சிறப்புக் கட்டுரைகள்

'முதுமை' எனும் மாபெரும் சவால்..!

Published On 2023-08-09 10:19 GMT   |   Update On 2023-08-09 10:19 GMT
  • சமீப காலமாக தான் ‘ஜீரியாட்ரிக் மருத்துவம்’ எனும் முதியோர் நல மருத்துவப் பிரிவு உலக அளவில் துவங்கப்பட்டு, அவர்களின் மேல் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
  • ஆரோக்கியமான முதியோர் சமுதாயம் உண்டாக்கிட தொடர்ந்து பயணிப்போம். முந்தைய தலைமுறை மூதாதையர்கள் தான் அடுத்தடுத்த தலைமுறையின் நலனுக்கு வழிகாட்டி.

வயது மூப்பு என்பது அனைவரின் வாழ்விலும் தவிர்க்க முடியாத ஒன்று. தலையில் ஏற்படும் நரையும், கண்ணில் ஏற்படும் திரையும், வயது மூப்பின் துவக்க நிலையாக பண்டைய காலம் முதல் கணிக்கப்பட்டு வந்துள்ளது.

ஆதலால் தான் நரை, திரை, மூப்பு, பிணி, சாக்காடு (இறப்பு) ஆகிய இவை ஐந்தையும் வரிசையாய் உடலில் உண்டாகும் மாற்றங்களாக நம் முன்னோர்கள் வகுத்து கூறியுள்ளனர்.

நவீன அறிவியலும், மருத்துவமும் அசுர வளர்ச்சி அடைந்ததன் காரணமாக தற்போதைய காலகட்டத்தில் ஆயுட்காலம் கூடியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வெறும் 23 வயதாக இருந்த சராசரி ஆயுட்காலம், இந்தியா சுதந்திரம் அடைந்த போது (1947) 32-ஆக உயர்ந்தது.

தற்போதைய காலகட்டத்தில் இந்த சராசரி ஆயுட்காலம் ஆண்களுக்கு 67 என்றும், பெண்களுக்கு 69 என்ற அளவிற்கும் உயர்ந்துள்ளது மருத்துவ வளர்ச்சியினால் தான். 2050-ல் இதே சராசரி ஆயுட்காலம் எழுபதை (70) தாண்டிவிடும் என்கின்றன சமீபத்திய புள்ளி விவரங்கள்.

முதியோர்களுக்கு ஆயுட்காலத்தின் இந்த அசுர வளர்ச்சி ஆனந்தமாக இருப்பினும், இறப்பு வரையிலும் அவர்களின் உடல் உபாதைகளை எதிர்கொள்ள வேண்டுமே என்கிற மன வருத்தம் அவர்களின் ஆனந்தத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கி விடுகிறது.

இப்பூவுலகில் பிறந்து, குழந்தை பருவம் துவங்கி இறக்கும் வரை எட்டு பருவங்களை அடுக்கடுக்காய் தமிழ் நூல்கள் பட்டியலிடுகின்றன. அத்தகைய பருவங்களில் இறுதி பருவமாக இருப்பது வயது மூப்பு பருவம். இறப்புக்கு முந்தைய பருவமும் இது தான்.

2022-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 6.9 சதவீதம் பேர் 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது 13.8 கோடி பேர் வயது மூப்பு பருவத்தில் உள்ளனர். அதில் ஆண்கள் 6.7 கோடி பேரும், பெண்கள் 7.1 கோடி பேரும் உள்ளதாக கணக்கெடுப்புக்கள் தெரிவிக்கின்றன.

பெண்களின் ஆயுட்காலம் ஆண்களை விட அதிகம் என்பதால் வயோதிக பருவத்தில் பெண்களே அதிகம் பயணிக்க வேண்டியுள்ளதாகின்றது.

இத்தகைய வயது மூப்பு பருவத்தில் உடல் நலனும், மன அமைதியும் பெரும்பாலானவர்களுக்கு கிட்டுவதே இல்லை. உடல் வன்மை இருக்கும் வரை குடும்பத்திற்காகவும், சமூக பொறுப்புகளுக்காவும் உழைத்து உழைத்து உடல் செல்களை சேதாரம் செய்து கொண்டு, வயது மூப்பு பருவத்தில் முடியாமல் இருக்கும் பலர், கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் செய்வதைப் போல தவறவிட்ட ஆரோக்கியத்தையும், நினைவுகளையும் தேடி அலைபவர்கள் தான்.

இத்தகைய வயோதிகப் பருவத்தில் உடல் நலக்கேடுகள் ஒரு புறம், குடும்ப சூழ்நிலைகளால் ஏற்படும் மன நலக்கேடுகள் மறுபுறம், எதிர்புறம் நிதி பற்றாக்குறை என தள்ளாடும் வயதில் தாங்கி பிடிக்க ஆள் இல்லாமல், தயங்கி தயங்கி வாழும் மன நிலையில், இறப்பு எப்போது தழுவும்? எனும் ஏக்கம் இயற்கையாகவே உண்டாகிவிடுவது நிச்சயம் வருத்தம் தான்.

