என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிரதமர் மோடி."
- மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை பரவத் தொடங்கியுள்ளது.
- ஆளும் பாஜக மணிப்பூர் பற்றி எரிவதை விரும்புவதாக தெரிகிறது என காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
உங்களுடைய இரட்டை இஞ்சின் ஆட்சியில் மணிப்பூர் பாதுகாப்பாக இல்லை. கடந்த 2023 மே முதல் அங்கு கற்பனைக்கு எட்டாத வலிகள், பிரிவுகள் மற்றும் கொதித்தெழும் வன்முறைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அது அங்குள்ள மக்களின் எதிர்காலத்தை அழித்துவிட்டது.
பா.ஜ.க. வேண்டுமென்றே மணிப்பூர் பற்றி எரிவதை விரும்புகிறது. ஏனெனில் அது அவர்களின் பிரிவினைவாத வெறுப்பு அரசியலுக்கு உதவுகிறது.
கலவரத்தால் பாதிக்கப்படும் பட்டியலில் பல மாவட்டங்கள் புதிதாக இணைகின்றன. வன்முறைத் தீ அண்டையில் உள்ள வடகிழக்கு மாநிலங்களுக்கும் பரவுகிறது.
அழகான எல்லை மாநிலமான மணிப்பூரை பிரதமர் மோடி கைவிட்டு விட்டார். எதிர்காலத்தில் மோடி மணிப்பூருக்குச் சென்றாலும், துயரமான நேரத்தில் பிரச்சினைக்கு தீர்வு காண தங்கள் மாநிலத்தில் காலடி எடுத்து வைக்காத மோடியை அந்த மாநில மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என பதிவிட்டுள்ளார்.
- பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டதால், அவர் இருந்த பகுதியில் வான்பகுதியை பயன்படுத்ததடை.
- ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரம் தாமதம் ஆனது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் வருகிற 20-ந்தேதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக பா.ஜ.க. தலைவர்கள் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்று பிரதமர் மோடி ஜார்க்கண்ட் சென்றிருந்தார். அவருடைய ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அப்போது ராகுல் காந்தியும் ஜார்க்கண்டில் இருந்தார். இதனால் பிரதமர் மோடி இருக்கும் வான்பகுதிகளில் பறக்க தடைவிதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
இன்று அமித் ஷாவிற்காக நான் 20 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது என மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்திள்ளார்.
இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-
நேற்று பிரதமர் மோடி அவருடைய விமானத்தில் இருந்து கொண்டிருக்கும்போது, ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் வேண்டுமேன்றே இரண்டு மணி நேரம் காக்க வைப்பட்டது. இன்று அமித் ஷா ஜார்க்கண்ட் வந்திறங்கியதால் என்னுடைய ஹெலிகாப்டர் இரண்டு மணி நேரம் தாமதம் ஆனது. அவர் செல்லக்கூடிய வழி வேறு. நான் செல்லக்கூடிய வழி வேறு.
ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவர். கேபினட் மந்திரிகளுக்கு இணையான ரேங்க் கொண்டவர். நானும் அதேபோல்தான். ஆனால் விமான நிலையத்தின் ஒதுக்கப்பட்ட ஓய்வறை பிரதமர் மோடிக்காக என அதிகாரிகள் தெரிவித்தனர். பிரதமர் மோடிக்காக கழிவறையை கூட ஒதுக்க முடியுமா? என கேள்வி கேட்க விரும்புகிறேன்.
இவ்வாறு மல்லியார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
- அரசியலமைப்பை படித்திருந்தால் இப்படி நடந்துகொள்ள மாட்டார்.
- பெண்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றார்.
மும்பை:
மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நந்தூர்பார் பகுதியில் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்க்கையில் இந்திய அரசியலமைப்பச் சட்டத்தை படித்திருக்க மாட்டார். அதனால் அவருக்கு அரசியலமைப்புப் புத்தகம் வெற்று புத்தகமாகத் தெரிகிறது.
