சிறப்புக் கட்டுரைகள்

சிரமப்பட்டு வந்த சிம்பு...

Published On 2023-06-12 10:48 GMT   |   Update On 2023-06-12 10:48 GMT
  • மிகவும் பிசியாக இருந்த சிம்புவுக்கு கடைசி நேரத்தில் நிகழ்ச்சிக்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
  • சிம்பு வருவாரா? வரமாட்டாரா என்று எங்களுக்கு திக்...திக்... என்று இருந்தது.

பிரமாண்டம்... வித்தியாசம்...

இதுதான் மானாட மயிலாட ஷோவின் அடிப்படையாக அமைந்தது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்கள் அப்படித்தான் இந்த நிகழ்ச்சியை பார்க்கவும் செய்தார்கள்.

மிகப்பெரிய தொழில்நுட்ப வளர்ச்சியை எட்டாத அந்த காலத்திலும் பல்வேறு தொழில்நுட்ப யுக்திகளை பயன்படுத்தி பிரமாண்டங்களையும், வித்தியாசங்களையும் மேடையில் உருவாக்கி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கினோம்.

ஒவ்வொரு சீசனிலும் அமைக்கப்பட்ட காட்சிகளை விட அடுத்து வரும் சீசன் அதைவிட பிரமாண்டமாக அமைய வேண்டும் என்ற நிர்பந்தம் இயற்கையாகவே ஏற்பட்டது.

கடந்த சீசனில் இந்தமாதிரி காட்சிகளை அமைத்திருந்தோம். அடுத்து வரும் சீசனில் என்னென்ன புதுமைகளை புகுத்தலாம் என்ற எண்ணம்தான் எப்போதும் எங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். 3 சீசன்களை நிறைவு செய்துவிட்டோம். 4-வது சீசன் தொடங்கியது. இந்த சீசனிலும் அறிமுகம் இல்லாத புதுமுகங்கள் பலரை தேர்வு செய்து ஜோடிகளாக உருவாக்கினோம்.

அவர்களில் எந்த ஜோடியும் சோடை போகவில்லை என்ற ரீதியில் போட்டிப்போட்டு அவ்வளவு அற்புதமாக ஆடினார்கள். பொதுவாக ஒருவர் நன்றாக டான்ஸ் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 2 அல்லது 3 ஆண்டுகள் வரை ஆகும். ஆனால் இந்த நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்கள் எங்களிடம் குறுகிய காலத்திலேயே பயிற்சி எடுத்துக்கொண்டு கைதேர்ந்த நடன கலைஞர்கள் போல் ஆடியது எங்களையே பிரமிக்க வைத்தது.

4-வது சீசனில் கோகுல்-நீபா, லோகேஷ்-ஸ்வேதா, கிரண்-பூஜா, மகேஷ்-பிரியதர்ஷினி, ரகுமான்-நிகிதா, குமரன்-அப்சரா, கார்த்திக்-சவுந்தர்யா, கிரண்-ஸ்ரீதேவி என்று எல்லா ஜோடிகளுமே ரசிகர்களை கவர்ந்த ஜோடிகள்தான். மேலும் இந்த சீசனில் இருந்துதான் போட்டியாளர்களை தேர்வு செய்யும் முறையிலும் மாற்றத்தை கொண்டு வந்தோம். அதாவது போட்டிக்கு நடுவராக இருப்பவர்கள் போடும் மதிப்பெண்ணில் 50 சதவீதம் வாங்குபவர்களும், அதேபோல் ரசிகர்களின் வாக்குகளில் 50 சதவீதம் வாங்குபவர்களும் சிறந்த போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டார்கள். ரசிகர்களையும் பங்கெடுக்க வைத்தது நிகழ்ச்சிக்கு கூடுதல் பலம் சேர்த்தது.

இதனால் ஒருதொய்வு நீங்கி பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சீசனில் வித்தியாசமான போட்டியாளர்களாக இருந்தவர்கள் மனோவும், சுகுமாரும். மனோ மிமிக்கிரியில் கில்லாடி. இவர்கள் இருவரும் தான் மேடையை களை கட்ட வைப்பார்கள்.

மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தவர்தான் தற்போது சின்னத்திரையில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் குமரன். இவரும் மிகச்சிறந்த டான்சராக இருந்து சின்னத்திரைக்குள் புகுந்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர். இந்த சீசனில் கிராபிக்ஸ் சுற்று என்ற புதிய சுற்றை அறிமுகப்படுத்தினார்.

பின்னணியில் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட பின்னணியில் மேடை அமைப்பு கச்சிதமாகவும், பார்க்க பிரமாண்டமாகவும் இருக்கும். அதில் போட்டியாளர்களின் நடனம் இடம் பெறும். அது ஒரு ரியல் ஷோ போல் காட்சி அளிக்கும் ரசிகர்களின் நாடித்துடிப்பு பார்த்து அவர்களின் ரசனைக்கு ஏற்ப என்னால் இப்படி புதுமையாக காட்சிகளை அமைக்க முடிந்தது. அதற்கு இன்னொரு முக்கிய காரணம் நிகழ்ச்சியை தயாரிப்பதில் எந்த தலையீடும் இல்லாதது தான்.

