் கோவில், ரேஸ்கோர்சில் உள்ள 108 விநாயகர் கோவில், உப்பிலிபாளையத்தில் உள்ள விநாயகர் கோவில் உள்பட அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதுதவிர கோவை மாநகரில் உள்ள கோனியம்மன், தண்டுமாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

    புறநகர் பகுதியான மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, காரமடை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், பேரூர், அன்னூர் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்கள், நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விசுவ இந்து பரிஷத், சிவசேனா, அனுமன் சேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் முக்கிய இடங்களில் பல அடி உயர விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    மாவட்டம் முழுவதும் 2,236 சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் 2,900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் இருசக்கர ரோந்து வாகனங்கள், நான்கு சக்கர ரோந்து வாகனங்களில் சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


    • செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் சுவாமி அருள்புரிகின்றனர்.
    • பங்குனி மாத கிருத்திகையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

    சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகிஅம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது.

    இக்கோயிலில் செல்வமுத்துக்குமாரசுவாமி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் சுவாமி அருள்புரிகின்றனர்.

    இங்கு பங்குனி மாத கிருத்திகையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமாரசுவாமிக்கு 21வகையான நறுமன திரவியபொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு மலர்கள்,ஆபரணங்கள் கொண்டு அலங்காரம் நடைபெற்றது.

    தொடர்ந்து சண்முகார்ச்சனை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்வில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வருகை புரிந்து, கிருத்திகை வழிப்பாட்டில் பங்கேற்று தரிசனம் செய்தார்.

    இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    • கத்தோலிக்க திருச்சபைகளில் சிறப்பு திருப்பலி நடக்கிறது.
    • புனித வெள்ளி அன்று கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் உணவு உட்கொள்ளாமல் உபவாசம் இருப்பது வழக்கம்.

    சென்னை:

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள். அவரை சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டு உயிரை துறந்த நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு தியானிப்பார்கள்.

    இயேசு சிலுவையில் உயிரை விடுவதற்கு முன்பு 7 வார்த்தைகளை கூறினார். அந்த வார்த்தைகள் குறித்து ஆலயங்களில் தியானிக்கப்படும். அவர் சிலுவையில் முதலாவதாக பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே! என்று கூறினார். இவை உள்ளிட்ட 7 வார்த்தைகள் குறித்து தியானிக்கும் மும்மணி தியான ஆராதனை நாளை அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நடைபெறுகிறது.

    கத்தோலிக்க திருச்சபைகளில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. அதேபோல சி.எஸ்.ஐ., மெத்தடிஸ்ட், லுத்தரன், பெந்தே கோஸ்து, இ.சி.ஐ. உள்ளிட்ட எல்லா திருச்சபைகளிலும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    புனித வெள்ளி அன்று கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் உணவு உட்கொள்ளாமல் உபவாசம் இருப்பது வழக்கம். மும்மணி தியான ஆராதனை முடிந்த பிறகு தான் கிராஸ் பன், மோர் அல்லது கஞ்சி போன்றவற்றை சாப்பிடுவார்கள். முன்னதாக இன்று பெரிய வியாழன் அனுசரிக்கப்படுகிறது. தனது சீடர்களுடன் இயேசு கடைசி இராப்போஜனம் விருந்து மேற்கொள்ளும் நிகழ்ச்சியை நினைவுப்படுத்தி இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து இயேசு சிலுவையில் அடித்து கொல்லப்படுகிறார். சிலுவையில் உயிரைவிட்ட அவர் 3-வது நாள் உயிர்த்தெழுந்து வருவதை தான் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இயேசு உயிர்த்தெழுந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    • சங்கு தீர்த்த குளத்தில் கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி புதிய சங்கு வெளியேவந்தது.
    • 12 ஆண்டுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து சங்கு வெளியே வருவது பக்தர்களை ஆச்சரியப்பட வைத்து வருகிறது.

    மாமல்லபுரம்:

    திருக்கழுகுன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்குள்ள சங்கு தீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு வெளியே வரும்.

