search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99024"

    நிலம் வாங்கி தருவதாக கூறி அரிசி ஆலை அதிபரிடம் ரூ.1½ கோடி மோசடி செய்த திரூப்பூரை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த சிங்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவரிடம் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த நில விற்பனை இடைத்தரகர்கள் மூர்த்தி, நடராஜன் ஆகியோர் திருப்பூரில் நிலம் வாங்கித் தருவதாக கூறி ரூ.1½ கோடியை 2016-ம் ஆண்டு வாங்கினர்.

    இதன் பின்னர் 3 ஏக்கர் நிலத்தை வாங்கி அவர்கள் சண்முகம் பெயரில் பத்திரப்பதிவு செய்யாமல் தங்களது பெயரில் பதிவு செய்துள்ளனர். இதனை அறியாத சண்முகம், நிலத்தின் உரிமையாளரிடம் கேட்டபோது ஏற்கனவே மூர்த்தி, நடராஜன் பெயரில் நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டு விட்டதாக கூறியுள்ளார்.

    அதிர்ச்சி அடைந்த சண்முகம் இதுகுறித்து மூர்த்தி, நடராஜனிடம் கேட்ட போது சரிவர பதில் கூறாமல் கொலை மிரட்டல் விடுத்தனர்.

    ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சண்முகம் இது குறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னியிடம் புகார் செய்தார்.

    மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து திருப்பூரில் பதுங்கியிருந்த மூர்த்தியை கைது செய்தனர். தலைமறைவான நடராஜனை தேடி வருகின்றனர்.
    இங்கிலாந்து இளம் பெண் ஒருவர் ரிசர்வ் வங்கி பெயரில் போலி வலைதளம் ஆரம்பித்து திருவள்ளூர் வாலிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்துள்ளார்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆரணி பகுதியில் வசித்து வருபவர் திலீப்குமார். கைத்தறி நெசவாளர்.

    இவருக்கு பேஸ்புக், வாட்ஸ்-அப் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த லிண்டா போஸ்மன் என்ற பெண் அறிமுகமானார்.

    அவர் துணிவியாபாரம் சம்பந்தமாக இந்தியா வர இருப்பதாக திலீப்குமாரிடம் தெரிவித்தார். முன்னதாக தனது உடைகளை இந்தியாவிற்கு அனுப்புவதாகவும் அதனை பணம் கட்டி வாங்கி வைத்துக்கொள்ளும் படியும் கூறி இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து வாலிபர் ஒருவர் திலீப் குமாரின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டார். அப்போது ‘‘உங்கள் முகவரிக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. அதை பெற ரூ.48,500 கட்ட வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் பணத்தை கட்ட ரிசர்வ் வங்கி பெயரில் இணையதள முகவரியும் கூறினார். இதனை நம்பிய திலீப்குமார் அந்த முகவரியில் பணத்தை கட்டினார்.

    இதை தொடர்ந்து சில நாட்களுக்கு பிறகு மீண்டும் திலீப் குமாரை தொடர்பு கொண்ட அதே வாலிபர் விமான நிலையத்தில் சோதனை செய்யத போது பார்சலில் வெளிநாட்டு பணம் இருப்பதாகவும், இதற்கு அபராதமாக ரூ.98 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

    மேலும் ஆர்.பி.ஐ.யிடம் தடையில்லாத சான்றிதழ் பெற ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கட்டவேண்டும். மீறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டும் வகையில் பேசினார்.

    இதனால் சந்தேகம் அடைந்த திலீப்குமார் தனது செல்போனில் தொடர்பு கொண்டவர்கள் பற்றி விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் அனைவரும் கும்பலமாக மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதுவரை ரூ.3 லட்சம் வரை திலீப்குமார் மோசடி கும்பலின் வங்கி கணக்கில் பணம் கட்டி இருக்கிறார். அனைத்தும் ஆன்-லைன் மூலமாக நடைபெற்றுள்ளது.

    போலியாக ரிசர்வ் வங்கி பெயரில் இணையதளம் ஆரம்பித்து நூதனமாக கும்பல் மோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.

    ஏமாற்றபட்டதை உணர்ந்த திலீப் குமார் இதுபற்றி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி நண்பரிடம் ரூ.1¾ லட்சம் மோசடி செய்த வக்கீல் குமாஸ்தாவை போலீசார் கைது செய்தனர்.
    ஆரணி:

    ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 45). இவரும் வெட்டியாந்தொழுவம் கிராமத்தை சேர்ந்த சிவா (45) என்பவரும் மாணவ பருவத்தின்போது ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாக படித்தவர்களாவர். நண்பர்களான இவர்கள் அடிக்கடி சந்தித்து கொள்வர்.

