சிறப்புக் கட்டுரைகள்

திருமண வரம் அருளும் குமரி பகவதி அம்மன்

Published On 2023-07-18 03:59 GMT   |   Update On 2023-07-18 03:59 GMT
  • தேவர்கள் பூ மழை பொழிந்து தேவியின் உக்கிரத்தைத் தணித்தனர்.
  • மூன்று கடல்களும் சங்கமிக்கும் புனித நீரில் நீராடுவோர் காசி சென்று கங்கையில் நீராட அனைத்துப் பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

நம்பினோர் கெடுவதில்லை

நான்கு மறைத் தீர்ப்பு

அம்பிகையைச் சரண் புகுந்தால்

அதிக வரம் பெறலாம்

மூன்று கடல் சங்கமத்தில் ஒரு தலம்

நீலத்திரைகடல் ஓரத்திலே நின்று நித்தம்

தவம் செய்யும் குமரி எல்லை

என்று மகாகவி பாரதியாரால் போற்றப்படும் குமரி எல்லையில் கோவில் கொண்டு தேவி அருள் பாலிக்கும் திருத்தலமே கன்னியாகுமரி..

பாரதத்தின் தென் கோடியில் உள்ள இந்தத் தலம் நாகர்கோவிலில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்துமா கடல் தெற்கிலும் வங்காள விரிகுடா கிழக்கிலும் அரபிக்கடல் மேற்கிலும் இருக்க இந்த முப்பெரும் கடலின் சங்கம இடத்தில் இந்தத் தலம் அமைந்திருக்கிறது.

சக்திபீடங்களில் முக்கியமானது:- இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். தேவியின் முதுகுப் பகுதி விழுந்த இடம் இது.

பிரஜாபதி தட்சனுக்கு மகளாக அவதரித்த தாட்சாயிணி தனது தந்தை புரியும் யாகத்திற்குத் தன் கணவனான சிவபிரானை அழைக்காதது குறித்து பெரிதும் வருத்தமும் கோபமும் கொள்கிறாள்.

தான் மட்டும் யாகத்திற்குச் செல்கிறாள். ஆனால், தட்சன் செய்த அவமரியாதை காரணமாகயாக குண்டத்தில் விழுந்து தன் உயிரை விடுகிறாள். இதை அறிந்த சிவபிரான் மிகுந்த கோபம் கொண்டு சதியின் உடலை ஏந்தியவாறே தாண்டவம் ஆடி அலைகிறார்.

இதைக் கண்ணுற்ற மகாவிஷ்ணு சதியின் உடலை தனது சக்கரத்தால் 51 துண்டுகளாக ஆக்க, அவை பாரத தேசத்தின் பல்வேறு பகுதிகளில் விழுகின்றன. பெரும் வரங்களை நல்கும் சக்தி பீடங்களாக அந்த இடங்கள் மாறி அந்த இடங்களில் எல்லாம் அன்னை ஆட்சி புரிந்து பக்தர்களுக்கு இன்றளவும் அருள் பாலித்து வருகிறாள்.

தேவியின் முக்கிய அங்கமான முதுகுப் பகுதி விழுந்த இடமே சக்தி பீடமான கன்னியாகுமரி!

கன்னியாகுமரி தல வரலாறு:

இந்தத் தலத்தைப் பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு. முன்னொரு காலத்தில் பாணாசுரன் என்னும் அசுரன் பிரம்மாவை நோக்கிக் கடும் தவம் புரிய பிரம்மா அவன் முன் தோன்றி அவனுக்கு வரம் அளிக்கத் திருவுள்ளம் கொண்டார். ஒரு கன்னிப் பெண்ணைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் வரக் கூடாது என்று அந்த அசுரன் வேண்ட, அந்த வரத்தை அருளினார் பிரம்மா.

மிக்க வலிமை உடைய அசுரன் கன்னிப் பெண்ணால் தனக்கு அழிவு ஏற்படவே முடியாது என்ற எண்ணத்தால் தேவர்கள் உள்ளிட்ட அனைவரையும் கொடுமைப் படுத்த ஆரம்பித்தான். தேவர்கள் திருமாலை அணுக அவர் பாணாசுரனின் வரம் பற்றி விளக்கி சிவனை அணுகுமாறு கூறினார்.

சிவபிரானை அணுகிய தேவர்கள் தங்களின் குறையை முறையிட்டனர். சிவபிரான் இந்த அசுரனை அழிக்கத் தகுதி வாய்ந்தவள் தேவியே என்று கூற, தேவர்கள் தேவியை நோக்கித் தவம் புரிந்து வேண்டினர்.

அவர்களுக்கு அருள் புரிய எண்ணிய தேவி கன்னியாகுமரி தலத்தில் ஒரு பெண்ணாக அவதரித்தாள்.

