என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பட்டாசு விற்பனை"
- பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் பலர் அதிகளவில் பட்டாசுகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை.
- ஆன்லைனில் பட்டாசுகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
கோவை:
கோவை மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டன. கவுண்டம்பாளையம், சாய் பாபா காலனி, கணபதி, டவுன்ஹால், பீளமேடு, ராமநாதபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் 370-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதுதவிர, ஊரக பகுதிகளில் 360-க்கும மேற்பட்ட பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த பட்டாசு கடைகளில் கடந்த வாரம் முதல் விற்பனை தொடங்கினாலும், சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் ஊதியம் வழங்க காலதாமதம் செய்தது. இதனால் தீபாவளிக்கு 4 நாட்களுக்கு முன்பு முதல் தான் பட்டாசு விற்பனை சூடுப்பிடித்தது. பட்டாசு விலையில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாத நிலையில் பெற்றோர் குழந்தைகளுடன் சென்று பட்டாசுகளை வாங்கி சென்றனர்.
சிவகாசியில் இருந்து நேரடியாக பட்டாசு கொள்முதல் செய்தவர்கள் அதிரடி சலுகை என அறிவித்து 80 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் பட்டாசுகளை விற்பனை செய்தனர். நடப்பாண்டில், பேன்சி ரக பட்டாசுகளையும், வாணவேடிக்கை பட்டாசுகளையும் பொதுமக்கள் அதிகளவில் விரும்பி வாங்கியுள்ளனர். குழந்தைகள் வழக்கம் போல் கம்பி மத்தாப்பு, தீப்பொறி மத்தாப்பு, பிஜிலி, சங்கு சக்கரம் போன்ற வெடிகளை வாங்கி சென்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும், பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் பலர் அதிகளவில் பட்டாசுகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை. தவிர, ஆன்லைனில் பட்டாசுகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை இளைஞர்கள் பலர் வாங்கியதால், கடைகளில் பெரிய அளவில் பட்டாசு விற்பனையானது நடக்கவில்லை என கூறப்படுகிறது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 80 சதவீதம் பட்டாசு விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட பட்டாசு விற்பனையாளர் நலச்சங்கத்தின் நிர்வாகி கூறுகையில், "மாநகரில் கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் 50 கடைகளுக்கு மேல் அதிகமாக பட்டாசு விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கடைகள் அதிகரித்து இருந்தாலும், எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை நடந்தது. அதாவது கடைகளில் 80 சதவீதம் பட்டாசு வரை விற்பனை நடந்துள்ளது. பெரும்பாலான கடைகளில் பட்டாசுகள் பெருமளவில் விற்பனையாகி உள்ளது" என்றார்.
- மழை உள்ளிட்ட காரணங்களால் 75 சதவீத அளவுக்கு மட்டுமே பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
- நடப்பாண்டில் பட்டாசு விற்பனை சிறப்பாக இருந்ததாக பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி, சிவகாசியில் தயாரான பட்டாசுகள் நாமு முழுவதும் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
சிவகாசியில் 1,150 பட்டாசு ஆலைகளில் 4 லட்சம் தொழிலாளர்களால் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
மழை உள்ளிட்ட காரணங்களால் 75 சதவீத அளவுக்கு மட்டுமே பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா முழுவதும் விற்பனைக்காக அனுப்பப்பட்ட 95 சதவீத பட்டாசுகள் ரூ.6 ஆயிரம் கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக பட்டாசு வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
தயாரிப்பு குறைந்த நிலையில் கூட கடந்தாண்டை விட, நடப்பாண்டில் பட்டாசு விற்பனை சிறப்பாக இருந்ததாக பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.
- பட்டாசு உற்பத்திக்கு பெயர் போன சிவகாசியில், 2500-க்கும் மேற்பட்ட கடைகளில் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றன
- சிவகாசியில் விதவிதமான பேன்சி பட்டாசுகள் ஒவ்வொரு ஆண்டும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
சிவகாசி:
தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், தற்போதே அதற்கான பரபரப்புகள் ஆரம்பமாகி விட்டன. புத்தாடைகள் வாங்க தமிழகத்தின் ஒவ்வொரு நகரத்திலும், மக்கள் ஜவுளிக்கடைகளை மொய்த்து வருகின்றனர். இதனால், சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும், ஏனைய ஊர்களிலும் கடை வீதிகள் திருவிழா கோலம் பூண்டுள்ளன.
