search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95366"

    • தஞ்சை உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
    • ஒரே நாளில் 114 மி.மீ. கனமழை பதிவானது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களா கவே வெயில் சுட்டெரித்து வந்தது. பகல் நேரங்களில் தொடங்கும் வெப்பத்தின் தாக்கம் இரவிலும் நீடித்தது.

    அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் வாட்டி வதைத்தது.

    இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாகவே பகலில் வெயில் சுட்டெரித்தா லும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.தஞ்சையில் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது.

    மாலையில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது.

    பின்னர் இரவில் இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. தஞ்சை உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக குருங்கு ளத்தில் 24.70 மி.மீ. மழை பதிவானது.

    இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு:-

    குருங்குளம் -24.70,

    பட்டுக்கோட்டை -16,

    தஞ்சாவூர் -14,

    அதிராம்பட்டினம் -13.70,

    வெட்டிக்காடு -13,

    திருக்காட்டுப்பள்ளி -9.

    மாவட்டத்தில் ஒரே நாளில்

    114.60 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது

    • மா, பலா, பூக்கள் உள்ளிட்ட பணப்பயிர்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
    • அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இருந்த நெற்பயிர்கள் மண்ணோடு சாய்ந்தது.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, நெடுவாசல், மரமடக்கி, வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், கீரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கறம்பக்குடி தாலுகாவிற் குட்பட்ட வாணக்கண்காடு, பெரியவாடி, கருக்காக் குறிச்சி, மாங்கோட்டை, நம்பன்பட்டி, மழையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் அதிக அளவில் வாழை சாகுபடி செய்வது வழக்கம்.

    மேலும் மா, பலா, பூக்கள் உள்ளிட்ட பணப்பயிர்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் அதிக அளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டது. வாழை பயிரில் தார்கள் விட்டு மகசூல் கிடைக்கும் நேரத்தில் நேற்று இரவு திடீரென பயங்கர சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

    இந்த சூறாவளி காற்றில் ஆலங்குடி மற்றும் கறம்பக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தில் இருந்த வாழை மரங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் ஒடிந்து சாய்ந்தது. அதேபோல் அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இருந்த நெற்பயிர்கள் மண்ணோடு சாய்ந்தது.

    இதனால் விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சூறாவளி காற்றுடன் மழையும் பெய்ததால் வாழை மரங்கள் முழுவதுமாக சேதமடைந்ததை இரவே சென்று பார்வையிட்ட விவசாயிகள் தங்களின் உழைப்பு முற்றிலுமாக வீணானதாக பெரும் கவலை அடைந்தனர்.

    எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் தாமதப்படுத்தாமல் பார்வையிட்டு கள ஆய்வு செய்து விவசாயிகளுக்கு போதிய இழப்பிடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • தென்கிழக்கு அரபி கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை இப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து புயலாக மாறியுள்ளது.
    • அரபி கடலில் மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் தென்மேற்கு பருவ மழை தாமதமான நிலையில் இப்போது அரபிக்கடல் பகுதியில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.

    தென்கிழக்கு அரபி கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை இப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு பைப்போர்ஜாய் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை வங்கதேச மாநிலம் வழங்கி உள்ளது. பிபோர்ஜாய் என்றால் பேராபத்து என்று பொருள்.

    தற்போது அரபிக்கடலில் உருவாகி உள்ள பிபோர்ஜாய் புயலானது வடக்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது. அதன்படி இந்த புயல் அடுத்த 6 மணி நேரத்தில் தீவிரமடைந்து வலுவானதாக உருமாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    மேலும் இந்த புயல் கிழக்கு மத்திய மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில் கோவாவுக்கு மேற்கு, தென்மேற்கே 920 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பைக்கு தென்மேற்கே 1050 கிலோ மீட்டர் தொலைவிலும், போர்பந்தரில் இருந்து தென்-தென் மேற்கே 1130 கிலோ மீட்டர் தொலைவிலும் போர்பந்தருக்கு தெற்கில் 1430 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    அடுத்த 24 மணி நேரத்தில் பிபோர்ஜாய் புயலானது வடக்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக தீவிரம் அடைந்து கிழக்கு மத்திய அரபி கடலில் தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

    இந்த புயலால் கேரளா முதல் மகாராஷ்டிரா வரையிலான அரபிக் கடல் பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அப்போது அரபி கடலில் மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இதன்காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    • வறண்ட வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
    • வாழை மரங்கள் சாய்ந்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கி தற்போது வரை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து 104 டிகிரி வரை வெயில் அளவு பதிவாகி உள்ளது. மேலும் கடந்த சில தினங்களாக கடலூர் மாவட்டத்தில் வழக்கத்தை விட அதிக அளவில் வெயிலில் தாக்கம் அதிகரித்து அனல் காற்று வீசி வந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும் வறண்ட வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று கடலூர் மாவட்டத்தில் காலை 11.30 மணி அளவில் 101.48 டிகிரி வெயில் அளவு பதிவாகி இருந்தது. இதன் காரணமாக வழக்கம் போல் அனல் காற்று வீசி வந்த நிலையில் மதியம் திடீரென்று வானிலை மாற்றம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது. கடலூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கொட்டி தீர்த்த மழையாக மாறியது. மேலும் இடி மின்னல் மற்றும் காற்று வீசி வந்ததால் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டன. இந்த மின்தடை சுமார் 4 முதல் 5 மணி நேரம் நீடித்தது.

    சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்திருந்த நிலையில், இந்த திடீர் மழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் குளிர்ச்சியாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடும் வெப்ப சலனம் மற்றும் வெயிலின் தாக்கம் 104 டிகிரிக்கு மேல் இருந்து வந்த நிலையில் ஏன் திடீர் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது என வானிலையாளர் பாலமுரு கனிடம் கேட்டபோது, தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக வழக்கத்தை விட அதிக அளவில் வெப்ப சலனம் ஏற்பட்டு சுட்டெரிரக்கும் வெயில் இருந்து வந்தது. வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவக்காற்று தொடங்கி வரும் நிலையில் தமிழகத்தில் வெப்பம் குறைந்து காணப்படும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று கேரள மாநிலத்தில் தொடங்காத காரணத்தினாலும் கடலில் ஈர பதக் காற்று நேரம் தவறி வருவதால் கடும் வெப்பம் நிலவி வந்தது. ஆனால் நேற்று மதியம் கிழக்கிலிருந்து வரக்கூடிய ஈரப்பத காற்று சரியான நேரத்திற்கு உள்ளே வந்தது. மேலும் அதிக வெப்ப சலனம் இருந்து வந்த நிலையில் , திடீரென்று ஈரப்பதற்காற்று உள்ளே வந்ததால் வானிலை மாற்றம் ஏற்பட்டு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.

    பலத்த காற்று ஏற்படுவதற்கான காரணம் என்னவென்றால் எப்போதும் மேற்கு திசையில் இருந்து வரக்கூடிய வறண்ட காற்று வெப்ப சலனமாக மாறி அனல் காற்று அதிகரிப்பதாகும். மேலும் கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே வெப்ப சலனம் அதிகமாக உள்ள நேரத்தில் திடீர் மழை ஏற்பட்டபோது பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது குறிப்பிடத்தக்கதாகும் என தெரிவித்தார். கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் வழக்கமான விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்த நிலையில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் சுமார் 500- க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்து விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    வேப்பூர் - 75.0 பண்ருட்டி - 71.0 கீழச்செருவாய் - 36.0 லக்கூர் - 19.4 கலெக்டர் அலுவலகம் - 18.0 கடலூர் - 16.4 குப்பநத்தம் - 12.8 மீ-மாத்தூர் - 12.0 வானமாதேவி - 11.2 பெல்லாந்துறை - 9.6 விருத்தாசலம் - 9.0 வடக்குத்து - 8.3 எஸ்.ஆர்.சி.குடிதாங்கி - 6.0 காட்டுமயிலூர் - 5.0 தொழுதூர் - 4.0 கொத்தவாச்சேரி - 3.0 குறிஞ்சிப்பாடி - 3.0 பரங்கிப்பேட்டை - 2.8 அண்ணாமலைநகர் - 2.2 புவனகிரி - 2.0 சிதம்பரம் - 1.6 என மொத்தம் - 328.30 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது

    • திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பல இடங்களில் மரங்கள் முறிந்து மின்கம்பங்களில் விழுந்தன.
    • மின்வாரிய ஊழியர்கள் மரங்களை அகற்றி சேதம் அடைந்த மின்கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் இன்னும் குறையவில்லை. தொடர்ந்து பல இடங்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரியை தாண்டி கொளுத்துகிறது. எனினும் அவ்வப்போது சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்று மாலை திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் திரண்டு மழை பெய்தது. திருவள்ளூர், காக்களூர், பெரியகுப்பம், ஈக்காடு, மணவாளநகர், புட்லூர், ராமாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கன மழையாக கொட்டியது.

    சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சூறைக்காற்று காரணமாக திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலை, ஜே.என்.சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் உள்ள கட்டிடங்களின் மேல் அமைக்கப்பட்ட விளம்பர பேனர்கள், போஸ்டர்கள் கிழிந்து பறந்தன. சில இடங்களில் மின் கம்பங்களில் கிழிந்த பேனர்கள் தொங்கியதால், வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துடன் சாலையில் பயணித்தனர்.