அரசியலமைப்புப் புத்தகம் வெறுமையானது அல்ல. ஆயிரம் ஆண்டுகால சிந்தனைகளை உள்ளடக்கியுள்ளது. இதில் இந்தியாவின் ஆன்மாவும், பிர்சா முண்டா, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், மகாத்மா காந்தி போன்ற தேசிய தலைவர்கள் முன்வைத்த கொள்கைகளும் அடங்கியுள்ளன.
இதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது அவருக்கு தெரியாது. அதனால்தான் இதனை வெற்றுப் புத்தகம் என்கிறார்.
ராகுல் சிவப்பு புத்தகத்தைக் காண்பிப்பதாக மோடி பேசுகிறார். இது எந்த வண்ணத்தில் உள்ளது என்பது முக்கியமல்ல. அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதே முக்கியம். அதைப் பாதுகாக்க நாங்கள் எங்கள் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறோம்.
மணிப்பூர் மாநிலம் ஒரு ஆண்டுக்கும் மேலாக எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி அங்கு செல்லவில்லை. அரசியலமைப்பை படித்திருந்தால் இப்படி நடந்துகொள்ள மாட்டார்.
பழங்குடியினரை ஆதிவாசிகளுக்குப் பதிலாக வனவாசிகள் என்று குறிப்பிட்டு அவமதிக்கிறார்கள்.
காங்கிரஸ் கூட்டணி தேர்தல் அறிக்கையின்படி பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு ரூ.3,000 மாதாந்திர நிதி உதவி, பெண்களுக்கு பஸ்சில் இலவச பயணம், ரூ.3 லட்சம் விவசாய கடன் தள்ளுபடி, வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.4000 போன்ற நலத்திட்டங்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
- இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் நைஜீரிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்
- .நைஜீரியாவில் உள்ள இந்திய வம்சாவளியினரிடமும் அவர் உரையாற்றுகிறார்.
புதுடெல்லி:
பிரதமர் பயணம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளதாவது:-
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக நைஜீரியா செல்கிறார். இந்த 2 நாள் பயணத்தில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் நைஜீரிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். 17 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் நைஜீரியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இந்தப் பயணத்தின் போது, இந்தியா மற்றும் நைஜீரியா இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துவார்.
தொடர்ந்து நைஜீரியாவில் உள்ள இந்திய வம்சாவளியினரிடமும் அவர் உரையாற்றுகிறார். இதனையடுத்து பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஜி20 மாநாட்டிலும் மோடி கலந்து கொள்கிறார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மற்றவர்களின் கனவுகளுக்கு ரத்தன் டாடா ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்க பண்புகளில் ஒன்றாகும்.
- தனிப்பட்ட முறையில், பல ஆண்டுகளாக அவரை மிக நெருக்கமாக அறிந்து கொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.
பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, தனது 86-வது வயதில் கடந்த மாதம் 9-ந்தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது சிறந்த வாழ்க்கை மற்றும் அசாத்திய பணிகள் குறித்து பிரதமர் நரேந்திரமோடி கட்டுரை ஒன்றை எழுதி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
ரத்தன் டாடா நம்மை விட்டுப் பிரிந்து ஒரு மாதம் ஆகிறது. அவர் நம்மிடையே இல்லாதது, பரபரப்பான பெரு நகரங்கள் முதல் சிறு கிராமங்கள் வரையிலும், சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களாலும் ஆழமாக உணரப்படுகிறது. நாடு முழுவதும் மட்டுமல்ல, உலகம் முழுவதும் அது எதிரொலிக்கிறது.
இளைஞர்களுக்கு ரத்தன் டாடா ஓர் உத்வேகமாக இருந்தார். கனவுகள் தொடரத் தகுந்தவை என்பதை நினைவூட்டிய ஆளுமை. வெற்றி என்பது இரக்கம் மற்றும் பணிவுடன் இணைந்திருக்கும் என்பதை ஞாபகப்படுத்தியவர்.
அவரது தலைமையிலான டாடா குழுமம் உலக அளவில் பிரபலம், நேர்மை மற்றும் நம்பகத்தன்மையை பெற்று புதிய உச்சத்தை தொட்டது. இருப்பினும், அவர் தனது சாதனைகளைப் பணிவுடனும், கருணையுடனும் எளிதாக ஏற்றுக்கொண்டார்.
