search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளப்பெருக்கு"

    • இரவு, பகல் என இரு வேளைகளிலும் கனமழை கொட்டி வருகிறது.
    • பந்தலூர் பகுதியே வெள்ளக்காடாக மாறியுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக இரவு, பகல் என இரு வேளைகளிலும் கனமழை கொட்டி வருகிறது.

    நேற்றும், பந்தலூர், நெலாக்கோட்டை, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, பிதர்காடு, பாட்டவயல், நெலாக்கோட்டை, கரியசோலை, சேரம்பாடி, எருமாடு மற்றும் கூடலூர், தேவர்சோலை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

    பந்தலூர் பஜாரில் சாலையிலும், கால்வாயிலும் வெள்ளம் ஆறுபோல் ஓடுகிறது. வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே சாலையில் உள்ள குழிகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியே தண்ணீர் நிரம்பி குளம் போல காட்சியளித்து கொண்டிருக்கிறது.

    மழை வெள்ளம் செல்வதற்கு வழி இல்லாததால், பந்தலூர் பஜார், கோழிக்கோடு-கூடலூர் செல்லும் சாலை, தாலுகாஅலுவலகம் செல்லும் சாலை, கூவமூலா செல்லும் சாலைகளிலும் வெள்ளம் தேங்கி நிற்கிறது.

    அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் பந்தலூர் பகுதியே வெள்ளக்காடாக மாறியுள்ளது.

    தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் பொன்னானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் 6 வீடுகள் சேதம் அடைந்தன. அங்கிருந்தவர்கள் மீட்கப்பட்டு, அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் தங்க வைக்கபட்டுள்ளனர்.

    இதேபோல் அம்பலமூலா சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வட்டகொல்லி, மணல்வயல் ஆதிவாசிகாலனியில் 4 குடும்பங்களை சேர்ந்த 17 பேர் அம்பலமூலா அரசு தொடக்கபள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளது.

    நெலாக்கோட்டை அருகே கூவச்சோலையில் பெய்த மழைக்கு அந்த பகுதியில் உள்ள 4 வீடுகள் இடிந்து விழுந்தன. அங்கிருந்த 10 குடும்பங்களை சேர்ந்த 31 பேர் நெலாக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

    சேரம்பாடி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண் 1, 2 பகுதிகளில் தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு பின்புறம் மண்சரிவு ஏற்பட்டதுடன் வீடுகளுக்குள் வெள்ளமும் புகுந்தது. இதனால் தொழிலாளர்கள் கடும் அவதியடைந்தனர். வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை நீடித்தது. இருவயல், குற்றிமுச்சு, கம்மாத்தி, புத்தூர் வயல் பகுதிகளில் விளைநிலங்கள் மற்றும் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது.

    இருவயல், புத்தூர் வயல் பகுதிகளில் 14 குடும்பத்தை சேர்ந்த 49 பேர் மீட்கப்பட்டு தொரப்பள்ளி அரசு பள்ளியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

    பந்தலூரில் உள்ள அத்திமாநகர், தொண்டியாளம் பகுதிகளில் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை யினர் உடனடியாக அகற்றி போக்கு வரத்தை சீர் செய்தனர்.

    தொடர் மழையால் முதுமலை பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள ஆற்றுப்பாலத்திற்கு மேல் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வனத்துறையினர், வருவாய்த்துறையினர் விரைந்து வந்து ஜே.சி.பி எந்திரம் மூலம் பாலத்திற்கு அடியில் தேங்கிய மரக்கட்டைகளை அகற்றினர். அதன்பின்னர் வாகனங்கள் அந்த வழியாக இயக்கப்பட்டன.

    கூடலூர் பகுதியில் பெய்து வரும் மழைக்கு பாடந்தொரையில் உள்ள பால் சொசைட்டியை சுற்றி மழைவெள்ளம் சூழ்ந்தது. அங்கு வந்தவர்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்று பால் கேனை வைத்து சென்றனர்.

