என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 95595"
- திருமண நாளாக இருந்தாலும் எப்படியாவது தேர்வு எழுதி விட வேண்டும் என்று அனிதா முடிவு செய்தார்.
- திருமண நாளும் நெருங்கிவிட்ட நிலையில் தனது விருப்பத்தை வருங்கால கணவரிடம் தயங்கியபடி அனிதா தெரிவித்துள்ளார்.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ஓடக்கரையை சேர்ந்தவர் செல்வராஜ். காய்கறி வியாபாரியான இவருக்கு இசக்கிராணி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இருவரும் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
இதனிடையே மூத்த மகளான அனிதாவுக்கும் கட்டாலங்குறிச்சியை சேர்ந்த யோசேப்பு மகன் சாமுவேல் கில்டன் என்பவருக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நிச்சயக்கப்பட்டது. பி.ஏ. தமிழ்த்துறை 3-ம் ஆண்டு படித்து வந்த அனிதா தேர்வை எதிர்நோக்கி இருந்தார். திருமண நாளான 25-ந்தேதி (நேற்று) அவருக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது.
ஏனென்றால் அதே நாளில் தான் அவருக்கான கல்லூரி தேர்வும் நடப்பதாக இருந்தது. படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட அனிதா முந்தைய தேர்வுகளில் எல்லாம் முதலிடத்தை பிடித்து வந்துள்ளார். திருமண நாளாக இருந்தாலும் எப்படியாவது தேர்வு எழுதி விட வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.
இதனை தனது பெற்றோரிடம் தெரிவித்த போதிலும், தனது எண்ணம் ஈடேறுமா என்று தவித்த நிலையில் இருந்து வந்துள்ளார். இதனிடையே திருமண நாளும் நெருங்கிவிட்ட நிலையில் தனது விருப்பத்தை வருங்கால கணவரிடம் தயங்கியபடி தெரிவித்துள்ளார்.
இதனை கேட்ட மணமகன் உடனடியாக அனிதாவின் விருப்பத்திற்கு பச்சைக்கொடி காட்டி உள்ளார். இந்நிலையில் நேற்று காலையில் இவர்கள் இருவருக்கும் காயல்பட்டினத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடித்த கையோடு மணமக்கள் இருவரும் காரில் கல்லூரிக்கு சென்றனர். குறித்த நேரத்தில் அனிதா தேர்வை எழுதினார். அவரை கல்லூரியின் பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
- மகன்களுக்கு 30 வயதுக்குமேல் ஆகியும் திருமணம் ஆகவில்லை என்று நாகேஸ்வரி மன வருத்தத்தில் இருந்தார்.
- 2-வது மகன் விவேக் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி சென்றனர்.
ராயபுரம்:
புதுவண்ணாரப்பேட்டை, கிராஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவர் ராணுவ ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி நாகேஸ்வரி (வயது 57). இவர்களது மகன்கள் நவீன்(வயது34), விவேக்(32).
மகன்களுக்கு 30 வயதுக்குமேல் ஆகியும் திருமணம் ஆகவில்லை என்று நாகேஸ்வரி மன வருத்தத்தில் இருந்தார். இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. விரைவில் மகன்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நாகேஸ்வரி அடிக்கடி தனது கணவரிடம் கூறி வந்தார்.
வழக்கம்போல் நேற்று காலையும் மகன்களின் திருமணம் தொடர்பாக நாகேஸ்வரி கணவரிடம் வாக்குவாதம் செய்தார். இதனை கணவர் அசோகன் கண்டித்ததாக தெரிகிறது.
ஏற்கனவே மகன்களுக்கு திருமணம் நடைபெறவில்லை என்று மனவேதனையில் இருந்த நாகேஸ்வரி திடீரென சமையல் அறையில் இருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல்கருகிய நாகேஸ்வரி சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்து போனார். இதைத்தொடர்ந்து நேற்று மாலை நாகேஸ்வரியின் இறுதி சடங்குநடைபெற்று உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது அவரது 2-வது மகன் விவேக் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி சென்றனர்.
