செய்திகள் (Tamil News)

கஜா புயல் பாதிப்பு- விடுபட்ட பகுதிகளை நாளை மறுநாள் ஆய்வு செய்கிறார் முதல்வர்

Published On 2018-11-26 09:31 GMT   |   Update On 2018-11-26 09:31 GMT
கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை சென்னையில் இருந்து ரெயில் மூலம் புறப்பட்டு செல்கிறார். #GajaCyclone #EdappadiPalaniswami
சென்னை:

தமிழகத்தை மிரட்டிய கஜா புயல் கடந்த 16-ம் தேதி அதிகாலை வேதாரண்யம்- நாகப்பட்டினம் இடையே கரையை கடந்தது. 120 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றுடன் கரையை கடந்த அந்த புயல் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டுள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 20-ம்தேதி பார்வையிட்டார். அவருடன் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கருப்பண்ணன், பாஸ்கரன் ஆகியோரும் சென்றனர்.

புதுக்கோட்டை மற்றும் தஞ்சையில் ஆய்வு செய்த முதல்வர், மழை பெய்ததால்  தனது பயணத்தை ரத்து செய்து சென்னை திரும்பினார். அதன்பின்னர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து புயல் பாதிப்பு குறித்து எடுத்துக் கூறி, தமிழகத்திற்கு 15 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விடுபட்ட இடங்களை பார்வையிட முடிவு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதற்காக நாளை இரவு ரெயில் மூலம் புறப்பட்டுச் செல்கிறார். நாளை மறுநாள் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்கிறார். பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிய உள்ளார். #GajaCyclone #EdappadiPalaniswami
Tags:    

Similar News