    கூடலூர், பந்தலூர் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    • டி- 72 டேங்க் வாகனத்தில் ராணுவ வீரர்கள் பயிற்சி மேற்கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது.
    • ராணுவ வீரர்கள் உயிரிழந்தற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    லடாக் பகுதியில் உள்ள சீன எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் இராணுவ வீரர்கள் பயணித்த வாகனம் மூழ்கியதால் 5 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ஆற்றை கடக்க முயன்ற போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த தேசம் துணைநிற்கிறது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    அதிகாலை 1 மணியளவில் டி- 72 டேங்க் வாகனத்தில் ராணுவ வீரர்கள் பயிற்சி மேற்கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    • தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
    • நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் விடிய, விடிய கனமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து, மேற்கு தொடர்ச்சி மலையில் காணும் இடமெல்லாம் வெள்ளியை உருகிவிட்டது போல ரம்மியமாக காட்சியளிக்கிறது.

    ஓடைகளில் நீர்வரத்து, அதிகரித்ததால் நேற்று முன்தினமும் நொய்யல் ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக சிறுவாணி அணை நீர்பிடிப்பு பகுதியல் கன மழை கொட்டி தீர்த்தது.

    இதன் காரணமாக நொய்யல் ஆற்றுக்கு வரும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரித்தது. வினாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி தடுப்பணை நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேறி, பேரூர் குளம், குறிச்சி குளம், சொட்டையாண்டி குட்டை உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.

    இதனால் குனியமுத்தூர் தடுப்பணை, சுண்ணாம்பு காளவாய் தடுப்பணை, புட்டுவிக்கி தடுப்பணைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    மேலும் புதுக்குளம், உக்குளம், கோளராம்பதி, நரசாம்பதி, குமாரசாமி, செல்வ சிந்தாமணி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குளங்கள் வேகமாக நிரம்பி வருகிறது.

    குளத்திற்கு செல்லும் ராஜவாய்க்கால், தடுப்பணைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆபத்தை உணராமல் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிப்பது, செல்பி எடுப்பது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் எங்கு செல்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டியது அவசியமாகும். போலீசாரும், நீர்நிலை பகுதிகளில் ரோந்து சென்று, ஆபத்தை உணராமல் தண்ணீரில் இறங்குபவர்களை தடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக, இங்குள்ள தடுப்பணைகள், குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் அலர்ட் செய்யப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 471 மி.மீ மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    சின்கோனா 64

    சின்னக்கல்லார்-93

    வால்பாறை 72

    வால்பாறை தாலுகா-69

    சிறுவாணி அடிவாரம்-63

    • சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    கூடலூர்:

    தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது.

    இதேபோல் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியான இடுக்கி மாவட்டத்திற்கு ரெட்அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் அங்கு கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் 4 அடி உயர்ந்துள்ளது. குறிப்பாக இன்று ஒரேநாளில் 2 அடி உயர்ந்துள்ளது. நேற்று காலை 119.90 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 121.80 அடியாக உயர்ந்துள்ளது.

    நேற்று 3579 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 5389 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 1133 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2984 மி.கனஅடியாக உள்ளது.

    கூடுதல் தண்ணீர் திறப்பால் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் இயக்கப்பட்டு 102 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 48.29 அடியாக உள்ளது. வரத்து 695 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 1778 மி.கனஅடி.

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் மூல வைகை ஆறு உற்பத்தியாகிறது. போதிய அளவு மழை இல்லாத காரணத்தால் கடந்த சில நாட்களாக ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வந்தது.

    கடந்த வாரம் ஆறு நீரின்றி முழுமையாக வறண்டு போனது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக வெள்ளிமலை வனப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்ததன் காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆற்றில் லேசான நீர்வரத்து ஏற்பட்டது. இந்த நீர்வரத்து வருசநாடு கிராமத்துடன் நின்று போனது.

