சிறப்புக் கட்டுரைகள்

"லஞ்ச் இடைவெளி –ஒரு நிமிடம்"

Published On 2023-06-24 07:56 GMT   |   Update On 2023-06-24 07:56 GMT
  • இன்னும் பல சிந்தெடிக் உணவுகள் இப்போது மேற்கத்திய மார்கெட்டில் உலா வருகின்றன.
  • விவசாயிகள் தம் தொழிலை விட்டு நகரங்களுக்குக்குடி பெயர, இந்த உணவுப்பற்றாக்குறை என்னும் பூதம் பெரிதாகிக்கொண்டே வருகிறது.

சமீபத்தில் நான் எழுதிய ஒரு கட்டுரை பலரை பாதித்து இருந்தது. ஒரு டெய்லர் கடையில் காஜா எடுக்கும் இளைஞர் இரண்டே இரண்டு பட்டர் பிஸ்கெட் சாப்பிட்டு "என் மதிய சாப்பாடு முடிஞ்சுட்டுது" என்று சொல்லி வேலையைத்தொடர்ந்த நிகழ்ச்சி ஏழ்மையின் நிலைமையை மனதை வறுத்தும்படி இருந்ததாக பலரால் சொல்லப்பட்டது. ஆனால் எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் வருத்தத்தைத்தராமல் முன்னேற்றத்தைக்காண்பிக்கும் நிலையை அடைந்து வருகிறோம்!

"எஸ் ஐ திவாகரன்! உடனே கிளம்புங்க! டி ஐ ஜி கூப்பிடறாரு!"

"இதோ நான் ரெடிங்க!"

"என்ன திவா! லஞ்ச் முடிங்க! என்ன ஒரு பத்து நிமிஷம் ஆகப்போவுது! பரவாயில்ல.!"

திவாகரன் பாக்கெட்டில் இருந்து ஒரு சின்ன குப்பில் இருந்து ஒரு பவுடரை எடுத்து வாயில் அடக்கிக்கொண்டு "வாங்க! லஞ்ச் சாப்டாச்சு!" என்று கிளம்பினார்…!

"என்ன திவா? சாப்டாச்சா?"

"அமாம் சார்! சாய்லெண்ட் பவுடர்!

சிந்தெடிக் உணவு!

உலகத்தின் ஜனத்தொகை பெருகிக்கொண்டே போக வருங்காலத்தில் நம் எல்லோருக்கும் தேவையான உணவை நம்மால் விளைவிக்க முடியுமா என்பது பெரும் கேள்விக்குறியாகிக்கொண்டிருக்கிறது! போதாதற்கு விளை நிலங்கள் குறைந்துகொண்டே வர, விவசாயிகள் தம் தொழிலை விட்டு நகரங்களுக்குக்குடி பெயர, இந்த உணவுப்பற்றாக்குறை என்னும் பூதம் பெரிதாகிக்கொண்டே வருகிறது.

மிகப்பெரிய அரசாங்கங்களும் கம்பெனிகளும் இந்த மாற்று உணவு தயாரிக்கும் கலையில் பல கோடி டாலர்களை முதலீடு செய்து ஆராய்ச்சிகள் செய்து வருகின்றன. ரோசா லேப்ஸ் என்னும் கம்பெனியின் சாய்லெண்ட் என்னும் இந்த பவுடர் தண்ணீரில் கலந்துசாப்பிட்டால் ஒரு மனிதனுக்கு ஒரு வேளை உணவுக்கான அத்தனை சத்துக்களையும் தந்துவிடுமாம். இது அமெரிக்கா மற்றும் கானடாவில் கடைகளிலேயே கிடைக்கின்றது! இது சம்மந்தமாக சில பாதுகாப்புக்கவலைகள் ஏற்பட்டு கோர்ட் கேஸ் என்று அலைந்தாலும் இவற்றின் கெடுதல்கள் "பயப்படத்தக்க லெவலில் இல்லை என்றுதான் விற்பன்னர்கள் சொல்லியிருக்கிறார்கள். ரோசா லேப்ஸ் மேலும் பல முன்னேற்றங்களைச்செய்து இந்த சிந்தெடிக் உணவை விற்பனை செய்து வருகிறது. இதுபோலவே இன்னும் பல சிந்தெடிக் உணவுகள் இப்போது மேற்கத்திய மார்கெட்டில் உலா வருகின்றன.