    சிவா வேலூரில் உள்ள வக்கீல் ஒருவரிடம் குமாஸ்தாவாக பணியாற்றி வருகிறார். சீனிவாசன் வேலை எதுவுமின்றி இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீனிவாசனை சிவா சந்தித்தார். அப்போது “நான் வக்கீல் குமாஸ்தாவாக இருப்பதால் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நண்பர்கள் பழகியுள்ளனர். அங்கு அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கலெக்டர் அலுவலகத்தில் உனக்கு உதவியாளர் வேலை வாங்கி தருகிறேன். ரூ.2 லட்சம் கொடுத்தால் உடனே வேலை வாங்கிவிடலாம்” என கூறியுள்ளார்.

    கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 9-ந் தேதி ஆரணி தாலுகா அலுவலகம் முன்பு இருவரும் சந்தித்துக்கொண்டனர். அப்போது வேலை வாங்கி தருவதாக கூறிய சிவாவிடம் ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்தை சீனிவாசன் கொடுத்துள்ளார். விரைவில் வேலை வாங்கித் தருவதாக பணத்தை அவர் வாங்கிக்கொண்டார்.

    ஆனால் பல மாதங்கள் ஆகியும் சிவா வேலைவாங்கித்தரவில்லை. இதனால் பணத்தை திரும்ப தரும்படி சீனிவாசன் கேட்டபோது அது குறித்து பதில் அளிக்காமல் இருந்தார். இந்த நிலையில் தன்னிடம் வேலைவாங்கி தருவதாக ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்தை மோசடி செய்து விட்டதாக ஆரணி நகர போலீஸ் நிலையத்தில் சீனிவாசன் புகார் அளித்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் ஜமீஸ்பாபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மோசடி செய்த வக்கீல் குமாஸ்தா சிவாவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர். 
    ஈரோட்டை சேர்ந்த பெண்ணுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 3 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு சோலார் இரணியன் வீதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி சாந்தா (வயது 30).

    இவர் கிராம நிர்வாக அதிகாரி வேலை பெற முயற்சித்து வந்தார். இந்த தகவல் அறிந்த கரூர் மாவட்டம் பரஞ்சர்வழி குடித்தெருவை சேர்ந்த செந்தில்குமார் (57) என்பவர் சாந்தாவை தொடர்பு கொண்டார்.

    ‘‘உங்களுக்கு வேலை வாங்கி தருகிறேன்’’ என்று கூறிய செந்தில்குமார், அதற்கு ரூ. 3 லட்சம் வேண்டும் என்று கேட்டார். அவர் கேட்டபடி ரூ. 3 லட்சம் பணத்தை செந்தில்குமாரிடம் சாந்தா கொடுத்தார்.

    ஆனால் செந்தில்குமார் வேலை வாங்கி கொடுக்கவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதையடுத்து செந்தில்குமாரிடம் சாந்தா போன் செய்து கேட்டார்.

    ஆனால் செந்தில்குமார் சரியான பதில் அளிக்கவில்லை. தொடர்ந்து அவரிடம் சாந்தா கேட்டதால், ‘‘வேலை வாங்கி தர முடியாது. உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்’’ என்று கூறி உள்ளார்.

    மேலும் தொடர்ந்து இது பற்றி கேட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது பற்றி ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் சாந்தா புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    கைதான செந்தில்குமார் கரூர் மாவட்டம் நல்லூர் பகுதியில் இது போன்று அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றார்.

    சுமார் 80 பேரை ஏமாற்றி ரூ. 1 கோடி வரை மோசடி செய்துள்ளார். இந்த மோசடி பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

    இது தொடர்பாக நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் செந்தில் குமாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    பின்னர் ஜெயிலில் இருந்து வெளியே வந்த செந்தில்குமார் தற்போது சாந்தாவிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளார். எனவே இதுபோல வேறு யாரிடமும் செந்தில்குமார் மோசடி செய்துள்ளாரா? என்ற விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். #tamilnews
    மதுரையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
    மதுரை:

    மதுரை கே.புதூர் கணேசபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த பூபதிராஜா தல்லா குளம் போலீசில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    மதுரை நாராயணபுரம் பேங்க் காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணனுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

    அவர், கனடாவில் வால்மார்ட் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறியதை நம்பி ரூ.17 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர் வேலை வாங்கித் தராமல் மோசடி செய்து விட்டார்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    திருவண்ணாமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றுள்ளன.
    திருவண்ணாமலை:

    தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படாததால் அதன் நிர்வாக பொறுப்புகளை தனி அதிகாரிகள் நிர்வகித்து வருகின்றனர். இதில் குறிப்பாக கிராம ஊராட்சிகளின் ஒட்டுமொத்த நிதி அதிகாரமும் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 69 ஊராட்சிகளில் அரசு வளர்ச்சி திட்டப் பணிகளை நிறைவேற்றுவதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தெருவிளக்குகள் மாற்றம், மின் மோட்டார் சீரமைப்பு, ஆழ்துளை கிணறு பராமரிப்பு, கால்வாய் சீரமைப்பு போன்ற பணிகளை செய்ததாக போலி ரசீதுகள் தயாரித்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டு உள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்து உள்ளன.

    இதுகுறித்து ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அரவிந்தனிடம் கேட்டபோது, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 69 ஊராட்சிகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் வந்து உள்ளன. இதுகுறித்து இன்று (திங்கட்கிழமை) முதல் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் இந்த ஊராட்சிகளின் கணக்கில் இருந்து நிதி பரிமாற்றம் செய்யும் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது’ என்றார்.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகியிடம் கேட்டபோது, ‘திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளின் நிதி அதிகாரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இருந்தது. வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த கருணாகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். ஒரு அலுவலர் ஓய்வு பெற்றுவிட்டால் மற்றொரு அலுவலர் பொறுப்பேற்கும் வரை நிதி பரிமாற்றம் செய்வது நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி, தற்போது நிதி பரிமாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் நிதி ஆதாரம் குறைவு தான். அதனால் அங்கு மோசடி ஏற்பட வாய்ப்பு இல்லை. இருப்பினும் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்’ என்றார்.
    கூட்டுறவு சங்கங்கள் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்த தந்தை , மகளை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் பரசேரியை அடுத்த நுள்ளி விளையைச் சேர்ந்தவர் ஆலிவர், (வயது 58). கோவையை தலைமையிடமாக கொண்டு ஆலிவர் வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் ஒன்றை தொடங்கினார். குமரி மாவட்டத்தில் இதன் கிளைகள் ராஜாக்கமங்கலத்தில் தலைமையகமாக கொண்டு தொடங்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 15 கிளைகள் செயல்பட்டு வருகிறது. இவற்றின் மண்டல இயக்குனராக ஆலிவரும், மண்டல மேலாளராக ஆலிவரின் மகள் பவுலின் டோராவும் (28), இயக்குனராக மருமகன் தினேசும் (35), ஆலோசகராக ஆலிவரின் நண்பர் பார்த்த சாரதியும் (55) பணிபுரிந்து வந்தனர்.

    இந்த நிறுவன கிளை ஒன்றில் காரங்காடு அருகே செருப்பன்கோட்டையைச் சேர்ந்த நிஷா என்பவர் மானேஜராக பணியாற்றி வந்தார். அவர், இந்த நிறுவனம் குறித்து குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்று கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் மத்திய அரசின் அனுமதியுடன் நடப்பதாக ஆலிவரும், அவரது மகளும் என்னிடம் தெரிவித்தனர். இங்கு பணியில் சேர ரூ.5 லட்சம் பணம் தர வேண்டும் என்றனர். மேலும் மாதந்தோறும் 20 பங்குதாரர் களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. பங்குதாரர்களிடமிருந்து ரூ.500 முதல் ரூ.5000 வரை வசூலிக்க வேண்டுமென்றும் கூறப்பட்டது.

    இது தவிர ரூ.3 லட்சம் பணம் டெபாசிட் செய்ய வேண்டுமென்றும் கூறினர். நான், இங்கு பணியில் சேர்ந்து 70 பங்குதாரர்களையும் 47 தொடர் வைப்பு உறுப்பினர்களையும் சேர்த்தேன். இந்த நிலையில் கோவையில் செயல்பட்டு வந்த ஆலிவரின் நிறுவனம் பணமோசடியில் ஈடுபட்டு கடந்த ஓராண்டாக செயல்படவில்லை என்பது எனக்கு தெரியவந்தது.

    எனவே நான், நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தையும், பங்குதாரர்கள் அளித்த பணம் குறித்தும் நிர்வாகிகளிடம் கேட்டேன். ஆனால் அவர்கள் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. அப்போதுதான் இந்த நிறுவனம் மத்திய அரசின் அனுமதி பெறாததும் தெரிய வந்தது.

