search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98138"

    சென்னை ஆலோசனை கூட்டத்திற்கு பங்கேற்க சென்ற ரெயில்வே அதிகாரி திருச்சி தண்டவாளத்தில் பிணமாக மீட்க்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி:

    மதுரை அருகே உள்ள தத்தனேரி கன்னியப்பபுரத்தை சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன் (வயது 34). இவர் திருச்சி தென்னக ரெயில்வே மதுரை ஜங்சன் அலுவலகத்தில் கூடுதல் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி பத்ம பிரியா என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று 22-ந் தேதி சென்னையில் ரெயில்வே அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க மதுரையில் இருந்து நேற்று முன்தினம் 21-ந் தேதி இரவு 9 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சவுந்திரபாண்டியன் புறப்பட்டு சென்றார்.

    ஆனால் நேற்று சென்னைக்கு அவர் சென்று சேரவில்லை. அவரது செல்போனுக்கு நேற்று காலை குடும்பத்தினர் தொடர்புகொண்ட போது, ரிங் போய்க்கொண்டே இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் செல்போன் டவர் உதவியுடன் சவுந்திரபாண்டியன் இருக்கும் இடத்தை தேடினர். அப்போது திருச்சியில் இருந்து 10 கி.மீட்டர் தூரத்தில் குளத்தூருக்கும், பூங்குடி என்ற கிராமத்திற்கும் இடையில் தண்டவாளத்தில் படுகாயத்துடன் சவுந்திரபாண்டியன் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவரது செல்போனும் பிணத்தின் அருகிலேயே கிடந்தது. சவுந்திரபாண்டியன் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்று பிரேத பரிசோதனை செய்த பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    இதற்கிடையே ரெயிலில் படுக்கை வசதி பெட்டியில் பயணம் செய்த சவுந்திரபாண்டியன், தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டது. ரெயில்வே ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அவர் ரெயிலில் பயணம் செய்தபோது வாசலில் நின்ற போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது மர்ம நபர்கள் அவரை கொலை செய்து வீசினார்களா? என்பது மர்மமாக உள்ளது. பிரேத பரிசோதனையின் போது சவுந்திரபாண்டியன் சாவில் உள்ள மர்மம் விலகும் என கூறப்படுகிறது.

    வேகமாக சென்ற ரெயிலில் இருந்து இறங்கிய மாணவர் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

    விருதுநகர்:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பல்லவன்கோவிலைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் யோகேஸ்வரன் (வயது 22). இவர் திண்டுக்கல்லில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார்.

    நேற்று விருதுநகர் அருகே கள்ளிக்குடியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரிக்கு யோகேஸ்வரன் வந்தார். பின்னர் மாலையில் ரெயில் மூலம் திண்டுக்கல் செல்வதற்காக விருதுநகர் ரெயில் நிலையத்திற்கு வந்தார்.

    அப்போது திண்டுக்கல் செல்லும் ரெயிலில் ஏறுவதற்கு பதிலாக குருவாயூர் சென்ற ரெயிலில் யோகேஸ்வரன் தவறுதலாக ஏறிவிட்டார். இதையறிந்த யோகேஸ்வரன் சுதாரித்துக் கொண்டு வேகமாக சென்ற ரெயிலில் இருந்து இறங்கினார். இதில் அவர் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள், யோகேஸ்வரனை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே யோகேஸ்வரன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து விருதுநகர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரத்தில் ஓடும் ரெயிலில் மாணவியை கற்பழிக்க முயன்ற போலீஸ்காரர் மீது போஸ்கோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் தில்ஷாத். இவர் தனது துறை ரீதியிலான பணி காரணமாக கோழிக்கோட்டில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரெயிலில் பயணம் செய்தார்.

