சிறப்புக் கட்டுரைகள்

இடுக்கண்களையும் இருக்கன்குடியாள்!

Published On 2023-07-27 06:53 GMT   |   Update On 2023-07-27 06:53 GMT
  • தனது படைகளுடன் சென்ற ராமன் மேற்கு தொடர்ச்சி மலையில் நீராட வேண்டும் என்று நினைத்தபோது, கொண்டுவரப்பட்டதுதான் இந்த வைப்பாறு.
  • அம்பாளை தரிசிக்க விரும்பிய முனிவர் நீண்ட நாட்களாக தவம் இருந்தார்.

பஞ்சபாண்டவர்கள் பதின்மூன்று ஆண்டுகள் வனவாசம் செய்த போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளின் ஒரு பகுதியான சதுரகிரி மலைக்காடுகளில் சில காலம் தங்கி இருந்தனர். அக்காலத்தில் காலை, மாலை நீராடி இறைவனை பூசை செய்ய அர்ச்சுனன் சூரிய உதய நேரத்தில் கங்காதேவியை தியானித்து, வருணாஸ்தி ரத்தினால் பூமியில் அம்பெய்தான். பூமியில் இருந்து கங்கை பிரவாகமாக வெளிவந்தது. பஞ்சபாண்டவர்கள் நதியில் நீராடி, நித்ய கடமைகளைச் செய்தனர். அன்று முதல் அந்த ஆறு அர்ச்சுனா நதி என்று பெயர் பெற்றது.மற்ற புண்ணிய நதிகளில் மாதம் தோறும் நீராடிப் பெறும் பயனை, இந்நதியில் ஒரு முறை நீராடுவதாலேயே பெறலாம் என்று நாரதர் சொன்னதாக தொல்வரலாறுகள் கூறுகின்றன. இந்த புண்ணிய நதியில் நீராடினால் பாவங்கள் தொலையும். அர்ச்சுனா ஆறு ஓடிய வழியில் பரசுராம சேத்திரமான கேரள மாநிலத்தில் உருவாகி தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் வழியாக வைப்பாறு என்னும் ஆறு வந்தது.

வைப்பாறு ராமபிரானினால் உருவாக்கப்பட்டது. தனது படைகளுடன் சென்ற ராமன் மேற்கு தொடர்ச்சி மலையில் நீராட வேண்டும் என்று நினைத்தபோது, கொண்டுவரப்பட்டதுதான் இந்த வைப்பாறு. அகத்திய முனிவர் உலகில் உள்ள புண்ணிய தீர்த்தங்களை எல்லாம் ஒரு குடத்தில் சேமித்து, இந்த இடத்தில் புதைத்து வைத்திருப்பதாக வழிச்செல்பவன் கூறினார். இதைக் கேட்ட ராமன் இடத்தை கண்டுபிடித்து, தனது பானத்தினால் அம்பினை எய்து புண்ணிய தீர்த்தங்களை வெளிவரச் செய்தார். புனித தீர்த்தங்களை ஒன்றாக்கி வைத்திருந்ததால் இந்த ஆறுக்கு வைப்பாறு என்ற பெயர் வந்தது வரலாறு.

அம்பாளை தரிசிக்க விரும்பிய முனிவர் நீண்ட நாட்களாக தவம் இருந்தார். சித்துகள் கைவரப்பட்ட முனிவருக்கு ஒரு அசரீரீ குரல் அர்ஜுனரி ஆறுக்கும், மற்றும் வைப்பாறுக்கும் இடையே உள்ள மேட்டுப் பகுதிக்கு வரக் கூறியது. மேட்டுப் பகுதியை அடைந்த சித்தருக்கு அம்பாள் காட்சி அளித்தாள். கண்களால் கண்ட அம்பாளின் உருவத்தை சிலையாக வடிவமைத்து, வணங்கினார் சித்தமுனிவர் . நாளடைவில் இயற்கை சீற்றத்தில் ஆற்று மண்ணில் மறைந்து கொண்டது. இரண்டு கங்கை நதிகளும் ஓடி வரும் இடைப்பகுதியில் அடர்ந்த காடு உருவாயிற்று.

காட்டில் கால்நடைகள் இட்டுச் செல்லும் சாணக்கழிவுகளை அருகில் உள்ள கிராம மக்கள் திரட்டி எடுத்துச்செல்லும் பழக்கம் உண்டு. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் அவ்வாறு ஒரு பெண் சாணிபொருக்கி கூடையிலிட்டு வரும்போது ஒரு நிலையில் கூடையை அசைக்க முடியாத கனம் உண்டானது, அவள் ஊராருக்கு தகவல் சொல்ல ஊராரும் அங்கு சேர்ந்துவிட அப்பொழுது அவள் சாமி வந்து ஆடினாள். சாமியாடிய அந்தப் பெண், அந்தக் கூடை இருக்கும் இடத்தில், சிலையாகப் புதைந்து கிடக்கும் தன்னை வெளியில் எடுத்து, கோவில் அமைத்து வணங்கினால், அனைத்து வேண்டுதல்களையும், நிறைவேற்றுவேனென தெரிவித்தாள், மக்கள் அந்த இடத்தில் புதைந்து கிடந்த சிலையை எடுத்து ஊருக்குள் கொண்டு சென்று வைத்து வழிபடத் துவங்கினர்.

