search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99437"

    • யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • தென்னை மரங்களை சேதப்படுத்தி, தென்னங் குருத்துகளை பிடுங்கி தின்றன.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் உணவு, நீர் தேடி வன எல்லையிலுள்ள கிராமங்களுக்குள் புகுந்து வருகின்றன.

    திருமூர்த்தி நகர், வலையபாளையம் கிராமங்களில் இரு குட்டிகளுடன் கூடிய 10 யானைகள் கொண்ட கூட்டம் தென்னந்தோப்புகளுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை சேதப்படுத்தி, தென்னங் குருத்துகளை பிடுங்கி தின்றன.

    மேலும் மலையடிவாரத்தில் 1 கி.மீ., வரையில் 20க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பல்வேறு பயிர்களை உண்டதுடன் சோலார் மின் வேலிகளையும், நீர்ப்பாசன கட்டமைப்புகளையும் சேதப்படுத்தின. யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதையடுத்து உடுமலை வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். வன எல்லை கிராமங்களில் யானைகள் நுழைவதைத் தடுக்கவும், கண்காணிக்கவும், அகழி, சோலார் மின்வேலி உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். குருமலை, மாவட்ட பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள யானை வழித்தடங்களை மீட்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • உடுமலை அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் யானை, கரடி, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்கு உள்ளன.
    • சாலையோரங்களில் புற்கள் அதிகமாக வளர்ந்துள்ளன.

    உடுமலை :

    உடுமலை அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் யானை, கரடி, மான், காட்டுமாடு, சிறுத்தை மற்றும் உடும்பு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்கு உள்ளன .தற்போது மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த வனப் பகுதிகளில் வனவிலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் போதுமான அளவு கிடைத்து வருகிறது.

    வெப்பநிலை மாற்றம் காரணமாக உடுமலை வனப் பகுதிகளில் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகி உள்ளது. இதனால் யானை போன்ற பெரிய விலங்குகள் அவ்வப்போது பசுந்தலைகளை ஒடித்து உடலின் பாகங்களில் வருடியபடி உலா வருகின்றன. உடுமலை மூணார்சாலையில் செக்போஸ்ட், ஏழுமலையான் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் புற்கள் அதிகமாக வளர்ந்துள்ளன. இதன் காரணமாக அடர்ந்த வனப் பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் சாலையோரங்களில் முகாமிட்டு பசியாறுவதோடு இளைப்பாறியும் வருகின்றன.குறிப்பாக உடுமலை சின்னார் செக் போஸ்ட் வழித்தடங்களில் பகல் நேரங்களிலேயே யானைகள் உலா வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விழிப்புடன் வாகனங்களை குறைந்த வேகத்தில் இயக்க வேண்டும். காட்டு யானைகளை மிரள வைக்கும்படி ஒலி எழுப்பக் கூடாது. மேலும் அதன் அருகே சென்று செல்பி எடுக்கக் கூடாது என சோதனை சாவடிகளில் வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

    • 2 யானைகளை பிரிக்க முயற்சித்தும் தொடர்ந்து யானைகள் கொஞ்சி குலாவியது.
    • யானைகள் கொஞ்சி குழாவி உற்சாக குளியல் போட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் திருக்கோயில் உள்ளது.

    இக்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி சன்னதி அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் கும்பாபிஷேக விழா கடந்த 19ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.

    இதனை முன்னிட்டு யாகசாலையில் வைத்து பூஜிப்பதற்காக மயிலாடுதுறை காவிரி கரையில் இருந்து கங்கை முதலான பல்வேறு ஆறுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கடங்கள் மூன்று யானைகளின் மீது கொண்டுவரப்பட்டது.

    மாயூரநாதர் அபயாம்பிகை யானை, திருவையாறு ஐயாரப்பர் கோவில் தர்மாம்பாள் யானை, திருக்கடையூர் அபிராமி ஆகிய யானைகள் மீது புனித கடங்கள் ஊர்வலமாக மங்கள வாத்தியங்கள் முழங்க கோயிலை வந்தடைந்தது.

    புனித கடங்கள் யானை மீது இருந்து இறக்கப்பட்ட பின்னர் அருகருகே நின்ற மயிலாடுதுறை அபயாம்பிகை யானை திருவையாறு தர்மாம்பாள் யானை இரண்டும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்தித்துக் கொண்டதால் உற்சாகமடைந்தன.

