சிறப்புக் கட்டுரைகள்

ஆன்மிகம் சித்தரிக்கும் கூந்தல்!

Published On 2023-06-16 09:43 GMT   |   Update On 2023-06-16 09:43 GMT
  • குண்டலம் போன்ற கேசத்தை உடையவள் என்ற பொருளில் அவள் குண்டலகேசி எனக் காரணப் பெயர் பெறுகிறாள்.
  • தெய்வப் பிறவியான ஆண்டாளின் தூய பக்தியைப் புலப்படுத்திய பெருமை அவள் தலைமுடிக்குத் தான் உண்டு.

முடி நம் ஆன்மிகத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குழந்தைகளுக்கு குலதெய்வ சன்னிதியில் மொட்டை போடும் பழக்கம் ஏராளமான இந்துக்களிடம் உண்டு. திருப்பதி, பழனி போன்ற திருத்தலங்களில் நேர்த்திக் கடனாக முடி காணிக்கை செலுத்துபவர்கள் பலரைப் பார்க்க முடியும்.

நீத்தார் சடங்கு செய்யும்முன் மொட்டை அடித்துக் கொள்வதும் நம் மரபில் உள்ளதுதான்.

ராமாயணத்தில் சூர்ப்பணகை சீதாப்பிராட்டியைத் தூக்கிச் செல்ல எண்ணு கிறாள். அதற்கான முயற்சியில் அவள் ஈடுபடும்போது கடும் சீற்றமடைகிறான் லட்சுமணன்.

தன் அண்ணிக்குத் தொல்லை தர முனைந்த சூர்ப்பணகையின் மூக்கை அரிந்துவிடுகிறான். அவள் அழுதுகொண்டே தப்பி ஓடுவதை விவரிக்கிறது கம்ப ராமாயணம்.

ஓர் அபூர்வ ராமாயணத்தில் இதுதொடர்பாக மேலும் ஒரு செய்தி இருக்கிறது. சூர்ப்பணகை குற்றத்திற்கான முயற்சியில் ஈடுபட்டாளே அன்றிக் குற்றம் நடைபெறவில்லை. சீதையை அவள் எடுத்துச் செல்லவில்லை.

அப்படியிருக்க அவள் நாசியைத் துண்டிப்பது என்பது மிகக் கடுமையான தண்டனை. சாதாரணக் குற்றங்களுக்குக் கடும் தண்டனை கொடுப்பது சரியான ராஜநீதி அல்ல.

சூர்ப்பணகையின் இழந்த மூக்கைப் பார்ப்போர் எல்லாம் அதுபற்றி அவள் வாழ்நாள் முழுவதும் பேசுபவர். அரிந்த மூக்கு ஒருபோதும் வளராது. எனவே, அடுத்தவரின் கேலிப் பேச்சைக் கேட்கும் போதெல்லாம் சூர்ப்பணகை மனத்தில் இதற்குக் காரணமானவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற வஞ்சினம் உருவாகும்.

`அவளின் பழிவாங்கும் உணர்வு நமக்குப் பல தொல்லைகளைத் தரக்கூடும் லட்சுமணா!` என்கிறாள் சீதாதேவி.

`அப்படியானால் நான் என்ன தண்டனை கொடுத்திருக்கலாம் என நினைக்கிறீர்கள் அண்ணி?` என்று வினவுகிறான் லட்சுமணன்.

`நீ அவள் கூந்தலை அரிந்திருக்கலாம். அரியப்பட்ட கூந்தல் காலப் போக்கில் மீண்டும் வளர்ந்துவிடும். அது அவளுக்குத் தற்காலிகத் தண்டனையாக மட்டுமே அமையும். ஆனால் நாசியைத் துண்டித்தது நிரந்தரத் தண்டனையாக அமைந்து விட்டதே?' என சீதை வருந்துவதாகச் சொல்கிறது அந்த ராமாயணம்.