எனினும் தாயின் இழப்பை விவேக்கால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் வீட்டில் இருந்த விவேக் திடீரென எழுந்து மண்ணெண்ணை கேனுடன் காசிமேடு பகுதியில் உள்ள நாகூர் தோட்டம் பகுதிக்கு சென்றார். அங்குள்ள காலி இடத்தில் அவர் திடீரென தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகிய விவேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விவேக்கின் உடலை மீட்டு பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விவேக் தனது தாய் நாகேஸ்வரி மீது அதிக பாசம் வைத்து இருந்தார். நேற்றுமதியம் தாய் தீக்குளித்தபோது வீட்டில் இருந்த விவேக் பார்த்து கதறி துடித்து உள்ளார். இதனால் தாயின் நினைவில் அவர் மனவேதனையில் இருந்து உள்ளார். இந்நிலையில் இன்று காலை விவேக்கும் தீக்குளித்து தற்கொலை செய்துவிட்டார்.
இது தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார். தாய்-மகன் அடுத்தடுத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கணவன்-மனைவிக்குள்ளும் செல்போன்கள் பாதிப்பை ஏற்படுத்துவதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
- மனைவியுடன் உரையாடும்போது அவரது பேச்சின் மீது 66 சதவீதம் பேர் கவனம் பதிப்பதில்லை.
ஸ்மார்ட்போன் உலகம், தொலை தூரத்தில் வசிப்பவர்களை முகம் பார்த்து வீடியோ காலில் பேசும் அளவுக்கு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. மறுபுறம் ஒரே குடும்பத்துக்குள் இடைவெளியை அதிகப்படுத்தியும் விடுகிறது. நேருக்கு நேர் பார்த்து பேசுவதற்கு நேரம் கிடைத்தாலும் கூட தங்கள் அறைக்குள் இருந்தபடி செல்போனிலேயே மூழ்கி பொழுதை கழிக்க வைத்துவிடுகிறது.
குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே மட்டுமல்ல கணவன்-மனைவிக்குள்ளும் செல்போன்கள் பாதிப்பை ஏற்படுத்துவதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனம் ஒன்று இது தொடர்பான ஆய்வை நடத்தியது. இந்தியாவை பொறுத்தவரை திருமணமான தம்பதியர்களில் 88 சதவீதம் பேர் அதிகப்படியான ஸ்மார்ட்போன் பயன்பாடு தங்கள் உறவை பாதிப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஐதராபாத், பெங்களூரு, அகமதாபாத், புனே உள்பட பல்வேறு நகரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர். ஸ்மார்ட்போன் சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் திருமணமான தம்பதிகளிடையே நடத்தை மற்றும் உளவியல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் ஆய்வின் போது கவனத்தில் கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது திருமணமான இந்திய தம்பதியரில் 67 சதவீதம் பேர், தங்கள் மனைவியுடன் நேரத்தை செலவிடும்போது கூட ஸ்மார்ட்போனுடன் இணைந்திருப்பதை ஒப்புக்கொண்டனர். ஸ்மார்ட்போன் காரணமாக தங்கள் மனைவியுடனான உறவு பலவீனமடைந்திருப்பதாக 66 சதவீத கணவர்கள் தெரிவித்துள்ளனர். 70 சதவீதம் பேர் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தும்போது தங்கள் மனைவி குறுக்கீடு செய்தால் எரிச்சல் அடைவதையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். மனைவியுடன் உரையாடும்போது அவரது பேச்சின் மீது 66 சதவீதம் பேர் கவனம் பதிப்பதில்லை. செல்போனை பார்த்தபடியே மனைவியின் பேச்சுக்கு தலையாட்டுவதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
84 சதவீதம் பேர் தங்கள் மனைவியுடன் அதிக நேரம் செலவிட விரும்புவதாகவும், ஆனால் தங்களுடைய தனிப்பட்ட விருப்பங்களுக்கும், செல்போன் பார்ப்பதற்கும் அதிக நேரத்தை செலவிடுவதால் மனைவியுடன் குறைந்த நேரத்தையே செலவிட முடிவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். ஸ்மார்ட்போன்கள் மக்களை சோம்பேறிகளாக்குகின்றன என்பதற்கு முரணாக, 55 சதவீதம் பேர் தங்கள் ஆற்றல் திறனை அதிகரிக்க ஸ்மார்ட்போன் உதவுவதாக கூறியுள்ளனர். தங்கள் அறிவை மேம்படுத்துவதற்கு உதவியாக இருப்பதாகவும் 59 சதவீதம் பேர் ஒப்புக்கொண்டுள்ளனர்.
- வைகாசி மாத சுபமுகூர்த்த தினம் என்பதால் 9 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
- கோவில் முழுவதும் நாதஸ்வர மங்கள இசை முழங்கியப்படி இருந்தது.