    யானைகள் புத்துணர்வு மறுவாழ்வு முகாம் நடைபெற்ற போது இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்தித்துக் கொண்ட இந்த இரண்டு யானைகளும் நேற்று மீண்டும் சந்தித்துக் கொண்டதால் ஒன்றோடு ஒன்று முகத்தை உரசியும் துதிக்கையால் பிணைந்தும் ஆரத்தழுவி முத்தமிட்டு மகிழ்ச்சி அடைந்து குதூகலமிட்டனர்.

    மகிழ்ச்சியின் உச்சமாக திருவையாறு யானை கர்ஜித்து முழக்கமிட்டது. யானை பாகன்கள் இரண்டு யானைகளை பிரிக்க முயற்சித்தும் தொடர்ந்து யானைகள் கொஞ்சி குலாவியது. தொடர்ந்து இரண்டு யானைகளை யானைபாகன்கள் தன்னீர் பைப்பு மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து யானைகளுக்கு வெயிலின் தாக்கத்தை குறைத்தனர்.

    அப்போதும் உற்சாகத்துடன் யானைகள் கொஞ்சி குழாவி உற்சாக குளியல் இட்டது பக்தர்களிடையே வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. ஏராளமான பக்தர்கள் யானைகளின் பாசப்பிணைப்பை செல்போனில் படம் பிடித்து மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தனர்.

    • ஒரு யானை ரோட்டை கடப்பதற்கு வேகமாக ஓடி வந்தது.
    • இதைப்பார்த்த வாகன ஓட்டி திடீர் பிரேக் பிடித்தார்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    தற்பொழுது வனப்பகுதியில் நிலவி வரும் வறட்சி காரணமாக தண்ணீர், உணவு தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையை கடப்பது வாடிக்கையாகி விட்டது.

    இந்நிலையில் நேற்று மதியம் 3 மணி அளவில் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவில் அருகே கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.

    அப்போது திடீரென ஒரு யானை ரோட்டை கடப்பதற்கு வேகமாக ஓடி வந்தது.

    இதைப்பார்த்த வாகன ஓட்டி திடீர் பிரேக் பிடித்தார். இதனால் யானை பயங்கர சத்தம் போட்டது.

    பின்னர் யானை ரோட்டை கடந்து மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றது. இதைக்கண்டு வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

    இது பற்றி வனத்துறை யினர் கூறும்பொழுது,

    வரும் 2 மாதங்களுக்கு யானைகள் தண்ணீருக்காக ரோட்டை அங்கும் இங்கும் கடப்பது அதிகமாக இருக்கும்.

    அதனால் வாகன ஓட்டிகள் வனப்பகுதிக்குள் மெதுவாக வாகனத்தை இயக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

    • லாரியில் இருந்து அதனை இறக்கியபோது வயது முதிர்வு காரணமாக யானை தவறி கீழே விழுந்துவிட்டது.
    • உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை லலிதா இன்று காலை 6 மணியளவில் இறந்துவிட்டது.

    விருதுநகர்:

    தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சேக் முகமது. இவர் லலிதா என்ற 56 வயது பெண் யானையை வளர்த்து வந்தார். அந்த யானையை கோவில் திருவிழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அழைத்து செல்வார்.

    இந்நிலையில் தனது யானையை வேறு ஒருவருக்கு விற்க அனுமதிக்க வேண்டும் என்று 2020-ம் ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் யானையை விற்பனை செய்ய ஐகோர்ட்டு அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து வழக்கம்போல் கோவில் திருவிழாவுக்கு யானையை அழைத்து சென்று வந்தார்.

    அப்போது யானை லலிதாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் சிகிச்சை பெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி விருதுநகர் பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக சேக்முகமது, யானை லிலதாவை விருதுநகருக்கு லாரியில் அழைத்து வந்தார்.