மற்றவர்களின் கனவுகளுக்கு ரத்தன் டாடா ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்க பண்புகளில் ஒன்றாகும். அண்மை காலங்களில், இந்தியாவின் ஸ்டார்ட்-அப் சூழல் அமைப்புக்கு வழிகாட்டியாகவும், பல நம்பிக்கைக்குரிய முயற்சிகளில் முதலீடு செய்பவராகவும் இருந்தார்.
இளம் தொழில்முனைவோர்களின் நம்பிக்கைகளை, விருப்பங்களை அவர் புரிந்துகொண்டார். இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்க அவர்களிடம் இருக்கும் திறனை அங்கீகரித்தார். அவர்களின் முயற்சிகளை ஆதரிப்பதன் மூலம், கனவுகாணும் தலைமுறைக்கு தைரியமான முடிவுகளை எடுக்கவும், எல்லைகளை நோக்கி முன்னேறவும் அதிகாரம் அளித்தார்.
மும்பையில் பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான புகழ்பெற்ற தாஜ் ஓட்டலை விரைவாக திறந்தது, இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது, பயங்கரவாதத்திற்கு அடிபணிய மறுக்கிறது என தேசத்திற்கு அணிதிரளும் ஓர் அறைகூவலாக மாறியது.
தனிப்பட்ட முறையில், பல ஆண்டுகளாக அவரை மிக நெருக்கமாக அறிந்து கொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. நாங்கள் குஜராத்தில் நெருக்கமாக பணியாற்றினோம். அங்கு அவர் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த பல திட்டங்கள் உள்பட விரிவான முதலீடுகளை செய்தார்.
சில வாரங்களுக்கு முன்பு, ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ்சுடன் நான் வதோதராவில் இருந்தேன். இந்தியாவில் சி-295 விமானங்களைத் தயாரிப்பதற்கான தொழிற்சாலை வளாகத்தை நாங்கள் கூட்டாகத் தொடங்கி வைத்தோம். ரத்தன் டாடாதான் இதற்கான பணிகளைத் தொடங்கினார். ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு அவரது வருகை இல்லாதது பெரும் குறை என்பதைச் சொல்லத் தேவையில்லை.
நான் மத்திய அரசு பொறுப்புக்கு சென்ற பிறகும் எங்களுடைய நட்பு தொடர்ந்தது. நமது தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் அவர் ஓர் உறுதியான பங்குதாரராக இருந்தார். குறிப்பாக, 'தூய்மை இந்தியா' இயக்கத்திற்கு ரத்தன் டாடா அளித்த ஆதரவு என் இதயத்திற்கு நெருக்கமானது. இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தூய்மை, சுகாதாரம், துப்புரவு ஆகியவை இன்றியமையாதது என்பதைப் புரிந்துகொண்டு, இந்த வெகுஜன இயக்கத்திற்குக் குரல் கொடுப்பவராக இருந்தார்.
அவரது இதயத்திற்கு நெருக்கமான மற்றொரு செயல் மருத்துவம். குறிப்பாக புற்றுநோய்க்கு எதிரான போராட்டம். 2 ஆண்டுகளுக்கு முன்பு அசாமில் நடந்த நிகழ்ச்சியில், மாநிலத்தில் பல்வேறு புற்றுநோய் மருத்துவமனைகளை நாங்கள் இணைந்து தொடங்கி வைத்ததை நினைவுகூர்கிறேன். அந்த நிகழ்வில் அவர் ஆற்றிய உரையில், தனது இறுதி ஆண்டுகளை மருத்துவத்திற்கு அர்ப்பணிக்க விரும்புவதாக திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.
உடல்நலம் மற்றும் புற்றுநோய் சிகிச்சையை எளிதில் அணுகும் வகையிலும், குறைந்த செலவுடையதாகவும் மாற்றுவதற்கான அவரது முயற்சிகள் நோய்களுடன் போராடுவோர் மீதான ஆழ்ந்த ஒத்துணர்வில் வேரூன்றியிருந்தன.