நான் காட்சியை பற்றியும், இந்த இந்த மேடைகள் அமைக்க போகிறோம் என்றும் சொல்வேன். அவ்வளவுதான். என் விருப்பப்படி அமைத்துக்கொள்ள சொல்வார்கள். அதனால்தான் என்னால் அந்த அளவுக்கு சாதிக்க முடிந்தது.

4-வது சீசனில் நான், குஷ்பு, நமீதா ஆகியோர் நடுவர்களாக இருந்தோம். எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை காட்சியாக அமைப்பேன். அது ரசிகர்களையும் கவரும். எனது கற்பனை என்பது நான் ரசிகர்களை நேரில் பார்க்கும் போது அவர்களது ரியாக்ஷனை பார்த்துதான் வரும்.

உதாரணத்துக்கு ஒரு குதிரையில் இருந்தபடி "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" என்ற பாடலுக்கு ஒரு ஜோடி ஆடியது. அதை பார்த்த ரசிகர்கள் என்ன ஆட்டம்? எப்படி இருக்கிறது என்றனர். அவர்கள் எப்படிபட்ட ரசனை படைத்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப காட்சிகளையும், ஷெட் அமைப்புகளையும் கொண்டு வந்தேன்.

இந்த காலக்கட்டத்தில் எவ்வளவோ ரியால்டி ஷோக்கள் நடக்கலாம். ஆனால் எல்லாவற்றுக்கும் மானாட... மயிலாட...தான் அடிப்படை என்பதில் எனக்கு பெருமை.

சின்ன வயதில் எனக்கு படிப்பு வராது. ஆனால் ஆசிரியர் வேலை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு வேளை இந்த துறைக்கு வந்திருக்காவிட்டால் ஆசிரியர் வேலைக்கு போயிருப்பேன்.

எந்த வேலையை செய்தாலும் அதில் ஒரு கிரியேட்டிவிட்டி இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அது எப்படி சாத்தியமாகும். மிகவும் சிரமமாயிற்றே என்றெல்லாம் நினைக்க மாட்டேன். எவ்வளவு சிரமப்பட்டாலும் சரி அதை உருவாக்கியே தீருவேன். அதுதான் ஒவ்வொரு நிகழ்ச்சியின் வெற்றிக்கும் காரணமாக இதுவரை இருந்து வருகிறது.

ரியாலிட்டி ஷோக்களில் வெள்ளித்திரையை விட பிரமாண்டமாக மேடை அமைக்கப்பட்டது எல்லோராலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. இந்த சீசனில் விமான நிலையம் போன்ற மேடையை அமைத்திருந்தோம். மேடை வடிவமைப்பாளர் தோட்டா தரணி அதை அமைத்து தந்தார். விமானம் நிற்பதுபோலவும், விமான நிலையத்தின் டிராலிகள் ஆங்காங்கே நிற்பது போலவும் இருந்த அந்த காட்சி விமானநிலையத்தையே கண்முன் கொண்டு வந்தது.

இந்த சீசனில் கோகுல்-நீபா முதல் பரிசையும், அனீஷ்-கவிதா 2-வது பரிசையும், லோகேஷ்-தர்ஷியா 3-வது பரிசையும் பெற்றிருந்தார்கள்.

பரிசளிப்புவிழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தப்பட்டது. பரிசளிக்க சிறப்பு விருந்தினராக நடிகர் சிம்பு அழைக்கப்பட்டார். அந்த காலக்கட்டத்தில் மிகவும் பிசியாக இருந்த சிம்புவுக்கு கடைசி நேரத்தில் நிகழ்ச்சிக்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அக்கா...நான் வருவதில் சிரமமாக இருக்கிறது என்று அவர் சொன்னதும் எப்படியாவது வரப்பாருங்கள் என்று சொல்லி இருந்தோம். நிகழ்ச்சி தொடங்கியது. சிம்பு வருவாரா? வரமாட்டாரா என்று எங்களுக்கு திக்...திக்... என்று இருந்தது.

இரவு 8 மணி அளவில் அவசர அவசரமாக வந்து சேர்ந்தார். அதன்பிறகுதான் எங்களுக்கு நிம்மதி வந்தது. அனைவருக்கும் அவர் தான் பரிசை வழங்கினார்.

தமிழகத்தில் சக்கைபோடு போட்ட மானாட மயிலாட முதல்முறையாக வெளி நாடுகளுக்கு பயணப்பட்டது. அதுபற்றிய தகவல்களுடன் அடுத்தவாரம் உங்களை சந்திக்கிறேன்.

Tags:    

Similar News