சென்னிமலை:
சென்னிமலையில் புகழ் பெற்ற முருகன் கோவில் உள்ளது. மலை மேல் அமைந்துள்ள இக்கோவிலில் சுபமுகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று வைகாசி மாத சுபமுகூர்த்த தினம் என்பதால் சென்னிமலை முருகன் கோவிலில் 9ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
இதனால் அதிகாலையில் இருந்தே கோவிலில் உறவினர்கள் கூட்டம் அலைமோதியது. 9 திருமணம் நடந்ததால் கோவில் முழுவதும் நாதஸ்வர மங்கள இசை முழங்கியப்படி இருந்தது.
திருமணம் முடிந்ததும் மணமக்கள் ேகாவிலை சுற்றி வந்து முருகன் சாமியை தரிசனம் செய்தனர்.
பின்னர் அவர்கள் உறவினர்களுடன் போட்டோ எடுத்து கொண்டனர். கோவில் வளாகம் முழுவதும் திருமண கோஷ்டியினர் அதிகளவில் வந்திருந்தனர்.
திருமணத்தில் கலந்து கொள்ள உறவினர்கள் அதிகளவில் வந்ததால் மலை மீது அவர்கள் வந்த வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டு இருந்தது.
- புருஷோத்தமன் முன்கூட்டியே சொந்த ஊருக்கு வந்து திருமண ஏற்பாடுகளை செய்து வந்தார்.
- மணமகள் மிங்மிங் பட்டுப் புடவையும், மணமகன் புருஷோத்தமன் கோட் சூட் அணிந்து திருமண வரவேற்பில் கலந்து கொண்டனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், நகரி, கொத்தப்பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் புருஷோத்தமன். பி.இ.கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரான இவர் சீனாவில் உள்ள கார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
அதே நிறுவனத்தில் சீனாவை சேர்ந்த மிங்மிங் என்று இளம்பெண் கேஷியராக வேலை செய்து வருகிறார். ஒரே நிறுவனத்தில் புருஷோத்தமன், மிங்மிங் வேலை செய்து வந்ததால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அவர்களது பெற்றோர்களிடம் கூறினர்.
அவர்களது பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.
புருஷோத்தமன் முன்கூட்டியே சொந்த ஊருக்கு வந்து திருமண ஏற்பாடுகளை செய்து வந்தார். நேற்று முன்தினம் சீனாவில் இருந்து தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் மணமகள் நகரிக்கு வந்தார்.
அவர்களுக்கு மணமகன் வீட்டார் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மணமகள் மிங்மிங் பட்டுப் புடவையும், மணமகன் புருஷோத்தமன் கோட் சூட் அணிந்து திருமண வரவேற்பில் கலந்து கொண்டனர்.
இந்து முறைப்படி மணமகள் திருமண முகூர்த்த புடவையும், மணமகன் வேட்டி சட்டை அணிந்து வந்து மணமேடையில் அமர்ந்தனர்.
பின்னர் பெற்றோர்கள் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். மணமக்களை திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் வாழ்த்தி சென்றனர்.
- இரண்டு ஆண்டுகள் காதலித்து வந்துள்ளதால் தைரியமாக மணப்பெண் காத்திருந்தார்
- மணமகன் திருமண ஆடை அணியாமல் தாலி கட்டினார்
உத்தர பிரதேச மாநிலம் பெரேலி பகுதியில் வசித்து வந்த இருவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இருவரும் சுமார் இரண்டரை ஆண்டுகள் பழகி வந்தனர். இதனால் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இந்த நிலையில் திடீரென திருமண நாள் அன்று மணமகன் திருமணம் நடக்கும் இடத்தில் இருந்து ஓடிவிட்டார்.
இதனால், மணமகள் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், இரண்டரை ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்ய இருந்த மணமகள் கவலைப்படாமல் மணமகனுக்காக காத்திருந்தார்.
நேரம் செல்ல செல்ல அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் போன் செய்து, எங்கு இருக்கிறார்?, திருமணத்திற்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கும் நிலையில் எங்கு சென்றாய்? என்று கேட்டுள்ளார்.
திருமணத்திற்கு எனது தாயாரை அழைத்து வர சென்றுள்ளேன் என மணமகன் சமாளித்துள்ளார். ஆனால், மணமகள் அதை நம்பாமல், மணமகனை உறவினர்களுடன் சேர்ந்து தேட ஆரம்பித்துள்ளார். அப்போது பெரேலி நகரின் புறநகரில் உள்ள ஒரு பஸ் நிலையில் பேருந்தில் உட்கார்ந்து இருந்தது கண்டுபிடித்தனர். சுமார் 20 கி.மீ. தூரத்தில் இருக்கும் அந்த பேருந்து நிலையத்தில் இருந்து மணமகனை அழைத்து வந்தனர்.