தீபாவளி என்றாலே பட்டாசு தான். குழந்தைகள் மட்டுமல்லாமல், இளைஞர்களும், பெரியவர்களும் பட்டாசு மற்றும் மத்தாப்பு வெடித்து மகிழாதவர்களே இருக்க மாட்டார்கள். தற்போது சுற்றுச்சூழல் உள்ளிட்ட காரணங்களைக் காட்டி பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும், பட்டாசுகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பட்டாசு உற்பத்திக்கு பெயர் போன சிவகாசியில், 2500-க்கும் மேற்பட்ட கடைகளில் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் சிவகாசி, திருத்தங்கல் பகுதிகள், சாத்தூர், விருதுநகர் சாலை, சங்கரன்கோவில் சாலைகளில் அதிகளவிலான பட்டாசு விற்பனை கடைகள் உள்ளன. பட்டாசு நிறுவனங்களின் நேரடி விற்பனை கடைகளும் ஏராளமாக உள்ளது.
இதனால் சிவகாசியில் பட்டாசுகளின் விலை ஓரளவு குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பட்டாசு பிரியர்கள் குவிந்து வருகின்றனர். பட்டாசு விற்பனை கடைகளில் அனைத்து விதமான பட்டாசு ரகங்கள், மத்தாப்பு வகைகள், நவீன ரக வெடிகள், வாண வெடிகள் என சுமார் 500-க்கும் மேற்பட்ட வகையிலான பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
சிவகாசியில் விதவிதமான பேன்சி பட்டாசுகள் ஒவ்வொரு ஆண்டும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அதே போல், பட்டாசு தயாரிப்பு விதிமுறைகள் காரணமாகவும், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து கட்டணம் போன்றவற்றால் ஒவ்வொரு ஆண்டும் பட்டாசுகளின் விலையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
இதைக் கருத்தில் கொண்டு, பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படும் சிவகாசிக்கு வெளி மாவட்டம் மற்றும் இன்றி, அண்டை மாநில மக்களும் நேரடியாக வந்து பட்டாசுகளை வாங்கிச் செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் விலை குறைவு, 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பனை மற்றும் வெடித்துப் பார்த்து வாங்கலாம் என்பதே இவர்களின் வருகைக்கு முக்கிய காரணம். இதனால் சிவகாசியின் ஒவ்வொரு பட்டாசு கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதுகுறித்து, பட்டாசு மொத்த விற்பனனயாளர் ஒருவர் கூறுகையில், தொடக்கத்தில் ஆர்டர்கள் குறைவாக வந்தாலும், தற்போது நவராத்திரி விழாவைத் தொடர்ந்து விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வெளிமாவட்டங்கள் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் நேரடியாக சிவகாசி வந்து தங்களுக்கு தேவையான பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர்.
இன்னும் தீபாவளிக்கு 10 நாட்களே உள்ளதால், வார இறுதி நாட்களான வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வியாபாரம் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
- கடந்த 2021-ம் ஆண்டு தீபாவளிக்கு ரூ.4 ஆயிரத்து 200 கோடி அளவில் பட்டாசு விற்பனையானது.
- நடப்பாண்டு ரூ.7 ஆயிரம் கோடி அளவில் வர்த்தகம் இருக்கும் என பட்டாசு ஆலை உரிமையளர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் 3 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் நேரடியாகவும், உப தொழில்களான காகித ஆலைகள், அச்சுத்தொழில் உள்ளிட்டவற்றில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
நாடு முழுவதிலும் ஒன்றரை கோடி பேர் இந்த வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசு தேவையில் 95 சதவீதத்தை சிவகாசி பகுதிகளில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகள் பூர்த்தி செய்கின்றன.
2016 மற்றும் 2019-ம் ஆண்டுகளுக்கு இடையில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.4 ஆயிரம் கோடி முதல் ரூ.5 ஆயிரம் கோடி வரை பட்டாசு விற்பனையானது. கொரோனா கால கட்டங்களில் 2020-ல் ஒட்டுமொத்த சில்லறை விற்பனை முறையே முந்தைய ஆண்டுகளின் சராசரியை விட குறைவாக இருந்தது.
தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு தீபாவளிக்கு ரூ.4 ஆயிரத்து 200 கோடி அளவில் பட்டாசு விற்பனையானது. அதனை முறியடித்து கடந்தாண்டு (2022) தீபாவளிக்கு உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து பட்டாசுகளும் விற்பனையானதால், ரூ.6 ஆயிரம் கோடிக்கு முதல் முறையாக வர்த்தகம் நடைபெற்றது.