    மேலும் சூறைக்காற்று காரணமாக திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பல இடங்களில் மரங்கள் முறிந்து மின்கம்பங்களில் விழுந்தன. இதனால் மின்தடை ஏற்பட்டது. திருவள்ளூர் பகுதியில் மாலை 4 மணிக்கு ஏற்பட்ட மின்தடை மாலை 6 மணிக்கு சீரானது. ஆனால் மின்கம்பங்கள் சேதம் அடைந்த கிராமங்களில் விடிய, விடிய மின்தடையால் பொது மக்கள் தவித்தனர்.

    மின்வாரிய ஊழியர்கள் மரங்களை அகற்றி சேதம் அடைந்த மின்கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
    • உடனடியாக சாய்ந்த நெற்பயிர்களை கணக்கீடு செய்து அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

    தஞ்சாவூர்:

    காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படுகிறது. இது தவிர கோடை கால நெல் சாகுபடியும் நடைபெறும்.

    தஞ்சை மாவட்டத்தில் தற்போது பல்வேறு இடங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கோடைகால நெற்பயிர்கள் அறுவடை செய்யும் பணி நடந்து வந்தது.

    இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

    அதிலும் குறிப்பாக கண்டிதம்பட்டு, புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாமல் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 30 ஏக்கருக்கும் மேல் கோடைகால நெற்பயிர்கள் வயலிலே தண்ணீர் தேங்கி சாய்ந்தன. மாவட்டம் முழுவதும் கணக்கிட்டால் சாய்ந்த நெற்பயிர்களின் ஏக்கர் அளவு அதிகரிக்கும். இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பயிர்கள் நல்ல முறையில் வளர்ந்து வந்தது. அறுவடை செய்யும் நேரத்தில் நேற்று திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளது. மேலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் எந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இன்னும் குறைந்தது மூன்று நாட்களுக்காவது மழை இன்றி வெயில் அடித்தால் மட்டுமே தேங்கிய தண்ணீரை வெளியேற்றி பயிர்களை ஓரளவாது காப்பாற்ற முடியும். தற்போது தண்ணீர் தேங்கி பயிர்கள் சாய்ந்து கிடப்பதால் மகசூல் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக சாய்ந்த நெற்பயிர்களை கணக்கீடு செய்து அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

    • இன்று பிற்பகல் கருமேகங்கள் சூழ்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென மழை பெய்தது.
    • மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக கனமழை பெய்துள்ளது

    அக்னி நட்சத்திர காலம் நிறைவடைந்த போதிலும் தமிழகத்தில் வெப்பம் தணியவில்லை. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில், சென்னையில் இன்று சட்டென்று வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. இன்று பிற்பகல் கருமேகங்கள் சூழ்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென மழை பெய்தது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்தது. வண்டலூர், பெருங்களத்தூர், தி.நகர், கிண்டி, கோயம்பேடு, நெற்குன்றம் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்தது.

    மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக கனமழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவி வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • உயர் அழுத்த மின் கம்பிகள் மீது மரம் முறிந்து விழுந்ததால் நகர் முழுதும் மின்தடை ஏற்பட்டது.
    • பிரதான சாலையில் பெரிய அளவிலான ராட்சத மரம் விழுந்ததால் அங்கு ஒரு வழிபாதையில் போக்குவரத்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

    எடப்பாடி:

    கடந்த சில தினங்களாக எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழைப்பொழிவு ஏதும் இன்றி வறண்ட வானிலை நிலவி வந்தது. பகல் நேரங்களில் கடும் வெயில் சுட்டெரித்த நிலையில், நகர் முழுவதும் அனல் காற்று வீசியது.

    இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை இரவு) திடீரென இடி, மின்னலுடன் பலத்த சூறைக்காற்று வீசியது. அதனை தொடர்ந்து பெய்த கனமழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. பலத்த காற்றுக்கு ஈடு கொடுக்க முடியாமல், எடப்பாடி அடுத்த கேட்டுக்கடை பகுதியில் எடப்பாடி-சேலம் பிரதான சாலையின் குறுக்கே ராட்சத மரம் முறிந்து விழுந்தது. உயர் அழுத்த மின் கம்பிகள் மீது மரம் முறிந்து விழுந்ததால் நகர் முழுதும் மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில் எடப்பாடி நகராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையின் குறுக்கே விழுந்த மரத்தினை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பிரதான சாலையில் பெரிய அளவிலான ராட்சத மரம் விழுந்ததால் அங்கு ஒரு வழிபாதையில் போக்குவரத்துகள் இயக்கப்பட்டு வருகிறது. நகரின் பல இடங்களில் மின் பாதைகளில் பழுது ஏற்பட்டதால் தொடர்ந்து நள்ளிரவு வரை நகர் முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளது. இடி மின்னலுடன் பெய்த பலத்த மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.