பின்னர், ஒரு கோவில் முன் வைத்து திருமணம் நடைபெற்றது. மணமகள் திருமண உடையில் இருந்தாலும், மணமகன் திருமண ஆடை அணியவில்லை.
திருமணத்திற்கு வந்த நபர்கள், மணமகள் மனம் தளாராமல் ஓடிய மணமகனை பிடித்து திருமணம் செய்த தைரியத்தை வெகுவாக பாராட்டிச் சென்றனர்.
மணமகனுக்கு சளி பிடித்துள்ளதாகவும், அதனால் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
- மணமக்களின் பெற்றோர் இந்த திருமணத்தை யூத முறைப்படி நடத்த முடிவு செய்தனர்.
- இறுதியில் ஹீப்ரு பாடல்கள் படியும், நடனமாடியும் இந்த விழா நடந்தது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் ஏராளமான யூத ஆலயங்கள் உள்ளன. மேலும் இங்கு யூத இனத்தை சேர்ந்தவர்களும் வசித்து வந்தனர். தற்போது இந்த ஆலயங்கள் அனைத்தும் காட்சிகூடங்களாக மாறிவிட்டன. இதனால் இங்கு திருமணம் போன்ற சடங்குகள் இப்போது நடப்பதில்லை.
இந்நிலையில் கொச்சியை சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரியின் மகள் மஞ்சுஷா மரியம் இம்மானுவேலுக்கும், அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி ரிச்சர்ட்டு ரோவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
மணமக்களின் பெற்றோர் இந்த திருமணத்தை யூத முறைப்படி நடத்த முடிவு செய்தனர். தற்போது யூத ஆலயங்களில் இந்த திருமணம் நடப்பதில்லை என்பதால் கொச்சியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் யூத ஆலயம் போன்ற கூடாரம் அமைக்கப்பட்டது.
அந்த கூடாரத்தில் யூத முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது. இதனை நடத்தி கொடுக்க இஸ்ரேலை சேர்ந்த மதகுரு வந்திருந்தார். அவர் முன்னிலையில் முதலில் மணமக்கள் மோதிரம் மாற்றி திருமண ஒப்பந்தம் செய்து கொண்டனர். அடுத்து கெதுபா படித்து, கண்ணாடியை உடைத்து திருமண பந்தத்தில் இணைந்தனர். இறுதியில் ஹீப்ரு பாடல்கள் படியும், நடனமாடியும் இந்த விழா நடந்தது.
இதில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதுபற்றி விருந்துக்கு வந்தவர்கள் கூறும்போது, கடந்த 2008-ம் ஆண்டு இங்கு யூத முறைப்படி திருமணம் நடந்தது. அதன்பின்பு 15 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் அதுபோன்ற திருமணம் நடந்துள்ளது, என்றனர்.
- திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பிரபாகரன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.
- புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியில் உள்ள அண்ணா நகரைச் சேர்ந்தவர் 33 வயது பெண். இவர் அரசு பணிக்காக போட்டி தேர்வு எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருந்தார்.
அதேபகுதியைச் சேர்ந்த தனசீலன் மகன் பிரபாகரன் (35). இவர் சேலம் மாவட்டத்தில் லேபர் கோர்ட்டில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சிலமாதங்களுக்கு முன்பு அந்த பெண், பிரபாகரனும் போட்டி தேர்வுகளுக்காக படித்து வந்தபோது, அதற்காக விண்ணப்பிப்பதற்காக தனது படிப்பு சான்றிதழ் மற்றும் சுயவிவரங்களை அவரிடம் கொடுத்தார். அப்போது அதில் இருந்த பெண்ணின் செல்போன் எண்ணை வைத்து கொண்டு தினமும் பிரபாகரன் அவரிடம் பேசிவந்தார்.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து இருவரும் பலஇடங்களில் காதலர்களாக சுற்றி வந்ததாக தெரிகிறது. அப்போது அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பிரபாகரன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.