இந்நிலையில் நடப்பாண்டு ரூ.7 ஆயிரம் கோடி அளவில் வர்த்தகம் இருக்கும் என பட்டாசு ஆலை உரிமையளர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். தொடர் வெடி விபத்துகள், சீதோஷ்ண நிலை காரணமாக கடைசி கட்ட உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பு போன்றவைகளால் கடந்த ஆண்டு விற்பனை இலக்கை ஒட்டியே இந்த ஆண்டும் பட்டாசு பட்டாசுகள் விற் றுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு ரூ.5,950 கோடிக்கு மட்டுமே பட்டாசுகள் விற்பனையாகி கடந்த ஆண்டு விற்பனையை விட ரூ.50 கோடிக்கு குறைவாகவே இருந்துள்ளது.
இதுகுறித்து பட்டாசு உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் இளங்கோவன் கூறும்போது, தொடர் மழையினால் இறுதிக்கட்ட பட்டாசு உற்பத்தியில் பாதிப்பு, தொடர் பட்டாசு வெடி விபத்துகள், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள், அதனை தொடர்ந்து நடைபெற்ற தொடர் ஆய்வுகள், நடவடிக்கையால் கடந்த ஒரு மாத காலத்தில் பட்டாசு உற்பத்தியில் 10 சதவிகிதம் பாதிக்கப்பட்டது.
மேலும் தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்படும் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு விற்பனைக்கு உரிமம் வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதமும் விற்பனை குறைவுக்கு முக்கிய காரணமாகும். தமிழக பட்டாசு விற்பனையில் கடந்தாண்டு தீபாவளி பண்டிகை விற்பனையை விட நடப்பாண்டில் ரூ.50 கோடி ரூபாய்க்கு பட்டாசு விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டது என தெரிவித்தார்.
- கடந்த மாதம் வரை பட்டாசு விற்பனை சூடு பிடிக்காத நிலையில் கடந்த 20 நாட்களாக அதிக அளவில் ஆர்டர்கள் வந்தன.
- கடந்த ஆண்டு ரூ.5 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை நடந்தது.
சென்னை:
தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தீபாவளி என்றாலே பட்டாசுதான் அனைவரின் நினைவுக்கும் வரும். தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இதற்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1,050-க் கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் கடந்த 10 மாதங்களாக பல்வேறு வகையான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த மாதம் வரை பட்டாசு விற்பனை சூடு பிடிக்காத நிலையில் கடந்த 20 நாட்களாக அதிக அளவில் ஆர்டர்கள் வந்தன. இதனால் சிவகாசியில் உள்ள பிரபல நிறுவனங்கள் கடந்த வெள்ளிக்கிழமை வரை பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டனர்.
வழக்கமான உற்பத்தியை விட இந்த ஆண்டு 50 முதல் 70 சதவீதம் வரை உற்பத்தி அதிகப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சிவகாசி அருகே இயங்கி வந்த பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் அந்த கடையில் இருந்த 13 பெண்கள் உள்பட 14 பேர் பரிதாபமாக கருகி பலியானர்.
இந்த விபத்தை தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் குழுவினர் பட்டாசு ஆலைகள், பட்டாசு கடைகளில் தீவிர சோதனை செய்தனர். இதனால் பல இடங்களில் பட்டாசு உற்பத்தியும், விற்பனையும் பாதித்தது. பின்னர் நிலைமை சகஜமானது.
விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இந்த ஆலைகளில் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வந்த ரூ.8 ஆயிரம் கோடி மதிப்புள்ள பட்டாசுகள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் விற்பனையானதாக கூறப்படுகிறது.
ஆனால் சிவகாசி பகுதியில் மட்டும் தீபாவளி பண்டியையொட்டி ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.5 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை நடந்தது.
பெங்களூரு பகுதியில் ஏற்பட்ட பட்டாசு கடை விபத்தால் அங்கு பட்டாசு விற்பனைக்கு அம்மாநில அரசு கடுமையான கட்டுப்பாடு விதித்த நிலையில் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் ஓசூர் பகுதியில் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு உரிமம் பெற்று கடந்த 10 நாட்களாக பட்டாசு விற்பனையில் தீவிரம் காட்டினர்.
இதனால் மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு சிவகாசி உற்பத்தியாளர்கள் பெங்களூரு விற்பனை அதிகரித்ததாக கூறப்படுகிறது. சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் பலர் பல்வேறு ஊர்களில் தற்காலிக கடைகள் அமைத்து பட்டாசுகளை விற்றனர்.