    அவர் சென்ற அதே பெட்டியில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க மாணவி ஒருவரும் பயணம் செய்தார். மாணவியிடம் போலீஸ்காரர் சகஜமாக சிரித்து பேசிக் கொண்டு வந்தார். அந்த மாணவியும் போலீஸ்காரருடன் பேசிக் கொண்டு பயணம் செய்தார்.

    அந்த ரெயில் திருவனந்தபுரத்தை நெருங்கியபோது அந்த பெட்டியில் பயணம் செய்த பெரும்பாலான பயணிகள் இறங்கி விட்டனர். இதை பயன்படுத்திக் கொண்டு அந்த மாணவியிடம் போலீஸ்காரர் தில்ஷாத் செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரை கற்பழிக்கவும் முயன்றார். இதனால் அந்த மாணவி அவரை எதிர்த்து போராடினார்.

    மேலும் தனது செல்போனிலும் அவரை புகைப்படம் எடுத்தார். அதற்குள் ரெயில் திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. உடனே அந்த போலீஸ்காரர் ரெயிலில் இருந்து இறங்கி தப்பிச் சென்று விட்டார். பாதிக்கப்பட்ட மாணவி தனக்கு நடந்த கொடுமை பற்றி ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.

    செல்போனில் படம் எடுத்த தகவலையும் அவர்களிடம் தெரிவித்தார். அந்த புகைப்படம் மூலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி போலீஸ்காரர் தில்ஷாத்தை கைது செய்தனர். அவர் மீது போஸ்கோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    திருவனந்தபுரம் அருகே படிஞானத்துறை பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் (வயது 41). மத போதகரான இவர் தனக்கு சொந்தமான ஆட்டோவில் அந்த பகுதியைச் சேர்ந்த பள்ளி சிறுமிகளை பள்ளிக்கூடத்தில் சென்று விடுவது வழக்கம்.

    சமூக சேவை போல அவர் இதை செய்து வந்ததால் அவரது ஆட்டோவில் பல பள்ளி மாணவிகள் பயணம் செய்தனர். இந்தநிலையில் அவரது ஆட்டோவில் பயணம் செய்த ஒரு சிறுமி படித்த பள்ளிக்கூடத்துக்கு சைல்டு லைன் ஊழியர்கள் சென்று மாணவிகளிடம் பாலியல் கொடுமை பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

    அப்போது 5 பள்ளி சிறுமிகள் மதபோதகர் மனோஜால் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட தகவல் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. இதுபற்றி சைல்டு லைன் அமைப்பினர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோஜை கைது செய்தனர். #tamilnews
    ஈரோடு ரெயில் நிலையத்தில் சுற்றி திரிந்த செல்போன் திருடனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது 3-வது நடைமேடையில் சந்தேகப்படும்படி ஒரு வாலிபர் சுற்றி திரிந்து கொண்டு இருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    விசாரணையில் அந்த வாலிபர் ராம்நாடு, பரமகுடி, பூம்பூரை சேர்ந்த பிரபாகரன்(வயது30) என்பதும், செல்போன் திருடன் என்பதும் தெரிய வந்தது. பலரிடம் கை வரிசை காட்டி உள்ளதும் தெரிய வந்தது.

    இதையடுத்து ஈரோடு ரெயில்வே போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கோவையில் இருந்து ரெயில் மூலம் கொல்லத்துக்கு ரூ. 5 கோடி ஹவாலா பணம் கடத்திய 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #HawalaMoney
    கோவை:

    கோவையில் இருந்து ரெயில் மூலம் கொல்லத்துக்கு ஹவாலா பணம் கடத்தி வரப்படுவதாக பாலக்காடு தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து அவர் போலீசாருடன் வனவக்கோடு ரெயில் நிலையம் சென்றார். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது வட மாநிலத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ஒரு ரெயில் வந்தது.

    ரெயில்வே போலீசார் உதவியுடன் அந்த ரெயிலில் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு பெட்டியில் சந்தேகப்படும் படியாக 5 பேர் இருந்தனர்.

    அவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சோதனை நடத்தினார்கள்.

    அவர்களது மேல் சட்டையில் சோதனை செய்த போது சட்டை போல் உள்ளே பனியன் அணிந்து இருந்தனர். அதில் ரூ. 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கத்தை கத்தையாக இருந்தது. ரூ. 2 கோடி பணத்தை அவர்கள் பனியனில் மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இது ஹவாலா பணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்டவர்கள் கொல்லத்தை சேர்ந்த சுரேந்திரன், விவேக், மத்திய பிரதேசத்தை சேர்ந்த பதாம் சிங், பிரமோத், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரபாகரன் என்பது தெரிய வந்தது.

    இந்த பணத்தை கோவையில் இருந்து கொல்லத்துக்கு கடத்தி சென்றதாக கைதானவர்கள் தெரிவித்தனர். இதற்கு முன் பல முறை இவர்கள் ஹவாலா பணத்தை கேரளாவுக்கு கடத்தி சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இவர்கள் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களிடம் எப்படி பழக்கம் ஏற்பட்டது? கோவையில் யாரிடம் இருந்து இந்த பணத்தை வாங்கி வந்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #HawalaMoney
    சேலம் அருகே ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கருப்பூர்:

    சேலம் மாவட்டம் கரூப்பூர் ரெயில் நிலையம் - தின்னப்பட்டிக்கு இடையே நாலுக்கால்பாலம் என்ற இடத்தில் ரெயில் தண்டவாளத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இன்று பிணமாக கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இறந்து கிடந்த வாலிபரின் சட்டை பையில் ஆதார் கார்டு இருந்தது. அதை பார்த்த போது அதில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சந்திரன் மகன் சுஜீஸ் என இடம் பெற்றிருந்தது.இதனால் இறந்தது சுஜீஸ்தானா? என்பது குறித்தும், அவர் எப்படி இறந்தார்? ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிணமாக கிடந்த வாலிபர் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ரெயில்வேயில் அடுத்த 6 மாதத்தில் 1 லட்சத்து 31 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறியது பாஜகவின் மற்றொரு மோசடி அறிவிப்பு என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். #RailwaysMinister #PChidambaram
    புதுடெல்லி :

    மத்திய மந்திரி பியு‌ஷ் கோயல், ரெயில்வேயில் அடுத்த 6 மாதத்தில் 1 லட்சத்து 31 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்றும், 2 ஆண்டுகளுக்குள் மேலும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-



    ரெயில்வேயில் கடந்த 5 ஆண்டுகளில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 976 பதவிகள் காலியாக உள்ளன. இந்நிலையில் தற்போது மத்திய அரசு விழித்துக்கொண்டு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்து உள்ளது.

    இது பா.ஜ.க. அரசின் மற்றொரு மோசடி அறிவிப்பு ஆகும். பல்வேறு அரசு துறைகளில் ஏராளமான காலி பணியிடங்கள் இருக்கின்றன. அதே சமயம் நாட்டில் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். இதுதான் இன்றைய இந்தியாவின் நிலை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #RailwaysMinister #PChidambaram
    ரெயில்வே துறையில் கூடுதலாக 2.5 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அத்துறையின் மந்திரி பியுஷ் கோயல் இன்று தெரிவித்துள்ளார். #RailwaysMinister #PiyushGoyal #250Lakhlvacancies #additionalvacancies #250LakhRailwayvacancies
    புதுடெல்லி:

    இந்தியாவில் அதிகமான சொத்துகளுடன், ஏராளமான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மிகப்பெரிய துறையாக ரெயில்வே துறை இருந்து வருகிறது. இத்துறையில் சுமார் 14 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். ஆண்டொன்றுக்கு சுமார் ஒன்றரை லட்சம் பேர் புதிதாக பணியமர்த்தப்படுகின்றனர்.