ராமாயணத்தில் கானகத்திற்குச் செல்வதற்கு முன் ஆலம்பால் மூலம் தங்கள் தலைமுடியை ராமனும் லட்சுமணனும் திரித்து சடையாக்கிக் கொண்ட விவரம் வருகிறது. ராம பட்டாபிஷேகத்திற்கு முன் ராம லட்சுமணர்கள் அந்தச் சடையை நீக்கிக் கொள்கிறார்கள் என்ற தகவலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

*இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் தலைமுடி ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. பாஞ்சாலியை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மேல் தலைவிரி கோலமாகக் காட்டுகிறது மகாபாரதம்.

பஞ்ச பாண்டவர்கள் தங்களைத் தோற்றுத் தன்னையும் வைத்துத் தோற்ற அதர்மமான சூதாட்டத்தின் இறுதியில் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு பாஞ்சாலி சபதம் செய்யும் காட்சியை பிரமிக்க வைக்கும் வார்த்தைகளில் விவரிக்கிறார் மகாகவி பாரதியார்.

`பாவி துச்சாதனன் செந்நீர் அந்தப்

பாழ்த் துரியோதனன் யாக்கை ரத்தம்

மேவி இரண்டும் கலந்தே குழல்

மீதினில் பூசி நறுநெய் குளித்தே

சீவிக் குழல்முடிப்பேன் யான் இது

செய்யுமுன்னே முடியேன் என்றுரைத்தாள்!`

துச்சாதனன் துரியோதனன் ஆகியோரின் குருதியைத் தன் கூந்தலில் பூசிக்கொண்டு எண்ணெய் தேய்த்துக் குளித்த பின்னரே கூந்தலை முடிப்பேன் என்றும் அதுவரை தலைவிரி கோலமாகவே இருப்பேன் என்றும் திரெளபதி ஆங்காரத்தோடு சபதமிடும் காட்சி படிப்பவர்களைச் சிலிர்க்கச் செய்கிறது.

*சிவபுராணத்திலும் சிவனின் ஜடாமுடி பற்றிய தகவல்கள் வருகின்றன. ஜடாதரன் என்றே அவர் அழைக்கப்படுகிறார். பகீரதன் `பகீரதப் பிரயத்தனம்` செய்து ஆகாச கங்கையை பூமிக்குக் கொண்டு வருகிறான்.

ஆனால் கடும் வேகத்தோடு வரும் கங்கை நேரடியாக பூமியில் பாய்ந்தால் பூமியே அழிந்துவிடலாம். கங்கையின் வேகத்தை எப்படிக் கட்டுப் படுத்துவது?

பகீரதன் சிவனைப் பிரார்த்தனை செய்ய சிவபெருமான் தன் ஜடை முடியில் கங்கையைத் தாங்குகிறார். அதனால் வேகம் குறைந்த கங்கை பின்னர் பூமிக்குத் தாவுகிறாள் என்கிறது கங்கையின் உற்பத்தியைச் சொல்லும் கதை.

காளமேகப் புலவருக்கு `குடத்திலே கங்கையடங்கும்` என்ற ஈற்றடி கொடுக்கப்பட்டது. அந்த ஈற்றடியில் ஓர் அழகிய நேரிசை வெண்பாவை இயற்றினார் அவர். அதில் கங்கை சிவனின் தலைமுடியில் சிக்கி அடங்கிய கதையை இணைத்துப் பாடினார் :

`விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்

மண்ணுக் கடங்காமல் வந்தாலும் - பெண்ணை

இடத்திலே கொண்ட இறைவனின் ஜடாம

குடத்திலே கங்கையடங்கும்!`

*கண்ணனின் பால லீலைகளில் ஒன்று பெண்களின் பின்னலை அவர்கள் அறியாமல் பிடித்து இழுப்பது. அவன் செய்யும் பல குறும்புகளைப் பற்றி எழுதிய பாரதியார், கண்ணன் பாட்டில் `தீராத விளையாட்டுப் பிள்ளை` எனத் தொடங்கும் பாடலில், இதையும் பதிவு செய்கிறார்.

