சிறப்புக் கட்டுரைகள்

ஆடையும் ஆரோக்கியமும்

Published On 2024-05-03 10:01 GMT   |   Update On 2024-05-03 10:01 GMT
  • ஆடை என்பது மனித நாகரிகத்தின் வளர்ச்சி நிலையாகும்.
  • நாம் அணியும் ஆடைகள் இழைகளால் ஆனது.

ஆடை என்பது மனித நாகரிகத்தின் வளர்ச்சி நிலையாகும். நாம் அணியும் ஆடைகள் இழைகளால் ஆனது. இழைகள் என்பது மெல்லிய நூல் போன்ற அமைப்பாகும். இழைகளின் தோற்றம் மற்றும் தன்மையின் அடிப்படையில் ஆடைகள் தயாரிக்க பயன்படும் துணி இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. ஒன்று இயற்கை துணி மற்றொன்று செயற்கை துணி.

இயற்கை துணி வகைகள்:

இயற்கையான மூலப்பொருட்களான பருத்தி, சணல், வாழை நார், கற்றாழை நார், பட்டுப்புழு போன்ற பொருட்களில் இருந்து இவ்வகை துணிகள் தயாரிக்கப்படுகிறது.

பருத்தி:

இயற்கையான முறையில் கிடைக்கும் இவ்விழைகளில் ஈரப்பதத் தன்மை உள்ளது. எனவே வெயிலில் உடலை குளுமையாக உணரச்செய்யும். மேலும் காட்டன் நூலிழைகளில் காற்று புகும் தன்மை உள்ளது. எனவே எவ்வளவு வெயிலாக இருந்தாலும் காற்றோட்டமாக இருக்கும். வியர்வையை நன்றாக உறிஞ்சும். சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து நம்மை பருத்தி ஆடை பாதுகாக்கும்.

ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு. எனவே தோல் நோய் உள்ளவர்கள் பருத்தி ஆடை அணிவது நன்று. சித்த மருத்துவ நூல்கள் பருத்திக்கு உள்ளழலாற்றி செய்கை இருப்பதாக கூறுகிறது. எனவே இதை அணியும்போது உடல் வெப்பம் தணியும்.

சணல்:

சணல் இழைகளினால் உருவாக்கப்படும் ஆடைகள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். கோடை காலங்களில் அணிவதற்கு இது ஏற்ற துணியாகும். ஏனெனில் செயற்கை துணியை போன்று வியர்வையை ஏற்படுத்தாது. வியர்வையை உறிஞ்சும் தன்மையும் இதற்கு அதிகம். மேலும் புற ஊதா கதிர்களை உறிஞ்சாது. இதிலுள்ள பைட்டோகெமிக்கல்ஸ் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளை எதிர்த்து போராடும் தன்மை பெற்றுள்ளது.

வாழை நார்:

மற்ற இயற்கை துணி வகைகளை போலவே இது ஈரப்பதத்தை நன்றாக உறிஞ்சும் தன்மை கொண்டுள்ளது. நுண்ணுயிர்களை எதிர்த்து போராடுவதோடு, சூரியனின் தீங்கான கதிர்களில் இருந்தும் நம்மை பாதுகாத்து உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. தோல் நோய்கள் உள்ளவர்களும், இதை பயன்படுத்தலாம்.

வாழை நாரினால் ஆன ஆடைகளை தொடர்ந்து உடுத்தி வரும்போது மகப்பேற்றிற்கு பிறகு பெண்களுக்கு வயிற்றில் ஏற்படும் அறுவை சிகிச்சை தழும்புகள் விரைவில் மறையும்.