    மத்திய அரசின் அனுமதி பெற்ற நிறுவனம் என்று கூறி இந்த நிறுவனம் மக்களை ஏமாற்றி பணத்தை வசூலித்து கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளனர். எனவே இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி இருந்தனர்.

    இந்த மனு மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்துமாரி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கூட்டுறவு சங்கம் நடத்தி ஆலிவரும், அவரது மகள், மருமகன் மற்றும் நண்பர் பணமோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

    முதல் கட்டமாக ஆலிவரும், அவரது மகள் பவுலின் டோராவும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணைக்கு பின்னர் ஆலிவரும், அவரது மகள் பவுலின் டோராவும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் ஆலிவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரது மகள் பவுலின் டோரா தக்கலை பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஆலிவரின் மருமகன் தினேஷ் தற்போது வெளி நாட்டில் பணிபுரிந்து வருகிறார். அவரை இந்தியாவிற்கு வரவழைத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட் டுள்ளனர். இதுபோல ஆலிவரின் நண்பர் பார்த்தசாரதி தலைமறைவாகி விட்டார். அவரை தேடி கண்டுபிடித்து கைது செய்யவும் போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
    சென்னையில் மலிவு விலையில் தங்க காசு தருவதாக கூறி ரூ.14½ லட்சம் மோசடி செய்ததால பெண் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் விஜய குமார். இவர், உறவினர்கள் லாவண்யா, உஷா, இந்திரா காந்தி ஆகியோருடன் அசோக் நகர் உதவி கமி‌ஷனர் வின்சென்ட் ஜெயராஜிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

    நான் எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருகிறேன். கே.கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருகிறேன்.

    கடந்த 2017-ம் ஆண்டு மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவரின் மனைவியான மேனகா (30) மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும்போது எனக்கு அறிமுகமானார்.

    அவர் என்னிடம், “வெளிநாடுகளில் இருந்து தனக்கு தங்க காசுகள் அடிக்கடி வரும். அதை கிராம் ரூ.500-க்கு தருகிறேன் என்று கூறினார்.

    இதை நம்பி நானும் என்னுடைய உறவினர்களான இந்திராகாந்தி, உஷா, லாவண்யா ஆகிய நால்வரும் சேர்ந்து சுமார் 14 லட்சத்து 50ஆயிரம் ரூபாயை கடந்த வருடம் நவம்பர் மாதம் மேனகாவிடம் கொடுத்தோம்.

    ஆனால் இதுவரை சொன்னபடி தங்க காசும் தரவில்லை எங்கள் பணத்தையும் திருப்பி தராமல் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து எம்.ஜி.ஆர். நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சொர்ண களஞ்சியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    வடமதுரை பகுதியில் பான்கார்டு வாங்கித் தருவதாக மோசடி செய்யும் கும்பல் உலாவி வருகிறது.#pancard

    வடமதுரை:

    தனி நபர் வருமானங்களை கணக்கெடுப்பதற்காக பான்கார்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அனைத்து வங்கிகளிலும் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்தாலோ செலுத்தினாலோ பான் கார்டு அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    வடமதுரை, அய்யலூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் பெரும்பாலானோர் விவசாயிகளே. இவர்கள் வங்கி கடன், உதவித் தொகை உள்ளிட்டவைகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை நாடி வருகின்றனர். இதற்கு பான்கார்டு தேவைப்படுவதால் அதனை எடுக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    பான் கார்டு பெறுவதற்கு அரசு சார்பில் மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சில தனியார் நிறுவனங்களும் பான் கார்டு பெற விண்ணப்பிக்க பொது மக்களிடம் ஆவணங்களை பெற்று வருகின்றனர். தற்போது வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதிகளில் சிறப்பு முகாம் என கூறி கும்பல்கள் வருகின்றனர். அவர்கள் பொதுமக்களிடம் குறிப்பிட்ட தொகை மற்றும் ஆவணங்களை பெற்றுக் கொண்டு பான் கார்டு தபாலில் வரும் என கூறிச் செல்கின்றனர்.