இன்று அவரை நாம் நினைவுகூரும்போது, அவர் கற்பனை செய்த சமூகத்தையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அந்த சமூகத்தில் வணிகம் நன்மைக்கான சக்தியாக செயல்பட முடியும்; அந்த சமூகத்தில் ஒவ்வொரு தனிநபரின் திறனும் மதிப்புக்குரியது; அந்த சமூகத்தில் அனைவரின் நல்வாழ்விலும் மகிழ்ச்சியும், முன்னேற்றமும் அளவிடப்படும்.
அவர் தொட்ட வாழ்க்கையிலும், அவர் வளர்த்த கனவுகளிலும் அவர் உயிர் வாழ்கிறார். இந்தியாவை சிறந்த, கனிவான, நம்பிக்கையான இடமாக மாற்றியதற்காக தலைமுறைகள் அவருக்கு நன்றியுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப் அபார வெற்றி பெற்றார்.
- பிரதமர் மோடி, தனது நண்பர் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிபராக வெற்றி பெற்ற டொனால்டு டிரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், எனது நண்பர் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்தேன்.
விண்வெளி, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்த, டிரம்புடன் இணைந்து பணிபுரிவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் பிரதமர் மோடியை விரும்புகிறது. இந்தியா மாபெரும் தேசம். பிரதமர் மோடி மகத்தான மனிதர். பிரதமர் மோடி, இந்தியாவை உண்மையான நண்பராகக் கருதுகிறேன். உலகத் தலைவர்களில் பிரதமர் மோடியுடன் தான் எனது முதல் உரையாடல் அமைந்துவிட்டது என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற டிரம்புக்கு பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-------------
- இந்தியா - ஆசியான் அமைப்பின் 21வது உச்சி மாநாடு லாவோசில் நடைபெற்றது
- இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டாக்கும் கடமை நமக்கு உள்ளது என்றார் பிரதமர் மோடி.
லாவோஸ்:
வியட்நாமின் லாவோஸ் நகரில் நடந்த ஆசியான்- இந்தியா அமைப்பின் 21வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
ஆசியான் நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவை உள்ளது. புருனேவிற்கும் விரைவில் துவங்க உள்ளது.
கிழக்கு தைமூரில் இந்திய தூதரகம் திறக்கப்பட்டுள்ளது.
நாளந்தா பல்கலையின் ஸ்காலர்ஷிப் திட்டம் மூலம் ஆசியான் நாடுகளை சார்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலனடைந்து உள்ளனர்.
கோவிட் பெருந்தொற்று ஆகட்டும், இயற்கை பேரிடர் ஆகட்டும் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி வருகிறோம்.
பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிதி, டிஜிட்டல் நிதி மற்றும் பசுமை நிதி ஆகியன ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக இந்தியா சார்பில் 3 கோடி அமெரிக்க டாலர் நிதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் ஆசியான் பிராந்தியத்துடன் ஆன இந்தியாவின் வர்த்தகம் 1,300 கோடி டாலர் ஆக அதிகரித்துள்ளது.
நமது இளைஞர்கள் அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உண்டாக்கி தரவேண்டிய கடமை நமக்கு உள்ளது. இந்தியா அதை கண்டிப்பாக செய்யும்.
21-ம் நூற்றாண்டானது இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கானது என நம்புகிறேன். இன்று உலகின் பல பகுதிகளில் மோதல் மற்றும் பதற்றமான சூழ்நிலை இருக்கும்போது, இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளின் நட்பு, ஒத்துழைப்பு மிக முக்கியமானது என தெரிவித்தார்.
- இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் பதற்றம்.
- எண்ணெய் சப்ளை பாதிக்கப்படும் என பெரும்பாலான நாடுகள் அச்சம்.