தீபாவளியையொட்டி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அதிக அளவில், கறிக்கோழி விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவரும், கறிக்கோழி உற்பத்தியாளருமான வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-
கறிக்கோழியை பொறுத்தவரை ஒரு கிலோ உற்பத்தி செய்ய ரூ.95 செலவாகிறது. தற்போது கொள்முதல் விலை ரூ.98 நிர்ணயம் செய்திருந்தாலும், வியாபாரிகள் விலையை குறைத்தே கோழிகளை பிடிக்கின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.110 வரை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு உயரவில்லை. இருப்பினும் தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 கோடியே 50 லட்சம் கிலோ கறிக்கோழி ரூ.315 கோடிக்கு விற்பனையானது. இது கடந்த ஆண்டைவிட 25 சதவீதம் அதிகம்.
கோழிகளின் தீவன பொருட்களின் விலையும் 25 சதவீதம் அதிகரித்து உள்ளது. அதனால் பெரிய அளவில் பண்ணையாளர்களுக்கு லாபம் இல்லை. கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயம் செய்யும் கொள்முதல் விலைக்கே வியாபாரிகள் கோழிகளை பிடித்தால் பண்ணையாளர்களுக்கு லாபம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிவகாசியில் தொடக்கத்தில் வந்த வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வகை பட்டாசுகளும் கிடைக்கும்.
- இறுதி வியாபார நாட்களில் வருபவர்களுக்கு கேட்கும் பட்டாசுகள் கிடைப்பது அரிதாக உள்ளது.
சிவகாசி:
பட்டாசு உற்பத்திக்கு பெயர் போன விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெரிய மற்றும் சிறிய அளவில் 1500-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் 90 சதவீத பட்டாசு தேவைகளை சிவகாசி நகரம் பூர்த்தி செய்து வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பே பட்டாசு உற்பத்தி பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இரவு பகலாக ஊழியர்கள் பட்டாசுகளை உற்பத்தி செய்தனர்.
பண்டிகை நாட்கள் நெருங்க நெருங்க வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் சிவகாசிக்கு நேரடியாக வந்து பட்டாசுகளை ஆர்டர் செய்து வாங்கி சென்றனர். குறிப்பாக வட மாநிலத்தில் இருந்து அதிக அளவில் ஆர்டர்கள் குவிந்தன.
சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும். பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி பட்டாசு வகைகள் உற்பத்தி செய்ய வேண்டும். சரவெடிக்கு தடை, பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் போன்ற பல்வேறு விதிமுறைகளை கோர்ட்டும், அரசும் விதித்துள்ளது.
இவ்வளவு இடர்பாடுகளையும் மீறி இந்த முறை சிவகாசியில் கடந்த சில வாரங்களாகவே பட்டாசு வியாபாரம் தீவிரமாக நடைபெற்றன. வெளி மார்க்கெட்டுகளில் விற்பதை விட சிவகாசியில் விலை குறைவாக இருக்கும். எனவே தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சிவகாசிக்கு வந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆலைகள் மற்றும் கடைகளுக்கு நேரடியாக சென்று பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர். தீபாவளிக்கு முதல் நாள் வரை சிவகாசிக்கு வந்து பட்டாசு வாங்க வாடிக்கையாளர்கள் வருவது வழக்கம்.
சிவகாசியில் தொடக்கத்தில் வந்த வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வகை பட்டாசுகளும் கிடைக்கும். நாட்கள் செல்ல செல்ல பட்டாசுகள் விற்பனையாகி வருகின்றன. இதனால் இறுதி வியாபார நாட்களில் வருபவர்களுக்கு கேட்கும் பட்டாசுகள் கிடைப்பது அரிதாக உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் கிடைக்கும் பட்டாசுகளை வாங்கிக் கொண்டு திரும்புகின்றனர்.
சிவகாசியில் பட்டாசு விலை விபரம்:-
புஷ்வாணம் 1 பாக்ஸ்-ரூ.90, தரைசக்கரம்-ரூ.80, சீனிவெடி பாக்கெட்-ரூ.30, சாட்டை-ரூ.15, கம்பி மத்தாப்பு-ரூ.40, ராக்கெட் சிறியது-ரூ.40, 30 ஷாட் பெட்டி-ரூ.350.
மேற்கண்ட பட்டாசுகள் வெளி மார்க்கெட்டுகளில் பல மடங்கு விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிவகாசியில் பட்டாசு வாங்க குவிகின்றனர்.
நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் இந்த முறை சிவகாசியில் பட்டாசு வியாபாரம் நன்றாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 95 சதவீத பட்டாசுகள் விற்பனை ஆகியுள்ளது.
இன்னும் பண்டிகைக்கு 2 நாட்கள் இருப்பதால் முழுமையாக பட்டாசுகள் விற்பனையாகிவிடும் என வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
- கலெக்டர் தொடங்கி வைத்தார்
- பண்டிகையை பாதுகாப்புடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாட அறிவுறுத்தல்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் சிறுவர்களுக்கான புதிய வகை பட்டாசுகள் குவிக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை துராபலி தெருவில் உள்ள மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனையை கலெக்டர் பா.முருகேஷ் தொடங்கி வைத்தார்.
இதில் கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் கோ.நடராஜன், துணைப்பதிவாளர் ராஜசேகரன், மேலாண்மை இயக்குநர் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தரமான பட்டாசு நிறுவனங்களிடம் இருந்து 65 லட்ச ரூபாய் மதிப்பில் பட்டாசுகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதில் 450 ரூபாய் முதல் 1865 ரூபாய் வரையில் கிப்ட் பாக்ஸ்கள், சாக்லேட் கேண்டில், டிக்கேட், அனிமல் ஷோவர், டெம்பிள் ரன், டைனோசர், ஜிராபி, கிண்டர் ஜாய், பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் ஆகிய சிறுவர்களுக்கான புதிய வகை பட்டாசுகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் தீபாவளி பண்டிகை அன்று தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ள காலை 6 மணி முதல் 7 மணிவரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை பாதுகாப்புடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாட வேண்டும் கலெக்டர் பா.முருகேஷ் கேட்டுக்கொண்டார்.
- சென்னையில் பட்டாசு கடைகள் வைப்பதற்கு 800 விண்ணப்பங்கள் தீயணைப்புத்துறைக்கு வந்துள்ளன.
- பரிசீலனையில் இருக்கும் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு ஓரிரு நாள்களில் அனுமதி வழங்கப்படும்.
சென்னை:
தீபாவளி பண்டிகை, நவம்பர் 12-ந் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, பட்டாசு, ஜவுளி வியாபாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.
இதற்காக தற்காலிக பட்டாசு கடைகளும் ஆங்காங்கு திறக்கப்பட்டு வருகின்றன. பட்டாசு கடைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில், பட்டாசு கடைகள் வைப்பதற்கு கடுமையான விதிமுறைகளை வெடிபொருள் சட்டத்தின் கீழ் தீயணைப்புத்துறை விதித்து உள்ளது.
தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்றால்தான், அந்தந்த மாநகர காவல் துறை அல்லது வருவாய்த் துறையிடம் இருந்து உரிமம் பெற முடியும். பட்டாசு கடைகளை ஒழுங்குப்படுத்துவற்காக தீயணைப்புத்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து மாநிலம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
அதில் பட்டாசு கடைகள் வைப்பதற்கு வெடிபொருள் சட்டத்தின்படி பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு செய்த பின்னர் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.
இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசு கடைகள் வைப்பதற்கு 6,500 விண்ணப்பங்கள் தீயணைப்புத் துறைக்கு வந்துள்ளன. இதில் 5,800 பட்டாசு கடைகள் வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எஞ்சிய விண்ணப்பங்களில் பெரும்பாலானவை பரிசீலனையில் உள்ளதாகவும், சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.
மேலும் கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு அதிகளவில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கக்கோரி விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இன்னும் விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதால், பட்டாசு கடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்னையில் பட்டாசு கடைகள் வைப்பதற்கு 800 விண்ணப்பங்கள் தீயணைப்புத்துறைக்கு வந்துள்ளன. இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வரை 350 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பரிசீலனையில் இருக்கும் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு ஓரிரு நாள்களில் அனுமதி வழங்கப்படும் என அத்துறையினர் தெரிவித்தனர்.
- அருரில் உரிமம் இல்லாமல் பட்டாசு விற்பனை செய்யக் கூடாது என்று ஆர். டி.ஒ. எச்சரிக்கை செய்தார்.
- போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் நேரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
அரூரில் உரிமம் பெறாமல் பட்டாசுகளை விற்பனை செய்ய கூடாது என அரூர் ஆர்.டி.ஓ வில்சன் ராஜசேகர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிரந்தர மற்றும் தற்காலிக உரிமம் பெற்ற கடைகளில் பட்டாசுகள் விற்பனை செய்யும் இடங்களை வருவாய், போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் நேரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பட்டாசு கடைகளில் பிற பொருள்களை விற்பனை செய்தல் கூடாது. அனுமதிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாக பட்டாசுகளை இருப்பு வைத்திருத்தல் கூடாது. பட்டாசு கடைகளின் அருகில் தீத்தடுப்பு சாத னங்களை வைத்திருத்தல் வேண்டும்.
