என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மின்னல் தாக்குதல்"
- திடீரென 50 முதல் 117 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
- ஏறக்குறைய குஜராத் முழுவதும் என்ற வகையில் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் தற்போது மழை சீசன் கிடையாது. இருந்த போதிலும் நேற்று எதிர்பாராத வகையில் கனமழை கொட்டித்தீர்த்தது. இடியுடன் கூடிய கனமழையால் பல்வேறு இடங்களில் பயிர்கள் சேதமாகின. மேலும், மின்னல் தாக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குஜராத்தில் உள்ள 252 தாலுக்காவில் 234 தாலுக்காவில் மழை பெய்துள்ளது. பெரும்பாலான இடங்களில் 50 முதல் 117 மி.மீ. வரை மழை பெய்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய அமைச்சர் அமித் ஷா, "மின்னல் தாக்கி பலர் உயிரிழந்த செய்தி கேட்டு கவலையடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உள்ளூர் அதிகாரிகள் நிவாரணப் பணிக்காக முடுக்கிவிடப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிராவில் உள்ள மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பில்லை என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- மனைவி மற்றும் குடும்பத்தினர் கண் எதிரே மின்னல் தாக்கி அபிஷேக் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- புகாரின்பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 30). இவர் சொந்தமாக உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார்.
இவர் தனது மனைவி சுஷ்மிதா மற்றும் குடும்பத்தினர்-உறவினர்கள் 10 பேருடன் புதுவைக்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்தார்.
இவர்கள் புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில் பகுதியில் தனி வீடு எடுத்து தங்கி புதுவையில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு சென்று வந்தனர். நேற்று மாலை அவர்கள் தங்களது 2 கார்களில் புதுவை அருகே பூ.புதுக்குப்பம் கடற்கரைக்கு சென்றனர்.
கடற்கரையில் அபிஷேக் தனியாக நடைபயிற்சி சென்றார். மற்றவர்கள் கடல் அலையில் காலை நனைத்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக அபிஷேக் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் சுருண்டு விழுந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி மற்றும் குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அபிஷேக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி மற்றும் குடும்பத்தினர் கண் எதிரே மின்னல் தாக்கி அபிஷேக் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- திருச்சுழி அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி வாங்கப்பட்டது.
- அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் வழங்கினார்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மேலேந்தல் கிராமத்தில் புதிதாக அரசு கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. இந்த கல்லூரி கட்டிட பணிக்கு சென்ற புளியங்குளம் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் ஹரிஷ்குமார், 12 வகுப்பு மாணவர் ரவிச்செல்வம் ஆகியோர் மின்சாரம் தாக்கி பலியானார்கள். இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மாணவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு தலா ரூ.25ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது ஒன்றிய செயலாளர்கள் முனியாண்டி, நாலூர் பூமிநாதன், தோப்பூர் முருகன்,யோக வாசுதேவன், சண்முகக்கனி மற்றும் பனைக்குடி ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
- இன்று காலை பெருமாள், விஜய் ஆகிய 2 பேரும் ஆடு மேய்க்க சென்ற இடத்தில் இறந்து கிடப்பது தெரிய வந்தது.
- அண்ணன்-தம்பி உறவுமுறை கொண்ட வாலிபர்கள் ஆடு மேய்த்தபோது மின்னல் தாக்கி பலியான சம்பவம், கிராம மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பரளச்சி புல்லா நாயக்கன்பட்டி சேர்ந்தவர் பெரிய கிருஷ்ணன் என்பவரது மகன் பெருமாள் (வயது 28), சின்னகிருஷ்ணன் என்பவரின் மகன் விஜய்(27).
உறவினர்களான இவர்கள் இருவரும் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தனர். நேற்று ஆடுகளை மேய்ப்பதற்காக ராணி சேதுபுரம் என்ற இடத்திற்கு சென்றனர். வழக்கமாக இருவரும் மாலையில் ஆடுகளுடன் வீட்டிற்கு திரும்பிவிடுவார்கள்.