கற்றாழை நார்:

கற்றாழையில் 96 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. எனவே இவற்றின் நாரை கொண்டு உருவாக்கப்படும் ஆடைகள் சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுத்து, சரும செல்கள் புத்துயிர் பெற உதவுகிறது. ஆண்டிபேக்சரியல், ஆன்டிவைரஸ், ஆன்டிப்ருரிடிக் போன்ற பண்புகள் உள்ளதால் நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு. குழந்தைகளின் ஆடைகளை தயாரிக்க இந்த வகை நார்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மூங்கில் நார்:

மூங்கிலின் இலை மற்றும் தண்டு பகுதியில் இருந்து நார்கள் பிரிக்கப்பட்டு ஆடைகள் தயாரிக்கப் பயன்படுகிறது. இதில் நுண்ணிய இடைவெளிகள் நிறைய உள்ளதால் வியர்வையை நன்கு உறிஞ்சி காற்றோட்டத்துடன் இருக்க செய்யும். பருத்தியை விட மென்மையான இதன் இழைகள் ஆடைகள், துண்டுகள், முக மூடிகள், சானிட்டரி நாப்கின்கள் போன்றவை தயாரிக்க பயன்படுகிறது.

மூங்கில் இழைகளில் ஆன்டிபங்கள், ஆன்டிபேக்ட்ரியல், பேக்டீரியாஸ்டிக் போன்ற பண்புகள் உள்ளதால் பாக்டீரியா, பூஞ்சைகள் போன்றவற்றால் ஏற்படும் நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறைவு. மேலும் இவ்வகை ஆடை உடல் துர்நாற்றத்தையும் கட்டுப்படுத்துகிறது.

தாமரை நார்:

தாமரை நார்களை கொண்டு தயாரிக்கப்படும் ஆடைகளை அணியும்பொழுது மன அமைதியும் நல்ல ஆரோக்கியமும் கிடைப்பதாக நம்பப்படுகிறது. இதை தொடர்ந்து அணியும்போது தலைவலி, இருதய கோளாறுகள், நுரையீரல் பிரச்சினை குணமாவதாக கூறப்படுகிறது.

மேலும் மற்ற இயற்கை துணி வகைகளை போன்று இதுவும் ஈரத்தை நன்றாக உறிஞ்சும். காற்றோட்டத்துடன் இருக்க செய்யும். அணிவதற்கு மிருதுவாகவும், சவுகரி யமாகவும் இருக்கும். தாமரை இழைகளினால் ஆன ஆடைகளில் கறை படியும் வாய்ப்பு மிகவும் குறைவு.

பட்டு:

பட்டு ஆடைகள் உடலுக்கு பலவித நன்மைகளை கொடுக்கும். தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை பட்டாடை தடுக்கும். தோலில் உள்ள ஈரபதத்தை தக்க வைக்கும். இதில் உள்ள ஆல்புமென் என்ற வேதிப்பொருள் சருமத்தின் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது.

இதனால் இறந்த சரும செல்கள் நீங்கி புதிய செல்கள் நிறைய உற்பத்தியாகிறது. இதனால் சருமம் பொலிவு பெறுகிறது. இதனையே சித்த மருத்துவ நூல்களில் உடலுக்கு ஒளியை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

பட்டில் இயற்கையாக உள்ள ஒருவகை புரதம் (ஹைபோ அலர்ஜெனிக்) ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. எனவே இது கரப்பான் (எஜிமா), ஆஸ்துமா போன்ற நோயுள்ளவர்களுக்கு ஏற்ற உடையாகிறது.

பட்டுத்துணியில் ஆன்டிபங்கள் பண்புள்ளதால் பூஞ்சைகளினால் ஏற்படும் நோய்தொற்றை சரி செய்ய உதவுகிறது. மேலும் சுத்தமான பட்டாடை அணியும் போது வெயில் காலத்தில் குளிர்ச்சியும், குளிர் காலத்தில் வெப்பமும் கிடைக்கும். பட்டாடைகளை தொடர்ந்து அணிந்து வரும் போது நரம்பு மண்டலத்தை சாந்தப்படுத்தி நல்ல உறக்கத்தை கொடுக்கிறது.

சித்த மருத்துவ நூல்கள் பட்டாடை அணியும் போது மனம் தெளிவு பெறும் என்றும், கபம் நீங்கும் என்றும் கூறுகிறது. வெண் பட்டினால் ஆன ஆடையை அணியும் போது குளிர் மற்றும் காய்ச்சல் குணமாகும், வாத நோய்கள் நீங்கும்.

