சிறப்புக் கட்டுரைகள்

வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ். படிப்பதற்கான வழிமுறைகள்!

Published On 2024-05-16 11:30 GMT   |   Update On 2024-05-16 11:30 GMT
  • வெளிநாடு செல்லும் மாணவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்.
  • வெளிநாட்டு கல்லூரிகளின் கல்வி ஆண்டானது செப்டம்பர் மாதம் தொடங்குகிறது.

கடந்த வாரம் நமது மாணவர்கள், வெளிநாடுகளில் சென்று மருத்துவக்கல்வி கற்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களான 18-11-2021 புதிய தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகள், நீட் தகுதி மதிப்பெண் மற்றும் இன்னபிற விவரங்களை பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, தற்போது மேலும் சில முக்கியமான விவரங்களை தெரிந்து கொள்வோம்.

வெளிநாடு செல்லும் மாணவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்:

1) புதிய தேசிய மருத்துவ ஆணையத்தின் 18-11-2021 அரசாணைக்கு பின்பாக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கான முதல் தகுதியாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு இருந்த தகுதிச் சான்றிதழ் பெறும் நடைமுறை இதன்மூலம் நீக்கப்பட்டுள்ளது.

2) முதலில் மாணவர்கள் இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகள் மற்றும் அவ்வப்போது தரப்படும் அறிவிப்புகள் குறித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அதன் இணையதளமான www.nmc.org.in ல் சென்று இது குறித்து சரியான விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

3) மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் கல்லூரியானது உலக சுகாதார மையத்தின் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ளதா என்பதை அதன் இணையதளமான www.wdoms.org-ல் சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

4) மேலும் மேற்சொன்ன www.wdoms.org என்ற இணையதளத்திலேயே அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளின் இணையதள முகவரியும் குறிப்பிடப்பட்டிருக்கும். இதன்வழியே கல்லூரிகளைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இதன்மூலம் கல்லூரிகளின் போலியான இணையதள முகவரிகளை தவிர்த்து கல்லூரிகளைப் பற்றிய சரியான விவரங்களை பெற முடியும்.

5) முக்கியமாக இன்றைய நவீன தொழில்நுட்ப காலகட்டத்தில் சமூக ஊடகங்களில் ஏராளமான போலியான விளம்பரங்களும், தவறான செய்திகளும் பல்வேறு வழிகளில் பகிரப்படுகின்றன. அதனை அப்படியே நம்பாமல், அதன் உண்மைத் தன்மையை மேற்கண்ட தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் உலக சுகாதார மையத்தின் இணையதளங்களில் சரிபார்த்து கொள்ள வேண்டும்..

சரியான மருத்துவக் கல்வி /ஆலோசகர் நிறுவனத்தை தேர்வு செய்வது எப்படி?

*ஒரு மாணவர் வெளிநாடு சென்று மருத்துவக்கல்வி பயில வேண்டும் என்று முடிவெடுத்தால் முதலில் ஒரு சரியான கல்வி ஆலோசகரை / நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் எளிதாக தங்களுக்குத் தேவையான கல்லூரியை அடையாளம் காண இயலும்.

*முதலில் அந்த நிறுவனம் முறையாக அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும்.

*பின்னர் அவர்களுக்கு இந்த துறையில் உண்மையில் எத்தனை ஆண்டுகள் அனுபவம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

*மற்றும் மேற்படி நிறுவனத்திற்கும், வெளிநாடுகளில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கும் நேரடி தொடர்பு உள்ளதா என்பதை அவர்களின் கல்லூரிகளுடனான ஒப்பந்தங்களைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

*மேலும் முக்கியமாக மேற்கண்ட நிறுவனமானது ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு மட்டும் மாணவர்களை அனுப்புகிறார்களா? அல்லது பல்வேறு நாடுகளுக்கும் மாணவர்களை அனுப்புகிறார்களா? எனத் தெரிந்து கொள்வது மிக அவசியம். ஏனென்றால் ஒரு நாட்டிற்கு மட்டும் மாணவர்களை அனுப்பும் நிறுவனத்தார் அந்த ஒரு நாட்டினைப் பற்றி மட்டுமே உயர்வாக சொல்லுவார்கள். இது ஒரு சரியான வழிகாட்டுதலாக அமையாது.