பட்டாசு கடைகளின் அருகில் எளிதில் தீப்பற்றக்கூடிய தீக்குச்சிகள், மெழுகு வர்த்திகள், விளக்குகளை வைத்திருக்க கூடாது. தீபாவளி பண்டிகை யொட்டி, அனைத்து பட்டாசு கடைகளையும் பாதுகாப்பான முறையில் செயல்படுத்த வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவரது செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
- கண்காணிக்க 18 குழுக்கள் அமைப்பு
- பட்டாசு கடை தவிர தற்காலிக கொட்டகை, விரி வாக்கப்பட்ட கொட்டகைகள் எதற்கும் அனுமதியில்லை
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
குமரி மாவட்டத்தில் பட்டாசு சில்லறை மற்றும் மொத்த விற்பனை உரிமம் பெற்ற இடங்கள், பட்டாசு தயாரிக்க உரிமம் பெற்ற இடங்களை ஆய்வு செய்வது மற்றும் உரிமம் பெறாத இடங்களில் பட்டாசு விற்பனை செய்வதை தடுப்ப தற்கும் 18 குறுவட்டங்களுக்கு தாசில்தார்கள், காவல்துறை அலுவலர்கள், தீயணைப் புத்துறை அலுவலர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட குறுவட்ட ஆய்வாளர்களை கொண்ட 18 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
குழுவில் அடங்கியுள்ள அலுவலர்கள் அவர்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள பகுதி களில் கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும்போது குழு அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நட வடிக்கைகள், கையாளப்படு கின்ற நடவடிக்கைகள் குறித்து தொழிற்சாலை துணை இயக்குநர் மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆகியோர்களால் பயிற்சி வழங்கப்பட்டது.
ஆய்வின் போது பட்டாசு உரிமம் பெற்ற இடத்தில் அல்லாது வேறு இடங்களில் விற்பனை செய்வதோ அனுமதி பெற்ற இடத்தை விட அதிகமான இடங்களில் செட் அமைத்து விற்பனை செய்வதோ கண்டறி யப்பட்டால் உடனடியாக அத்தகைய விதிமீறல் நடவடிக்கையில் உள்ள பட்டாசுகளை தீயணைப்பு அலுவலர் வழிகாட்டு தலின்படி பறிமுதல் செய்து பாதுகாப்பாக செயலிழக்க செய்வதோடு அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அரசு வகுத்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற பட்டாசு விற்பனைகள் செய்யப்படு கிறதா என்பதை உறுதி செய்திட கண்காணிப்பு அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பட்டாசு விற்பனை உரிமையாளர்கள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். விதிமுறைகள் வருமாறு:-
பட்டாசு கடை தவிர தற்காலிக கொட்டகை, விரி வாக்கப்பட்ட கொட்டகைகள் எதற்கும் அனுமதியில்லை. உரிமம் வழங்கப்பட்ட இடத்தை வேறு எந்த நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ குத்தகைக்கு அல்லது வாடகைக்கு விடக் கூடாது. அவசர காலங்களில் வெளியேறும் வாசல் வெளிப் புறமாக திறக்கக்கூடியதாகவும், காற்றோட்டமாக உள்ளதாக இருக்கப்பட வேண்டும். அவசர வெளியேறும் பகுதி களை தொடர்ந்து தற்காலிக கொட்டகை அல்லது ஷெட்களுக்கு அனுமதி இல்லை. அவசர காலங்களில் வெளியேறுவதற்கான பாதை யில் எந்த வெடிபொருள்களும் இருப்பு வைப்பதோ தடைகளோ இல்லாமல் இருக்க வேண்டும். அலங்கார விளக்குகள், தொங்கு விளக்குகள், கடை களின் மேல் அல்லது கட்டி டங்களில் நுகர்வோர்களை கவர்வதற்காக வைக்கப்படும் நிகழ்வுகளில் தீப்பொறி பற்றி தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ள தால் அவற்றினை விற்னை யாளர்கள் தவிர்த்திட வேண்டும். குளிர்சாதன பெட்டி, ஆசிட் திரவம் கொண்ட பேட்டரி, டீசல் ஜெனரேட்டர், அகர்பத்தி எண்ணெய் விளக்குகள் ஆகி யவற்றை பட்டாசு விற்பனை அல்லது தயாரிக்கும் இடங்க ளில் பயன்படுத்தக் கூடாது. சிறிய குழந்தைகள், மது அருந்திய நபரை மனரீதியாக உடல்ரீதியாக பாதிக்கப்பட்ட நபர்களை வெடி பொருட்களை ஏற்றுவதற்கு இறக்குவற்கு பயன்படுத்தக் கூடாது.
