search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Market"

    • மார்க்கெட்டில் கடந்த 5 நாட்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
    • வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் தினசரி காய்கறி மார்க்கெட் சந்தை பஸ் நிலையம் பின்புறம் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இதில் 170-க்கும் மேற்பட்டோர் வியாபாரம் செய்து வருகின்றனர்.

    இங்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் தங்கள் தோட்டங்களில் விளை விக்கப்பட்ட காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தினசரி சந்தை வியாபாரிகளை வாரச்சந்தை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தினசரி சந்தைக்கு இடம் பெயரும் படி நகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டது. இதனால் வியாபாரிகள் சங்கத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றமும் வியாபாரிகள் சங்கத்தினருக்கு முன்னுரிமை வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது.

    இதனையடுத்து நகராட்சி நிர்வாகத்தினர் தினசரி மார்க்கெட் முன்பு அறிவிப்பு பிளக்ஸ் போர்டு வைத்தனர். மேலும் தினசரி மார்க்கெட்டில் கடந்த 5 நாட்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் 150-க்கும் மேற்பட்டோர் நகராட்சி ஆணையாளரிடம் 192 பேருக்கு நகராட்சி வாரச்சந்தையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் கடைகள் ஒதுக்கி தரக்கோரி மனு அளித்தனர். நகராட்சி ஆணையாளர் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    இந்த நிலையில் நேற்று தினசரி வியாபாரிகளுக்கு எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி நகராட்சி அதிகாரிகள் திடீரென நள்ளிரவு 11 மணி அளவில் வந்து தினசரி மார்க்கெட் சந்தையின் கேட்டை பூட்டு போட்டு சீல் வைத்தனர். அப்போது உள்ளே ஒரு பெண் உட்பட 5 விவசாயிகள் சிக்கிக்கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து கேட்டை பூட்டினாலும் கேட்டின் முன்பு உள்ள இடங்களில் வியாபாரிள் அதிகாலையில் காய்கறிகளை போட்டு வியாபாரம் செய்து விடுவார்கள் என்று அப்பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான செப்டிக் டேங்க் வாகனம், குப்பைகள் எடுத்துச் செல்லும் வாகனங்களை நிறுத்தி வைத்தனர்.

    இதனையடுத்து அங்கு திரண்ட 100-க்கு மேற்பட்ட தினசரி வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட காய்கறி மூட்டைகளை பஸ் நிலையம் வளாகத்தில் பஸ் செல்லும் வழியில் வைத்தனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் தினசரி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம், புளியம்பட்டி இன்ஸ்பெக்டரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை டி.எஸ்.பி, முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. வியாபாரிகள் காய்கறி மூட்டைகள் சாலைகளில் போட்டு வைத்துள்ளதால் காய்கறிகள் வீணாகி உள்ளது. இதனால் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    தொடர்ந்து இன்று காலை தினசரி வியாபாரிகள் சங்கத்தின், சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம் மற்றும் வியாபாரிகள் தினசரி மார்க்கெட் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் வியாபாரிகளின் கோரிக்கைகளுக்காக புளியம்பட்டி பஸ் நிலையம் மற்றும் சத்தியமங்கலம் நெடுஞ்சாலையில் உள்ள பகுதியில், கடைகள் அடைக்கப்பட்டு வருகிறது. இதனால் புளியம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

    மேலும் தொடர்ந்து புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம், பவானிசாகர் இன்ஸ்பெக்டர் அன்னம், சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் வியாபாரிகள் கூறியவாறு பேச்சுவார்த்தையில் உடன்படவில்லை என்றால் காய்கறி மூட்டைகளுடன் தினசரி வியாபாரிகள் சாலை மறியல் செய்வதாக கூறுகின்றனர். இந்த போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் என சுமார் 150-க்கு மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சென்ட்ரல் மார்க்கெட்டில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.
    • 2 நாட்களுக்கு மேலானதால் காய்கறிகள் அழுகி சேதமடைந்துள்ளன.

