சிறப்புக் கட்டுரைகள்

நம்பிக்கை இல்லாத தீர்மானமும், பறக்கும் முத்தமும்

Published On 2023-08-11 10:12 GMT   |   Update On 2023-08-11 10:12 GMT
  • எலக்ட்ரானிக் முறையில் குழப்பம் ஏற்பட்டதால் எல்லா உறுப்பினர்களும் சீட்டு அடிப்படையில் வாக்களித்தனர்.
  • ராகுல்காந்தியைப் பிரபலமாக்குவதே பாரதிய ஜனதா தான் என்றும் தோன்றுகிறது.

இந்தியாவின் முதல் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆகஸ்ட் 1963ல் ஜே.பி. கிருபளானி, நேரு அரசுக்கு எதிராகத் தாக்கல் செய்தார். சீனப் போருக்குப் பிறகு நடந்த பர பரப்பான சம்பவம் அது. 12 ஆண்டுகளுக்கு மேல் பிரதமராக இருந்த நேரு எதிர்கொண்டது அந்த ஒரே ஒரு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மட்டுமே!

அன்று முதல் இன்று வரை மக்களவையில் 30 நம்பிக்கை மற்றும் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் (27+3) தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதிகமானவற்றை எதிர்கொண்டவர் இந்திரா காந்தி. மொத்தம்: 15. அவரது ஆட்சிக்காலம்: 15.86 ஆண்டுகள்ள்ளள.

லால் பகதூர் சாஸ்திரியும் பி.வி.நரசிம்மராவும் தலா மூன்று. சாஸ்திரி சுமார் ஒன்றரை ஆண்டுகளே பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மொரார்ஜி தேசாய் இரண்டு தீர்மானங்களை எதிர்கொண்டார். தீர்மானத்தை ஓட்டுக்கு விடுவதற்கு முன்பே 12.7.1979 அன்று மொரார்ஜி தேசாய் ராஜினாமா செய்தார்.

ராஜீவ் காந்தி, வி.பி.சிங், எச்.டி.தேவேகவுடா, மன்மோகன் சிங் ஆகியோர் தலா ஒரு தீர்மானத்தை எதிர்கொண்டனர். 2023-ஐயும் சேர்த்தால் மோடி இரண்டு தீர்மானங்களைத் தோற்கடித்திருக்கிறார்.

நரசிம்மராவ் 5 ஆண்டு பிரதமர் பதவி வகித்தார். 1992 ல் 46 வாக்கு மற்றும் 1993-ல் வெறும் 14 வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே தீர்மானங்களை அவர் தோற்கடித்தார். பணம் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்ட வெற்றி என்ற புகார் எழுந்தது.

மன்மோகன்சிங் அரசுக்கு எதிராக பா. ஜ. 2008 ஜூலை மாதம் கொண்டுவந்த தீர்மா னத்தில் வெற்றி பெற சில எம்.பி.களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. ஆனால் அதற்கடுத்த 2009 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று அவர் இரண்டாவது முறை பிரதமர் ஆனார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் மூன்று அரசுகள் வீழ்ந்திருக்கின்றன. ராமர் கோவில் விவகாரத்தில் பா.ஜனதா ஆதரவை வாபஸ் பெற்றது அதை அடுத்து நவம்பர் -7, 1990 அன்று வி.பி.சிங் நம்பிக்கைத் தீர்மானத்தை முன்வைத்தார். அது தோற்கடிக்கப்பட்டது. 346 வாக்குகளுக்கு 142 வாக்குகள் மட்டுமே வி.பி. சிங் பெற்றார். 1997 ஏப்ரல் 11-ல் தேவேகவுடா அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. 158 எம்.பி.க்கள் ஆதரவு. 292 பேர் எதிர்ப்பு. தேவேகவுடாவின் 10 மாதக் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

களப்பத்திரிகையானாகப் பணியாற்றிய போது அமரர் வாஜ்பாய் "ஒரு ஓட்டு" வித்தியாசத்தில் ராஜினாமாச் செய்ய நேரிட்ட பரபரப்பான சம்பவம் என்னால் மறக்க முடியாதது. அந்த அளவிற்கு அப்போது அரசியல் சஸ்பென்ஸ் நிலவியது.