வெடிபொருட்கள், பட்டாசு பொருட்களை கையாள்வதற்கு பயிற்சி பெற்ற அனுபவமுள்ள நபர்களை விற்பனை அதிகமில்லாத நேரங்களில் பாதுகாப்பாக ஏற்றவும், இறக்கவும் பயன்படுத்திட வேண்டும். பட்டாசு பொருட் களை ஏற்றுவதற்கு முன் பட்டாசுகளின் அபாயகரமான தன்மை குறித்து நன்கு தெரிந்த பயிற்சி பெற்ற நபர்கள் தானா என்பதை உறுதி செய்திட வேண்டும். மின் வயர்களோ, கேபிள்கள் ஸ்விட்களோ இடைநிறுத்தப்பட்டவாறு இருக்க கூடாது. இவை குழாய்களாக சுவர்களுக்குள் உறுதியானதாக இருக்க வேண்டும். உரிமத்தில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாக பட்டாசு பொருட்கள் இருக்க கூடாது. கடைபிடிக்கப்பட வேண்டிய விதி எண் 11-ன் படி பட்டாச பொருட்கள் இருப்பு பதி வேட்டில் பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ரசாயன பொருட்கள், பட்டாசு தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் எதுவும் படாசு விற்பனை கடையில் இருப்பு வைக்கவோ விற்பனை செய்யவோ கூடாது. இது உரிமத்தின் (படிவம் எல்.இ.5) படி தடைசெய்யப்பட்டுள்ள தாகும்.
பட்டாசுகள் அனுமதிக்கப் பட்ட உரிமம் வழங்கப்பட்ட இடத்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். மின்சார மெயின் மீட்டர், சர்க்யூட் பிரேக்கர் போன்றவை பட்டாசு கடைக்கு வெளிப் பக்கம் இருக்க வேண்டும். குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது. பாதுகாப்புக்காக எந்நேரமும் ஈரச்சாக்குகள், தண்ணீர் வாளிகள் மற்றும் மணல் வாளிகளை தேவையான எண்ணிக்கையில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பரிசுப் பெட்டிகள் தயா ரிப்பது கடையின் உள்பகுதியிலோ அருகிலுள்ள கடையிலோ கடைபகுதியிலோ எங்கும் மேற்கொள்ள கூடாது. புகைப்பிடித்தல் கூடாது. "பட்டாசு விற்பனை கடை முன்பு பட்டாசு வெடிக்க கூடாது" என்ற வாசகம் கொண்ட எச்சரிக்கை பலகை அல்லது பேனர் பொதுமக்கள் அறியும் வண்ணம் கடைகளின் முன்பு வைக்கப்பட வேண்டும். வெடிபொருட்கள் விதி 2008-ன் படி அங்கீகரிக்கப்பட்ட உரிமம் பெற்ற தயாரிப்பாளர்க ளிடமிருந்து ஒப்புதலளிக் கப்பட்ட முத்திரையுடைய பெட்டிகளையே பட்டாசு விற்பனையாளர்கள் வாங்க வேண்டும். டிரக், கார் போன்ற வாகனங்களை பட்டாசு விற்பனை கடை அருகில் நிறுத்தம் செய்வதை தவிர்த்திட வேண்டும். மேற்படி வாகனங்களை இயக்கும்போது தீப்பொறி ஏற்பட்டு விபத்து நடைபெற வாய்ப்புள்ளதால் இவற்றை கண்டிப்பாக தவிர்த்திட வேண்டும். உதிரி பட்டாசுகளை விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். கடைகளை மூடும்போது அனைத்து மின் இணைப்புக ளையும் துண்டித்த பின்னரே கடையை மூட வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல், பெயிண்ட், எண்ணெய் மற்றும் காகிதங்களை கடைகளிலோ அல்லது கடைகளின் அருகிலோ சேமித்தல் கூடாது. பட்டாசு, அதிர்வேட்டு போன்ற வெடிபொருட்களை உரிமம் பெறாத இடத்தில் தயார் செய்யக்கூடாது. அவ்வாறு தயார் செய்வது கண்ட றியப்பட்டால் வெடி பொருள் சட்ட விதிகளின்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எக்காரணம் கொண்டும் ஓலையால் வேயப்பட்ட கூரையின் கீழ் பட்டாசு பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. சீன பட்டாசுகள் விற்பனை செய்யக்கூடாது. அவசர கால எண் 112-ஐ பொதுமக்கள் அவசர தேவைக்கு பயன் படுத்தலாம்.
