என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "car accident"
- படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
திருவலம் அருகே உள்ள குகை யநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன் மகன் லோகேஷ் (வயது 21). இவர் நேற்று வீட்டிலிருந்து ராணிப்பேட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
திருவலம் புதிய ரெயில்வே மேம்பாலம் அருகில் வந்த போது, முன்னால் சென்ற கார் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் லோகேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லோகேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி பகுதியில் வந்த போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
- சாலையோரம் உள்ள பள்ளத்தில் பாய்ந்ததில் காரின் முன்பக்கம் உடைந்து என்ஜின் மற்றும் உதிரி பாகங்கள் தனியாக கழன்று சென்று விபத்துக்குள்ளானது.
கயத்தாறு:
சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் திருவேங்கடன். இவரது மகன் பிரகாஷ் (வயது39). இவரது மனைவி சாந்தினி. இவர்களுக்கு சாரா (3) என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் பிரகாஷ் நேற்று இரவு தனது காரில் மனைவி மற்றும் மகளுடன் நெல்லை புறப்பட்டார். அவர்கள் இன்று அதிகாலை கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரி பகுதியில் வந்த போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
பின்னர் சாலையோரம் உள்ள பள்ளத்தில் பாய்ந்ததில் காரின் முன்பக்கம் உடைந்து என்ஜின் மற்றும் உதிரி பாகங்கள் தனியாக கழன்று சென்று விபத்துக்குள்ளானது.
இதில் பிரகாஷ் உள்பட 3 பேரும் காயமடைந்தனர். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு கயத்தாறு சப்-இன்ஸ்பெக்டர் காசிலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அருளானந்த் தனது மகள் கண் முன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
- படுகாயமடைந்த அருளானந்தின் மகளை பொதுமக்கள் மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள புலியடிதம்மம் பகுதியை சேர்ந்தவர் அருளானந்த் (வயது45), இவர் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இவரது மகள் ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று காலை அருளானந்த் தனது மகளை கல்லூரிக்கு அழைத்து சென்றார். அவர்கள் மோட்டார் சைக்கிளில் கோபாலபுரம் அருகே வளைவில் வந்தபோது தேவகோட்டையில் இருந்து காளையார் கோவில் நோக்கி சென்ற காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.
இதில் படுகாயமடைந்த அருளானந்த் தனது மகள் கண் முன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த அருளானந்தின் மகளை பொதுமக்கள் மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் திருவே கம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான அருளானந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காரை ஓட்டி வந்த ரஹ்மத்துல்லாக் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகள் கண்முன்பு தந்தை விபத்தில் பலியான சம்பவம் தேவகோட்டை பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- குடும்பத்தினருடன் சுப்பிரமணியன் காரில் சென்று கொண்டிருந்தார்.
- கட்டுப்பாட்டை இழந்த கார் பனை மரத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது
முக்கூடல்:
நெல்லையை அடுத்த பேட்டை காந்திமதி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 40). இவர் தனது மனைவி பேச்சியம்மாள் (36), மகள் பவித்ரா (13), மகன் மாதேஸ்வரன்(11), உறவினர் பரமசிவம்(81) ஆகியோருடன் காரில் கடையம் சென்று கொண்டிருந்தார்.
சுப்பிரமணியனின் தந்தை பரமசிவத்திற்கு நேற்று பிறந்தநாள் என்பதால் குலதெய்வ கோவில் செல்வதற்காக பேட்டையில் இருந்து அவர்கள் கடையம் சென்றுள்ளனர். காரை பரமசிவம் ஓட்டி சென்றார். முக்கூடல் அருகே செங்குளம் - இடைகால் மெயின்ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஓடை பாலம் அருகில் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் இடது பக்கம் சாலையோரத்தில் உள்ள பனை மரத்தில் கார் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த பாப்பாக்குடி போலீசார் அங்கு விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.
