search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊக்கத்தொகை"

    • ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தி வருகிற 11-ந்தேதி பால் விநியோக நிறுத்த போராட்டம் நடத்தப்படும்.
    • மதுரை மாவட்ட உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    மதுரை

    தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் மதுரை மாவட்ட கிளை சார்பில் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் பொது மேலாளர் மற்றும் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு கடந்த 20 .10. 2022 அன்று சென்னை கோட்டையில் பால்வளத்துறை அமைச்சர் தலைமையில் சங்கப் பிரதிகளை அழைத்து பால் விலை உயர்வு சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்தியது .பின்னர் விலை அறிவிக்கும் போது சங்கப்பிரதிநிதிகளை கலந்து ஆலோசிக்காமல் மிகவும் சொற்ப விலையான லிட்டருக்கு ரூ.3 மட்டுமே விலை உயர்வு செய்து அறிவித்தார்கள் .

    மேற்கண்ட விலை மூலம் உற்பத்தியாளர்களுக்கு ரூ.31 வரை பால்பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. ஆனால் தனியார் பால் நிறுவனங்களில் ரூ.38 முதல் 46 வரை கொடுத்து பால் கொள்முதல் செய்கிறார்கள் .தனியார் பால் நிறுவனங்கள் பால் உற்பத்தியாளர்களை நேரடியாக சந்தித்து பாலை கொள்முதல் செய்கிறார்கள் .தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையாக விலை கொடுக்க முடியாததால் பிரதம சங்கங்களால் அதிக அளவில் பால் கொள்முதல் செய்து ஒன்றியத்திற்கு அனுப்ப முடியவில்லை .இதனால் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் படிப்படியாக மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.

    எனவே மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மூலம் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு லிட்டருக்கு ரூ.7 ஊக்கதொகையாக உடனடியாக வழங்கினால் மட்டுமே பால் உற்பத்தியை அதிகரிக்க முடியும் . வருகிற 10-ந் தேதிக்குள் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் 11-ந் தேதி முதல் மதுரை மாவட்டத்தை தொடர்ந்து ஒன்றியத்துக்கு பால் வழங்குவது நிறுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தொடர்பாக தங்கு நிர்வாகிகள் வெண்மணி சந்திரன்,சுப்பிரமணி ஆகியோர் கூறும்போது, மாட்டு தீவனங்களின் விலை அதிகரித்து விட்டது. இந்த நிலையில் ஆவின் நிர்வாகம் லிட்டருக்கு ரூ .42 தருவதாக கூறிவிட்டு ரூ. 32 தான் தருகிறது. எனவே ஊக்க தொகையாக லிட்டர் ரூ.7 தர வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 11-ந் தேதி பால் விநியோக நிறுத்த போராட்டம் நடத்த உள்ளோம் என்றனர்.

    • 606 கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
    • இதனை சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்கல்வி பயின்று வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் 2-ம் கட்ட திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அரங்கில் கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் உயர்கல்வி உறுதி திட்டத்தை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்தார்.

    அவர் பேசுகையில், அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயின்று வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் 2-ம் கட்ட திட்டத்தின் கீழ் சிவ கங்கை மாவட்டத்தில் முதற் கட்டமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 42 கல்லூரிகளில் பயின்று வரும் 1,759 மாணவிகளுக்கு, அவர்களது வங்கிக்கணக்கில் தலா ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு, அப்பணத்தை எடுப்பதற்கான வங்கி ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், மாவட்ட சமூக நல அலுவலர் அன்பு குளோரியா, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன், சிவகங்கை வட்டாட்சியர் பாலகுரு, வங்கிகளின் முதன்மை மேலாளர்கள் விமல்காந்த், (இந்தியன் வங்கி), ராமகிருஷ்ணன் (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா) மற்றும் ஆசிரியர்கள், மாணவியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 2022-2023 -ம் ஆண்டு முதல் முன்னாள் படைவீரர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் சைனிக் பள்ளியில் பயில்வதற்கு ஆண்டிற்கு ரூ.25,000 ஊக்கத்தொகையாக 23.09.2022 முதல் வழங்கிட முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
    • கல்வியுதவித் தொகை வழங்கிட தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டு தமிழ்நாட்டில் வசிக்கும் அலுவலர் தகுதிக்கு கீழ் உள்ள முன்னாள் படைவீரர்களாக இருக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    தொகுப்பு நிதியின் மாநில மேலாண்மை குழுக் கூட்டத்தில் 2022-2023 -ம் ஆண்டு முதல் முன்னாள் படைவீரர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் சைனிக் பள்ளியில் பயில்வதற்கு ஆண்டிற்கு ரூ.25,000 ஊக்கத்தொகையாக 23.09.2022 முதல் வழங்கிட முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் நடப்பு கல்வியாண்டு 2022-2023 முதல் முன்னாள் படைவீரர் சிறார்களுக்கு மத்திய அரசின் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், என்.எல்.எஸ் போன்ற நிறுவனங்களில் பயில்வதை ஊக்குவிக்கும் பொருட்டு 23.09.2022 முதல் உயர் கல்வி பயில்வதற்கு ஊக்கத் தொகையாக ஆண்டிற்கு ரூ.50,000 வழங்கிட குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    கல்வியுதவித் தொகை வழங்கிட தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டு தமிழ்நாட்டில் வசிக்கும் அலுவலர் தகுதிக்கு கீழ் உள்ள முன்னாள் படைவீரர்களாக இருக்க வேண்டும். உயர் கல்வியில் ஊக்கத்தொகை பெறுவதற்கு தகுதியுள்ள படிப்புகளுக்கு சேரும்போது முன்னாள் படைவீரரின் மகன்களுக்கு 25 வயதிற்குள்ளும் மகள்களுக்கு திருமணம் ஆகும் வரையும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