இதில் அந்த பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். அதன்பின்னர் இந்த விவரம் குறித்து பெற்றோர்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக தனியார் மருத்துவமனையில் கர்ப்பத்தையும் கலைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து பிரபாகரனுக்கு அரசு வேலை கிடைத்தது. இதனால் அவர் அந்த பெண்ணிடம் பேசாமல் இருந்து வந்தார். அவர் பலமுறை பிரபாகரனை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது போனை எடுக்காமல் இருந்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் மொரப்பூர் போலீஸ் நிலையத்தில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பிரபாகரன் கற்பழித்து விட்டதாக கூறி புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.
- விசாரணையில் பாலசுப்பிரமணியம் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்தது தெரியவந்தது.
- போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை சூலூர் அருகே உள்ள அருகம்பாளைத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 27). கூலித் தொழிலாளி.
இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருமத்தம்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. கடந்த ஒரு ஆண்டுகளாக 2 பேரும் காதலித்து வந்தனர்.
கடந்த 14-ந் தேதி பாலசுப்பிரமணியம் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்றார். பின்னர் அவர் சிறுமியை பெற்றோர்களுக்கு தெரியாமல் கரவழிமாதப்பூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்தார்.
இதனை தொடர்ந்து பாலசுப்பிரமணியம் சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். அப்போது அவரது பெற்றோரிடம் சிறுமிக்கு 19 வயது என கூறினார். இதனை அவர்கள் உண்மை என நம்பினர்.
பின்னர் பாலசுப்பிரமணியம் சிறுமியை தனது வீட்டில் வைத்து 5 நாட்களாக பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். இதற்கிடையே பாலசுப்பிரமணியம் சிறுமியை திருமணம் செய்ததை அறிந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து சூலூர் ஊராட்சி ஒன்றிய மகளிர் நல அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அவர் சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பாலசுப்பிரமணியம் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து 5 நாட்களாக சிறை வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர் சம்பவம் குறித்து கருமத்தப்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் 17 வயது சிறுமியை திருமணம் செய்து 5 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த கூலித் தொழிலாளி பாலசுப்பிரமணியம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
- போலீசாரின் அறிவுரைப்படி திருமணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தனர்.
குளச்சல்:
குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே உள்ள பிள்ளைத்தோப்பை சேர்ந்தவர் லெனின் கிறாஸ் (வயது 29). என்ஜினீயரான இவர், துபாயில் வேலை பார்த்து வருகிறார்.
நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த பட்டதாரி பெண்ணுடன் வாட்ஸ் அப் குழு மூலம் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நட்பாக பழகிய இருவரும் கடந்த 3 வருடமாக காதலிக்க தொடங்கினர்.
லெனின் கிறாஸ் ஊருக்கு வந்தபோது, காதல் ஜோடியினர் பல்வேறு பகுதிகளில் ஒன்றாக சுற்றி வந்தனர். அப்போது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் வெளிநாடு சென்ற லெனின் கிறாஸ், காதலிக்கு செலவுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் அனுப்பி உள்ளார். தொடர்ந்து வாட்ஸ் அப் மூலம் இருவரும் தினமும் பேசி வந்தனர்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு லெனின் கிறாஸ் ஊர் திரும்பினார். அவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் திட்டமிட்டனர். இதற்காக குளச்சல் அருகே சைமன்காலனியை சேர்ந்த ஒரு பெண்ணை பார்த்து திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்தனர்.
இந்த தகவல் காதலிக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காதலன் லெனின் கிறாசை தேடி வந்தார். அப்போது தான் அவருக்கு திருமண தேதி பற்றிய தகவல் கிடைத்துள்ளது.
உடனடியாக சைமன் காலனிக்கு விரைந்து சென்ற காதலி பங்குத்தந்தையிடம் முறையிட்டார். இதனால் 11-ந் தேதி லெனின் கிறாசிற்கு வேறு பெண்ணுடன் நடக்கவிருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.
திருமண நேரத்தில் ஆலயத்தில் சென்று காதலனின் திருமணத்தை நிறுத்திய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார். மனுவை பரிசீலித்த அவர், நடவடிக்கை எடுக்க குளச்சல் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். இதில் அவர் அளித்த புகாரில் ஆதாரங்கள் இருந்ததால், காதலியை திருமணம் செய்யும்படி, லெனின் கிறாசுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர். இதையடுத்து இருவரும் குளச்சலில் உள்ள ஒரு குருசடி முன்பு மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் போலீசாரின் அறிவுரைப்படி திருமணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தனர்.
வேறு பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்த காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்தி 9 நாட்கள் போராட்டம் நடத்திய காதலியின் துணிச்சலை சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.
- திருமணத்திற்கு பிறகு தனது மனைவியுடன் ஊருக்கு வந்த பழனிச்சாமியை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.