பாதுகாப்பாக இருந்து மற்றவர்களையும் பாதுகாப்பாக இருக்க செய்து அரசின் வழிகாட்டு நெறி முறைகளை கடைபிடித்து விபத்தில்லா மாசில்லா பண்டி கையை பொதுமக்களுக்கும், உரிமம் பெற்ற பட்டாசு விற்பனையாளர்களுக்கும் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கலெக்டர் தகவல்
- அக்டோபர் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
வேலுார்:
தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு ஆகிய பண்டிகை காலங்க ளில், வெடிப்பொருட்கள் விதிகள் 2008-ன் கீழ், வேலுார் மாவட்டத்தில் தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையா ளர்கள் மற்றும் வணிகர்கள், தற்காலிக உரிமம் பெற கீழ்வரும் ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தோடு, கடை அமைவிடத்துக்கான சாலை வசதி, கட்ட டத்துக்கான வரைபடம் (சொந்த இடமாக இருப்பின், பத்திர ஆவண நகல், வாடகை கட்டடமாக இருப்பின் ஒப்பந்த ப்பத்திரம்), உரிமத்துக்கான கட்டணம் செலுத்தி யதற்கான அசல் சலான், மனுதாரர் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து, அக்டோபர் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதிக்கு பின்னர் ஆன்லைனில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில் கடந்த 2018-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட வேண்டும்.
- பட்டாசு கட்டுப்பாடுகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
புதுடெல்லி:
தீபாவளி பண்டிகை நேரத்தில் வெடிக்கப்படும் பட்டாசுகளால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது. எனவே பட்டாசு தயாரிக்க, விற்பனை செய்ய, பாதுகாத்து வைக்க தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் அர்ஜூன் கோபால், கோபால் சங்கர நாராயணன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அதுதொடர்பாக மத்திய அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் விளக்கங்களை கேட்ட பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு பட்டாசு வெடிப்பதற்கு அதிரடியாக கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது.
இதன்படி பேரியம் என்கிற அலுமினிய பொருட்களுடன் கூடிய சரவெடிக்கு தடை விதிக்கப்பட்டதுடன், குறைந்த அளவிலான சத்தம் மற்றும் புகையை வெளியிடக்கூடிய பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதிக அளவில் அலுமினியம் சேர்க்கப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. ஆன்லைனில் பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பேரியம் இல்லாத பட்டாசுகளை தயாரிப்பது சிரமமாகும். அது சரவெடியில் குறைவான அளவே உள்ளது. எனவே அதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு சரவெடி பட்டாசு விவகாரத்தில் தீர்ப்பை வழங்கியது. சரவெடி பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
சரவெடியில் பேரியம் வேதிப்பொருள் சேர்ப்பது அத்தியாவசியமாகிறது. அது சுற்றுச்சுழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்கிற பட்டாசு நிறுவனங்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. அவர்களது மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
பேரியம், சரவெடி ஆகிய இரண்டில் மட்டுமே தீர்ப்பு கூறியிருப்பதாகவும், மூல வழக்கின் விசாரணை தொடர்ச்சியாக நடைபெறும் என்றும் தெரிவித்த நீதிபதிகள் தீபாவளிக்கு சுற்றுச்சூழலை பாதிக்காத பட்டாசுகளை மட்டுமே வெடிப்பதற்கு அனுமதிக்க முடியும் என்பதை தெளிவுப்படுத்தினர்.
நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் மேலும் கூறியிருப்பதாவது:-
தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில் கடந்த 2018-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட வேண்டும். பட்டாசு கட்டுப்பாடுகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
வழக்கு விசாரணையின்போது பசுமை பட்டாசுகளில் எந்த மாதிரியான மூலப்பொருட்களை சேர்க்க வேண்டும் என்பது பற்றிய வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு எப்போது பட்டியலிடப்படும் என்று மனுதாரர்களும் எதிர்மனுதாரர்களும் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த நீதிபதிகள் "ஹேப்பி தீபாவளி" என்று தெரிவித்தனர். காலையில் 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவில் 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்