மூன்று தினங்களில் மீண்டும் அப்பெண்ணின் மீது அருள் வந்து, "நான் வீற்றிருக்கும் இடத்தில் சேவல் கூவக்கூடாது, இருக்குமிடம் சுத்தமாயிருக்க வேண்டுமாதலால் முன்பு தோண்டி எடுத்த இடத்திலேயே கொண்டு வைத்து வழிபடுங்கள்" என்றாள். தொடர்ந்து அம்மனை மீண்டும் ஊருக்குள் இருந்து தற்போது திருக்கோவில் அமைந்து உள்ள இடத்தில் நிறுவி வழிபாடு செய்யத்தொடங்கினர்.

கோவில் அமைவிடம்: வைப்பாறு, அர்ச்சுனாஆறு ஆகிய இரண்டு ஆறுகளுக்கு மத்தியில் , மணல் திட்டில், இந்தக்கோவில் அமைந்துள்ளது.

பெயர்க் காரணம்: கோவிலின் தெற்குப் பக்கம் வைப்பாறு, வடக்குப் பக்கம் அர்ச்சுனன் ஆறு என்று இரு ஆறுகள் சேர்ந்து வருவதால் இரு கங்கை கூடுமிடம் என்று சொல்லப்பட்டு, இந்த இடத்தில் அம்மன் குடி கொண்டு விட்டதால், 'இரு கங்கை' குடி என்பது, 'இருக்கன்குடி' என்றானது. அங்கு குடி கொண்ட தெய்வம் மக்கள் குறை தீர்க்கும் மாரியம்மனாகும். இந்த அர்ச்சுனா நதி, புராணப் பெருமை வாய்ந்தது.

கோவில்களில், மாரியம்மன், இடது காலை மடித்து, வலது காலைத் தொங்கவிட்டபடிதான் இருப்பார். ஆனால் இந்தக் கோவிலில் இருக்கும் கருவறை மாரியம்மனோ, சிறப்பம்சமாக வலது காலை மடித்து, இடது காலைத் தொங்கவிட்டிருக்கிறார்.

கருவறை அழகிய விமானத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் நுழைவாசலின் உயரம் குறைவாக இருப்பதால் குனிந்து உள்ளே போக வேண்டும். அம்மன் ஆபரணங்கள் அணிந்து மின்னுகிறாள். அம்மனின் கண்கள் காண்பதற்கே மெய் சிலிர்க்கும்.

அர்த்த மண்டபம் மற்றும் மகாமண்டபம் கருவறைக்கு அருகில் அமைந்துள்ளன. நந்தீஸ்வரர் மற்றும் கொடிமரம் மகாமண்டபத்தின் முன்புறம் அமைந்துள்ளன. கருவறையின் தென்புறம் அரச மரத்தடியில் சித்திவிநாயகர் சன்னதியும் மற்றும் வடக்குவாய்ச்செல்லியம்மன், ஸ்ரீ வெயிலுகந்தம்மன் சன்னதிகளும் அமைந்துள்ளன. கருவறையின் வடக்குப் பகுதியில் பைரவர், வீரபத்திரர், பேச்சியம்மன், காத்தவராயர் சன்னதிகள் அமைந்துள்ளன. வெளிப்பிரகாரத்தின் தென்கிழக்குப் பகுதியில் கருப்பசாமி சன்னதி அமைந்துள்ளது.

மூன்று நாட்கள் ஊருக்குள் இருந்து விட்டு கோவில் உள்ள இடத்திற்கு மீண்டும் அம்மன் கொண்டுவரப்பட்டதால் அம்மனின் உற்சவர் சிலை, ஒவ்வொரு ஆடிமாதமும் கடைசி வெள்ளியன்று ஊரில் உள்ள கோவிலில் எழுந்தருளி, மூலவர் உள்ள இடத்திற்கு வந்து தங்கவைக்கப்படுகிறது. மறுநாள் இங்கிருந்து புறப்பட்டு ஊருக்குள் உள்ள உற்சவர் கோவிலை அடைகிறது.

தனிச்சிறப்புகள்: இருக்கன்குடிக்கு மட்டுமின்றி அதை சுற்றியுள்ள நத்தத்துப்பட்டி, என்.மேட்டுப்பட்டி, கே.மேட்டுப்பட்டி உட்பட சுமார் நூற்றுக்கு மேற்பட்ட கிராமத்து மக்களுக்கும் இப்பகுதியில் இருந்து பிழைப்பு தேடி வெளியூர் சென்று குடியேறிய மக்களுக்கும் அருள்கடாட்சம் தந்து பாதுகாக்கும் குல தெய்வமாக மாரியம்மன் திகழ்கிறாள்.