    லாரியில் இருந்து அதனை இறக்கியபோது வயது முதிர்வு காரணமாக யானை தவறி கீழே விழுந்துவிட்டது. இதில் யானையின் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து யானை லலிதா விருதுநகர் முத்து மாரியம்மன் கோவில் அருகே உள்ள இடத்தில் தங்க வைக்கப்பட்டு அதற்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    கால்நடைத்துறை இணை இயக்குநர் கோவில்ராஜா தலைமையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் பிராணிகள் நல ஆர்வலர் துனிதா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் யானை லலிதாவுக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை, இது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

    அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி சுவாமிநாதன் யானையை நேரில் சென்று பார்வையிட்டார். யானை லலிதாவுக்கு வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் சிகிச்சை அளிக்க வேண்டும், யானைக்கு தேவையான உணவுகளை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும், யானை பாகன்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து விருதுநகரில் தங்கியிருந்த யானை லலிதாவுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் விருதுநகர் முத்து மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்க இருப்பதால் யானையை வேறு இடத்திற்கு மாற்ற ஆலோசனை நடத்தப்பட்டது.

    ஆனால் அதற்கு பிராணிகள் நல ஆர்வலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்தி யானையை அதே இடத்தில் வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

    இதற்கிடையே உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை லலிதா இன்று காலை 6 மணியளவில் இறந்துவிட்டது. இதுபற்றி தெரிய வந்ததும் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து யானையின் உடலை பார்த்து சென்றனர். அதனை அடக்க செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    • ரெயிலில் செல்லும்போது யானை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள், பறவைகளையும் ரசித்தவாறே செல்லலாம்.
    • 15 நிமிடம் தாமதம் ஆனாலும் ரெயிலில் பயணித்த சுற்றுலா பயணிகள் யானைகளை பார்த்து ரசித்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரையிலும், அதன்பிறகு குன்னூரில் இருந்து ஊட்டிக்கும் மலை ரெயில் இயக்கப்படுகிறது.

    வாகனங்களில் செல்வதை விட மலை ரெயிலில் செல்லும்போது நேரம் அதிகமானாலும் இயற்கை அழகை ரசித்தவாறே செல்லலாம் என்பதால் சுற்றுலா பயணிகள் மலைரெயிலில் செல்லவே ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மலைரெயிலில் செல்லவே விரும்புபவர்கள். ரெயிலில் செல்லும்போது யானை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள், பறவைகளையும் ரசித்தவாறே செல்லலாம்.

    சில சமயங்களில் யானைகள் தண்டவாளத்தை ஆக்கிரமித்துக்கொண்டு நின்று விடும். அந்த சமயம் மலை ரெயில் நிறுத்தப்பட்டு யானைகள் சென்றபிறகே ரெயில் புறப்பட்டுச் செல்லும்.

    இந்தநிலையில் குன்னூா் அருகே உள்ள காட்டேரி பகுதியில் கடந்த ஒரு வாரமாக 3 காட்டு யானைகள் சுற்றித் திரிகின்றன. நேற்று குன்னூரில் இருந்து மலைரெயில் புறப்பட்டு மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென 3 காட்டு யானைகளும் தண்டவாளம் வழியாக நடந்து வந்தன. இதனால் ரெயில் என்ஜின் டிரைவர்கள் துரிதமாக செயல்பட்டு ரெயிலை நிறுத்தினார். 15 நிமிடம் யானைகள் தண்டவாளத்தை விட்டு நகராமல் நின்றது. அதன்பிறகு தான் தண்டவாளத்தை விட்டு இறங்கி நடையை கட்டியது. பின்னர் மலைரெயில் புறப்பட்டுச் சென்றது.

    15 நிமிடம் தாமதம் ஆனாலும் ரெயிலில் பயணித்த சுற்றுலா பயணிகள் யானைகளை பார்த்து ரசித்தனர்.

    • தோட்டப்பகுதியில் ஒற்றை யானை ஒன்று கடந்த 2 நாட்களாக முகாமிட்டுள்ளது.
    • விவசாயிகள் பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவி வருவதால் வன விலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய தோட்டத்தில் புகுந்து விவசாயிகளை அச்சுறுத்தி வருகிறது.

    இந்நிலையில் அந்தியூர் அடுத்த புதுக்காடு கோட்டை மலையான் கோவில் தோட்டப்பகுதியில் ஒற்றை யானை ஒன்று கடந்த 2 நாட்களாக முகாமிட்டுள்ளது.

    இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் புகுந்த யானை சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாய விளைபொருட்களை மிதித்து சேதப்படுத்தியது.

    இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    இப்பகுதியில் முகாமிட்டு ள்ள யானையை கட்டுப்ப டுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காவேரிப்பட்டணம் அருகே சப்பானிப்பட்டி பகுதிக்கு அந்த யானைகளை விரட்டி வந்தனர்.
    • யானைகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் இருந்து 2 காட்டுயானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதிக்கு இன்றுகாலை சென்றது.

    அங்கு ஒருவரை யானை காலால் மிதித்து கொன்றது. பின்னர் அந்த யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். காவேரிப்பட்டணம் அருகே சப்பானிப்பட்டி பகுதிக்கு அந்த யானைகளை விரட்டி வந்தனர்.

    அப்போது தருமபுரி-கிருஷ்ணகிரி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் திருப்பதி என்பவர் தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

    அந்த வழியாக வந்த காட்டுயானைகள் காரை முட்டி தள்ளியது. காரின் முன்பகுதியை சேதமாக்கியது. இதில் நல்வாய்ப்பாக காரில் இருந்தவர்கள் உயிர்தப்பினர்.

    பின்னர் அந்த யானைகளை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • யானைக்கு காலில் காயம் ஏற்பட்டு உடல்நலம் குன்றியது.
    • யானைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பது குறித்தும், சிகிச்சை அளிக்கும் மருத்துவர் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தனர்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி தேரடியை சேர்ந்தவர் மகுடீஸ்வரன். இவர் 60 வயதான சரஸ்வதி என்ற பெண் யானையை வளர்த்து வருகிறார். இந்த யானைக்கு காலில் காயம் ஏற்பட்டு உடல்நலம் குன்றியது. இதற்கு மகுடீஸ்வரன் உரிய சிகிச்சை அளிக்காமல் இருந்ததாக அப்பகுதி பொதுமக்கள் விலங்குகள் நலவாரியத்திற்கு புகார்கள் அளித்தனர்.

    இதனையடுத்து மதுரையில் இருந்து வந்த தேசிய விலங்குகள் நலவாரிய அலுவலர் முருகேஸ்வரி, விலங்குகள் வதைதடுப்பு கண்காணிப்பாளர் அண்ணாவிநாதன் கொண்ட குழுவினர் யானைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பது குறித்தும், சிகிச்சை அளிக்கும் மருத்துவர் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தனர்.

    மேலும் யானையை முறையாக பராமரிக்க வேண்டும். சத்தான உணவு வழங்க வேண்டும். யானையை வீதியில் நடக்க வைத்தும், ஆசி வழங்க வைத்தும் பணம் வசூலிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட அறிவுரைகளை மகுடீஸ்வரனுக்கு அவர்கள் வழங்கினர். இந்த விசாரணை அறிக்கையை டெல்லியில் உள்ள தேசிய விலங்குகள் நலவாரியத்திற்கு அளிக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

    • ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.
    • கருப்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை போன்ற வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    இதில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு விவசாய நிலங்களுக்குள் யானைகள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள கரும்பு, வாழை, மக்காச்சோளம், தென்னை போன்றவற்றை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வன சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் என்ற காட்டு யானை அந்த பகுதியில் உள்ள விவசாய தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்ததுடன் தோட்டக்காவலுக்கு இருந்த தர்மபுரம் பகுதியை சேர்ந்த விவசாயிகளான மல்லப்பா, திகினாரை, ஜோரைகாடு பகுதியை சேர்ந்த மாதேவா ஆகியோரை மிதித்து கொன்றது.

    இதனையடுத்து கருப்பனை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர். பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து 3 கும்கி யானைகள் தாளவாடி பகுதிக்கு வரவழைக்கப்பட்டது. பின்னர் அவைகளின் உதவியுடன் அட்டகாசம் செய்து வந்த கருப்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