`பின்னலைப் பின்னின் றிழுப்பான் - தலை

பின்னே திரும்புமுன்னே சென்று மறைவான்

வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி

வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான்'

*கவரிமா என்னும் விலங்கு அதன் மயிரை நீக்கி விட்டால் உயிர் வாழாது என்றும் அதுபோல் மானத்திற்கு இழுக்கு நேர்ந்தால் சான்றோர் உயிரை விட்டுவிடுவர் என்றும் திருக்குறள் பேசுகிறது.

`மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்!'

விலங்குகளின் முடியில் யானை முடிக்குத் தனி மதிப்புண்டு. யானை முடியால் ரட்சை கட்டும் வழக்கம் இருக்கிறது.

*ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியிலும் கூந்தல் தலையாய இடம் வகிக்கிறது. பத்தரை என்ற அரசகுமாரி ஒரு கள்வனைக் காதலித்து மணந்து கொள்கிறாள்.

ஒரு சிறிய ஊடலின் மூலம் அவளிடம் பிணக்குக் கொண்ட கணவன், அவளை மலைமேலிருந்து தள்ள முயல்கிறான். ஆனால் எச்சரிக்கை அடைந்த அவள் தன் கணவனைத் தள்ளி விடுகிறாள்.

காதலித்து மணந்த கணவனைக் கொன்றோமே என்ற கழிவிரக்கம் காரணமாக அவள் சமண மதத்தில் சேர்ந்து துறவினி ஆகிறாள். அவள் முடி மழிக்கப் படுகிறது. என்றாலும் மழிக்கப் பட்ட முடி, மீண்டும் மீண்டும் சுருள்சுருளாக குண்டலம் குண்டலமாக வளர்கிறது.

அதனால் குண்டலம் போன்ற கேசத்தை உடையவள் என்ற பொருளில் அவள் குண்டலகேசி எனக் காரணப் பெயர் பெறுகிறாள். அந்தப் பெயரே காப்பியத்தின் பெயராகவும் நிலைபெறுகிறது.

*தெய்வப் பிறவியான ஆண்டாளின் தூய பக்தியைப் புலப்படுத்திய பெருமை அவள் தலைமுடிக்குத் தான் உண்டு.

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி அல்லவா அவள்? ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையைக் கோவிலில் கண்ணனுக்குச் சூட்டும்போது அதில் ஒரு முடி இருந்ததை அறிந்து திகைக்கிறார் பெரியாழ்வார். மாலையில் இருந்த முடி ஆண்டாளின் செய்கையைக் காட்டிக் கொடுத்துவிட்டது.

இனி இவ்விதம் தெய்வத்திற்கென்று தொடுத்த மாலையை அவள் அணியக் கூடாது என ஆண்டாளைக் கடிந்துகொண்ட பெரியாழ்வார் உறங்குகிறார்.

அவர் கனவில் வருகிறான் கண்ணன். ஆண்டாள் அணிந்த மாலையையே தான் அணிய விரும்புவதாக அறிவிக்கிறான்.

துளசிச் செடியின் கீழ் தனக்குக் கிடைத்த தன் வளர்ப்பு மகள் ஆண்டாளின் தூய பக்தியை அறிந்து பரவசமடைகிறது பெரியாழ்வாரின் நெஞ்சம்.

கண்ணன்மேல் பக்திகொண்ட ஆண்டாள், பின்னாளில் திருவரங்கத்தில் கண்ணனோடு ஐக்கியமானதை ஆண்டாளின் திருச்சரிதம் தெரிவிக்கிறது.