    மதுரை:

    மதுரை மாட்டுத் தாவணியில் சென்ட்ரல் மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மொத்த வியாபார கடைகள் உள்ளன. மேலும் பலர் மார்க்கெட் பகுதிகளில் சாலையோரங்களில் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

    மதுரை நகரின் பெரிய மார்க்கெட்டாக திகழும் சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் இருந்து உணவகங்கள், திருமணம் போன்ற விசேஷ நிகழ்ச்சிகள் மற்றும் சிறு வியாபாரிகள் ஆகியோர் மொத்தமாக காய்கறிகளை கொள்முதல் செய்து வருகின்றனர்.

    சென்ட்ரல் மார்க் கெட்டில் மதுரை, திண்டுக்கல், நெல்லை, விருதுநகர், தேனி, சிவகங்கை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

    வழக்கமாக முகூர்த்த தினங்களில் சென்ட்ரல் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க கூட்டம் அலை மோதும். நேற்று முகூர்த்த தினம் என்பதால் சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகள் கடந்த 2 நாட்களாக அதிகளவில் காய்கறிகளை கொள்முதல் செய்தனர்.

    ஆனால் கடந்த ஒரு வாரமாக மாநிலம் முழுவதும் கோடை மழை பரவலாக பெய்து வரும் நிலையில் 2 நாட்களாக மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது.

    இதனால் சென்ட்ரல் மார்க்கெட்டில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. காய்கறிகளை வாங்க எதிர்பார்த்த அளவிற்கு சிறுவியாபாரிகள், பொது மக்கள் வர வில்லை. இதனால் மார்க்கெட்டில் காய்கறிகள் விற்பனையாகாமல் தேங்கின.

    இந்த நிலையில் இன்று காலை தேக்கமடைந்த 5 டன் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காய்கறிகள் அழுகி சேதமடைந்து துர்நாற்றம் வீசியது. இதனால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், முகூர்த்த நாளையொட்டி அதிகளவில் காய்கறிகளை வெளி மாவட்ட வியாபாரிகளிடமிருந்து கொள்முதல் செய்திருந்தோம். ஆனால் தொடர் மழை காரணமாக வியாபாரம் இல்லை. 2 நாட்களுக்கு மேலானதால் காய்கறிகள் அழுகி சேதமடைந்துள்ளன. இதன் மூலம் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

    • ஆந்திர பகுதியிலிருந்து ஆடுகள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
    • ஆடு விலை அதிகமாக உள்ளதால் கறியை விலையும் இனிவரும் காலங்களில் அதிகமாகும்.

    காவேரிப்பட்டினம்:

    வருகிற 9-ந் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் ரம்ஜான் பண்டிகை 11-ந் தேதி கொண்டாடப்படுகிறதையொட்டி காவேரிப்பட்டணம் வார சந்தையில் ஆடுகள் விற்பனை ஜோராக இருந்தது.

    காவேரிப்பட்டணம் பகுதியில் விவசாய நிலங்கள் ஏராளமாக உள்ளன ஆனால் தற்போது இப்பகுதியில் ஆடுகளை பெரும்பாலானோர் வளர்ப்பதில்லை. இதனால் ஆடுகளுக்கு இப்பகுதியில் விற்பனை அதிகமாய் உள்ளது. மேலும் ஆந்திர பகுதியிலிருந்து ஆடுகள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் ஆடுகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. தற்போது சந்தையில் ஆடு விலை அதிகமாக உள்ளதால் கறியை விலையும் இனிவரும் காலங்களில் அதிகமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

    • வாரந்தோறும் கோடி கணக்கில் மாடுகள் வியாபாரம் நடக்கும் சந்தையில் இன்று இலட்சக்கணக்கில் மட்டுமே வியாபாரம்.
    • வியாபாரிகள் வராததால் மாடுகள் வரத்தும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கேளூர் தேப்பனந்தல் மாட்டுச் சந்தை தமிழகத்தில் பிரபலமான மாடு சந்தையாக விளங்கி வருகிறது.

    வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் இந்த மாட்டுச்சந்தையில் திருவண்ணாமலை வேலூர் ராணிப்பேட்டை விழுப்புரம் கடலூர் திருப்பத்தூர் தர்மபுரி தேனி மதுரை சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மாடுகள் மற்றும் பல நூறு மாற்று வியாபாரிகள் கலந்துகொண்டு பல கோடி வர்த்தகம் நடைபெறும் சந்தையாக விளங்கும் கேளூர் மாட்டுச் சந்தையில் இன்று தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை காரணமாக மாட்டுச் சந்தைக்கு பணங்கள் கொண்டு வருவதில் மாற்று வியாபாரிகளுக்கு பெருத்த சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால் இன்று நடைபெறும் கேளூர் மாட்டுச்சந்தைக்கு மாடு வியாபாரிகளின் வரத்து குறைந்துள்ளதால் மாடுகள் விற்பனையாவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் இருந்து ஒரு சில மாவட்டங்களில் இருந்து மட்டுமே மாடுகள் குறைந்த அளவிலே வந்துள்ளதால் வியாபாரிகளும் குறைந்த அளவில் கலந்து கொண்டனர். கோடிக்கணக்கில் நடைபெறும் இந்த மாட்டுச்சந்தையில் இன்று லட்சக்கணக்கில் தான் வியாபாரம் நடைபெற்றது. வியாபாரம் மந்தமாக நடைபெறுவதாக மாட்டுச் சந்தையில் உள்ள மாடு வியாபாரிகள் மாடுகளை விற்க வந்திருக்கும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    வியாபாரிகள் வராததால் மாடுகள் வரத்தும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பல்வேறு மாநிலங்களில் மஞ்சள் உற்பத்தி பெருகி ஒரு குவின்டால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனையானது.
    • கர்நாடகா மாநிலம் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து மட்டுமே புதிய மஞ்சள் வரத்தாகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடம், பெரு ந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடம், கோபிசெட்டிபாளையம் என 4 இடங்களில் மஞ்சள் மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏல விற்பனை நடந்து வருகிறது. கடந்த 2010-11ம் ஆண்டுகளில் தங்கம் விலைக்கு இணையாக மஞ்சள் குவிண்டால் ரூ.18 ஆயிரம் வரை விற்பனையானது.

    அதன் பின்னர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மஞ்சள் உற்பத்தி பெருகி ஒரு குவின்டால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனையானது. இதே நிலை சில ஆண்டுகள் நீடித்தது.

    இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு தொடக்கத்தில் பல்வேறு மாநிலங்களில் பலத்த மழை, பல மாநிலங்களில் போதிய மழை இன்மை போன்ற காரணங்களால் மஞ்சள் உற்பத்தி குறைந்து ஈரோடு மஞ்சள் குவிண்டால் ரூ.15 ஆயிரம் முதல் ரூ15 ஆயிரத்து 500 வரை விற்பனையானது.

    அதன்பின் கடந்த 6 மாதங்களாக குவிண்டால் ரூ.11 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரை விற்பனை ஆகி வந்தது. கடந்த வாரம் ரூ.15 ஆயிரத்தை தொட்டது. பின்னர் படிப்படியாக உயர்ந்து மீண்டும் குவிண்டால் ரூ.16 ஆயிரத்து 36-க்கு விற்பனையானதால் மஞ்சள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.12 ஆயிரத்து 678 முதல் ரூ.16 ஆயிரத்து 36 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.11 ஆயிரத்து 599 முதல் ரூ.13 ஆயிரத்து 800 வரையும் விற்பனையானது.

    இங்கு கொண்டுவரப்பட்ட 3 ஆயிரத்து 387 மஞ்சள் மூட்டைகளில் 1,938 மூட்டைகள் ஏலம் போன தாக நிர்வாகிகள் தெரிவித்தனர். கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.11 ஆயிரத்து 200 முதல் ரூ.13 ஆயிரத்து 799 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.11 ஆயிரத்து 200 முதல் ரூ.11 ஆயிரத்து 133 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

    பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.10 ஆயிரத்து 545 முதல் ரூ.15 ஆயிரத்து 89 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.8 ஆயி ரத்து 889 முதல் 13 ஆயிரத்து 739 வரையும் விற்பனையானது. இதைப்போல் ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடத்தில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ. 12 ஆயிரத்து 633 முதல் 15 ஆயிரத்து 499 வரையும், கிழ ங்கு மஞ்சள் ரூ.10 ஆயிரத்து 556 முதல் ரூ.13 ஆயிரத்து 519 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

    இது குறித்து ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-தற்போது கர்நாடகா மாநிலம் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து மட்டுமே புதிய மஞ்சள் வரத்தாகிறது. இதற்கு தரத்தின் அடிப்படையில் சற்று விலை அதிகமாக கிடைக்கிறது.

