சிறப்புக் கட்டுரைகள்

மீனா மலரும் நினைவுகள்: முள் இல்லாத மீனை பார்த்து பார்த்து தரும் சிவாஜி

Published On 2023-07-17 10:54 GMT   |   Update On 2023-07-17 10:54 GMT
  • டைரக்டர் என்று ஒருவர் இருப்பார். அவர் சொல்லித்தருவார். அதை கேட்டு நடிக்கணும் என்பதெல்லாம் எனக்கு தெரியாது.
  • நினைவு தெரியாத காலத்தில் நடந்த அந்த நினைத்தாலே இனிக்கும் காட்சிகளை இப்போதும் போட்டு பார்த்து என்னைப் பார்த்து நானே ஆச்சரியப்படுவது உண்டு.

அச்ச்சோ...

பாப்பா...ம்கூம்...

என்று என் அருகில் அமர்ந்து இருந்த சிவாஜி சார் நான் ஒரு பொறித்த மீனை எடுத்ததும் எடுக்க கூடாது என்பது போல் சைகை காட்டினார்.

ஆசைப்பட்டு சாப்பிட எடுத்ததை தடுத்துவிட்டாரே என்று நினைத்து என் முகம் வாடிவிட்டது.

அதை கவனித்தவர் சிரித்துக்கொண்டே `அங்கிள் இப்படி மீனை எடுப்பேனா... இப்படி முள்ளை எடுப்பேனா... அதை இப்படி வைப்பேனா... அப்புறம் மீனை மட்டும் பாப்பாவுக்கு ஊட்டுவேனா... என்றபடி எனக்கு ஊட்டியதும் சிரித்தபடியே சாப்பிடுவேன்.

இப்படித்தான் மீன் மற்றும் இறைச்சி துண்டுகளை முள், எலும்பு இல்லாமல் பக்குவமாக பிய்த்து எடுத்து எனக்கு ஊட்டுவார்.

படப்பிடிப்பு தளத்தில் சிவாஜி சார் இருந்தால் மதிய சாப்பாடு அவரோடுதான். தனது பேத்திக்கு ஊட்டுவது போல் எனக்கு அவ்வளவு பக்குவமாக ஊட்டுவார். அந்த நினைவுகளை இன்று நினைக்கும் போதும் நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று பெருமைபடுவேன்.

நெஞ்சங்கள் படத்தில் நடிக்க அம்மாவும், அப்பாவும் தான் என்னை தினமும் ஷூட்டிங் அழைத்து செல்வார்கள்.

கேமரா முன்பு இப்படி நிற்க வேண்டும். டைரக்டர் என்று ஒருவர் இருப்பார். அவர் சொல்லித்தருவார். அதை கேட்டு நடிக்கணும் என்பதெல்லாம் எனக்கு தெரியாது.

முதல் சீன்... மஞ்சள் நிறத்தில் பூ போட்ட ஒரு பிராக்கை கொடுத்து அணிய சொன்னார்கள். அந்த உடை எனக்கு ரொம்பவே பிடித்து இருந்தது.

ஒரு அறையில் என்னை கொண்டு நிற்க வைத்தார்கள்.

`பாப்பா, நான் ஓ.கே. ரெடி என்றதும் நீ டாடி என்று கூப்பிட்டுக்கொண்டே பக்கத்து அறைக்கு ஓட வேண்டும். சரியா? என்றார்கள்.

சரி என்பதுபோல் நானும் தலையை ஆட்டினேன். அவர்கள் சொன்னதும் ஓடினேன். அவ்வளவு தான். எப்படி படமாக்கினார்கள். அது திரையில் எப்படி வரும்? என்பதெல்லாம் எனக்கு தெரியாது.

படத்தின் கதைப்படி நான் பணக்கார வீட்டு குழந்தை. எனது பெயர் பாலா. சிவாஜி சார், லெட்சுமி ஆண்டி, மஞ்சுளா ஆண்டி, விஜயகுமார் அங்கிள் எல்லோரும் என்னை தூக்கி வைத்து கொஞ்சுவார்கள். கையை பிடித்துக்கொண்டு அங்கும் இங்கும் அழைத்து செல்வார்கள். கையை பிடித்தபடி என்னோடு டான்ஸ் ஆடுவார்கள். அப்போது நானும் சந்தோசமாக ஆடுவேன்.