பின்னர் 6 பேரையும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- 3 பேர் காயம்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் தேகப்படாராணிபாளை யத்தை சேர்ந்தவர் பாஸ்கர்ராஜ் (வயது 50). இவரது மனைவி கிருஷ்ணவேணி (48), மகன் தேக ராம் (29), இவரது மனைவி மானஷா (24). இவர்கள் காரில் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றனர். தனராம் (27) என்பவர் காரை ஒட்டினார். சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினர்.
கண்ணமங்கலம் அருகே வண்ணாங்குளம் கிராமத்தில் சென்றபோது எதிரே வந்த கார் மீது மோதாமல் இருக்க டிரைவர் தன்ராம் வலதுபுறமாக காரை திருப்பினார். அப்போது கட்டுப் பாட்டை இழந்த கார் சாலையோரம் பழக்கடையின் அருகில் மோட்டார் சைக்கிளில் நின்று பேசிக் கொண்டிருந்த வாலிபர் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் கார் டிரைவர் தன்ராம், பழக்கடை வைத்துள்ள பாபு, மோட்டார் சைக்கிளில் நின்ற வாலிபர் உள்பட மூன்று பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத் துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் தரணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரியபிள்ளை வலசை சாந்தி நகர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் குணசேகரன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ் என்பவரது மகன் சூர்யா ஆகிய இருவர் மீதும் கார் ஏறி இறங்கியது.
- பலத்த காயமடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தென்காசி:
வருகிற 5-ந்தேதி தைப்பூசத்தையொட்டி மாலை அணிந்து விரதம் இருந்து வரும் முருக பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லத் தொடங்கி உள்ளனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பெரியபிள்ளை வலசை கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் நேற்று மாலையில் தங்களது ஊரில் இருந்து புறப்பட்டு திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளனர்.
நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் பாவூர்சத்திரத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி அருகே நேற்றிரவு சுமார் 10.45 மணியளவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது.
இதில் பெரியபிள்ளை வலசை சாந்தி நகர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் குணசேகரன்(வயது 16) மற்றும் அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ் என்பவரது மகன் சூர்யா(18) ஆகிய இருவர் மீதும் கார் ஏறி இறங்கியது. இதில் பலத்த காயமடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் தலையில் பலத்த ரத்தக்காயம் அடைந்த குணசேகரன் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சூர்யாவிற்கு தலையில் காயமும், கால் முறிவும் ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் இரவு நேரத்தில் மது போதையில் காரை வேகமாக ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி விவேகானந்தர் தெருவை சேர்ந்த முருகன் மகன் ஜெயக்குமார் (24)என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
- மாற்றுச்சான்றிதழ் வாங்குவதற்காக பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரி நோக்கி காரில் இன்று காலை சென்றுள்ளனர்.
- எதிர் திசையில் கள்ளகுறிச்சியில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த தனியார் பஸ் கார் மீது பலமாக மோதியது.
கடலூர்:
விருத்தாசலம் ஆயியார்மடம் தெருவைச் சேர்ந்த தமிழேந்தி மகன் அன்புச்செல்வன் (வயது 18), காமராஜ் நகரை சேர்ந்த ராமதாஸ் மகன் சன்முகம் (18), ஜனார்த்தனன் (18) ஆகிய 3 பேரும் விருத்தாசலத்தில் இருந்து மாற்றுச்சான்றிதழ் வாங்குவதற்காக பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரி நோக்கி காரில் இன்று காலை சென்றுள்ளனர். அப்போது மணலூர் என்ற இடத்தில் எருமனூர் பாலத்திலிருந்து வேப்பூர் செல்ல காரை திருப்பிய போது, எதிர் திசையில் கள்ளகுறிச்சியில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த தனியார் பஸ் கார் மீது பலமாக மோதியது.