    பழைய மஞ்சள் இருப்பில் இருந்தவை ரூ.9 ஆயிரத்துக்கு விலை போகிறது. ஈரோடு மாவட்டத்தில் இன்னும் புதிய மஞ்சள் அறுவடையாகவில்லை. சில மஞ்சள் புதிய ரகம் பெரு வட்டாக வரத்தாகி ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஒரு குவிண்டால் ரூ.16 ஆயி ரத்து 36 வரை விற்பனையானது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மற்றும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட மீன்கள் ஆய்வு செய்யப்பட்டது.
    • மீன்கள் மீது பார்மலின் தடவப்பட்டிருக்கிறதா? மீன் விற்பனைக்கு தகுதியானதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கணேசபுரம் மற்றும் வடசேரி பகுதி மீன் மார்க்கெட்களில் கெட்டுப்போன, பார்மலின் கலந்து கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்பட்ட பார்மலின் கெமிக்கல் மனம் கொண்ட மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது.

    அந்த புகார் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் நாகர்கோயில் மாநகர உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குமார பாண்டியன், சங்கரநாராயணன், மீன்வளத்துறை ஆய்வாளர் மரிய பிரான்ஸ்கோ விவின் மற்றும் மேற்பார்வையாளர் கார்த்தீபன், நாகர்கோவில் மாநகர மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் சத்யராஜ், மாதேவன் பிள்ளை ஆகியோர் கொண்ட குழுவினர் கணேசபுரம்-வடசேரி மீன் சந்தையில் விற்பனை செய்யப்படும் மீன்களை இன்று ஆய்வு செய்தனர்.

    விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மற்றும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட மீன்கள் ஆய்வு செய்யப்பட்டது. மீன்கள் மீது பார்மலின் தடவப்பட்டிருக்கிறதா? மீன் விற்பனைக்கு தகுதியானதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு சில வியாபாரிகள் உணவு பயன்பாட்டிற்கு தகுதியற்ற மீன்களை விற்பனை செய்திருந்தது தெரியவந்தது.

    அந்த மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மீன்களை மினி டெம்போவில் ஏற்றி கொண்டு சென்றனர். உணவு பயன்பாட்டிற்கு தகுதியற்ற கெட்டுப்போன சுமார் 230 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அந்த மீன்களை சுண்ணாம்பு தூள் மற்றும் பிளிச்சிங் பவுடர் தூவப்பட்டு மாநகராட்சி உரக்கிடங்கில் கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது. சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன்களில் பார்மலின் கெமிக்கல் தடவப்பட்ட மீன்கள் எதுவும் இல்லை என மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புறநகர் பகுதிகளான பல்வேறு கிராமங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
    • பரவலாக பெய்த மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்தும் குறைந்து காணப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் ஒருங்கிணைந்த பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் புறநகர் பகுதிகளான பல்வேறு கிராமங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

    பின்னர் இங்கிருந்து வியாபாரிகள் அதனை வாங்கிச்சென்று விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதம் மார்கழி என்பதால் எந்தவித திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை. மேலும் பரவலாக பெய்த மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்தும் குறைந்து காணப்பட்டது.

    இந்நிலையில் ஒரு மாதத்திற்கு பின்பு நாளை தை மாதத்தின் முதல் வளர்பிறை முகூர்த்த நாள் வருகிறது. நாளை திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷேச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளநிலையில் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

    திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இன்று 30 கிலோ மல்லிகை மட்டுமே விற்பனைக்கு வந்தது. இதனால் ஒரு கிலோ மல்லிகை ரூ.4000-க்கு விற்பனையானது. இதேபோல் முல்லைப்பூ ரூ.1800, ஜாதிப்பூ ரூ.1300, காக்கரட்டான் ரூ.1300, சம்பங்கி ரூ.300, அரளி ரூ.150, செவ்வந்தி ரூ.200, செண்டுமல்லி ரூ.70, கோழிக்கொண்டை ரூ.130, பட்டன்ரோஸ் ரூ.200, பன்னீர்ரோஸ் ரூ.150 என விற்பனையானது.