இந்த இயலில் இன்னும் புதுமையான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. பியாண்ட் மீட் என்னும் கம்பெனி பல புதுமையான சிந்தெடிக் உணவுகளை கொண்டு வந்திருக்கிறது. பட்டாணி புரோட்டீன், ஈஸ்ட் சாறு, பீட் ரூட் சாறு, தேங்காய்ப்புண்ணாக்கு, ஆம், புண்ணாக்கேதான், ஒரு பர்கர் போல தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் ஒரு வேளைக்கான சத்துக்கள் நிறைந்தவையாகத் தயாரித்து விற்க பிரயத்தனங்கள் நடந்து வருகின்றன. இன்னொரு கம்பெனி தாவரங்களிலிருந்து பர்கர் வஸ்துவைத் தயாரித்துக்கொடுக்கிறது. இந்தக்கம்பெனியின் பெயர் என்ன தெரியுமா, இம்பாசிபிள் புட்ஸ்!

மிருகவதை பற்றி நாம் இப்போது அதிகம் கேள்விப்படுகிறோம், படிக்கிறோம், டீவிக்களில் இந்த கழுத்து நரம்பு புடைக்க அரசியல்வாதிகள் வாதாடுவது தினமும் நடக்கிறது! இந்த சமாச்சாரம் இந்தியாவில் மட்டுமில்லை, உலகமெங்குமே நடந்துகொண்டுதான் இருக்கின்றது. மிக அதிகமானவர்கள் மிருகவதை தடை செய்யப்படவேண்டும் என்பது உரத்துச்சொல்லி வருகிறார்கள். நீண்ட கால நோக்கில் இந்த இயக்கங்கள் இன்னும் வலிவு பெறக்கூடும் என்பதால் பல நிறுவனங்கள் லாபராட்டரியில் முட்டையும் இரைச்சியும் வளர வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்!

இந்த சிந்தெடிக் உணவின் மிகப்பெரிய குறை ருசி இல்லாத உணவுதான். ருசி இல்லையென்றால் பசி இல்லை! ஆக நமக்கு உணவு என்பது வெறும் சத்துக்களுக்காகவும் உயிர் வளர்க்கவும் மட்டுமில்லையே! ருசி எவ்வளவு முக்கியம் என்பதைச்சொல்லவும் வேண்டுமோ!

"நம்ம ஆம்பூர் மேலத்தெரு பாய்கடையில சிக்கன் பிரியாணி தருவான் பாரு! அந்த சிக்கனைக்கடிக்கும் போது காரமா ஜூஸ் வாயில் வரும்ப்பா!"

"நேத்து நம்ம பஞ்சாபகேசன் வீட்டு கல்யாணத்துல ஒரு பதிர்பேணி போட்டானே! என்னமா கரயறதுடா! இன்னி காலம்பர வரைக்கும் நாக்குல டேஸ்ட் போகவே இல்ல!"

இதில் நாட்டுக்கு நாடு பாகுபாடே கிடையாது! ஸ்டேக்கிலும், பிட்சாவிலும், பாஸ்தாவிலும் வித விதாமான சுவைகள் இருப்பதை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மணிக்கணக்காக பேசுவதையும் கவனிக்கலாம்.

அதனால் இந்த ஆராய்ச்சியாளர்கள் சுவையையும் பசியையும் தூண்டும் வகையில் இந்த சிந்தெடிக் உணவு தயாரிப்பதில் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறார்கள்.

"இந்தாங்க உங்க வேலைக்கான ஆபர் லெட்டர்! நல்லா படிச்சு பார்த்துட்டு கையெழுத்து போடுங்க!"

"என்ன சார் இது! லஞ்ச் அவரே கிடையாதுன்னு போட்டிருக்கே!"

"ஆமா எங்க கம்பெனியில லஞ்ச்சுக்குனு தனியா டைம் கிடையாது!"

"எப்படி சார்! ஒரு தயிர் சாதம் சாப்பிடணூம்னா கூட பத்து நிமிஷம் ஆய்டுமே?"

"எதுக்கு தயிர் சாதம்? எங்க கம்பெனியே லஞ்ச் கொடுத்துடும்!"

"அப்ப அத சாப்பிட டைம் வேண்டாமா?"

"எதுக்கு டைம் வேணும்? சாய்லண்ட் பவுடர டம்ளர்ல கலக்கி ஒரே மடக்கு குடிச்சுட்டு வேலையை கண்டின்யூ பண்ண வேண்டியதுதானே!"

ஒரு பவுடர் பாக்கெட்டை வாயில் போட்டு தண்ணீர் குடித்து "த்ர" என்று சின்ன ஏப்பம்விட்டால் போதும், ஒரு வேளை உணவு முடிந்தது

நடக்கத்தான்போகிறது!

Tags:    

Similar News