    இந்த சங்கு குளத்தில் கரை ஒதுங்கியதும், கோவில் நிர்வாகம் சார்பில் அதற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். இதைத் தொடர்ந்து கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கட்கிழமையில் மலை மீது வேத கிரீஸ்வரருக்கு நடைபெறும் 1008 சங்காபிஷேகத்தில் குளத்தில் பிறந்த புதிய சங்கு முதன்மை பெறும்.

    இதனை கண்டு வழிபட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். சங்கு தீர்த்த குளத்தில் கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி புதிய சங்கு வெளியேவந்தது.

    இதனால் சங்கு தீர்த்த குளத்தில் புதிய சங்கின் வருகைக்காக பக்தர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை குளத்தில் புதிய சங்கு கோவில் குளக்கரை யில் கரை ஒதுங்கி இருந்தது. இதனை கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

    இதுபற்றி கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற் கிடையே சங்கு தீர்த்த குளத்தில் புதிய சங்கு வெளியே வந்தது பற்றி அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் சங்கை பார்த்து பயபக்தியுடன் வழிபட்டனர். இதனால் கோவில் குளக்கரையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

     

    பின்னர் அந்த சங்கிற்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதைத்தொடர்ந்து சங்கு பாதுகாப்பாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    மார்கண்டேயர் அனைத்து சிவாலயங்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு வந்து உள்ளார்.அப்போது, சிவ பெருமானை வழிபடுவதற்காக தீர்த்தம் எடுக்க பாத்திரம் இல்லாததால், இங்குள்ள குளத்தில் தீர்த்த பாத்திரம் வேண்டி சிவபெருமானை வணங்கியதாவும் அப்போது குளத்தில் இருந்து சங்கு ஒன்று பிறந்து கரை ஒதுங்கியதாகவும் நம்பப்படுகிறது. இந்த சங்கை சுவாமியே வழி பாட்டுக்கு வழங்கி யதாகவும் தல வரலாறு கூறுகிறது. இதனால் இந்த குளத் துக்கு சங்கு தீர்த்த குளம் என பெயர் பெற்று உள்ளது. மேலும் 12 ஆண்டுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து சங்கு வெளியே வருவது பக்தர்களை ஆச்சரியப்பட வைத்து வருகிறது.

    நாளை சிவராத்திரி விழா நடைபெற உள்ள நிலையில் இன்று சங்குதீர்த்த குளத்தில் புதிய சங்கு வெளியே வந்ததால் பக்தர்கள் விசேஷமாக கூறி மகிழ்ச்சி அடைந்தனர். இன்றுடன் எடுத்த சங்குடன் மொத்தம் 8 சங்குகள் கோவிலில் இருப்பதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

    • வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து சாமி தரிசனம்.
    • ஆஞ்சநேயருக்கு வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு.

    சுசீந்திரம்:

    குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இங்கு 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர்சாமி சிலை உள்ளது.

    ஆஞ்சநேயர் சாமிக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். மேலும் மாதந்தோறும் மூலம் நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயர் சாமிக்கு வெள்ளி அங்கி சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

    அது போல் நேற்றும் மூலம் நட்சத்திரத்தையொட்டி ஆஞ்சநேயர் சாமிக்கு வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

    • ராமபிரானின் வலது கால் பாதம் இருப்பதாக கூறி முன்னோர்கள் காலத்தில் இருந்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.
    • திரளான பக்தர்கள் சென்று ராமர் பாதம் இருக்கும் பகுதியில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

    தென்காசி:

    உத்தரபிரதேச மாநிலத்தில் ராம ஜென்ம பூமியான அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ளது.

    கலையும், பாரம்பரியமும் கொண்ட இந்த கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை ஆகியவை இன்று நடக்கிறது.

    இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் இந்து கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் ஆகியவை நடக்கிறது.

    அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பூலாங்குளம் பகுதியில் சிறிய மலை குன்றின் மீது ராமபிரானின் வலது கால் பாதம் இருப்பதாக கூறி முன்னோர்கள் காலத்தில் இருந்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பாதம் இருக்கும் பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் ராமர் சீதையை தேடி செல்லும் பொழுது தாகத்திற்கு தண்ணீர் அருந்தியாக நம்பப்பட்டு வரும் சுனை ஒன்றும் உள்ளது. சுனையில் எப்பொழுதும் தண்ணீர் வற்றாமல் நிரம்பியிருப்பதால் காட்டுப்பாதையில் அவ்வழியே செல்லும் பாதசாரிகள் மற்றும் விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகளின் குடிநீர் தேவையை அந்த சுனை பல ஆண்டுகளாக நிறைவேற்றி வருகிறது.

    அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டையை முன்னிட்டு இந்த சுனையில் இன்று பூலாங்குளம் கிராமத்தை சேர்ந்த ஜெகநாதன் தலைமையிலான ஆண்கள், பெண்கள், சிறு குழந்தைகள் என திரளான பக்தர்கள் சென்று ராமர் பாதம் இருக்கும் பகுதியில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

    பின்னர் சுனைநீரிலும் சிறப்பு பூஜைகள் செய்து கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் சுனை நீரை பருகி ராமபிரானை வழிபட்டனர்.

    • காஞ்சிபுரம் சங்கர மடத்தில் பஞ்சரத்ன கீர்த்தனைகள் நடைபெற்றது.
    • அனைவருக்கும் ஸ்ரீ மடத்தின் மேலாளர் சுந்தரேசரய்யர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சி மகா பெரியவர் என்று பக்தர்களால் அழைக்கப்படும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 30-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி காஞ்சிபுரம், சாலை தெருவில் உள்ள ஸ்ரீ மடம் முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மடத்தில் உள்ள மகா பெரியவரின் அனுஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்று தீபாரதனை காட்டப்பட்டது.

    முன்னதாக இன்று அதிகாலை 5 மணிமுதல் சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து திருவையாறில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பஞ்சரத்ன கீர்த்தனைகள் போன்று இன்று காஞ்சிபுரம் சங்கர மடத்தில் பஞ்சரத்ன கீர்த்தனைகள் நடைபெற்றது. சுமார் 100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு பாடினர். அவர்கள் அனைவருக்கும் ஸ்ரீ மடத்தின் மேலாளர் சுந்தரேசரய்யர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • சனிக்கிழமையை யொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது
    • தேரடி ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    திருவாரூர்:

    நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சனிக்கிழமையை யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைமுன்னிட்டு

    சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர், விஸ்வக் சேனர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதைமுன்னிட்டு வீரஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேயர் கோவிலில் 33 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது.

    வடுவூர் தெற்கு தெருவில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதைப்போல தேரடி ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது

    • நொய்யல் ஆற்றின் குறுக்கில் நல்லம்மன் தடுப்பணை உள்ளது.
    • வர்ணம் பூசி தயார்படுத்தும் பணி நடக்கிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் அடுத்த மங்கலம் அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கில் நல்லம்மன் தடுப்பணை உள்ளது. கொங்கு சோழர் காலத்தில் இங்கு நொய்யல் ஆற்றில் பாயும் நீரை தடுத்து இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணை நிரந்தரமாகவும் நல்ல முறையிலும் பயன்பட வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியான நல்லம்மாள் தன் உயிரை மாய்த்துக் கொண்டார் என்பது ஐதீகம். அவ்வகையில் அணையின் மையப்பகுதியில் அச்சிறுமிக்கு கோவில் அமைத்து நல்லம்மன் என்ற பெயரில் அப்பகுதியினர் வழிபாடு செய்து வருகின்றனர். இங்கு வழிபாடு நடத்தும் ஒரு பிரிவினர் ஆண்டுதோறும் ஆடி மாதத்திலும், மற்றொரு பிரிவினர் கார்த்திகை மாதம் தீபத் திருநாளுக்கு அடுத்த நாளும் பொங்கல் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். அவ்வகையில் வருகிற 27-ந்தேதி, கார்த்திகை பவுர்ணமி அன்று நல்லம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக கோவில் வளாகம் முழுவதும் முழுமையாக வர்ணம் பூசி தயார்படுத்தும் பணி நடக்கிறது. மேலும் கார்த்திகை பவுர்ணமி அன்று இரவு முதல் விடிய விடிய வழிபாடு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சனிக்கிழமையை யொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சனிக்கிழமையை யொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர், விஸ்வக் சேனர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

    நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவில், திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்கலமாருதி ஆஞ்சநேயர் கோவில், ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×