    வழக்கமாக மார்க்கெட்டுக்கு வரும் பூக்களில் பாதிஅளவு கூட இன்று விற்பனைக்கு வராததால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர். அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வர உள்ள நிலையில் பூக்களின் விலையேற்றம் சாமானிய மக்களை அதிர்ச்சி அடைய வைத்தள்ளது.

    • ஒவ்வொரு வாரமும் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரையிலான ஆடுகள் விற்பனை செய்யபட்டு வருகிறது.
    • தற்போது ரூ.13 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரத்துக்கு மேல்தான் விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திரு மங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறு வது வழக்கம். தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்த பெரிய சந்தையாக கருதப்படும் இந்த ஆட்டுசந்தையில் ஒவ்வொரு வாரமும் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரையிலான ஆடுகள் விற்பனை செய்யபட்டு வருகிறது.

    தென்மாவட்டத்தில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, கோவில்பட்டி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வியாபாரிகள் வந்திருந்து ஆடுகள், கோழிகளை வாங்கி செல்வது வழக்கம். அதிகாலை 4 மணியிலிருந்து 9 மணி வரை கட்டுக்கடங்காத கூட்டம் இந்த சந்தையில் காணப்படும்.

    இந்நிலையில் ஆட்டுச் சந்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய ஆட்டு சந்தையில் வழக்கத்தைவிட அதிகளவு கூட்டம் காணப்பட்டது. 7,000 முதல் 10,000 ஆடுகள் வரை விற்கப்பட்டது. வருகிற திங்கட்கிழமை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த வார வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தையில் ஆட்டின் விலை ரூ.10,000 முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ரூ.13 ஆயிரம் முதல் ரூ.35 ஆயி ரத்துக்கு மேல்தான் விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    அதன்படி இன்று மட்டும் 5 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை நடை பெற்றுள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். கட்டுக்கடங்காத கூட் டத்தில் ஆடு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டதால் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் நகராட்சி நிர்வாகம் ஆட்டுச் சந்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஒரு மாத காலமாகவே ஆடுகளின் விலை சற்று கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாகவும், பொங்கல் பண்டிகை முடிந்த பின் ஆட்டின் விலை கட்டுக்குள் வரும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர். தற்போது ஆடுகளின் வரத்து கூடுதலாக இருப்பதாலும் ஆடுகள் தொடர்ந்து விலை ஏற்றத்தின் காரணமாக ஆடுகள் விற்பனை செய்பவர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

    • மீன் விலையும் கடந்த சில நாட்களாக கடுமையாக குறைந்து வருகிறது.
    • வஞ்சிரம், வவ்வால், சங்கரா, சீலா, இறால், நண்டு போன்றவை கடந்த வாரத்தை விட இன்று விலை மிக குறைவாக விற்கப்பட்டது.

    ராயபுரம்:

    சென்னை, காசிமேடு, நொச்சிக்குப்பம் உள்ளிட்ட மீன் மார்க்கெட்டுகளில் கடந்த சில நாட்களாக மீன் விற்பனை மிகவும் குறைந்து வருகிறது. எண்ணூர் பகுதியில் கடலில் எண்ணை கழிவு கலந்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    இதற்கு முன்பு ஒருமுறை கடலில் கச்சா எண்ணெய் கலந்த போதும் விற்பனை குறைந்து காணப்பட்டது. அப்போது மீன் உண்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் பிறகு விற்பனை அதிகரித்தது. ஆனால் தற்போது அது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாததால் பொதுமக்கள் பலர் மீன் வாங்க தயங்குகிறார்கள் என்று மீன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருவதாலும் மீன்வரத்து மற்றும் விற்பனை குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் மீன் விலையும் கடந்த சில நாட்களாக கடுமையாக குறைந்து வருகிறது.

