தற்கொலை முயற்சி, தண்டவாளத்தில் தூங்கிய பெண்.. ஜஸ்ட் மிஸ்ஸில் நடந்த டுவிஸ்ட் - வீடியோ
- லோகோ பைலட் அவசர பிரேக்குகளை பயன்படுத்தி, தக்க நேரத்தில் ரெயிலை நிறுத்தினார்.
- அவரை எழுப்பிய பயணிகள் அவரிடம் விசாரணை செய்தனர்.
பீகார் மாநிலத்தின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள மோதிஹரியில் இருந்து முசாபர்பூர் வரை சென்றுக் கொண்டிருந்த ரெயிலை அதன் லோகோ பைலட் திடீரென நடுவழியில் நிறுத்தினார். பெண் ஒருவர் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டிருந்ததை பார்த்த லோகோ பைலட் அவசர பிரேக்குகளை பயன்படுத்தி, தக்க நேரத்தில் ரெயிலை நிறுத்தினார்.
லோகோ பைலட் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு ரெயிலை நிறுத்தியதால் தற்கொலைக்கு முயன்ற பெண் காப்பாற்றப்பட்டார். ரெயிலை நிறுத்தியதும், சக பயணிகள் கீழே இறங்கி வந்தனர். அப்போது தற்கொலைக்கு முயன்ற பெண் தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பிய பயணிகள் அவரிடம் விசாரணை செய்தனர்.
அப்போது, குடும்ப பிரச்சினை காரணமாக மன அழுத்தத்தில் இருப்பதாக அந்த பெண் பதில் அளித்துள்ளார். தனது காதல் குடும்பத்தார் ஒப்புக் கொள்ளவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். இதோடு, என்னை ஏன் காப்பாற்றினீர்கள்? நான் சாகவேண்டும் என்று அவர் அழுதுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.