செய்திகள்

டாக்டரின் கார் கண்ணாடியை உடைத்து பணம், கையடக்க கணினி திருட்டு

Published On 2018-07-17 16:34 GMT   |   Update On 2018-07-17 16:34 GMT
கோவையில் ஓட்டல் முன்பு நிறுத்தி இருந்த டாக்டரின் கார் கண்ணாடியை உடைத்து பணம், கையடக்க கணினியை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.
கோவை:

கோவை காளப்பட்டி அருகே உள்ள ராம்மேனன் நகரை சேர்ந்தவர் மதனகோபால் (வயது 31). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் கோவை விமான நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட காரில் சென்றார்.

அவர் அந்த ஓட்டல் முன்பு தனது காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். இரவு 10 மணியளவில் சாப்பிட்டுவிட்டு அவர் வெளியே வந்தார். அப்போது, காரின் பின்பக்க கதவு கண்ணாடி உடைக் கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காருக்குள் பார்த்தபோது பின் இருக்கையில் வைத்து இருந்த பையை காணவில்லை.

அந்த பைக்குள் ரூ.50 ஆயிரம், கையடக்க கணினி, விலை உயர்ந்த செல்போன் ஆகியவை இருந்தது. மர்ம ஆசாமிகள் காரின் கண்ணாடியை உடைத்து அந்த பையை திருடிச்சென்றது தெரியவந்தது. திருடப்பட்ட அந்த பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து மதனகோபால் பீளமேடு குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

அப்போது 2 பேர் அங்கு வந்து காரின் கண்ணாடியை உடைப்பதும், அதில் இருந்த பையை எடுத்துச்செல்வதும் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து போலீசார் மர்ம நபர்களை கண்டறிய தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News