ஹிஸ்புல்லா தலைவரை இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தி கொலை செய்தது. இதற்குப் பதிலடியாக ஈரான் நேரடியாக கண்டம்விட்டு கண்டம் சென்று தாக்குதல் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேலுக்கான பாதுகாப்பை உறுதி செய்வோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேலும் ஈரான் எண்ணெய் ஆலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது குறித்து விவாதித்து வருகிறோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் சிரியா மீதும் தாக்குதல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதன்காரணமாக இஸ்ரேல்- ஈரான் இடையிலான பதற்றம் லெபனான், சிரியா வரை விரிவடைந்த நிலையில் மேலும் மேற்கு ஆசியா வரை இந்த பதற்றம் விரிவடையும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் முக்கிய முடிவுகளை எடுக்கும் கேபினட் கமிட்டியுடன் பிரதமர் மோடி நேற்று அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உள்துறை மந்திரி, பாதுகாப்புத்துறை மந்திரி, வெளியுறவுத்தறை மந்திரி, நிதி மந்திரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் இஸ்ரேல் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை வீசிய பிறகு மத்திய கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
ஈரான்- இஸ்ரேல் இடையிலான தற்போதைய மோதல் மேற்கு ஆசியாவிற்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பதற்றத்தால் நாட்டின் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
வணிகம், போக்குவரத்து, கச்சா எண்ணெய், பெட்ரோல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் இராஜதந்திரம் மற்றும் உரையாடல் மூலமாக அனைத்துப் பிரச்சினைகளையும் அவசரமாகத் தீர்க்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. தற்போதைய மோதல் ஒரு பரந்த பிராந்திய பரிமாணத்தை எடுக்கக்கூடாது எனவும் இந்தியா தெரிவித்துள்ளது.
- பிரதமருக்கு சால்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரஸ்பர வணக்கம் தெரிவித்துக் கொண்டார்.
- பல்வேறு பொதுப் பிரச்சனைகள் குறித்தும் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார்.
சென்னை:
பிரதமர் மோடியை சந்திப்பதற்காக டெல்லி சென்று இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
அப்போது பிரதமர் மோடி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்முகத்துடன் வரவேற்றார். பிரத மருக்கு சால்வை அணிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரஸ்பர வணக்கம் தெரிவித்துக் கொண்டார்.
அப்போது தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் "தடம் பெட்டகத்தை" பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிசளித்தார். அதன் பிறகு பிரதமருடன் அமர்ந்து பேசினார்.
தமிழ்நாட்டின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்குமாறு வலியுறுத்தினார். அப்போது பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்திட தேவையான ஒன்றிய அரசின் நிதி, சமக்ரசிக்க்ஷா திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு ஆகிய மூன்று முக்கிய விஷயங்கள் குறித்த கோரிக்கை மனுவை பிரதமர் மோடியிடம் வழங்கினார்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் தலா 50 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்ட ஒரு கூட்டு முயற்சி நிறுவனமாகும். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் செயலாளர் இதன் தலைவர் ஆவார். 54.1 கி.மீ மொத்த நீளத்துடன் இரண்டு வழித்தடங்களுடன் கூடிய சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் I-ஐ ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் 50:50 என்ற சமவீத மூலதனப் பங்களிப்புடன் செயல்படுத்தியுள்ளது.
பொதுப் போக்குவரத் தினை உயர்த்திட வேண்டிய தேவையைக் கண்டறிந்து, தமிழ்நாடு அரசு சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II ற்கு ஒப்புதல் அளித்து, 50:50 என்ற சமவீத மூலதனப் பங்களிப்புடன் ஒப்புதல் வழங்கவும், இருத ரப்பு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து நிதியைப் பெறுவதற்கும், ஒன்றிய அரசிற்கு பரிந்துரை செய்திருந்தது. ஒன்றிய அரசின் பங்களிப்பு வரப்பெறாத காரணத்தி னால் பணிகளில் கடந்த ஆண்டு முதல் ஏற்பட்ட வேகக் குறைவு, நடப்பு நிதி யாண்டிலும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் இந்த ஆண்டின் மொத்த திட்டச் செலவினம் ரூ.8000 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பல்வேறு நிலைகளில் பணி நிறை வடையும் தேதிகள் ஒரு ஆண்டளவிற்கு தாமத மாகி, இறுதியாக கட்டி முடிக்கும் தேதியை டிசம்பர் 2027-லிருந்து டிசம்பர் 2028 ஆக தள்ளி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இது, மிகுதியான காலம் மற்றும் செலவின அதிகரிப்பை ஏற்படுத்தி விடும்,
இந்தியாவிலுள்ள பெரும்பாலான மெட்ரோ இரயில் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு சமவீத மூலதனப் பங்களிப்பு அடிப்படையில் நிதி வழங்கியுள்ளதை இங்கு குறிப்பிடுவது முக்கியமாகக் கருதப்படுகிறது.