- 21-ம் நூற்றாண்டில் இன்னும் இதுபோன்ற கொடுமைகள் உள்ளதா என பழனிச்சாமி வேதனையுடன் உள்ளார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா பாலப்பட்டி ஊராட்சி பழையமாரப்பன்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி(62). இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் விசயமாக ஹைதராபாத்துக்கு வேலைக்கு சென்றார். அப்போது அங்கு வேறு சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தனது மனைவியுடன் ஊருக்கு வந்த பழனிச்சாமியை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.
மாற்றுசமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததால் ஊருக்குள் வரக்கூடாது என தெரிவித்தனர். இதனையடுத்து பழனிச்சாமி தனது மனைவி மற்றும் பெற்றோருடன் கூம்பூர் அருகே தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். தனது ஊரில் உள்ளவர்களை எப்போதாவது பார்க்க வேண்டும் என நினைத்தால் கூட ஊருக்குள் விடாமல் தடுத்து வந்தனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவரது தந்தை இறந்துவிட்டார். இறப்பு செய்தி சொல்வதற்காக அந்த ஊருக்கு சென்றபோது அவர்கள் யாரும் வரவில்லை. இதனால் மனம் வெறுத்து தனது குடும்பத்தினர் உதவியுடன் தந்தையை எடுத்துச்சென்று அடக்கம் செய்தார். தற்போது இவரது தாயாரும் முதுமை காரணமாக இறக்கும் தருவாயில் உள்ளார். அவரும் தான் இறந்துவிட்டால் ஊர்மக்களை அழைத்து தன்னை அடக்கம் செய்யவேண்டும் என்று தனது ஆசையை தெரிவித்துள்ளார்.
ஆனால் ஊர்மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. 21-ம் நூற்றாண்டில் இன்னும் இதுபோன்ற கொடுமைகள் உள்ளதா என பழனிச்சாமி வேதனையுடன் உள்ளார். காதல் திருமணம் செய்தது தவறா, அவர்கள் வாழ தகுதியற்றவர்களா என கதறி அழுது தனது தாய் நிம்மதியாக ஊர்மக்கள் அனைவரையும் பார்க்க அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- 1 லட்சம் அடி உயரத்திற்கு சென்றதும், விண்வெளியில் திருமணம் செய்து கொள்ளலாம்.
- விண்வெளியில் திருமணம் செய்து கொள்ள ஏற்கனவே ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
திருமணம் செய்யும் பாரம்பரியம் தற்போது பல எல்லைகளை கடந்துவிட்டது. திருமணம் செய்து கொள்ளும் இடத்தில் துவங்கி, ஆடை, அணிகலன், உணவு என்று எல்லாவற்றுக்குமே ஏராளமான ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. வித்தியாசமான இடங்களில் திருமணம் செய்து கொள்வது, இயற்கை அழகியல் நிறைந்த பகுதியில் மாலை மாற்றிக் கொள்வது போன்ற சம்பவங்கள் தற்போதைய டிரெண்ட் ஆக இருக்கின்றன.
இந்த வரிசையில், யாரும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு விண்வெளியில் திருமணம் செய்து கொள்ளும் வசதியை தனியார் நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது. அந்த வகையில் விண்வெளியில் திருமணம் செய்து கொள்ள நபர் ஒருவருக்கு ரூ. 1 கோடி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் என்று அழைக்கப்படும் புதிய நிறுவனம் திருணம் செய்து கொள்ள விரும்பும் ஜோடிகளை கார்பன் நியூட்ரல் பலூன் ஒன்றில் விண்வெளிக்கு அனுப்புகிறது. இந்த ராட்சத பலூனில் ஏராளமான ஜன்னல்கள் உள்ளன. பூமியில் இருந்து கிளம்பும் ஜோடி, சரியாக 1 லட்சம் அடி உயரத்திற்கு சென்றதும், விண்வெளியில் இருந்தபடி பூமியின் அழகை கண்டுகளித்துக் கொண்டே திருமணம் செய்து கொள்ளலாம்.
திருமணம் முடிந்ததும் திருமண தம்பதிகளாக அவர்கள் மீண்டும் பூமிக்கு கொண்டுவரப்படுவர். இந்த முறையில் விண்வெளியில் திருமணம் செய்து கொள்ள ஏற்கனவே ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதுபோன்ற திருமண சேவையை, அடுத்த ஆண்டில் இருந்து துவங்கி வைக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்