தலையலங்காரத்தில் ஆண்டாள் கொண்டை என்ற தலையலங்காரம் புகழ்பெற்றது. நாட்டியங்களிலும் நாடகங்களிலும் ஆண்டாள் வேடமிடுபவர்கள் அவ்விதத் தலையலங்காரத்தின் மூலம் தோற்றத்தாலேயே தாங்கள் ஆண்டாள் என்பதைப் புலப்படுத்துகிறார்கள்.

*புதுச்சேரியில் வாழ்ந்த ஆனந்தரங்கம் பிள்ளை நாள்தோறும் எழுதிய நாட்குறிப்பு வரலாற்றுப் புகழ்பெற்றது. அதில் ஒரு செய்தி வருகிறது. ஒரு விந்தை மனிதரைப் பார்க்க விரும்பிய துரையையும் துரைசானியையும் அந்த மனிதனிடம் அழைத்துச் செல்கிறார் அவர். அங்கே அவரைப் பார்த்து துரையும் துரைசானியும் வியந்ததாக நாட்குறிப்பு சொல்கிறது.

அப்படி அந்த மனிதரிடம் தென்பட்ட விந்தைதான் என்ன? அவரது உள்ளங் கைக ளிலும் உள்ளங் கால்களிலும் அடர்த்தியாக முடி முளைத்திருந்தது என எழுதி அந்த அதிசய மனிதரைப் பற்றித் தம் நாட்குறிப்பில் பதிவு செய்கிறார் ஆனந்தரங்கம் பிள்ளை.

*அடர்த்தியான நீண்ட கூந்தல் பெண்களுக்குத் தனி அழகு சேர்ப்பதாக இலக்கியங்கள் பேசுகின்றன. இலக்கியங்களில் பெண்களின் கூந்தல் மயில்தோகைக்கும் கார்மேகத்திற்கும் ஒப்பிடப்படுகிறது. பூங்குழலி, வண்டார்குழலி என்றெல்லாம் கூந்தலை மையப்படுத்திப் பெண்களுக்குப் பெயர்கள் அமைந்துள்ளன. பெண்களின் கூந்தலைப் பற்றித்தான் இலக்கியங்கள் அதிகம் பேசுகின்றனவே தவிர ஆண்களின் தலைமுடி பற்றி அதிகம் பேசுவதில்லை.

பெண்களின் தலைமுடிக்கு அழகு சேர்க்கும் பல அணிகலன்கள் பற்றியும் இலக்கியங்கள் குறிப்புத் தருகின்றன. சூடாமணி, திருகுப்பூ, சந்திரப் பிரபை, சூரியப் பிரபை, ராக்கொடி போன்றவை அவற்றில் சில. குற்றாலக் குறவஞ்சியில் பெண்கள் அணியும் தலை அணிகலன்கள் பற்றிய விவரங்கள் உண்டு.

ராமாயணத்தில் சுந்தரகாண்டத்தில் சீதாதேவி தன் தலை அணிகலனான சூடாமணியைத் தான் ராமனுக்குத் தரவேண்டிய அடையாளப் பொருளாக அனுமனிடம் கொடுத்தனுப்புகிறாள்.

*ஒரு காலத்தில் கணவனை இழந்த கைம்பெண்ணின் தலைமுடியை முற்றிலுமாக நீக்கி மொட்டையடித்து முக்காடு போட்டார்கள். அவள் தோற்றத்தைச் சிதைப்பதே அந்தச் செயலின் நோக்கம்.

இந்தக் கொடுமையான வழக்கத்தை மாற்ற எழுத்தாளர் கல்கி உள்படப் பலரும் தங்கள் படைப்புகளால் குரல் கொடுத்தார்கள். காலப் போக்கில் அந்தக் கொடூர வழக்கம் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கிறது.

*நாம் நம் மனத்தை மேம்படச் செய்து நம்மை உயர்த்தும் ஆன்மிகத்தை நம் தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறோம் என்றால் அதில் வியப்பில்லையே?

தொடர்புக்கு-

thiruppurkrishnan@gmail.com

Tags:    

Similar News