    முன்னாள் படைவீரரின் மனைவி மற்றும் கைம்பெண்க–ளுக்கு வயது வரம்பு கிடையாது. இவ்வுதவித்தொகை 2022-2023-ஆம் கல்வி ஆண்டு முதல் விண்ணப்பித்து பயனடையலாம்.மேலும் விவரங்களுக்கு சேலம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர், அதில் தெரிவித்துள்ளார்.

    • ரூ.25 லட்சத்துக்கான சிறப்பு ஊக்கத் தொகைக்கான ஆணையை பள்ளிக் கல்வி த்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்.
    • முதல் முயற்சியிலேயே மருத்துக் கல்லூரியில் இடம் பெற்றதையொட்டி இரு பள்ளிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சஹானா, ஆயக்காரன்புலம் நடேசனாா் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா் மாதவன் ஆகியோா் முதல் முயற்சியிலேயே மருத்துக் கல்லூரியில் இடம் பெற்றதையொட்டி இரு பள்ளிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    இதனை முன்னிட்டு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் அந்த பள்ளிகளின் பராமரிப்பு செலவுக்காக தலா ரூ.25 லட்சத்துக்கான சிறப்பு ஊக்கத் தொகைக்கான ஆணையை பள்ளிக் கல்வி த்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யா மொழி வழங்கினாா்.

    இதனை அப்பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் ஆயக்காரன்புலம் பழனியப்பன், தாணிக்கோட்டகம் தமிழ்ச்செல்வன் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

    • கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.
    • ஆசிரியர்கள் கலந்துகொண்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வு கையேடு வழங்கினர்.

    நாகப்பட்டினம்:

    மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்ட விழிப்புணர்வு கையேடு வழங்கும் நிகழ்வு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.

    இதை அடுத்து திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்த அம்மையார் நினைவு விழிப்புணர்வு கையேடு கொடுக்கப்பட்டது.

    இந்நிகழ்வில் கல்லூரி யின் தாளாளர் முனைவர்.வெங்கட்ராஜுலு, செயலர் சுந்தர்ராஜ், முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த், இயக்குனர் விஜயசுந்தரம், கல்லூரி முதல்வர் முனைவர் சிவகுருநாதன், மற்றும் துணை முதல்வர் துறை தலைவர்கள் நிர்வாக அலுவலர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு கையேடு வழங்கினர்.

    • பொதுமக்கள் விழிப்புணர்வு மேம்பட தலைமை மருத்துவர்களுக்கு அறிவுரைகள் வழங்கபட்டுள்ளது.
    • குடும்ப நல கருத்தடை சிகிச்சை ஏற்றுக்கொள்பருக்கு ரூ.1100 ஊக்கத்தொகை மற்றும் பரிசு பொருட்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நவீன வாசக்டமி என்ற ஆண்களுக்கான நிரந்தர குடும்பநல கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு ரதத்தினை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது :-

    தஞ்சாவூர் மாவட்ட குடும்ப நலச் சார்பில் வாசக்டமி இரு வார விழா டிசம்பர் 4-ம் தேதி வரை அனுசரிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு நவீன வாசக்டமி என்ற ஆண்களுக்கான நிரந்தர குடும்பநல கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு ரதம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