நெஞ்சங்கள் படத்தை தயாரித்ததும் விஜயகுமார் அங்கிளும் மஞ்சுளா ஆண்டியும் தான். அப்போது அவர்கள் வீடு வேளச்சேரியில் இருந்தது. அந்த வீட்டிலும் படப்பிடிப்பு நடந்தது.

படம் முழுக்க கதை என்னை சுற்றியே வரும். என்னை தியாகராஜன் சார் கடத்தி செல்வார். சிவாஜி சார் மீட்பார். அம்மா-அப்பா என்னை தேடிக்கொண்டிருப்பார்கள்.

படத்தில் சிவாஜி சார் பாப்பா... பாப்பா... என்று என்னை அழைப்பார். ஒருமுறை நான் கோபத்தில் என் பெயர் பாப்பா இல்லை... பாலா... என்று சொல்லிவிடுவேன். நிஜமாகவே படத்தில் அப்படி ஒரு டயலாக் தேவைப்பட்டிருந்தது. அது யதார்த்தமாக அமைந்ததும் அப்படியே வைத்துவிட்டார்கள்.

படப்பிடிப்பு தளத்தில் எல்லோருக்கும் நான் தான் செல்லப் பிள்ளை. ஆச்சி மனோரமா, லெட்சுமி ஆண்டி, மஞ்சுளா ஆண்டி எல்லோருமே ஷூட்டிங் வரும்போது எனக்காக `சாக்லேட்' வாங்கி வருவார்கள். அவர்களிடம் சாக்லேட் வாங்குவதற்காகவே காத்திருப்பேன்.

சாக்லேட்டை வாங்கியதும் ஓட முயன்றால்.... பாப்பா... தேங்க்ஸ் எல்லாம் கிடையாதா என்று பாவமாக கேட்பது போல் கேட்பார்கள்.

தேங்க்ஸ் என்றதும், வெறும் தேங்க்ஸ் மட்டும் தானா? உம்மா... என்று கன்னத்தை காட்டி கொஞ்சுவார்கள். நான் ஒரு முத்தம் கொடுத்தால் போதும் அவர்கள் என்னை தூக்கி வைத்து முத்தம் தந்து கொஞ்சி மகிழ்வார்கள்.

மதியம் உணவு இடைவேளை வந்தால் போதும். சிவாஜி சார் என்னை அழைத்து பாப்பா... வாங்க என்று அவர் அருகில் அமர வைத்துவிடுவார்.

அவர் வீட்டில் இருந்து பெரிய டிபன் கேரியரில் நிறைய சாப்பாடு வந்திருக்கும். மற்றவர்களுக்கும் கொடுப்பார். எனக்கு காரம் இல்லாமல் பார்த்துக்கொள்வார். பருப்பு, நெய் போட்டு பிசைந்து தருவார். எனக்காக பிரத்தியேகமாக கொண்டுவருவார் என்று நினைக்கிறேன்.

நான் போதும் என்று சொன்னால் `அதற்குள் பாப்பாவுக்கு வயிறு ரொம்பிடுச்சா...' இன்னும் கொஞ்சம் என்று குழந்தை மாதிரியே பேச ஆரம்பித்துவிடுவார்.

யாருக்கு இப்படிப்பட்ட பாக்கியம் கிடைக்கும்?

தியாகராஜன் சார் என்னை கடத்தி செல்வது, அப்புறமாக என்னை அவரிடம் இருந்து சிவாஜி சார் மீட்பது, அவரது பாதுகாப்பில் இருக்கும் போது என்னை மீண்டும் கடத்த வருவது... அப்போது சண்டை நடக்கும். அதை பார்த்து நிஜமாகவே பயந்து அழுது விடுவேன். காட்சிக்கு அதுவே தத்ரூபமாக அமைந்து இருந்தது.

நினைவு தெரியாத காலத்தில் நடந்த அந்த நினைத்தாலே இனிக்கும் காட்சிகளை இப்போதும் போட்டு பார்த்து என்னைப் பார்த்து நானே ஆச்சரியப்படுவது உண்டு.

இன்னும் ஆச்சரியமான நினைவுகளை அடுத்தவாரம் பகிர்கிறேன்.

Tags:    

Similar News