கன்னியாக இருந்த தேவி சிவபிரானை மணக்க எண்ணிக் கடும் தவம் புரிந்தாள். அப்போது அருகில் சுசீந்திரத்தில் தாணுமாலயனாக இருந்த சிவபிரான் தேவியை மணக்க எண்ணினார். மணம் முடிந்தால் தங்கள் துயர் தீராதே என்று இதனால் தேவர்கள் பயந்தனர்.

ஆனால் தேவரிஷியான நாரதர் இதுவும் சிவபிரானின் அருள் விளையாடலே என்பதை உணர்ந்தார். சிவபிரானின் முன், அவர் ஒரு கோரிக்கையை வைத்தார். மணம் முடிக்கும் இடத்திற்கு மாப்பிள்ளையான சிவபிரான் சூரியோதயத்திற்கு ஒரு நாழிகை முன்னதாகவே வந்து விட வேண்டும் என்றும் அப்படி வரவில்லை எனில் மணம் நடக்காது என்றும் அவர் கூற அதை அப்படியே சிவபிரான் ஏற்றார்.

மண நாளன்று தாணுமாலயன் கன்னியாகுமரி இருந்த இடத்தை நோக்கி வரும் போது நாரதர் சேவல் வடிவில் இருந்து கூவினார்.

சிவபிரான் விடிந்துவிட்டது என்பதால் தன் இருப்பிடம் திரும்பினார். தன்னை மணக்க சிவபிரான் வருவார் என்று காத்திருந்த குமரியம்மன் அவர் வராததால் எல்லையற்ற கோபம் கொண்டாள்.

திருமணத்திற்கென வைக்கப்பட்டிருந்த பண்டங்களையும் வண்ண மலர்களையும் கடற்கரைப் பரப்பில் வீசினாள்.

இதுவே கன்னியாகுமரி கடற்கரை வண்ண மயமாக இன்றும் காட்சி அளிப்பதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாணாசுரன் கன்னியாகுமரி அழகில் மயங்கித் தன்னை மணக்கு மாறு கோரினான். தேவி மறுத்தாள். ஆனால் தேவியை மணக்க எண்ணிய அசுரன் அவள் அருகில் வந்த போது தேவி யானவள் வானுயர வடிவம் எடுத்து அசுரனைக் காலில் போட்டு வதம் செய்தாள்.

தேவர்கள் பூ மழை பொழிந்து தேவியின் உக்கிரத்தைத் தணித்தனர். தேவி சாந்தம் அடைந்து சிவபிரானை நோக்கிக் கடும் தவம் செய்ய ஆரம்பித்தாள்.

குமரி அம்மன் என்றும் பகவதி அம்மன் என்றும் துர்க்கை என்றும் பல்வேறு பெயர்கள் தேவிக்கு உண்டு.

தேவியின் மூக்குத்தி:- தன் யோக சக்தி அனைத்தையும் அம்மன் தனது மூக்குத்தியில் இறக்கி வைத்திருப்பதால் அம்மன் அணிந்திருக்கும் மூக்குத்தி ஜொலிக்கும் ஒன்றாக அமைந்திருக்கிறது.

தேவியின் மூக்குத்தி பற்றி லலிதா சஹஸ்ரநாமத்தில் 20வது நாமமாக வருவது - ஓம் தாராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா என்பதாகும்.

இதன் பொருள் : சுக்ர நட்சத்திரத்தின் ஒளியைத் தோற்கடிக்கக்கூடிய பிரகாசமான மூக்குத்தியுடன் விளங்குபவள் என்று பொருள்.

அவள் சூரியனையும் சந்திரனையும் தனது இரு காதுகளில் தாடங்கங்களாய் (ஓலைகளாய்) தரித்துக் கொண்டிருப்பவள்.

கதம்பத்தின் துளிர்களை தன் காதுகளில் கர்ணப்பூப்போல தரித்திருந்து தெய்வீகப் பேரழகுடன் மனதை மயக்கும் உருவத்தை உடையவள். ஓடும் மீன்களைப் போல இருக்கும் கண்களைக் கொண்டவள். இப்படிப்பட்ட தெய்வீக திருவுருவத்திற்கு மூக்குத்தி அதிக சோபையைத் தருவதில் ஆச்சரியமில்லை.

கோவில் அமைப்பு: இப்படிப்பட்ட ஒளி பொருந்திய மூக்குத்தியின் ஒளியால் தூரத்தில் வரும் கப்பல்கள் வழி காட்டப்பட்டு வந்தன. சில மாலுமிகளோ மூக்குத்தி ஒளியை கலங்கரை விளக்கம் என்று எண்ணி விபத்துக்குள்ளாயினர். ஆகவே கோவிலின் முன்புற வாயில் மூடப்பட்டு, வடக்குப் புறமாக வாயில் வைக்கப்பட்டது.