ஆனால் இருவரும் நேற்று மாலை வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த இவர்களது உறவினர்கள், இருவரையும் நேற்று இரவு தேடினர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில் இன்று காலை பெருமாள், விஜய் ஆகிய 2 பேரும் ஆடு மேய்க்க சென்ற இடத்தில் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இது பற்றி தகவல் கிடைத்ததும் இருவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் சம்பவ இடத்தில் விரைந்து சென்று பார்த்தனர்.
அங்கு 2 பேரும் பிணமாக கிடந்தனர். இது தொடர்பாக பரளச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
நேற்று மாலை அந்த பகுதியில் கடும் இடி-மின்னலுடன் மழை பெய்திருக்கிறது. இதனால் பெருமாள், விஜய் ஆகிய 2 பேரும் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளனர் என்பது தெரிய வந்தது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணன்-தம்பி உறவுமுறை கொண்ட 2 வாலிபர்கள் ஆடு மேய்த்தபோது மின்னல் தாக்கி பலியான சம்பவம், அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டுமின்றி புல்லாநாயக்கன்பட்டி கிராம மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- திருமங்கலம் அருேக மின்னல் தாக்கி 2 தென்னை மரங்கள் கருகின.
- தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து எரிந்த தீயை அணைத்தனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருேக கங்குராம்பட்டியை சேர்ந்தவர் அழகர். இவரது வீட்டின் அருகே அவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அதில் தென்னை மரங்கள், மல்லிகை செடிகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு திருமங்கலம் பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது அழகர் தோட்டத்தில் உள்ள 2 தென்னை மரங்கள் மீது மின்னல் பாய்ந்தது. இதில் 2 தென்னமரங்களும் தீப்பற்றி எரிந்தன. மேலும் அங்கு வளர்க்கப்படும் மல்லிகை செடிகளும் கருகின. இதுபற்றி திருமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து தென்னை மரத்தில் எரிந்த தீயை அணைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்த வடகரை கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் சம்பவ இடத்தை பார்வையிட்டு சேதம் குறித்து ஆய்வு செய்தார்.
- மழையில் செங்கல் நனையாமல் இருப்பதற்காக அப்பாராவ் செங்கல் மீது தார்பாய் போட்டு மூடும் பணி செய்தார்.
- பார்வதிபுரம் மான்யம் மற்றும் விஜயநகரம் மாவட்டங்களில் பல இடங்களில் மழையுடன் சூறைக்காற்றுடம் ஆலங்கட்டி மழை பெய்தது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விஜயாநகர மாவட்டம் எஸ் கோட்டா பகுதியை சேர்ந்தவர் அப்பாராவ் (வயது 47). கூலி தொழிலாளி. அவரது மனைவி லட்சுமணம்மா. கணவன், மனைவி இருவரும் அங்குள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர்.
நேற்று காலை வேலைக்கு சென்றனர். மதியம் கணவன், மனைவி இருவரும் உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென இடி மின்னலுடன் சூறைக்காற்று வீசியது.
பின்னர் ஆலங்கட்டி மழை பெய்தது. மழையில் செங்கல் நனையாமல் இருப்பதற்காக அப்பாராவ் செங்கல் மீது தார்பாய் போட்டு மூடும் பணி செய்தார்.
அப்போது அப்பா ராவ் மீது திடீரென மின்னல் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனைக்கண்ட அவரது மனைவி கதறி துடித்தார்.
மற்றொரு சம்பவம்...
அல்லூரி சீதாராமராஜு மாவட்டம் போடுராஜூ குன்னாலு கிராமத்தைச் சேர்ந்தவர் சம்புநாயுடு (51). இவர் கிராமத்துக்கு அருகில் உள்ள மலை உச்சிக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார். அப்போது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பார்வதிபுரம் மான்யம் மற்றும் விஜயநகரம் மாவட்டங்களில் பல இடங்களில் மழையுடன் சூறைக்காற்றுடம் ஆலங்கட்டி மழை பெய்தது.