ஆகையால் இந்தப் பொருள் குறித்து, சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II ற்கு ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் 50:50 என்ற சமவீத மூலதனப் பங்களிப்புடன், கட்டம்-I ற்கு வழங்கப்பட்டது போன்றும், பொது முதலீட்டுக் குழு பரிந்துரைத்துள்ளவாறும் விரைவில் ஒப்புதல் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் சமக்ரசிக்க்ஷா திட்டமானது 2018-ஆம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது பள்ளி முன்பருவக்கல்வி முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இத்திட்டம் பள்ளிக்கல்வித்துறையில் விரிவான முன்னெடுப்புகளை மேற்கொள்ளத்தக்க வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடானது, ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசின் திட்ட ஏற்பளிப்புக்குழுவால் ஏற்பளிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. ஏற்பளிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடானது ஒன்றிய மற்றும் மாநில அரசால் 60:40 என்ற விகிதத்திலான பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒன்றிய அரசின் நிதி பங்களிப்புடன் பள்ளிக் கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் சமக்ரசிக்க்ஷா திட்டம் மூலம் தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் பயின்று வரும் 43,94,906 மாணவர்கள், 2,21,817 ஆசிரியர்கள் மற்றும் 32,701 அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்திற்கான நிதி விடுவிக்கப்படவில்லையெனில் ஒன்றிய அரசானது மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வரும் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டிற்கு வழங்கிடும் முக்கியத்துவத்தை குறைப்பதாகவே அமைந்திடும்.
எனவே, தமிழ்நாட்டின் நியாயமான இக்கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து தேசிய கல்விக் கொள்கை 2020-ல் வரையறுக்கப்பட்டுள்ள மும்மொழிக் கோட்பாட்டினை வலியுறுத்துவதை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் மும்மொழிக் கோட்பாடு சார்ந்து ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள அரசமைப்பு ரீதியான பாதுகாப்பினை கருத்திற்கொண்டு, பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உட்பிரிவில் உரிய திருத்தம் மேற்கொள்ளப்படின், தமிழ்நாடு மாநிலமும் உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ள ஏதுவாக அமையும்.