மேற்கூறிய அனைத்தையும் ஒரு சேர சமாளித்து பெரும் சவாலுடன் அடுத்த அடியை எடுத்து வைத்தால் ஆரோக்கியம் அதை விட கடினமான பாதையை உருவாக்கும். இந்த தருணத்தில் ஏன் இந்த வயது மூப்பு ஏற்படுகின்றது? அதனை தடுக்கவே முடியாதா? மரணத்தை தள்ளிப் போட முடியாதா? என்ற ஐயப்பாடு பலருக்கும் ஏற்படும்.

சமீப காலமாக தான் 'ஜீரியாட்ரிக் மருத்துவம்' எனும் முதியோர் நல மருத்துவப் பிரிவு உலக அளவில் துவங்கப்பட்டு, அவர்களின் மேல் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. வயது மூப்புக்கு பல்வேறு காரணங்களும், கோட்பாடும் நவீன அறிவியலால் முன் வைக்கப்படுகிறது. அத்தகைய அறிவியல் காரணங்களை தடுப்பதன் மூலமாக வயோதிகத்தை தள்ளிப்போடும் முயற்சியிலும் நவீன விஞ்ஞானிகள் ஆராயத் துவங்கியுள்ளனர்.

ஆனால் சித்த மருத்துவம் விஞ்ஞானத்திற்கு முந்தையது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே 'காயகல்பம்' என்ற மருத்துவ சிகிச்சை முறையில் உடலை அழியாமல் காக்கும் மருத்துவ முறைகளை சித்தர்கள் கையாண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காயம் என்றால் உடம்பு. கல்பம் என்றால் அழியாமல் காப்பது என்று பொருள் விளங்கும். வயது மூப்பு பருவத்தில் உண்டாகும் உடல் உபாதைகளை தடுக்க சித்த மருத்துவத்தின் காயகல்ப மருந்துகளை நாடுவது நற்பலன் தரும். ஆகவே, இந்த முதியோர் நலன் சார்ந்த மருத்துவ முறைக்கும் தமிழர்களின் சித்த மருத்துவம் தான் முன்னோடி மருத்துவமாக இருந்து வந்துள்ளது இதில் வெளிப்படை.

இன்றைய நவீன அறிவியலில் வயது மூப்பிற்கு பல்வேறு காரணங்களும், கருத்துக்களும் விவரிக்கப்படுகிறது. அதில் முக்கியமாக கருதப்படுவது ஆர்.ஓ.எஸ். எனப்படும் எதிர்வினையாற்றும் ஆக்சிஜன் நச்சுப் பொருட்கள். நமது உடலுக்கு வெளியே பல்வேறு நச்சுப் பொருட்களால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவது நாம் அறிந்ததே.

அதே போல் நம் உடலுக்குள்ளும் நொடிக்கு நொடி நிகழும் பல்வேறு வளர்ச்சிதை மாற்றத்தினால் பல்வேறு நச்சுப்பொருட்கள் உண்டாகின்றன. அந்த நச்சுப்பொருட்கள் உடலில் உள்ள செல்களை (உயிரணுக்களை) தாக்கி பல்வேறு நோய்நிலைகளுக்கும், வயது மூப்பிற்கும் வழிகோலுகிறது.

நாள்தோறும் நம் உடலில் உற்பத்தியாகும் இந்த நச்சுப்பொருட்களால், உடலில் உள்ள செல்களுக்கு சேதாரம் (பழுது) ஏற்பட்டு கொண்டே இருக்கின்றது. இதுவும் வயது மூப்புக்கு முக்கிய காரணமாகின்றது. இந்த பழுதுகளை நீக்கி செல்களை புதுப்பிக்க வேண்டிய கடமை நம் உடலுக்கு உள்ளது. ஆதலால் தான் சத்தான உணவுகளை உண்பது மூப்பினைத் தடுக்கவும், முதியோர் நலனை காக்கவும் அத்தியாவசியமானது.

அதே போல் உடலில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்ற விகிதம் ஆயுட்காலத்துடன் நேர்மாறாக தொடர்பு கொண்டுள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதாவது அதிக வளர்ச்சிதை மாற்ற விகிதம் உள்ள நபர்களுக்கு ஆயுட்காலம் குறைவாக உள்ளதாகவும், குறைவான வளர்ச்சிதை மாற்ற விகிதம் உள்ள நபர்களுக்கு ஆயுட்காலம் அதிகரித்து உள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

எத்தனையோ பழங்கள் இருக்க அதியமான் அவ்வையாருக்கு ஏன் நெல்லிக்கனியை பரிசளிக்க வேண்டும்? என்று தமிழ் மக்கள் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். நெல்லிக்கனி வயது மூப்பினை தடுக்கக் கூடியது. இன்று நவீன அறிவியல் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் 'வைட்டமின் சி'யை அதிக அளவு உடையது நெல்லிக்கனி.