    இரு வார விழாவின் நோக்கமானது முதல் வாரத்தில் விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்துவதற்காக, மருத்துவக் கல்லூரி மாவட்ட தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், வட்டார அளவிளான அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்கள், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் விழிப்புணர்வு கையேடு மற்றும் துண்டு பிரசாரம் செய்ய அனைத்து நிலையங்களில் உள்ள களப்பணியாளர்கள் கொண்டு பொதுமக்கள் விழிப்புணர்வு மேம்பட தலைமை மருத்துவர்களுக்கு அறிவுரைகள் வழங்கபட்டு உள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் முகாம் ஏற்பாடு செய்து அதிக எண்ணிக்கையில் தகுதியுள்ள தம்பதியர்களில் ஆண்கள் பங்கேற்று பயனடைய தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் என்.எஸ்.வி. சிறப்பு முகாம் தொடக்கமாக வரும் 28-ந் தேதி தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார மருத்துவனையிலும், 30-ந் தேதி கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையிலும், 2.11.2022 அன்று பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் ஏற்பாடு செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசாரம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் ஆண்களுக்கு குடும்ப நல கருத்தடை சிகிச்சை ஏற்றுக்கொள்பருக்கு ரூ.1100- ம் ஊக்கத்தொகை மற்றும் பரிசு பொருட்களும், அழைத்து வருபவர்களுக்கு ஊக்கத் தொகை ரூ. 200-ம் தமிழ்நாடு அரசால் வழங்கபடுகிறது.எளிய பாதுகாப்பான வாசக்டமி மூன்றே நிமிடங்களில் கத்தியின்றி, தையல் இன்றி செய்யப்படுகிறது.

    ஆனந்த வாழ்க்கை பெற தடையில்லை. பக்க விளைவுகள் எதுவும் இல்லை. கடின உழைப்பினை மேற்கொள்ளலாம். மயக்க மருந்து அளிபபதில்லை. மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை. அளவான குடும்பத்தை அமைப்பது இந்த சிகிச்சை முறையின் சிறப்பாகும்.

    இந்த நவீன ஆண் கருத்தடை சிகிச்சை நன்கு பயிற்சி பெற்ற சிறப்பு மருத்துவர்களால் அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் செய்யப்படுகிறது. மாதந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தியும், நவீன வாசக்டமி கருத்தடை சிகிச்சை செய்யப்படுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட குடும்ப நல துணை இயக்குனர் டாக்டர் மலர்விழி, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் கோடீஸ்வரன், மாவட்ட புள்ளியியல் உதவியாளர் செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பூச்சி மற்றும் நோய் தாக்குதல் மற்றும் அதன் மேலாண்மை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
    • நெல் பயிரில் மஞ்சள் நோய் மற்றும் அதன் மேலாண்மை பற்றி எடுத்துரைத்தார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் செயல்படும் அட்மா திட்டத்தில் எழிலூர் கிராமத்தில் பாரம்பரிய நெல் ரகம் பற்றிய பயிற்சி நடைபெற்றது.

    பயிற்சியில் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் வேளாண் அறிவியல் நிலைய செயல்பாடுகள் பற்றியும், பாரம்பரிய நெல் ரகம் அதன் மதிப்பு கூட்டுதல் பற்றியும், தற்போது நிலவி வரும் காலநிலையில் நெல் பயிரில் ஏற்படக்கூடிய பூச்சி மற்றும் நோய் தாக்குதல் பற்றியும் மற்றும் அதன் மேலாண்மை பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    உதவி பேராசிரியர் பெரியார் ராமசாமி பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் மண்வள மேலாண்மை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் இயற்கை பூச்சி விரட்டிகள் பற்றியும் நெல் பயிரில் மஞ்சள் நோய் மற்றும் அதன் மேலாண்மை பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    வட்டார தொழில்நுட்ப மேலாளர் வேம்பு ராஜலட்சுமி அனைவரையும் வரவேற்றார். உதவி தொழில்நுட்ப மேலாளர் கார்த்திக் பிரதம மந்திரியின் கவுரவ ஊக்கத்தொகை பெரும் விவசாயிகள் தங்களது ஆதார் எண், கைபேசி எண் இ.கே.ஒய்.சி. இணைக்கவும், மற்றும் உழவன் செயலியின் பயன்பாடுகள் குறித்து பேசினார்.

    முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் ஸ்ரீதரன் நன்றி கூறினார். பயிற்சியில் எழிலூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் இளமதி சிவகுமார் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் மற்றும் முன்னோடி விவசாயிகள் மணிமொழி, சுபத்ரா என 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை லட்சக்கணக்கான மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.
    • அரசு சார்பில் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 1500-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள் உள்ளன. இங்கு தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை லட்சக்கணக்கான மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் மாணவ- மாணவிகள் பள்ளி இடைநிற்றலை தவிர்க்க, அரசு சார்பில் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 10, பிளஸ்-1 வகுப்புகளுக்கு தலா ரூ.1500, பிளஸ்-2 வகுப்புக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    அதனால் கடந்த கல்வி ஆண்டில் 10, பிளஸ்-1, பிளஸ்-2 படித்த மாணவ- மாணவிகளின் வங்கி கணக்கு விபரங்களை, எமிஸ் தளத்தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. கடந்த மாதத்துடன் அதற்கான கெடு முடிந்த பின்பும் பல மாவட்டங்களில் இந்த விபரங்கள் முழுமையாக பதிவு செய்யப்படாமல் உள்ளன. இதனால் அந்த விபரங்களை உடனே பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர்- பழங்குடி மாணவர்களுக்கு ரூ. 2 கோடி ஊக்கத்தொகை என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி சேர்ந்த 12,420 மாணவியர்களுக்கு தலா ரூ.500வீதம் 2.07 இலட்சம் ஊக்கத்தொகையாகவும், 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 43.64 இலட்சம் ஊக்கத்தொகையாகவும், மாணவியர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.43.64 இலட்சம் ஊக்கத்தொகையாகவும், 7 முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் 7333 மாணவியர்களுக்கு தலா ரூ.1,500 வீதம் ரூ.1,09,99,500/- மதிப்பீட்டில் ஊக்கத்தொகையாகவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதார குறைவான பணிசெய்யும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் தூய்மைப்பணியாளர்களாக பணிபுரிவோரின் குழந்தைகள் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பல்வேறு வகையான பள்ளிகளில் சேர்ந்து விடுதியில் தங்கி மற்றும் விடுதியில் தங்காது கல்வி பயிலும் 454 மாணாக்கர்களுக்கு 2021-2022 ஆம் கல்வியாண்டில் ரூ.13.67 லட்சம் உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. உயர்கல்வி ஊக்கத்தொகையாக பட்டப்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் பயிலும் 995 மாணாக்கர்களுக்கு 2021-2022 ஆம் கல்வியாண்டில் ரூ.78.40 லட்சம் உதவித்தொகையாவும் வழங்கப்பட்டுள்ளது.

    ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 60 ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.1,20,000 மதிப்பீட்டிலான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.மேலும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 125 ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 60 ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு ரூ.1.85 லட்சம் மதிப்பீட்டிலான முதலுதவிப்பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. அழிவின் விளிம்பிலுள்ள பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பழங்குடியின மக்கள் 10 பேருக்கு ரூ.3,50,000 மதிப்பீட்டில் இலவச கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர்களில் 4 பேருக்கு ரூ.68,000/-மதிப்பீட்டில் ஈமச்சடங்கு/இயற்கை மரண உதவித்தொகை வழங்கப் பட்டுள்ளது. பழங்குடியின இளைஞர்கள் 25 பேருக்கு ரூ.1.50 லட்சம் செலவில் இலவச ஓட்டுநர் பயிற்சி அளித்து ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியின விவசாயிகள் 5 நபர்களுக்கு ரூ. 9,00,000/-மதிப்பீட்டிலான இலவச பவர் டிரில்லர் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் இனத்தை சேர்ந்த 17 நபர்களுக்கு தலா ரூ.3.00 இலட்சம் வீதம் ரூ.51,00,000/-மதிப்பீட்டிலான கான்கிரீட் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

    • தொண்டியில் அரிய வகை உயிரினத்தை பாதுகாத்த 2 மீனவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
    • இந்த மீனவர்கள் முதன்முறையாக கடல் பசுவை பார்த்துள்ளனர் என்பதும் பார்த்த உடனே கடலில் உயிருடன் விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் கடந்த சில மாதங்களுக்கு முன் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவ சகோதார்களாகிய துளசிராமன், ஹரிகரசுதன் ஆகிய மீனவர்களுடைய வலையில் அரிய வகை கடல் உயிரினமான கடல் பசு சிக்கியது. கடல் புற்களை மட்டுமே உணவாகக் கொண்டு கடலில் உயிர்வாழும் இந்த அரிய வகை உயிரி னத்தை பாதுகாக்கும் வகையில் தங்களது மீன் பிடி வலைகளை அறுத்து கடல் பசுக்களை கடலில் விட்டனர்.