காற்றில் வாழை, மா, முந்திரி மரங்கள் வேரோடு சாய்ந்து சேதம் அடைந்தன.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சன்னாசி மகன் அய்யாசாமி (வயது50) அதே பகுதியைச் சேர்ந்த முத்து மகன் அய்யாசாமி (40) மேலும் அதே பகுதியைச் சேர்ந்த பலரும் பூலாம்பாடி வயல்வெளி பகுதியில் அவரவர்களுக்கு சொந்தமான மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர்.
நேற்று மதியம் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது திடீரென மின்னல் தாக்கி சன்னாசி மகன் அய்யாசாமியின் 1 மாடும் முத்து மகன் அய்யாசாமியின் 2 மாடுகளும் அதே பகுதியைச் சேர்ந்த பழனிவேல் நடேசன் அவரின் ஒரு மாடும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
பின்னர் மின்னல் தாக்கி சன்னாசி மகன் அய்யாசாமி மற்றும் முத்து மகன் அய்யாசாமி ஆகிய 2 பேருக்கும் கண்பார்வைs பாதிப்பு ஏற்பட்டது. இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் மேலும் இறந்து போன மாடுகளை பிரேத பரிசோதனை செய்ய கால்நடை மருத்துவருக்கு தகவல் அளிக்கப்பட்டது இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- மார்த்தாண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாலதி மின்னல் தாக்கி உயிரிழந்தார்
- தமிழக அரசின் நிவாரண நிதி ரூ.4 லட்சத்திற்க்கான காசோலையை வழங்கினர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மனைவி மாலதி (வயது 47) கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாயப் பணியை முடித்துவிட்டு மார்த்தா ண்டம்பட்டி கிராமத்திற்கு இடையே பாலத்தின் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென பலத்த சத்தத்துடன் மின்னல் தாக்கியது.இதில் மாலதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் அறிந்த நேரடியாக அவரது இல்லத்திற்கு சென்று மார்க்கண்ேடயன் எம்.எல்.ஏ. குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். மேலும் தமிழக அரசின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரணம் அளிக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் கீதாஜீவன், மார்கண்டேயன் எம்.எல்.ஏ., கலெக்டர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் அவரது வீட்டிற்கு நேரில் சென்று உயிரிழந்த மாலதி குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர். மேலும் தமிழக அரசின் நிவாரண நிதி ரூ.4 லட்சத்திற்க்கான காசோலையை வழங்கினர்.
குடும்பத்தார் தரப்பிலும் தனது மகள்களுக்கு அரசு வேலை வழங்கிட கோரிக்கை விடுத்தனர்.
உயிரிழந்த மாலதிக்கு தங்கப்பிரகாஷ் (24) என்ற மகனும், தங்கமாரி (22), கன்னிகா (18) என்ற 2மகள்களும் உள்ளனர்.
நிகழ்ச்சியில் கோவில் பட்டி வருவாய் கோட்டா ட்சியர் மகா லட்சுமி, விளா த்தி குளம் வட்டாட்சியர் சசிக்குமார், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்புராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் நகர செயலாளர்
வேலுச்சாமி, மாவட்ட குழு உறுப்பினர் ஞானகுருசாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ், மார்த்தா ண்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முனியம்மாள் முத்து கரும்புலி, குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உத்திரமேரூர் பேரூராட்சி சோமநாதபுரம் பகுதியில் நேற்று திடீரென இடி இடித்தது.
- விநாயகம் என்பவரது வீட்டின் அருகே நின்ற 2 மரங்கள் மின்னல் தாக்கி கொழுந்து விட்டு எரிந்தன.
உத்திரமேரூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி சோமநாதபுரம் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அப்போது திடீரென இடி இடித்தது.