*மாணவர்களின் 6 வருட கல்வி காலத்திற்கும் அந்த நிறுவனம் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறதா என்பதை முறையான ஒப்பந்தம் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

*நிறுவனமானது மாணவர்கள் எளிதில் அணுகும் வகையில் பல்வேறு கிளை அலுவலகங்களை கொண்டுள்ளதா அல்லது ஒரே இடத்தில் உள்ளதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

*மிக முக்கியமாக சரியான பதிவு செய்யப்பட்ட நிறுவனம் வழியாக மட்டுமே, மாணவர்கள் வெளிநாடு செல்ல வேண்டும். ஏற்கனவே அங்கு பயிலும் மாணவர்கள், தெரிந்த உறவினர் என்பது போன்ற நபர்கள் மூலம் செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அவ்வாறானவர்களால் ஏதேனும் அவசர காலங்களில் மாணவர்களுக்கு சரியாக உதவ இயலாது. உதாரணமாக தற்போது உக்ரைன் போர் சூழலில் அவ்வாறு சென்ற மாணவர்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகினர்.

கல்லூரி கட்டணங்கள் மற்றும் பிற செலவுகள் குறித்து:

1)மாணவர்கள் அவர்களின் கல்லூரி கட்டணத்தை நேரடியாக கல்லூரியில் சென்றோ அல்லது வங்கி மூலமாக ஸ்விப்ட்பரிவர்த்தனை வழியாகவோ நேரடியாக கல்லூரிக்கு செலுத்த வேண்டும். தற்போது எல்லா வங்கிகளும் இது மாதிரியான ஸ்விப்ட் பரிவர்த்தனையை செய்கின்றன. அனுப்பும் நிறுவனத்திடம் கல்லூரி கட்டணத்தை செலுத்துவதை தவிர்க்க வேண்டும்.

2)இந்தியாவில் செலுத்தும் அட்மிஷன், விசா, விமான கட்டணம் போன்ற செலவுகளுக்கு பணம் செலுத்திய பின் முறையாக ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.

3)ரஷ்யா போன்ற நாட்டில் கல்லூரி கட்டணமானது அவர்களின் கரன்சியானலும், மற்ற நாடுகளில் பெரும்பாலும் அமெரிக்க டாலரிலும், போலந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் ரூபல்லிவிலும் பெறப்படுகிறது. எனவே பண பரிமாற்றம் குறித்து இணையதளத்தில் சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

4)மிக முக்கியமாக வெளிநாடுகளில் எல்லாவற்றிலுமே இளங்கலை (எம்.பி.பி.எஸ், எம்.டி.) படிப்பிற்கு எந்தவிதமான ஸ்காலர் ஷிப்பும் கல்லூரிகளோ வெளிநா டுகளோ தருவதில்லை. அவ்வாறு கல்வி உதவித் தொகை தருகின்றன என பகிரப்படும் போலியான விவரங்களை மாணவர்கள் கவனமுடன் தவிர்த்து விட வேண்டும்.

5)எல்லாவற்றையும் விட முக்கியமாக 6 வருட கல்வி கட்டணத்தையும் மொத்தமாக முதலிலேயே கட்டினால் டிஸ்கவுண்ட் தரப்படும் என்பது போன்ற போலியான விளம்பரங்களை நம்ப வேண்டாம். அவ்வாறு எந்த வெளிநாட்டு கல்லூரி நிர்வாகமும் எப்போதுமே தெரிவித்தது இல்லை 

வெளிநாட்டு கல்லூரிகளில் அட்மிஷன் முதல் கல்லூரி செல்வது வரை:

அட்மிஷன்:

முதலில் மாணவர்கள் அவர்களுடைய 12-ம் வகுப்பு மதிப்பெண் மற்றும் நீட் மதிப்பெண் சான்றிதழை கொண்டு விரும்பும் கல்லூரியை தேர்வு செய்து அட்மிஷனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்)

அதன் பின்னர் முக்கியமான ஆவணமான கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) எடுத்தல் வேண்டும். தற்போதைய நடைமுறையில்எபாஸ்போர்ட் எடுப்பது மாணவர்களுக்கு மிக எளிதானது.பாஸ்போர்ட் எடுக்கத் தேவைப்படும் ஆவணங்கள்:

(a)மாணவனின் ஆதார் கார்டு

(b) மாணவனின் 10-ம் வகுப்பு சான்றிதழ்

(c)மாணவனின் பிறப்பு சான்றிதழ்

(d)பாஸ்போர்ட் கட்டணம் ரூ.1,500- மற்றும் விண்ணப்ப முகவர் கட்டணம் அதிக பட்சமாக ரூ.500 -. நமது தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 15 நாட்களுக்குள் பாஸ்போர்ட் கிடைத்து விடுவது குறிப்பிடத்தக்கது.

(e) பாஸ்போர்ட் கிடைத்தவுடன் மாணவர்கள் அட்மிஷனுக்கு அணுகிய நிறுவனத்தினரிடம் அதன் நகலை மாணவர்கள் விசா பெறும் பொருட்டு ஒப்படைக்க வேண்டும்.