    இதை படம் பிடித்து தொண்டியில் உள்ள கடல் பசு பாதுகாப்பு அமைப்பினர் மன்னார் வளைகுடா, தலைமன்னார், கட்சத்தீவு, குஜராத் மற்றும் அந்தமான் தீவுகளில் கடல் பசு ஜான்சன் நேரு பிரபாகரன் ஆகிய கடல் பசு ஆராய்ச்சியாளர்களின் தலைமையில் இயங்கும் தொண்டி பகுதியில் உள்ள சின்மயா கானேகர், ஸ்வேதா அய்யர், பிரியம்பதா ரௌத்ராய், பிராட்ஜி ஹட்கர் ஆகியோரது மேற்பார்வையில் இயங்கி வரும் கடல் பசு பாதுகாப்பு அமைப்புக்கு அனுப்பி வைத்தனர்.

    அதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டரால் கடல்பசுவை பாதுகாத்த மீனர்கள் துளசிராமன், ஹரிகரசுதனுக்கு தலா 10 ஆயிரம்பரிசுத்தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    இந்த மீனவர்கள் முதன்முறையாக கடல் பசுவை பார்த்துள்ளனர் என்பதும் பார்த்த உடனே கடலில் உயிருடன் விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
    • முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சேதுராம லிங்கம் தலைமை தாங்கினார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2021-22 கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 2 மற்றும் 3-ம் மதிப்பெண்களை பெற்ற மாணவ-மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

    முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சேதுராம லிங்கம் தலைமை தாங்கி னார். பள்ளி ஆசிரியர் செல்வத்துரை முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் குகன் வரவேற்று பேசினார்.

    12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற பாலன், 2-ம் இடம் பெற்ற சிபிராஜ், மாணவர்களான லண்டன் மருத்துவர் சரவண வேல், வடிவேலன், சேவுக மூர்த்தி, பொன் சரவணன், பாலசீனிவாசன் ஆகியோர் வழங்கினர்.

    முன்னாள் மாணவர்கள் சங்கம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு பல வருடங்களாக முன்னாள் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் இந்தப் பள்ளியில் படித்து தொழில் அதிபராக உள்ள கணேசன், ஆசிரியர் முத்துப்பாண்டி, தென்றல், பாலசுப்பிரமணியம், முத்து பிரகாஷ், பிரவீன், குமார், மூர்த்தி, தனசேகரன் உள்ளிட்டோரின் பெரும் முயற்சிக்கு இடையே இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

    முடிவில் தனசேகரன் நன்றி கூறினார்.

    • பிரதம மந்திரி கிசான் கவுரவ நிதி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் நிலமுள்ள தகுதியுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ 2 ஆயிரம் வீதம், ஆண்டிற்கு ரூ. 6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் மற்றும் செலவினங்களை மேற்கொள்ள மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
    • வரும் 31-ம் தேதிக்குள் கைவிரல் பதிவேற்றம் செய்து புதுப்பித்தால் மட்டுமே விவசாயிகளுக்கு தொடர்ந்து ஊக்கத்தொகை கிடைக்கும்.

    பரமத்தி வேலூர்:

    கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    பிரதம மந்திரி கிசான் கவுரவ நிதி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் நிலமுள்ள தகுதியுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ 2 ஆயிரம் வீதம், ஆண்டிற்கு ரூ. 6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் மற்றும் செலவினங்களை மேற்கொள்ள மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இத்திட்டத்தில் விவசாயிகள் இணைந்த தேதியின் அடிப்படையில் 11 தவணைகள் தொகை விடுவிக்கப்பட்டு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

    12-வது தவணை தொகை விடுவிப்பிற்கு ஆதார் விபரங்கள் சரிபார்ப்பு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பிரதம மந்திரி கிசான் கவுரவ ஊக்கத்தொகை பெறுகின்ற கபிலர்மலை வட்டார விவசாயிகள் அருகிலுள்ள இ- சேவை மையங்களையோ, தபால் அலுவலகங்களையோ அணுகி வரும் 31-ம் தேதிக்குள் ஆதார் அட்டை கொண்டு தங்களுடைய இருப்பை கைவிரல் ரேகையை பதிவு செய்வதன் வழியாக புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு வரும் 31-ம் தேதிக்குள் கைவிரல் பதிவேற்றம் செய்து புதுப்பித்தால் மட்டுமே விவசாயிகளுக்கு தொடர்ந்து ஊக்கத்தொகை கிடைக்கும். எனவே கபிலர்மலை வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் உடனடியாக ஆதார் அட்டை மூலம் புதுப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×