    இந்நிலையில் காசிமேடு மீன் பிடி துறைமுகத்துக்கு 200 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து இன்று அதிகாலையில் கரைக்கு திரும்பினர். ஞாயிற்றுக்கிழமையான இன்று கிருத்திகை மற்றும் பிரதோஷம் என்பதால் மீன் வரத்து குறைவாகவே இருந்தது. மேலும் மீன்கள் விலையும் மிக குறைவாக காணப்பட்டது. அதே நேரத்தில் இன்று மீன் வாங்க அதிக கூட்டம் காணப்பட்டது. வஞ்சிரம், வவ்வால், சங்கரா, சீலா, இறால், நண்டு போன்றவை கடந்த வாரத்தை விட இன்று விலை மிக குறைவாக விற்கப்பட்டது.

    கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.1,200-க்கு விற்ற வஞ்சிரம் மீன் இன்று ரூ.350 முதல் ரூ.450 வரை விற்கப்பட்டது. கடந்த வாரம் ரூ.1,000-க்கு விற்கப்பட்ட வவ்வால் இன்று ரூ.200-க்கு விற்பனையானது. ரூ.500-க்கு விற்கப்பட்ட சங்கரா ரூ.100-க்கும், ரூ.450-க்கு விற்கப்பட்ட இறால் ரூ.200-க்கும், ரூ.600-க்கு விற்கப்பட்ட சீலா ரூ.300-க்கும், ரூ.300-க்கு விற்கப்பட்ட நண்டு ரூ.80 முதல் 90-க்கும் விற்கப் பட்டன. இந்த நிலையில் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் நாளை மீன்வரத்தும் அதிகமாக இருக்கும், மேலும் மீன் விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    • பல்வேறு அளவுகளில் அவல், பொரிகளை பாக்கெட்டுகளில் அடைத்து வியாபாரிகள் விற்பனை செய்தனர்.
    • அளவை பொறுத்து பனை ஓலைகள் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.

    நெல்லை:

    திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று மாலை வீடுகளில் பொதுமக்கள் பூஜை செய்து வழிபடுவார்கள்.

    களை கட்டிய பஜார்கள்

    இதையொட்டி பொருட்கள் வாங்குவதற்காக பொது மக்கள் கடைகளுக்கு செல்வ தால் நெல்லையில் மார்கெட்டுகள் மற்றும் முக்கிய பஜார்களில் பொருட்கள் விற்பனைகளை கட்டி உள்ளது.

    கார்த்திகை தீப வழிபாட்டுக்குரிய அவல், பொரி கடலை, இலை, பூ, பழம், அகல் விளக்குகள், கொழுக்கட்டை தயாரிக்க பயன்படுத்தும் பனை ஓலை, சிறுவர்கள் கொளுத்தி மகிழும் சூந்து குச்சி போன்றவைகளை வாங்குவதற்காக இன்று டவுன் ரதவீதிகள், பாளை மார்க்கெட் பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியதை காண முடிந்தது.

    அவல், பொரி- பனை ஓலை

    பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதற்காக கூட்டத்தில் காத்து நிற்பதை தடுக்கும் விதமாக அவல், பொரி உள்ளிட்டவைகளை பல்வேறு அளவுகளில் பாக்கெட்டுகளில் அடைத்து வியாபாரிகள் விற்பனை செய்தனர்.

    பாளை தெற்கு பஜார், மகாராஜா நகர், மேலப் பாளையம் உழவர் சந்தைகள் உள்ளிட்ட பகுதிகளில் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாட தேவையான பூஜை பொருட்கள் உள ளிட்டவை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    பாளை மார்க்கெட், மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளிலும் பனை ஓலை விற்பனை மும்முரமாக நடைபெற்றது. அவை பெரியது, சிறியது என அளவை பொறுத்து ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.

    அகல் விளக்குகள்

    இதேபோல் முக்கிய இடம் பிடிக்கும் அகல் விளக்குகளின் விற்பனையும் சூடு பிடித்தது. டவுன் ரதவீதிகளில் உள்ள தற்காலிக தள்ளுவண்டி கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிவன் விளக்கு, அகல் விளக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனையானது.