எனவே, தமிழ்நாட்டில் கல்வி பயிலும் 43,94,906 மாணவர்களின் எதிர்கால நலன்கருதி அவர்களின் கல்வி நலன் பாதிக்காத வகையில், பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வது சார்ந்த இறுதி முடிவுகள் எட்டப்படும் வரை காத்திராமல், ஏற்கனவே சமக்ரசிக்க்ஷா திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் திட்ட பணிகளுக்கான நிதியினை உடன் விடுவித்திடுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு 1076 கி.மீ. நீளம் கொண்ட கடற்கரையையும், வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிப்பை தொழிலாக கொண்டுள்ள மிகப்பெரும் கடலோர சமுதாயத்தையும் கொண்டு உள்ளது. சமீபகாலமாக அடுத்தடுத்து இந்திய மீனவர்கள் மீன்பிடி கலன்களுடன் இலங்கை அரசால் கைது செய்யப்படுகின்றனர். நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் இந்தப் பிரச்சனையின் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏழை மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
2018-ஆம் ஆண்டுக்கு பிறகு சிறைபிடிக்கப்பட்ட 191 மீன்பிடி படகுகளின் தற்போதைய நிலை இதுவரை அறியப்படாமல் உள்ளதால் அலுவலர்கள் மற்றும் மீனவர்கள் அடங்கிய குழு படகுகளை ஆய்வு செய்ய அனுமதியினை பெற்றுத் தருமாறும் ஏற்கனவே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அண்மைகாலத்தில் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை நாட்டுடமையாக்கப்படும் கொள்கையால், லட்சக்கணக்கான தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் குடும்பங்களின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மேலும் ஏழை மீனவர்கள் மீது இலங்கை நீதிமன்றங்கள் மிக மிக அதிகப்படியான அபராதத் தொகையினை விதித்து அரசாங்க ரீதியிலான பேச்சுவார்த்தை மூலம் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்திய இலங்கை கூட்டு பணிக்குழு கூட்டம் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி கொழும்புவில் நடைபெற உள்ளதாக அறியப்படுகிறது. எனவே, 2016-ம் ஆண்டுக்கு பிறகு இரு நாட்டு மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறாத நிலையில், இக்கூட்டத்தினையும் உடனடியாக கூட்டிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த முக்கிய பிரச்சனையில் பிரதமர் மோடி தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள 145 மீனவர்களையும், அவர்க ளது படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும் நட வடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இருந்து கோரிக்கை மனுவினை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, மேற்படி கோரிக்கைகள் குறித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.
இந்த சந்திப்பின்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் பிரதமர் அலுவலக செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதன் பிறகு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
இதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் மறைந்த மூத்த மார்க்்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத் தாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு இன்று மாலை 5.35 மணியளவில் விமானத்தில் புறப்பட்டு இரவு 8.20 மணிக்கு சென்னை திரும்புகிறார். அதன் பிறகு ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள உளுந்தை கிராமத்தில் உள்ள தோட்டத்துக்கு சென்று தங்குகிறார்.
- நான் முதலமைச்சராக வருவேன் என்று நினைக்கவே இல்லை.
- மக்கள் எனக்கு பதவி உயர்வு அளித்து என்னை பிரதமராக்கினர்.
பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் சந்தித்து பேசினார். இதையடுத்து நியூயார்க் சென்ற பிரதமர் மோடி அங்கு நாசா கொலிசியம் என்ற இடத்தில் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-
சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த இந்தியாவின் முதல் பிரதமரான தன்னால் நாட்டிற்காக உயிரைக் கொடுக்க முடியாது, ஆனால் நிச்சயமாக நாட்டிற்காக வாழ முடியும்.
சுயராஜ்ஜியத்திற்காக (சுய ஆட்சி) என் உயிரைக் கொடுக்க முடியவில்லை. ஆனால், சு-ராஜ் (நல்லாட்சி) மற்றும் வளமான நாட்டிற்காக என் வாழ்க்கையை அர்ப்பணிப்பதாக நான் முடிவு செய்துள்ளேன்.
நான் முதலமைச்சராக வருவேன் என்று நினைக்கவே இல்லை, ஆனால் நான் அதைச் செய்தபோது குஜராத்தின் மிக நீண்ட காலம் முதல்வராக இருந்தேன்.
அப்போது மக்கள் எனக்கு பதவி உயர்வு அளித்து என்னை பிரதமராக்கினர். ஆனால், நாடு முழுவதும் பயணம் செய்து நான் கற்றுக்கொண்டதுதான் எனது ஆட்சி மாதிரியை வலுவாக மாற்றியது. இந்த மூன்றாவது தவணையில் நான் மூன்று மடங்கு பொறுப்புடன் முன்னேறி வருகிறேன் என்றார்.
- ஒரு காலத்தில் சோழப் பேரரசின் கடற்படை தளமாக விளங்கிய தீவுப் பகுதி.
- நமது சுதந்திரப் போராட்டத்திலும், சரித்திரத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இணையற்ற இடம் உண்டு.