அந்த பகுதியை சேர்ந்த விநாயகம் என்பவரது வீட்டின் அருகே நின்ற 2 மரங்கள் மின்னல் தாக்கி கொழுந்து விட்டு எரிந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- சாத்தான்குளத்தில் சுமார் அரைமணி நேரம் பலத்த மழை பெய்தது.
- தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக சிவகிரியில் 47 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில் மதியத்திற்கு பிறகு வானில் கருமேகக்கூட்டங்கள் திரண்டன.
சாத்தான்குளத்தில் சுமார் அரைமணி நேரம் பலத்த மழை பெய்தது. இதில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையினால் அங்குள்ள பழைய பஸ் நிலையம் அருகில் அரசு கிளை நூலகத்தின் உள்ளே மழை நீர் புகுந்து தேங்கியது.
இதேபோல் தட்டார்மடம், பன்னம்பாறை, பேய்க்குளம் பகுதியிலும் மழை பெய்தது. குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக சாத்தான்குளத்தில் 72.6 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. விளாத்திகுளம், தூத்துக்குடி, கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. கடம்பூர், திருச்செந்தூர், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. முறப்பநாடு பகுதியில் நேற்று மாலை இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
அப்போது நெல்லை மாவட்டம் நடுவக்குறிச்சி அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்த சிவசங்கரன் என்பவரது மனைவி சுப்புலெட்சுமி(55) என்பவர் முறப்பநாடு அருகே சென்னல்பட்டியில் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அவர் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று சுப்புலெட்சுமி உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுமதித்தனர். நேற்று மாலையில் காடல்குடி, கீழ அரசடி, ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி, கன்னடியன், மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 21.2 மில்லிமீட்டரும், அணை பகுதியில் மணிமுத்தாறில் 10.3 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
மாநகர பகுதியில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியத்திற்கு பிறகு விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் தாழ்வான தெருக்களில் தண்ணீர் குளம்போல் தேங்கியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக சிவகிரியில் 47 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. ஆய்க்குடியில் 10.5 மில்லிமீட்டர் மழை பெய்தது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் மிதமாக கொட்டியது.
- அதிகாலையில் பயங்கர சத்தத்துடன் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
- சிவப்பா மீது திடீரென மின்னல் தாக்கியது. இதனை பார்த்து மஞ்சுளா அதிர்ச்சி அடைந்தார்
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள ராமசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பா (வயது46). கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா (32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்த தம்பதிகள் ஓட்டு வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்றிரவு இவர்கள் சாப்பிட்டு விட்டு வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். அனைவரும் தனித்தனியாக படுத்து இருந்தனர்.
அதிகாலையில் பயங்கர சத்தத்துடன் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது சிவப்பா மீது திடீரென மின்னல் தாக்கியது. இதனை பார்த்து மஞ்சுளா அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் கூச்சல் போட்டதால் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். மஞ்சுளாவுக்கு கை, கால் உள்ளிட்ட பகுதியில் கொப்பளம் ஏற்பட்டது.
இது பற்றி தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் இன்று காலை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மின்னல் தாக்கியதில் படுகாயம் அடைந்த மஞ்சுளாவை மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மின்னல் தாக்கி இறந்த சிவப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்னல் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே நிர்மலா உயிரிழந்தார்.
- திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
திருவெண்ணெய்நல்லூர்:
திருவெண்ணைநல்லூர் அருகே கருவேப்பிலைபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாஞ்சாலன். அவரது மனைவி நிர்மலா (வயது40) . இவர் நேற்று மாலை 4 மணி அளவில் வயல்வெளியில் உள்ள தனது மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அந்த மாடுகளை வீட்டுக்கு காந்தலவாடி சாலை வழியாக ஓட்டி வந்தார். அப்போது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே நிர்மலா உயிரிழந்தார்.
இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்