விசா

மாணவர்கள் வெளிநாட்டில் கல்வி கற்க செல்லும் போது கண்டிப்பாக மாணவர்கள் விசா வில் மட்டும்தான் செல்ல வேண்டும். வேறு எளிமையான வழிகளான டூரிஸ்ட் விசா போன்றவை மூலம் செல்லக்கூடாது. தற்போது என்.எம்.சி. ஆனது மாணவர்களின் பாஸ்போர்ட் – ஐயும் சரிபார்ப்பு செய்கின்றது.

கிர்கிஸ் குடியரசு போன்ற சில நாடுகளில் மாணவர்களின் விசா ஒரே நாளில் மிக எளிமையாக கிடைக்கப் பெறுகிறது. இதன்மூலம் பாஸ்போர்ட் கிடைப்பதில் தாமதம் ஆனாலும் மாணவர்கள் அதனால் கல்லூரி செல்வது தடையாகாது.

1.பெரும்பாலான மற்ற நாடுகளில் விசா பெறுவதற்கான மிக முக்கிய ஆவணமான வெளிநாட்டு கல்லூரி மற்றும் அரசாங்கத்தால் தரப்படும் இன்விடேஷன் எனப்படும் கடிதம் பெறுவதற்கு குறைந்தது 7 நாட்கள் முதல் 1 மாதம் வரை ஆகிறது.

2.அதன்பின் விசா அலுவலகத்தில் தேவையான சான்றுகளுடன் சமர்ப்பித்தால் மாணவர் விசா கிடைப்பதற்கு அதிகபட்சம் 1 மாதத்திற்குள் விசா கிடைத்து விடும்.

3.பெரும்பாலும் கிர்கிஸ் குடியரசு, ரஷ்யா, உஸ்பெகிஸ்தான், கஜகிஸ்தான், அர்சீனியா போன்ற நாடுகளுக்கு VISA பெற தேவைப்படும் ஆவணங்கள்:

a) கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்)

b) அட்மிஷன் லெட்டர்

c) இன்விடேஷன் (அந்த நாட்டு அரசாங்க அனுமதிக் கடிதம்)

d) குறிப்பிட்ட இரத்தப் பரிசோதனை

e) இன்சூரன்ஸ்

இதுதவிர தென் அமெரிக்கா, ஜார்ஜியா, போலந்து, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு சற்று விரிவான ஆவணங்களும், மாணவர்கள் விசா அலுவலகத்திற்கு நேரில் இன்டர்வியூ செல்ல வேண்டிய நடைமுறைகளும் உள்ளன.

சான்றிதழ் சரிபார்ப்பு:

மாணவர்கள் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக அவர்களின் பள்ளி சான்றிதழ்கள் இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஏனென்றால் இந்தியாவில் பல்வேறு சமயங்களில் போலி சான்றிதழ்கள் பற்றி செய்திகள் வந்துள்ளன. எனவே வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகள், இந்திய மாணவர்களின் சான்றிதழ்கள் இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் சரிபார்ப்பு செய்திருந்தால் மட்டுமே அதனை உண்மை என ஏற்றுக் கொள்கின்றன.

எனவே மாணவர்கள் அட்மிஷன் பெற்ற பின்பு அந்த நிறுவனத்தார் மூலமாகவே மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு வேலைகளை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

மொத்தத்தில் மேற்சொன்ன அட்மிஷன், பாஸ்போர்ட், சான்றிதழ் சரிபார்ப்பு, விசா போன்ற நடைமுறைகளை முடிப்பதற்கு குறைந்தபட்சம் 30 நாட்கள் முதல் அதிகபட்சம் 90 நாட்கள் வரை ஆகி விடும்.

வெளிநாட்டில் கல்லூரிகள் திறப்பு:

பெரும்பாலான வெளிநாட்டு கல்லூரிகளின் கல்வி ஆண்டானது செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. அக்டோபர் இறுதி வரை கல்லூரிகள், இந்திய மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கு அனுமதி அளிக்கின்றன.

கல்லூரி விடுமுறை:

பெரும்பாலும் ஜூலை, ஆகஸ்டு என்ற இரு மாதங்கள் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதில் பங்களாதேஷ் போன்ற ஒரு சில நாடுகள் ஜனவரி, மற்றும் ஜூன் என இரு முறைகளில் மாணவர் சேர்க்கை செய்கின்றன.

பல்வேறு நாடுகளின் கல்வி முறை, கல்லூரி விவரம், கல்விக் கடன், மாணவர்கள் கல்வி முடித்தபின் இந்தியாவில் பதிவு செய்வதற்கான தேர்வு முறை பற்றிய விவரங்களை வரும் வாரங்களில் பார்க்கலாம்.

மருத்துவக்கல்வி ஆலோசகர்

அனிதா காமராஜ்

செல்: 94980 88890

Tags:    

Similar News