கம்பளி:

கம்பளி துணிகள் குளிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்சுலேட்டர் போன்று செயல்பட்டு உடலுக்கு வெப்பத்தை கொடுக்கும். கம்பளி ஆடையினை அணியும் போது நீரேற்றம், தலைவலி, வாத நோய்கள் நீங்கும் என சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.

 செயற்கை துணி வகைகள்:

செயற்கை துணிகள் என்பது வேதியியல் செயல்முறைகள் மூலம் உருவாகும் துணியாகும். ரேயான், நைலான், வெல்வெட், பாலியெஸ்டர் போன்றவை செயற்கை துணி வகைகளாகும்.

ரேயான்:

ரேயான் துணிகளை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது இதிலுள்ள வேதிப்பொருட்கள் தோலின் மூலம் கிரகிக்கப்பட்டு நோய் நிலையை ஏற்படுத்தும். ரேயான் துணி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சல்பியூரிக் மற்றும்நிட்ரிக் ஆசிட் தோலில் அரிப்பு ஏற்படுத்தும். குமட்டல், வாந்தி, நெஞ்சு வலி மற்றும் தூக்கமின்மை போன்ற குறிகுணங்களும் ஏற்படும்.

பாலியஸ்டர்:

பாலியஸ்டர் துணியில் இருந்து வெளிவரும் பைடோஸ்ட்ரோஜன் உடலில் ஹார்மோன் கோளாறுகளை ஏற்படுத்தும். இதனால் குழந்தையின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை அணியும் போது ஏற்படும் அதிக உடல்சூடு மற்றும் வியர்வையால் தோலில் அரிப்பு மற்றும் படைகள் ஏற்படும். வெகு நாட்கள் இவ்வகை ஆடைகளை அணியும் போது சுவாச பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

நைலான்:

நைலான் ஆடை அணியும்போது உடல் வெப்பம் வெளியேறாது. உடல் வெப்பத்தால் ஆடையில் இருந்து வெளியேறும் பார்மல்டெக்ஸ் தோலில் அரிப்பு, கண்ணில் நீர்வடிதல் போன்ற குறிகுணங்களை ஏற்படுத்தும்.

நைலான் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பாரியம் சல்பேட் மற்றும் டைட்டானியம் ஆக்சைடு தோலை கருமை நிறமடையச் செய்யும். மேலும் இது நரம்பு மண்டலத்தை தாக்கி தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும்.

ஜீன்ஸ்:

ஜீன்ஸ் உடை ஆரம்பத்தில் குளிர்பிரதேசங்களில் மட்டுமே இருந்துள்ளது. ஆனால் தற்போது அனைத்து இடங்களிலும் பெரும்பான்மையினரால் அணியப்படுகிறது. ஜீன்ஸ் பேண்ட் இறுக்கமாக அணிவதால் காற்று உள்புகாமல் உடம்பு சூடாகும். இதனால் ஆண்களுக்கு விந்து உற்பத்தி குறைவதற்கு வாய்ப்புள்ளது. பெண்களுக்கும் கருப்பை கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

நம் உடலில் இருந்து அதிக அளவில் வியர்வை வெளியாகும். எனவே நாம் உடுத்தும் உடை வியர்வையை உறிஞ்சக்கூடிய தன்மை உடையதாக இருக்க வேண்டும். ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகளை அணியும்போது சுரக்கின்ற வியர்வை வெளியேறாமல் அதிலிருந்து நுண்கிருமிகள் உற்பத்தியாகி படர்தாமரை போன்ற சரும பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஜீன்ஸ் அணிவதால் சிறுநீர்பாதை தொற்று, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

மேலும் இது அடிவயிற்றில் இருந்து தொடைப்பகுதி வழியாக செல்லும் மெல்லிய நரம்புகளை அழுத்துவதால் கடுமையான கால் வலி ஏற்படும் வாய்ப்புள்ளது.

இயற்கை மருத்துவர்

நந்தினி

9500676684

Tags:    

Similar News