    • திருவலாங்காடு ஊராட்சியில் நேற்று மாலை முதல் இரவு வரை இடி, மின்னல் மற்றும் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
    • மணவூர் கிராமத்தில் உள்ள வீடுகளில் 12 மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர்:

    திருத்தணி அடுத்த திருவலாங்காடு ஊராட்சியில் நேற்று மாலை முதல் இரவு வரை இடி, மின்னல் மற்றும் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.

    இதனால் அந்த பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சூறாவளி காற்று காரணமாக திருவாலங்காடு அடுத்த மணவூர் கிராமத்தில் சாலையோரம் மற்றும் வீடுகளில் இருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்தன. மேலும் அந்த பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்து சேதம் அடைந்தன.

    மணவூர் கிராமத்தில் உள்ள வீடுகளில் 12 மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்ற னர், இதையடுத்து ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பங்களை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்,

    • சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால், சுவர் இடிந்து விழுந்தது. அதில் செல்வி தலையில் பலத்த காயமடைந்தார்.
    • தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரப்பகுதி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரமாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    இதேபோல், சந்தனகிரி பகுதியில் மாரியம்மன், விநாயகர் உள்ளது. இதன் அருகே இருந்த பழமை வாய்ந்த அரசமரம், வேப்பமரம் ஆகியவை நேற்று பெய்த மழையில் கோவில் கலசத்தின் மேல் சாய்ந்தது. இதில் கோவில் சுவர் இடிந்தது. இதனால் பக்தர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.

    இதனிடையே தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஒருபுறம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை வெயிலில் தாக்கத்திலிருந்து மீண்டு வந்ததாகவும் ஒரு சிலர் கூறுகின்றனர்.ஆத்தூர் நகரில் பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. ஆத்தூர் பஸ் நிலையப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த நேரம் காப்பாளர் அலுவலகமும் மழையால் சேதமடைந்தது.

    இதேபோல் தலைவாசல் அருகே உள்ள சார்வாய் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி (வயது 40). இவர் ஆடுகள் மேய்த்து வருகிறார். நேற்று மாலை தலைவாசல் பகுதியல் மழை பெய்தது. இதையடுத்து மழைக்கு ஒதுங்குவதற்காக, செல்வி ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடத்தில் இருந்த ஹாலோ பிளாக்ஸ் கல்லால் கட்டப்பட்ட வீட்டின் அருகே ஆடுகளுடன் ஒதுங்கியுள்ளார்.

    அப்போது, தொடர் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால், அந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அதில் செல்வி தலையில் பலத்த காயமடைந்தார். ஒரு ஆடு உடல் நசுங்கி பலியானது.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த செல்வியை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது.
    • சாய்ந்த வாழைகளை வேளாண் துறை அதிகாரிகள் கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது.

    இந்த சூறாவளி காற்றில் கடுகாம்பாளையம், தோட்டகாட்டூர், ஆலங்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டு சில தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த செவ்வாழை,நேந்திரன், கதளி உள்ளிட்ட 500-க்கும் வாழை மரங்கள் சாய்ந்து சேதமானது.

    ஒரு வாழை நடவு செய்ய சுமார் 10 முதல் 150 ரூபாய் வரை செலவு செய்து இன்னும் சில தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சூறாவளி காற்றால் வாழைகள் சாய்ந்தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    மேலும் சாய்ந்த வாழைகளை வேளாண் துறை அதிகாரிகள் கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிரிடபட்ட வாழை மரங்களுக்கு காப்பீடு செய்து இருந்தும் காற்றினால் சாய்ந்த மரங்களுக்கு அரசு இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில்லை எனவும், பெரும்பாலும் இயற்கை சீற்றத்தின் போது காற்றினால் வாழை மரங்கள் சேதம் ஆவதாகவும் அவ்வாறு காற்றினால் சேதம் அடைந்த வாழை மரங்களுக்கும் காப்பீட்டு தொகையை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் பெய்த கனமழையால் 10 பேர் உயிரிழந்தனர்.
    • பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் மரங்கள் முறிந்து விழுந்தன. பல இடங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்தன.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மழை மற்றும் மழை சார்ந்த விபத்துக்களில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதில் டோங்க் மாவட்டத்தில் பெய்த கனமழையால் 10 பேரும், ஆல்வார், ஜெய்ப்பூர் மற்றும் பிகானீரில் தலா ஒருவர் பலியாகினர்.

    மேலும் பலர் காயமடைந்தனர்.

    டோங்க் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பயங்கரமான கனமழை பெய்தது. இதனால் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் பல இடங்களில் வீடுகள், மின்கம்பங்கள் சேதமடைந்தன.

    இதுதொடர்பாக பேரிடர் மீட்புக்குழுவினர் கூறுகையில், புயல் காரணமாக கடந்த இரு தினங்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி செய்து வருகிறோம் என தெரிவித்தனர்.

    ×