கிழக்கு நோக்கி கொண்டு பகவதி அம்மன் உள் மண்டப கர்ப்பகிரகத்தில் எழுந்தருளி உள்ளாள். ஒரு கரத்திலே இலுப்பைப் பூ மாலையை தரித்து மற்றொரு கரத்தைத் தொடை மீது அமர்த்தி தவக்கோலத்தில் அம்மன் காட்சி அளிக்கிறாள். கோவிலின் உள்பிரகாரத்து தென் மேற்குக் கோடியில் விநாயகர் சந்நிதி உள்ளது. அங்குள்ள மணி மண்டபம் ஆறு தூண்களுடன் அமைந்திருக்க அதன் முன்னே சபா மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

திருமணம் கைகூடும் தலம்: திருமணம் ஆகாமல் இருக்கும் கன்னிப் பெண்கள் இந்தத் தலத்தில் வந்து அம்மனை வழிபட்டால் வெகு விரைவில் நல்ல முறையில் திருமணம் நடக்கும் என்பது காலம் காலமாக பெரியோர்கள் கண்ட அனுபவம்.

இங்கு மூன்று கடல்களும் சங்கமிக்கும் புனித நீரில் நீராடுவோர் காசி சென்று கங்கையில் நீராட அனைத்துப் பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

அம்பிகையைப் பற்றி அறநூல்கள் குறிப்பிடும்போது வெவ்வேறு ரூபங்களை உடையவள் அவள் என்று குறிப்பிடுகின்றன. அத்தோடு அவரவர் வேண்டுதலுக்குத் தக்க பலன்களை அளிக்கும் அவளுக்கு வெவ்வேறு வர்ணங்களும் உண்டு என்பதோடு எண்ணிக்கையற்ற திருப்பெயர்களால் அவள் குறிப்பிடப்படுகிறாள் என்றும் கூறுகின்றன.

இந்த வகையில் மூன்று கடல்களும் சங்கமிக்கும் சங்கமத்தில் கன்னியாகுமரி என்ற நாமத்தோடு சக்தி வாய்ந்த சக்தி பீடத்தில் எழுந்தருளி இருக்கும் அம்மன் பக்தர்களின் வழிபாட்டை உகந்து ஏற்று அவர்களின் வேண்டுதலுக்குத் தக்கபலன்களை அளிப்பாள் என்பது இறுதியான உறுதி ஆகிறது.

விவேகானந்தர் தவம் புரிந்த இடம்: கன்னியாகுமரி இந்து மதத்தின் எழுச்சிக்கு வழி கோலிய அற்புதத் தலமாகும். இங்கு தான் சுவாமி விவேகானந்தர் தனது பாரத யாத்திரையின் போது வந்து 1892 டிசம்பரில் அருகிலிருந்த பாறைக்கு நீந்திச் சென்று மூன்று நாட்கள் தவம் புரிந்தார். அலைகடலின் மீது தோன்றிய ராமகிருஷ்ணர் அவரை வா என்று அழைக்கவே அவர் அமெரிக்கா செல்ல இறுதி முடிவு எடுத்தார்; அங்கு சென்றார். உலகையே வென்றார். அவர் தவம் புரிந்த இந்தப் பாறையில் விவேகானந்தர் மணி மண்டபம் அமைக்கப்பட்டு அவரது திருவுருவச் சிலை நிறுவப்பட்டு 1972-ல் இது திறக்கப்பட்டது. இங்கு செல்ல படகு வசதிகளும் உண்டு.

ஸ்ரீ பாதப் பாறை: இந்தப் பாறையின் முக்கிய சிறப்பு அம்சம் இங்கு தேவியின் ஸ்ரீ பாதம் அமைந்திருப்பது தான். தேவி தவம் புரிந்த பாறை இது என்பதால் இது ஸ்ரீபாதப் பாறை என்று அழைக்கப்படுகிறது. தேவியின் பாதச் சுவடு உள்ள இடம் தரிசனம் செய்யக் கூடியபடி அழகுற பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

கன்னியாகுமரியில் 133 அடி உயரமுள்ள கம்பீரமான திருவள்ளுவர் சிலையும் உள்ளது.குமரியில் கடல் கூடும் சங்கம இடத்தில் இருந்து சூர்யோதயமும் சூர்யாஸ்தனமும் பார்ப்பது பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாகும். அம்மனின் தரிசனத்தோடு அம்மனின் படைப்பு அற்புதத்தையும் இங்கு பார்த்து வியக்கலாம்.

ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் சக்தி ஓம்!

ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் சக்தி ஓம்!!

தொடர்புக்கு:-

snagarajans@yahoo.com

Tags:    

Similar News