    மேலும் புதுவரவான மயில் விளக்கு, யானை விளக்கு, லட்சுமி விளக்கு ஆகியவை ரூ.250-க்கும், தாமரை பூ விளக்கு ரூ.100-க்கும், பாவை விளக்கு ரூ.80-க்கும், அணையா விளக்கு ரூ.70-க்கும், துளசி மாடம் ரூ. 30-க்கும் விற்பனையானது. சுமார் 250 வகையான விளக்குகள் விற்பனைக்கு வந்திருந்தன.

    மண் விளக்குகளில் வாடிக்கையாளர்கள் விரும்பும் நிறங்களில் அவர்கள் விரும்பும் டிசைன்களை உடனுக்குடன் தயார் செய்தும் சில கடைகளில் வழங்கினர். அவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

    • செவ்வாய்க்கிழமை தோறும் மாட்டுச் சந்தை நடைபெறும்
    • பல்வேறு கடைகள் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை தோறும் மாட்டுச் சந்தை நடைபெறும். இந்த மாட்டு சந்தையையொட்டி காய்கறி, வேளாண் இடுபொருட்கள், மாடுக ளுக்கு தேவையான மூக்கனாங்கயிறு, கருவாடு வகைகள் என பல்வேறு கடைகள் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்.

    இங்கு விற்கப்படும் பொருட்களை புதுவை பகுதியில் இருந்தும், தமிழகப் பகுதியில் இருந்தும் அதிக அளவில் பொது மக்கள் வாங்கி செல்வார்கள். இதனால் செவ்வாய்க்கிழமை மதகடிப்பட்டு பகுதியில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவார்கள். இந்நிலையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக இன்று நடை பெற்ற மாட்டுச்சந்தையில் மாடுகள் விற்பனைக்கு முற்றிலுமாக வரவில்லை. மேலும் கடைகளும் அப்ப குதியில் அமைக்கப்படாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

    • 10 கிலோ எடை கொண்ட ஆட்டுக்குட்டி ரூ.8 ஆயிரம் முதல் விற்பனையானது.
    • 1 கிலோ எடை கொண்ட நாட்டுக்கோழி ரூ.500க்கு விற்பனையானது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரம் தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு திண்டுக்கல் மட்டுமின்றி திருச்சி, கரூர் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் அதிக அளவில் ஆடு, கோழிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று காலை 3 மணி முதல் சந்தை வியாபாரம் தொடங்கியது. வழக்கமாக வரும் வியாபாரிகளை விட நாமக்கல், சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் வியாபாரிகள் வந்திருந்தனர்.

    10 கிலோ எடை கொண்ட ஆட்டுக்குட்டி ரூ.8 ஆயிரம் முதல் விற்பனையானது. சந்தைக்கு அதிக அளவில் செம்மறி ஆடுகள் வந்திருந்த நிலையில் வெள்ளாடுகள் குறைந்த அளவே வந்தன. வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

    கடந்த வாரம் வரை ரூ.6500க்கு விற்கப்பட்ட ஆட்டுக்குட்டிகள் இன்று ரூ.8,000 மட்டும் அதற்கும் மேலும் விற்பனையாகியது. இதே போல் கிராமங்களில் தீபாவளி பண்டிகை சமயங்களில் வீடுகளுக்கு வரும் உறவினர்களுக்கு நாட்டுக்கோழி சமையல் சமைத்து விருந்தளிப்பது முக்கியமான ஒன்றாகும். இதனால் நாட்டுக் கோழிகளுக்கு நல்ல விலை கிடைத்தது.

    1 கிலோ எடை கொண்ட நாட்டுக்கோழி ரூ.500க்கு விற்பனையானது. கேட்ட விலைக்கு நாட்டுக்கோழிகள் விற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இன்று மட்டும் ரூ.3 கோடிக்கு மேல் ஆடு, கோழிகள் விற்பனையானது.

    அய்யலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு முதலே விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இன்று காலையிலும் மழை தொடர்ந்த நிலையிலும் ஆட்டுச்சந்தையில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. சந்தை அமைந்துள்ள பகுதியில் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாரம் தோறும் சந்தை நடைபெறும் நாளில் இது போன்ற சூழல் நிலவுவதால் இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

    ×