    இந்நிலையில், ரெயில்வே துறையில் கூடுதலாக 2.5 லட்சம்  புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அத்துறையின் மந்திரி பியுஷ் கோயல் இன்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக இனி ரெயில்வே துறை இருக்கும் எனவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். #RailwaysMinister #PiyushGoyal #250Lakhlvacancies #additionalvacancies #250LakhRailwayvacancies 
    பரமக்குடி ரெயில் நிலையத்தில் ரூ.37 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பரமக்குடி:

    மதுரையில் இருந்து இன்று காலை வழக்கம் போல் பயணிகள் ரெயில் மண்டபத்துக்கு புறப்பட்டது. காலை 9 மணிக்கு ரெயில் பரமக்குடி வந்தடைந்தது. அப்போது ரெயிலில் இருந்த மர்ம நபர்கள் தங்களிடம் இருந்த ஒரு பையை பிளாட் பாரத்தில் வீசினர். ரெயில் சென்றுவிட அந்த பை கேட்பாரற்று கிடந்தது.

    ரெயில் நிலையம் வந்த மோசஸ் என்பவர் அந்த பையை எடுத்து பார்த்தார். அதில் 2000, 500 ரூபாய் கட்டுகள் என ரூ.37 லட்சத்து 26 ஆயிரம் இருந்தது.

    உடனே மோசஸ் அந்த பையை அங்கிருந்து எடுத்துக்கொண்டு ரெயில் நிலையத்திற்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் மோசஸ்சிடம் இருந்த பணப்பை தங்களுடையது என கூறினர். ஆனால் மோசஸ் தர மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதற்கிடையில் பரமக்குடி நகர் போலீசாருக்கு பணம் சிக்கியது தொடர்பாக தகவல் கிடைத்தது. சப்- இன்ஸ்பெக்டர் ராமசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பணப் பையை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த கும்பலையும், மோசசையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    அங்கு விசாரணை நடத்தியதில் பணத்துக்குரிய எந்த ஆவணங்களும் அவர்களிடம் இல்லை. மேலும் பணம் தங்களுடையது என கூறிய தகவல்களும் நம்ப தகுந்தவையாக இல்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விசாரணை நடத்தி பின்னர் யாருடையது? எதற்காக கடத்தப்பட்டது? ஹவாலா பணமா? என விசாரித்து வருகிறார்கள்.

    திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் தவித்த மதுரை மற்றும் தென்காசியை சேர்ந்த 4 மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    திண்டுக்கல்:

    மதுரை கே.புதூரை சேர்ந்தவர் நாகராஜ். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் கவின்குமார் (வயது16). இவனது நண்பர்கள் குணா (16), சந்தோஷ் (16). இவர்கள் 3 பேரும் 10-ம் வகுப்பு படித்தவர்கள். தற்போது கவின்குமார் பாலிடெக்னிக்கும், சந்தோஷ் ஐ.டி.ஐ., குணா 11-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    வெவ்வேறு இடங்களில் படித்தாலும் 3 பேரும் ஒன்றாகவே வெளியே சுற்றுவது வழக்கம். நடந்து முடிந்த தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் கவின்குமார் வருத்தத்தில் இருந்தார். தனது நண்பருக்காக 3 பேரும் வெளியூர் செல்ல முடிவு செய்தனர்.

    நேற்று இரவு மதுரையில் இருந்து இண்டர் சிட்டி ரெயிலில் திண்டுக்கல் வந்தனர். அதன்பிறகு எங்கு செல்வது என தெரியாமல் ரெயில் நிலையத்திலேயே தவித்தனர்.

    ரெயில்வே போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் மாணவர்கள் நடந்த விபரத்தை கூறினர். இதனையடுத்து அவர்களது பெற்றோர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். பின்னர் அவர்களிடம் ரெயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.