அந்தமான் நிக்கோபாரின் தலைநகரம் போர்ட் பிளேரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டை காலனி ஆதிக்கத்தின் சுவடுகளில் இருந்து விடுவிக்கும் விதமாக அந்தமான் நிக்கோபார் தலைநகரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்," ஒரு காலத்தில் சோழப் பேரரசின் கடற்படை தளமாக விளங்கிய தீவுப் பகுதி, இன்று நமது வளர்ச்சிக்கு முக்கிய தளமாக விளங்குகிறது.
நமது சுதந்திரப் போராட்டத்திலும், சரித்திரத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இணையற்ற இடம் உண்டு" என்றார்.
- ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தில் இருக்கும் 'யு' என்பது, மோடி அரசின் பல 'யு டர்ன்'களை குறிப்பிடுவதாகும்- கார்கே.
- வாக்குறுதி அளித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தினீர்களா என்று நாட்டு மக்களுக்குச் சொல்லுங்கள்- ரவி சங்கர் பிரசாத்.
கடந்த இரு தினங்களுக்கு முன் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஓய்வூதிய திட்டமானது, மத்திய அரசு ஊழியராக, குறைந்தபட்சம் 10 ஆண்டு பணியாற்றியவர்கள் தகுதியானவர்கள் என்று தெரிவித்துள்ளது. 10 ஆண்டு பணியாற்றிய ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10,000 வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மால்லிகார்ஜூன கார்கே விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 'ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தில் இருக்கும் 'யு' என்பது, மோடி அரசின் பல 'யு டர்ன்'களை குறிப்பிடுவதாகவும், இன்டெக்சேசன் தொடர்பான பட்ஜெட் அறிவிப்பு, வக்பு மசோதாவை கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பியது, ஒலிபரப்பு மசோதா வாபஸ், லேட்ரல் என்ட்ரி வாபஸ், இப்போது ஒருமித்த ஓய்வூதியம் என அடுத்தடுத்து மத்திய அரசு தன் முடிவுகளில் இருந்து பின்வாங்கியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் கார்கே-வின் விமர்சனத்திற்கு பா.ஜ.க. மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் பதில் கொடுத்துள்ளார். காங்கிரஸ் விமர்சனத்திற்கு ரவி சங்கர் பிரசாத் அளித்தள்ள பதில் வருமாறு:-
இமாச்சல் பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு அதனை நிறைவேற்றாமல் காங்கிரஸ் தற்போது யு-டர்ன் அடித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பழைய ஓய்வூதிய திட்டத்தை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்து வருகிறது. மக்கள் வாக்களித்து ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என பிரியங்கா தேர்தலின்போது வாக்குறுதி கொடுத்திருந்தார்.
இந்த காங்கிரஸ் அறிவிப்புகளை மட்டும் வெளியிடுமா அல்லது அதையும் செயல்படுத்துமா? பொதுவாக காங்கிரசும், குறிப்பாக ராகுல் காந்தியும், இமாச்சலப் பிரதேசத்தில் வாக்குறுதி அளித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தினீர்களா என்று நாட்டு மக்களுக்குச் சொல்லுங்கள். வாக்குகளுக்காக பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களி ஏமாற்றி வருகின்றனர்.
(மத்திய அரசு) ஊழியர்களின் கவலைகளைக் கேட்டு புரிந்துகொண்டு, அதுகுறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து, அர்த்தமுள்ள முடிவை எடுத்ததற்காக பிரதமர் மோடிக்காக பெருமைப்படுகிறோம். இதற்காக அரசுக்கு, குறிப்பாக பிரதமருக்கு கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
ராகுல் காந்தி என்ன செய்கிறீர்கள்? நீங்கள் எவ்வளவுதான் பொய்யை உண்மை என மக்களை நம்பவைப்பீர்கள். எப்போதாவது உண்மையைச் சொல்லுங்கள். மேலும் நீங்கள் ஏதாவது சொன்னால், அதைச் செய்ய வேண்டும். உங்களால் முடியவில்லை என்றால் சொல்லக்கூடாது.
கவனமாக பரிசீலித்த பிறகு முடிவுகளை எடுக்க வேண்டும். அடிமைத்தனம் இங்கு வேலை செய்யாது.
இவ்வாறு ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்