    ஒரு வழியாக கருப்பன் இருக்கும் இடத்தை கண்டறிந்த வனத்துறையினர் கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். இருந்தா லும் வனத்துறைக்கு போக்கு காட்டிய கருப்பன் வனப்பகு திக்குள் தப்பி சென்றது. இதனால் கருப்பன் யானை யை பிடிக்கும் முயற்சியை தற்கா லிகமாக வனத்துறை யினர் நிறுத்தி வைத்தனர். கடந்த சில நாட்களாக கருப்பன் யானை நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இதனால் விவசாயிகள் நிம்மதியாக இருந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் யானை மல்லன்குழி கிராமத்தை சேர்ந்த தேவா என்பவர் தோட்டத்துக்குள் புகுந்தது. இதைக்கண்டதும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒன்று திரண்டு கருப்பன் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    இரவு முழுவதும் போக்கு கட்டிய கருப்பன் யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. மீண்டும் கருப்பன் யானை ஊருக்குள் வந்ததால் நிம்மதியை இழந்த மக்கள் அச்சமடைந்துள்ளனர். இனி எப்போது கருப்பன் மீண்டும் ஊருக்குள் வருமோ என்ற அச்சத்தில் மக்கள் தவிக்கின்றனர். எனவே மீண்டும் கருப்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலையில் செல்வோரையும் அச்சப்படுத்துவதில் படையப்பா யானை பிரபலமாகி உள்ளது.
    • யானை அடிக்கடி ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

    திருவனந்தபுரம்:

    காட்டுப்பகுதிகளில் இருந்து சாலைக்கு வந்து வாகனங்களை யானைகள் மறிப்பது அவ்வப்போது நடந்து வருகிறது. இதனால் வனப்பகுதி சாலைகளில் செல்வோர் பெரும் அச்சத்துடனேயே பயணிப்பார்கள்.

    இந்த வகையில் கேரள மாநிலம் மூணாறு பகுதியில் வசிக்கும் மக்களை மட்டு மின்றி, அந்த வழியாக சாலையில் செல்வோரையும் அச்சப்படுத்துவதில் படையப்பா யானை பிரபலமாகி உள்ளது.

    இந்த யானை அடிக்கடி ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில் மூணாறு-மறையூர் சாலையில் சம்பவத்தன்று நள்ளிரவு கேரள அரசு பஸ் சென்றது. திருவனந்தபுரத்தில் இருந்து பழநி நோக்கி சென்ற அந்த பஸ், ராஜமலை அருகே சென்ற போது, படையப்பா யானை வழிமறித்துள்ளது.

    பஸ்சின் முன்பக்க கண்ணாடியை தனது தந்தத்தால் யானை தாக்கிய போதும், டிரைவர் சாதுரியமாக பஸ்சை இயக்கி யானையை கடந்து சென்றார். இதனை பஸ்சில் இருந்த பயணி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    • விவசாயி ஒருவரின் தோப்புக்குள் புகுந்த யானை கூட்டம் 10-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தன.
    • தகவலறிந்த வனத்துறையினர் கூட்டமாக வந்த 7 யானைகளை காட்டுக்குள் விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    கடையம்:

    கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப்பகுதியில் வனவிலங்குகளான கரடி, சிறுத்தை, காட்டுப்பன்றி, யானைகள் ஆகியவை வயலுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவது வழக்கமாக உள்ளது.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு கருத்தப்பிள்ளையூர் பகுதியில் ஒரு தோட்டத்தில் புகுந்த காட்டு யானை கூட்டம் 60-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தன. இந்நிலையில் நேற்று கடனா அணையின் அடிவாரப்பகுதியான கருத்தப்பிள்ளையூர் அருகே சுமார் 20-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக உலா வந்தன.

    இதையடுத்து வன அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறை ரேஞ்சர் கருணாமூர்த்தி தலைமையில் வனத்துறையினர் அங்கு வந்து இரவு நேரத்தில் வெடி வெடித்தும், பொதுமக்களின் ஆதரவுடனும் யானை கூட்டத்தை விரட்டியடித்தனர்.

    ஆனால் இன்று காலையும் கருத்தப்பிள்ளையூர் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரின் தோப்புக்குள் புகுந்த யானை கூட்டம் 10-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தன. தகவலறிந்த வனத்துறையினர் கூட்டமாக வந்த 7 யானைகளை காட்டுக்குள் விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து மேலாம்பூர், பெத்தான்பிள்ளை குடியிருப்பு, திரவியம் நகர், கடவக்காடு, கருத்தப்பிள்ளையூர் போன்ற பகுதியில் உள்ள தோப்புகளில் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.

    ×