    தென்காசி அருகில் உள்ள செங்கோட்டையை சேர்ந்த ஒலி மகன் முகமதுஅபீன் (12). இவன் தஞ்சாவூர் வடகரையில் உள்ள பள்ளியில் தங்கி உருது படித்து வந்தான். நேற்று பள்ளியை விட்டு வெளியேறி தனது ஊருக்கு செல்வதற்காக நாகப்பட்டிணத்தில் இருந்து ரெயில் மூலம் வந்தார். திண்டுக்கல் ரெயில் நிலையம் வந்ததும் இறங்கி எங்கே செல்வது என தெரியாமல் நின்று கொண்டிருந்தான். ரெயில்வே போலீசார் அவனை விசாரித்து தென்காசியில் உள்ள அவனது அம்மாவுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அவரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

    ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    சூலூர்-சோமனூர் இடையே அருகம்பாளையத்தில் ரெயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடப்பதாக இன்று காலை போத்தனூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றினர். சுமார் 35 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபரின் சட்டைப்பையில் போத்தனூரில் இருந்து ஈரோடு செல்வதற்காக டிக்கெட் இருந்தது. இவர் ரெயிலில் இருந்து கீழே தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரெயிலில் தொங்கியபடி பயணம் செய்த 5 பேர் பரங்கிமலை ரெயில் நிலைய பக்கவாட்டு சுவரில் மோதி உயிரிழந்த சம்பவத்தையடுத்து விபத்து நடந்த பிளாட்பாரத்தை மாற்றி அமைக்கும் பணி தற்போது முடிவடைந்துள்ளது. #TrainAccident #StThomas

    ஆலந்தூர்:

    கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில், பரங்கிமலை ரெயில் நிலையத்தில் 4-வது பிளாட்பாரத்தில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது அந்த ரெயிலில் தொங்கியபடி பயணம் செய்தவர்கள், பக்கவாட்டு சுவரில் மோதி கீழே விழுந்தனர். இந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள்.

    இதையடுத்து, இந்த பிளாட்பாரத்தில் மின்சார ரெயில் செல்வது நிறுத்தப்பட்டது. ஜூலை மாதம் 25-ந்தேதி ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகர் பரங்கிமலை ரெயில் நிலையம் வந்து அதிகாரிகளிடமும், பொது மக்களிடமும் கருத்து கேட்டார்.

    அதை தொடர்ந்து விபத்து நடந்த 4-வது பிளாட்பாரத்தை 2 அடி நகர்த்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பணி ஆகஸ்டு மாதம் தொடங்கியது.

    இரவு பகலாக தண்டவாளத்தை மாற்றும் வேலை நடந்தது. அது இப்போது முடிவடைந்துள்ளது. இந்த பிளாட்பாரத்தின் வழியாக தற்போது எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மட்டுமே செல்லுகின்றன. மின்சார ரெயில்கள் விடப்படவில்லை.

    இந்த நிலையில் பெங்களூரில் இருந்து ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகர் இன்று பரங்கிமலை ரெயில் நிலையம் வந்தார். அங்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ள 4-வது பிளாட்பாரத்தை பார்வையிட்டார். அவர் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    4-வது பிளாட்பாரத்தை மாற்றி அமைக்கும் பணி சிறப்பாக நடந்துள்ளது. ரெயில் நிலைய அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கருத்துக்களை கேட்ட பின்னர் இந்த பிளாட்பாரத்தின் தண்டவாளம் 2 அடி நகர்த்தப்பட்டுள்ளது. அதிகமான பயணிகள் தொங்கிக் கொண்டு சென்றதால்தான் பக்கவாட்டு சுவரில் அவர்கள் மோதி விழுந்துள்ளனர்.

    அடுத்து தானாக மூடும் கதவுகளை கொண்ட ரெயில் பெட்டிகளுடன் மின்சார ரெயில்களை இயக்குவது குறித்து ஆலோசிக்கப்படும். இந்த பிளாட்பாரத்தில் மீண்டும் மின்சார ரெயில்களை விடுவது பற்றி அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TrainAccident #StThomas

    ×