ரயில்வே மேம்பாலம் அருகே நடந்த இந்த விபத்தில் காரில் வந்த 3 பேரும் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அந்த சாலை வழியே சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு 3 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
விபத்து குறித்து மணலூர் பகுதி பொதுமக்கள் கூறும்போது, விபத்து நடந்த இடத்தில் வேகத்தடைகளோ, பேரிகார்டுகளோ அமைக்கப்படாமல் இருப்பதால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. 3 சாலைகள் சந்திக்கும் முக்கிய இடமாக இருப்பதால் விபத்து ஏற்படும் பகுதியாக உள்ளது எனவும், அரசு உரிய நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் பேரிகார்டு, வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
- காட்பாடியை சேர்ந்தவர்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
காட்பாடி அடுத்த தேம்பள்ளி அருகே ஸ்ரீபாதநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அருள் (வயது 35), இவர் அவரது மாமாவிடம் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை ராணிப்பேட்டை, சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனி தொழிலாளர்களை காரில் ஏற்றிக் கொண்டு வந்துள்ளார்.லாலாபேட்டை அருகே பொன்னை சாலை ரெண்டாடி கூட்ரோட்டில் தொழிலாளர்களை இறக்கிவிட்டு விட்டு பிறகு காரில் மேல்பாடி வழியாக ஸ்ரீபாதநல்லூருக்கு பொன்னை சாலையில் சென்றார்.
குமணந்தாங்கல் அருகே வரும் போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனிற்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து அருளின் அண்ணன் ஸ்டான்லி, சிப்காட் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கட்டுப் பாட்டை இழந்து பாலத்தில் மோதியது
- போலீசார் விசாரணை
வாலாஜா:
வாலாஜா அருகே நீலகண்ட ராயன்பேட்டை சோளிங்கர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் துர்காபிரசாத் (வயது 33) இவ ருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர் தனக்கு சொந்தமான காரை ஓட்டிக்கொண்டு வாலாஜா -சோளிங்கர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து தரைப்பாலத்தில் தடுப்புச்சுவர் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த துர்கா பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கார் மோதி மீன் வியாபாரி பலியானார்.
- இந்த சம்பவம் தொடர்பாக கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி மாரியம்மன் கோவிலைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் வீரசெல்வமுத்து (வயது 25), மீன் வியாபாரி.
சம்பவத்தன்று திருப்பாலைக்குடியில் இருந்து தேவிபட்டிணத்திற்கு மீன் வியாபாரம் செய்ய வீரசெல்வமுத்து மோட்டார் சைக்கிளில் சென்றார். சம்பை பஸ் ஸ்டாப் அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வீரசெல்வமுத்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
உயிருக்கு போராடிய அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் வீரசெல்வமுத்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து தேவிபட்டினம் போலீசில் இறந்த வாலிபரின் தந்தை ராதாகிருஷ்ணன் புகார் செய்தார். புகாரின் பேரில் காரை ஒட்டி வந்த தென்காசி ஆலங்குளத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
வேலூர் அடுத்த பலவன் சாத்து பாறை மேடு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 56). லாரி டிரைவர்.
இவர் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் இருந்து ஈரோடு பகுதிக்கு மிளகாய் லோடு ஏற்றிக்கொண்டு வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்றார்.
அப்போது நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட் பகுதியில் நேற்று இரவு லாரியை நெடுஞ்சாலை ஓரம் நிறுத்திவிட்டு சங்கர் டீ அருந்துவதற்காக தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் சங்கர் மீது மோதியது. இதில் சங்கருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இந்த காரை அதே பகுதியை சேர்ந்த பாரபள்ளி சத்தியநாராயணன் ஓட்டி வந்தார்.
- இதுகுறித்து ரோசணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
தெலுங்கான மாநிலம் லிங்காபேட் பகுதியை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 6 ேபர் காரில் அய்யப்பன் கோவிலுக்கு சென்றனர். இந்த காரை அதே பகுதியை சேர்ந்த பாரபள்ளி சத்தியநாராயணன் ஓட்டி வந்தார். இந்நிலையில் கார் திண்டிவனம் ரோசணை போலீஸ் நிலையம் அருகே வந்தபோது காரின் முன்னால் சென்ற மாட்டுவண்டி மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாட்டுவண்டியை ஓட்டி சென்ற ஆறுமுகம் (வயது 57) காயம் அடைந்தார். மேலும் காரின் முன்பகுதி சேதமடைந்தது. இதுகுறித்து ரோசணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்