    இந்நிலையில் வெள்ளிமலை வனப்பகுதியில் கனமழை பெய்ததால் வைகை ஆற்றில் மீண்டும் நீர்வரத்து ஏற்பட்டது. இந்த தண்ணீர் அய்யனார்புரம் கிராமத்தை கடந்து சென்றது. தொடர்ந்து வெள்ளிமலை வனப்பகுதியில் மழை பெய்து வருவதால் ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    கனமழை காரணமாக சின்னசுருளி அருவியின் நீர்பிடிப்பு பகுதியான மேகமலை வனப்பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதன்காரணமாக சின்னசுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் மழை தொடர்ந்து பெய்வதால் சின்னசுருளி அருவியில் எந்த நேரத்திலும் வெள்ளம் ஏற்படலாம் என்ற நிலை உள்ளதால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மழை குறைந்து அருவியில் சீரான நிலை ஏற்படும் வரையில் இந்த தடை உத்தரவு தொடரும் என்று மேகமலை வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சின்னசுருளி அருவியில் வரும் நீர்வரத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இதேபோல் கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியிலும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    • வெள்ளப்பெருக்கின் காரணமாக தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.
    • சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. இந்த நிலையில் நேற்று காலையிலும் சாரல் மழை பெய்து வந்த நிலையில் மதியம் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இதையடுத்து மலையோர கிராமங்களில் மக்கள் உஷார் படுத்தப்பட்டனர். பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மலையோர பகுதியான குற்றியாறு, மோதிரமலை, தச்ச மலை பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

    இதனால் அங்குள்ள தரைபாலத்தை மூழ்கடித்து தண்ணீர் சென்றது. இதனால் 12 மலையோர கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். காளிகேசம் பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் டெம்போவில் வந்த தொழிலாளர்களை காட்டாற்று வெள்ளம் இழுத்துச்சென்றது. டெம்போவில் சிக்கி தவித்த தொழிலாளர்களை வனத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் கனமழை கொட்டியதையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையில் இருந்து நேற்று மாலை உபரிநீர் திறக்கப்பட்டது.

    இரு அணைகளில் இருந்தும் 4,008 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் குழித்துறை ஆறு, கோதை ஆறு, வள்ளியாறு, பரளி ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. குழித்துறை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.

    கோதை ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. திற்பரப்பு அருவியை மூழ்கடித்து தண்ணீர் கொட்டுவதால் அங்குள்ள சிறுவர் பூங்காவை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால் அருவியல் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 45.70 அடியாக இருந்தது.

    அணைக்கு 3,511 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து மதகுகள் வழியாக 636 கன அடி தண்ணீரும், உபரிநீராக 3,008 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.27 அடியாக உயர்ந்தது. அணைக்கு 2,123 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையிலிருந்து 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முக்கடல் அணை நீர்மட்டம் 20.90 அடியாக உயர்ந்துள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் அணைகளை கண்காணித்து வருகிறார்கள்.

    அணைகளுக்கு வரும் தண்ணீருக்கு ஏற்ப தண்ணீரை திறந்துவிட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் ஆற்றின் கரையோர பகுதி மக்கள் மறுஅறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் நேற்றும் 4 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 28.8,

    பெருஞ்சாணி 32.4,

    சிற்றார் 1-16.4,

    சிற்றார் 2-18.2,

    கன்னிமார் 6.2,

    கொட்டாரம் 3,

    மயிலாடி 4.8,

    நாகர்கோவில் 5.4,

    பூதப்பாண்டி 12.4,

    முக்கடல் 10.4,

    பாலமோர் 52.4,

    தக்கலை 10,

    குளச்சல் 5,

    இரணியல் 6,

    அடையாமடை 21,

    குருந்தன்கோடு 3.8,

    கோழிப்போர்விளை 12.4,

    மாம்பழத்துறையாறு 6.4,

    களியல் 18.6,

    குழித்துறை 12.4,

    புத்தன் அணை 29.2,

    சுருளோடு 6.2,

    ஆணைக்கிடங்கு 5,

    திற்பரப்பு 14.8,

    முள்ளங்கினாவிளை 14.8.

    • ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்ததன் காரணமாக ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    பின்பு வெள்ளப்பெருக்கு குறைந்ததால் மாலையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் மீண்டும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் இரவில் பெய்த மழையின் காரண மாக ஐந்தருவி, மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அபாய ஒலி எழுப்பப்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

    இன்று காலையில் ஐந்தரு வியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அங்கும் பழைய குற்றால அருவியிலும் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    இந்நிலையில் மெயின் அருவியில் தொடர்ந்து பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி குளிக்கத் தடை விதித்துள்ளனர்.

    காலை முதல் குற்றாலம், செங்கோட்டை, கட்டளை குடியிருப்பு, குத்துக்கல் வலசை, இலஞ்சி, வல்லம் உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

    மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் அருவிகளில் குளிப்பதற்கு காலை முதலே சுற்றுலாப் பயணிகள் குவிந்த நிலையில் மெயின் அருவியில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அருவி கரையில் நின்று தண்ணீர் விழுவதை பார்த்து சுற்றுலாப் பயணிகள் ரசித்து செல்கின்றனர்.

    மெயின் அருவியில் தண்ணீர் வரத்து சற்று குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிப்ப தற்கு அனுமதி வழங்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • கொடிவேரி தடுப்பணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
    • கொடிவேரி தடுப்பணைக்கு செல்லும் நுழைவுவாயில் அடைக்கப்பட்டது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணையில் பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கிறது.

    கொடிவேரி தடுப்பணையில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் பலர் வந்து அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து செல்கிறார்கள். இதனால் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட அதிகளவில் கொடிவேரி அணைக்கு வருவார்கள்.

    இந்த நிலையில் தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் கொடிவேரி தடுப்பணைக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை கொட்டி வருகிறது. குறிப்பாக மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான கோபிசெட்டிபாளையம், நம்பியூர், சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டி வருகிறது.

    மேலும் கொடிவேரி தடுப்பணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கொடிவேரி தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இதேபோல் பவானி ஆற்று பகுதிகளிலும் தொடர்ந்து மழை கொட்டுகிறது. இதனால் கொடிவேரி தடுப்பணைக்கு கடந்த 2 நாட்களாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இதனால் கொடிவேரி தடுப்பணைக்கு வழக்கத்தை விட அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக கொடிவேரி தடுப்பணையில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    மேலும் சுற்றுலா பயணிகள் குளிக்கும் பகுதியில் அதிகளவில் தண்ணீர் கொட்டி செல்கிறது. இதனால் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இந்த நிலையில் தடுப்பணையில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால் பொதுமக்களின் பாதுகாப்பை கருதி கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

    இதனால் கொடிவேரி தடுப்பணைக்கு செல்லும் நுழைவுவாயில் அடைக்கப்பட்டது. மேலும் தடுப்பணைக்கு செல்லும் வழியிலேயே தடுப்புகள் வைக்கப்பட்டு எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டு உள்ளது. அதில் தடுப்பணையில் அதிகளவில் தண்ணீர் செல்வதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் கொடிவேரிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என எழுதப்பட்டு உள்ளது.

    இதையொட்டி அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அந்த வழியாக வருபவர்களை அறிவுரை கூறி அனுப்பி வைத்து வருகிறார்கள்.

    இதை பற்றி தகவல் அறியாததால் இன்று காலை பொதுமக்கள் பலர் வந்திருந்திருந்தனர். தடை விதிக்கப்பட்டு தடுப்பணைக்கு செல்லும் வழி அடைக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் மற்றும் அணை ஊழியர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

    • ஆப்கானிஸ்தானில் வழக்கத்திற்கு மாறாக கடுமையான பருவ மழை பெய்து வருகிறது.
    • வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் முற்றிலுமாக சேதம்.

    ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, ஏற்கனவே நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், நாட்டின் வடக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் பலி எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.

    ஆப்கானிஸ்தானில் வழக்கத்திற்கு மாறாக கடுமையான பருவ மழை பெய்து வருகிறது.

    வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஃபர்யாப் மாகாணத்தில் நேற்று பெய்த கனமழையால் அங்குள்ள மூன்று மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இதனால், வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் முற்றிலுமாக சேதமடைந்ததாக மாகாண தகவல் இயக்குனர் ஷம்சுதீன் முகமதி கூறினார்.

    இதேபோல், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மேற்கு மாகாணமான கோரில், கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

    • ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • கடந்த வாரம், கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கிராமங்களில் 315 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மத்திய ஆப்கானிஸ்தானில் உள்ள கோர் மாகாணப் பகுதிகளில் இதுவரை கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வெள்ளப்பெருக்கால் சாலைப் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் காயமடைந்தவர்களளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கோர் மாகாணத்தின் நகர்ப்பகுதிகளில் சுமார் 2,000 வீடுகள் முற்றிலுமாக அழிந்துவிட்டதாகவும் 2000க்கும் மேற்பட்ட கடைகள் தண்ணீருக்கு அடியில் மூழ்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    முன்னதாக விமானப்படை ஹெலிகாப்டர் மூலம், கோர் மாகாண ஆற்றில் விழுந்தவர்களின் உடல்களை மீட்கும் முயற்சியின் போது தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக விபத்துக்குள்ளானது, ஒருவர் கொல்லப்பட்டார். கடந்த வாரம், கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கிராமங்களில் 315 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    ஆப்கானிஸ்தானில் வழக்கத்துக்கு மாறாக பெய்து வரும் கனமழைக்கு காலநிலை மாற்றமே காரணம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக ஆப்கனிஸ்தானை ஐநா வரையறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 




     


    • கனமழையால் மலையை ஒட்டியுள்ள நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு.
    • வெள்ளப்பெருக்கால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த மக்கள் அலரியடித்துக் கொண்டு ஓட்டம்.

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக மலையை ஒட்டியுள்ள நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வரும் குற்றால அருவிகளான பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    அங்கு ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த மக்கள் அலரியடித்துக் கொண்டு ஓடினர்.

    இந்நிலையில், நெல்லையை சேர்ந்த அஸ்வின் (17) தனது குடும்பத்தாருடன் பழைய குற்றால அருவியில் குளிக்க வந்த நிலையில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வெள்ளத்தில் சிக்கி மாயமானான்.

    தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

    கன மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நெல்லை, தென்காசி, விருதுநகர் போன்ற பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
    • ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு இலங்கை கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    தென்மண்டல பகுதிகளான, நெல்லை, தென்காசி, விருதுநகர் போன்ற பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக மலையை ஒட்டியுள்ள நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வரும் குற்றால அருவிகளான பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    இந்த நிலையில் நெல்லையை சேர்ந்த அஸ்வின் (17) தனது குடும்பத்தாருடன் பழைய குற்றால அருவியில் குளிக்க வந்த நிலையில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வெள்ளத்தில் சிக்கி சிறுவன் மாயம்.

    சிறுவனை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    கன மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • கனமழை, நிலநடுக்கம், வறட்சி என மாறிமாறி பேரிடர்கள் ஏற்படுகின்றன.
    • ஆப்கானிஸ்தானின் பாக்லான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    காபூல்:

    காலநிலை மாற்றம் என்பது தற்போது உலகின் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இதனால் கனமழை, நிலநடுக்கம், வறட்சி என மாறிமாறி பேரிடர்கள் ஏற்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளுள் ஒன்று ஆப்கானிஸ்தான்.

    அந்தவகையில் ஆப்கானிஸ்தானின் பாக்லான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் பலர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். இந்த வெள்ளப்பெருக்கால் அங்கு சுமார் 40 ஆயிரம் குழந்தைகள் வீடுகளை இழந்து தவிப்பதாகவும், இதனால் அவர்களது கல்வி பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் அங்குள்ள ஊடகங்கள் கூறுகின்றன.

    ×