    பொதுவாக அதிகபட்சமாக 90 நாட்களுக்குள் பான்கார்டு அனுப்பப்பட்டு விடும். ஆனால் இந்த மோசடி கும்பலிடம் விண்ணப்பித்து நீண்ட நாட்களாகியும் இப்பகுதி மக்களுக்கு பான் கார்டுகள் வரவில்லை. இதனால் ஏமாற்றமடைந்துள்ளனர். ஒரு சில நிறுவன ஊழியர்களை தொடர்பு கொண்டு கேட்டால் சரியான பதில் தருவதில்லை. எனவே அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். #pancard

    தனியார் நிதி நிறுவனத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.3 1/2 லட்சம் கடன் பெற்று திருப்பித்தராமல் மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை வசந்தநகரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் மண்டல மேலாளர் சதீஷ்குமார், மாநகர குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுரை ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த யோகேந்திரன் போலி ஆவணங்கள் மூலம் பலரது பெயரில் எங்கள் நிதி நிறுவனத்தில் ரூ.3 1/2 லட்சம் கடன் பெற்றுள்ளார். அதனை திருப்பிச்செலுத்த மறுத்து வருகிறார்.

    இவருக்கு உடந்தையாக திண்டுக்கல் மாவட்டம், முத்தணம்பட்டியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், வடமதுரை கண்ணன், திண்டுக்கல் அருள்பிரபு ஆகியோர் செயல்பட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இது குறித்து குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் செயல்படும் தனியார் ஜவுளி நிறுவன மேலாளர் பாலகுரு, எஸ்.எஸ்.காலனி போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

    அதில், தனது நிறுவனத்தில் காசாளராக பணியாற்றிய நேரு நகர் ஜீவானந்தம் மனைவி மகேஸ்வரி கடந்த 20-6- 2018 முதல் 2-7-2018 வரையிலான வருமானத்தை கணக்கில் காட்டாமல் ரூ.1 லட்சத்து 43 ஆயிரம் மோசடி செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கேந்திர வித்யாலயா பள்ளியில் எல்.கே.ஜி. சீட் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டவரிடம் பணத்தை திருப்பி கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
    சென்னை:

    அடையாறு இந்திரா நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி சண்முக வடிவு. இவரிடம் துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் எல்.கே.ஜி. சீட் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்துள்ளார்.

    கிண்டி ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் தனது மகளை சேர்ப்பதற்காக சண்முக வடிவு மணிகண்டனிடம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளார். இது தொடர்பாக துரைப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி மணிகண்டனிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

    இந்த நிலையில் கோட்டூர்புரம் சர்தார்பட்டேல் சாலையில் உள்ள ஆஸ்பத்திரி அருகில் வைத்து சண்முக வடிவுக்கு மணிகண்டன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பணத்தை திருப்பி கேட்டால் குடும்பத்தோடு கொன்று விடுவேன் என்று கூறியுள்ளார்.

    இதுபற்றி கோட்டூர்புரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வெளிநாடு செல்போன் அனுப்புவதாக கூறி கோவை பெண்ணிடம் ரூ. 18 லட்சம் மோசடி செய்த மர்மகும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை:

    கோவையை சேர்ந்தவர் சுவேதா (30). இவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது-

    எனது செல்போன் வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வந்தது. அதில் அமெரிக்காவில் ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை ரூ. 30 ஆயிரத்துக்கு தருவதாக கூறப்பட்டு இருந்தது. அதில் சில போன் நம்பர்களும் குறிப்பிடப்பட்டு இருந்தது. நான் அந்த நம்பருக்கு தொடர்பு கொண்டேன். அப்போது ஒரு ஆண், ஒரு பெண் என மாறி மாறி பேசினார்கள்.

    உங்களுக்கு செல்போன் அனுப்புகிறோம். அதற்கான கூரியர் செலவு ரூ. 9 ஆயிரத்து 500 ஆகும். அதனை அனுப்பி வையுங்கள் என கூறினர். அவர்கள் ஒரு அக்கவுண்ட் நம்பரும் கொடுத்தனர். இந்த அக்கவுண்டுக்கு நானும் 9 ஆயிரத்து 500 அனுப்பி வைத்தேன்.

    ஆனால் செல்போன் வரவில்லை. மீண்டும் அதே எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது உங்கள் முகவரிக்கு ஒரு செல்போனுக்கு பதில் 60 செல்போன்கள் அனுப்பி விட்டோம். இந்த செல்போனுக்கு உரிய பணம் மற்றும் கூரியர் செலவு தொகை அனுப்பி வையுங்கள் என கூறி 2,3, அக்கவுண்ட் நம்பர் கொடுத்தனர்.

    அதன்படி நான் ரூ. 18 லட்சத்து 73 ஆயிரத்தை 3 வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தேன். ஆனால் போன் வரவில்லை. பணமும் திரும்பி வரவில்லை. என்னிடம் ரூ. 18 லட்சத்தை 73 ஆயிரத்தை மோசடி செய்து விட்டனர்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். இது தொடர்பாக மோசடி, தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×