இந்தியா (National)

பாலியல் புகார்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு நடிகர் சித்திக் நாளை ஆஜர்

Published On 2024-10-06 04:28 GMT   |   Update On 2024-10-06 04:28 GMT
  • கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக சித்திக் தலைமறைவானார்.
  • சுப்ரீம் கோர்ட்டு சித்திக்கிற்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது தொடுப்பது தொடர்பான புகார்களின் அடிப்படையில் ஹேமா கமிட்டி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. இதில் பாலியல் தொந்தரவு உண்மை தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை வெளியான பிறகு பல்வேறு நடிகர்கள் மீது நடிகைகள் பலர் பாலியல் புகார் கூறி வருகின்றனர். இயக்குநர் ரஞ்சித், நடிகர்கள் சித்திக், எடவேளை பாபு உள்ளிட்ட பலர் மீதும் புகார்கள் கூறப்பட்டன.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாலியல் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு நியமித்தது.

இந்த குழு விசாரணையை தொடங்கிய நிலையில், புகார்களின் அடிப்படையில் போலீஸ் நிலையங்களில் நடிகர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதனை தொடர்ந்து பலரும் முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டுகளில் மனு தாக்கல் செய்தனர். இதில் நடிகர் சித்திக் மீது அருங்காட்சியகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதன் விசாரணைக்கு முன்பு முன்ஜாமீன் கேட்டு நடிகர் சித்திக், கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

இந்த நிலையில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக சித்திக் தலைமறைவானார்.

அவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு சித்திக்கிற்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து அவர், பாலியல் பலாத்கார வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஆஜராக முடிவு செய்துள்ளார்.

இதனை அவர் மின்னஞ்சல் மூலம் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தெரிவித்து உள்ளார். நாளை (திங்கட் கிழமை) சிறப்பு புலனாய்வு குழுவின் முன்பு நடிகர் சித்திக் ஆஜராக உள்ளார்.

Tags:    

Similar News