வயது மூப்பினை உண்டாக்கும் எதிர்வினையாற்றும் ஆக்சிஜன் நச்சுப் பொருட்களை ஒட்டுமொத்த மாக ஓரங்கட்டும் தன்மை இந்த வைட்டமின் சி-க்கு உண்டு என்கிறது நவீன அறிவியல். நவீன அறிவியல் இந்த உண்மையை தற்போது தான் வெளிக்கொண்டு வந்துள்ளது. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அதியமான் நெல்லிக்கனியை பரிசாக அளித்த புலமை இன்றைய நவீன அறிவியலையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வண்ணம் உள்ளது.

சித்த மருத்துவத்தில் நோய்களுக்கும் உடலின் இயக்கங்களுக்கும் அடிப்படை காரணங்களான வாதம், பித்தம், கபம் இவை மூன்றின் பல்வேறு மாறுபாடுகளால் முதுமையில் பல்வேறு நோய்நிலைகள் உண்டாவதாக விவரிக்கின்றது. முக்கியமாக அதிகரிக்கும் கபமும், வாதமும் இவற்றின் சேர்க்கையான கபவாதமும் பல்வேறு உடல் உறுப்புகளை சிதைத்து தேய்மான நோய்நிலைகளை உண்டாக்குகிறது.

இந்த முதுமையில் உண்டாகும் தேய்மானம் எந்தவொரு உடல் உறுப்பையும் விட்டுவைப்பதில்லை. பாதிக்கப்படும் உறுப்புகளுக்கு ஏற்ப பல்வேறு உடல் உபாதைகளையும், நோய் நிலைகளையும் உண்டாக்குவதாக சித்த மருத்துவம் கூறுகின்றது. இறுதியில் இந்த கபவாதமே தீர்க்க முடியாத நோய்நிலைக்கும், இறப்பிற்கும் காரணமாக அமைந்து விடுவதாக சித்த மருத்துவம் குறிப்பிடுகின்றது.

இன்றைய வாழ்வியலில் 30 வயதிலேயே நரையும், 40 வயதில் கண்ணில் திரையும் உண்டாகி முதுமையை வரவேற்க துவங்கிவிடுகிறது. வயதாக வயதாக தோலில் கருப்பு நிறத்தை உற்பத்தி செய்யும் நிறமிச்செல்களின் தேய்மானத்தால் தலையில் மட்டுமல்லாது, உடல் முழுதும் நரை (தோல் வெளுப்பு) உண்டாகக்கூடும். கண்ணில் திரை உண்டாகக் காரணம், கண்ணில் உள்ள லென்சில் புரதச்சத்து அதிகம் படிவதால் அதன் அடர்த்தி அதிகரிப்பதே என்கிறது நவீன அறிவியல்.

இவ்வாறு உண்டாகும் வயது மூப்பினை தடுக்கவும், முதியோர் பருவத்தில் உண்டாகும் சருமப் பிரச்சினைகள், வயிறு குடல் சார்ந்த பல்வேறு நோய்நிலைகள், கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், தேய்மானத்தால் உண்டாகும் எலும்பு மூட்டு சார்ந்த நோய்நிலைகள், நரம்பு மண்டல தேய்மானத்தால் உண்டாகும் நோய்கள், தூக்கமின்மை, சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பாதை சார்ந்த தொந்தரவுகள், அதிகமாகி வரும் புற்றுநோய், ஆண்களின் புராஸ்டேட் மற்றும் பெண்களின் கருப்பை சார்ந்த பிரச்சினைகள் போன்ற பல்வேறு நோய்நிலைகளுக்கு பாரம்பரிய உணவு முறைகளுடன், சித்த மருத்துவம் காட்டும் தீர்வு முறைகளும், இவற்றை தடுக்கும் வழிமுறைகளும், நோய்களை தடுத்து முதுமையை வெல்வதற்கு வழிகளையும் இனி வரும் கட்டுரைகளில் தொடர்ந்து பார்ப்போம்.

ஆரோக்கியமான முதியோர் சமுதாயம் உண்டாக்கிட தொடர்ந்து பயணிப்போம். முந்தைய தலைமுறை மூதாதையர்கள் தான் அடுத்தடுத்த தலைமுறையின் நலனுக்கு வழிகாட்டி. அனுபவ ஊற்றுக்கள். நமது பண்பாடு, பாரம்பரியம் மற்றும் மரபின் கடத்தல்காரர்கள். அவர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் ஆரோக்கியத்தை மீட்டளித்து, சமூக நலன் காக்க வேண்டியது நம் அனைவரின் தலையாய கடமைகளுள் ஒன்று.

தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

Tags:    

Similar News