இருக்கன்குடி மாரியம்மனின் புகழ் 1600-ம் ஆண்டு முதல் மற்ற பகுதிகளுக்கு பரவத் தொடங்கியது. 1605-ம் ஆண்டு முதல் மதுரை பகுதியை ஆண்ட பாளையக்காரர்கள் இருக்கன்குடி மாரியம்மனுக்கு மானியம் கொடுத்தனர்.

இருக்கன்குடி மாரியம்மன் தனக்கு ஆடி மாதம் பிரமோற்சவம் நடத்த வேண்டும் என்று பக்தர் ஒருவர் கனவில் வந்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 1908-ம் ஆண்டு முதல் அங்கு ஆடி பிரமோற்சவம் நடந்து வருகிறது..

பாலையம்பட்டி "பெரியிலாந்தாஸ்" என்பவர் அம்மன் மீது தனி கீர்த்தனம் பாடி உள்ளார். முள்ளிக் குளம் வித்வான் சங்கரபாண்டி பிள்ளை "மாலைபதிகம்" இயற்றியுள்ளார் . 1925ல் துலுக்கங்குளம் அருளானந்த கருப்பையா ராஜா என்பவர் 'செந்தமிழ்பதிகம்' ஒன்று பாாடி உள்ளார்.

பழனி கோவிலுக்கு மக்கள் பாதயாத்திரை செல்வது போல தை மாதம் விரதம் இருந்து ஏராள பக்தர்கள் பாதயாத்திரையாக இருக்கன்குடிக்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள். மதுரைக்கு தெற்கே உள்ள தென்மாவட்ட மக்கள் மத்தியில் இத்தலம் மிகச்சிறந்த சக்தி பீடமாகத் திகழ்கிறது்

இருக்கன்குடி மாரியம்மன் கோவில் விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள இருக்கன்குடியில் உள்ள மாரியம்மன் கோவிலாகும்.

ஒவ்வொரு வெள்ளி, ஞாயிறு, அரசு விடுமுறை நாட்களில் அதிக அளவில் மக்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். இம்மாரியம்மன் கோவில் தென் மாவட்டத்தில் இருக்கும் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றாகும். இந்தக் கோவிலில் வழிபட்டுச் செல்பவர்களுக்கு அம்மை உட்பட அனைத்து விதமான நோய்களும் உபாதைகள் நீங்கும் என்கிற நம்பிக்கை இந்தப் பகுதி மக்களிடம் இருக்கிறது.

வேண்டுதல்கள்: முடிகாணிக்கை இத்திருக்கோவிலின் பிரதான பிரார்த்தனை ஆகும். குறை நிவர்த்தி வேண்டி திருக்கோவிலில் தங்கி வயனம் காக்கும் பார்வையேற்றோர்க்கு பார்வையளித்தும், தீராத நோய்களைத் தீர்த்து வைத்தும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை வரம் அளித்தும், திருமண பாக்கியம் வேண்டியோருக்கு மாங்கல்ய வரம் அளித்தும் அருளாட்சி செய்யும் அம்மனை தரிசித்தால் நிச்சயம் அருள் புரிகிறாள் என்பது பக்தர்களின் சொல்லாகும். குழந்தைவரம் வேண்டியோர் கரும்புத்தொட்டில் வேண்டுதல் நிறைவேற்றுவதும் சிறப்பாகும்.

திருவிழாக்கள்: இடுக்கண் களையும் இருக்கன்குடியாளுக்கு ஆடி கடைசி வெள்ளியன்று நடைபெறும் பெருந்திருவிழாவை முன்னிட்டு, அதற்கு முந்தைய வெள்ளியன்று கொடியேற்றம் நடைபெற்று, ஆடி கடைசி வெள்ளி அன்று உற்சவர் கோவிலில் இருந்து அன்னை ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, அர்ச்சுனா நதியில் உலாவி திருக்கோவிலில் எழுந்தருள்வாள். இந்த விழாவில் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது, மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள்.

தை கடைசி வெள்ளியிலும், பங்குனி கடைசி வெள்ளியிலும் பெருந்திரளான மக்கள் அம்மன் அருள் பெறக் கூடுவர். விழாக்காலங்களில் அம்மன் அருள் பெற அர்ச்சுனா நதியிலும், வைப்பாறு நதியிலும் கூடும் மக்கள் வண்டிகளிலும் வாகனங்களிலும் வந்து நேர்த்திக்கடனைச் செலுத்துவது மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சியாகும்.

அம்மனுக்கு அக்கினிச்சட்டியும், ஆயிரங்கண்பானையும், உருவம் எடுத்தல், போன்ற நேர்த்திக் கடன்களை செலுத்தி அம்மனின் அருளைப் பெற்று, பக்தர்கள் வாயாற வேண்டிச் சென்று வாழ்க்கையில் வளம் பெறுவது இத்திருக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

Tags:    

Similar News