வாஜ்பாயின் தனிச்செயலாளராகப் பணியாற்றிய சக்தி சின்ஹா எழுதிய 'வாஜ்பாய்: தி இயர்ஸ் தட் சேஞ்ச் இந்தியா' என்ற நூலைச் சமீபத்தில் மறுவாசிப்பு செய்தபோது பழைய சம்பவங்கள் நெஞ்சில் நிழலாடின. 1998 மே 19 இந்தியப் பிரதமராக வாஜ்பாய் பதவியேற்றார். ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் அவரது ஆட்சி 1999 ஏப்ரல் 17-ல் கவிழ்ந்தது. அது வரை நடந்த சம்பவங்களை சக்தி சின்ஹா கோர்வை ஆக்கியுள்ளார்.

அப்போது பா.ஜனதா அரசுக்கு அ.தி.மு.க. ஆதரவளித்து வந்தது. அவர் அமைச்சரவையில் பதவி வகித்த சேடப்பட்டி முத்தய்யா, தம்பிதுரை உள்ளிட்ட அனைவரும் 6.4.1999 அன்று திடீ ரென்று பதவி விலகல் கடிதங்களை வாஜ்பாய்க்கு அனுப்பினார்கள். மறுநாள் என்.டி.ஏ. ஒருங்கிணைப்புக் குழுவில் இருந்து அ.தி.மு.க. தனது உறுப்பினர்களைத் திரும்ப அழைத்துக் கொண்டது.

அதற்கடுத்த ஐந்து நாட்களில் ஜெயலலிதா 1999 ஏப்ரல் 12 அன்று டெல்லி கிளம்பினார். "வாஜ்பாய் அரசை அகற்றிவிட்டுப் புதிய அரசை நிறுவப் போகிறோம்." என்று விமான நிலை யத்தில் பேட்டி அளித்தார். ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனைச் சந்தித்து வாபஸ் கடிதத்தை வழங்கினார். எல்லாவற்றுக்கும் சூத்திரதாரி: டாக்டர் சுப்ரமணியன் சுவாமி.

பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்க இருந்த சமயம் என்பதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயணன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு வாஜ்பா யைக் கேட்டுக் கொண்டார்.

நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாக 269 ஓட்டுகள் விழுந்தன. எதிராக 270 ஓட்டு பதிவாகியது. ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் 13 மாத பா.ஜ.க. அரசு 1999 ஏப்ரல் 17 அன்று கவிழ்ந்தது. "ஒற்றை ஓட்டு மர்மம்" பலத்த சர்ச்சையைக் கிளப்பியது.

அப்போது அ.தி.மு.க. எம்.பி.யும், முன்னாள் சபா நாயகருமான மறைந்த சேடப்பட்டி முத்தையா தன் வாக்கைச் செலுத்தத் தவறியது வெளிச்சத்துக்கு வந்தது. எலக்ட்ரானிக் முறையில் குழப்பம் ஏற்பட்டதால் எல்லா உறுப்பினர்களும் சீட்டு அடிப்படையில் வாக்களித்தனர். சேடப்பட்டி முத்தையா தன் ஓட்டுச் சீட்டைப் போடாமல் சட்டைப் பாக்கெட்டிலேயே வைத்து விட்டார். அது சர்ச்சையாகி அதன்பின் அவருக்கு அரசியல் பின்னடைவு ஏற்பட்டது.

ஒரு வேளை நம்பிக்கை வாக்கெடுப்பில் வாஜ்பாய் அரசுக்கு ஆதரவாக சேடப்பட்டி முத்தையா ஓட்டுப் போட்டு இருந்தால், அரசுக்கு ஆதரவாகவும், எதிராகவும் தலா 270 வாக்குகள் பதிவாகி இருக்கும். அப்படியான சூழலில் சபா நாயகர் தனது வாக்கை அரசுக்கு ஆதரவாகச் செலுத்தி பா.ஜனதா அரசை காப்பாற்ற வாய்ப்புக் கிடைத்திருக்குமோ?

இன்னொரு ஒற்றை ஓட்டு சர்ச்சையும் அதே 1999-ல் நிகழ்ந்தது. அந்தக் கால கட்ட காங்கி ரஸ் எம்.பி. கிரிதர் கோமாங் 1999 பிப்ரவரி யில் ஒடிசா மாநில முதல்வராகப் பதவியேற்றி ருந்தார். ஆனால் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்திருக்கவில்லை. எனவே அவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளலாமா என்ற குழப்பம் எழுந்தது. ஆனால் சபாநாயகர் பால யோகி, அதைக் கோமாங்கின் விருப்பத்திற்கே விட்டுவிட்டார்.

காங்கிரஸ் கட்சியின் உத்தரவைப் பின்பற்றி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராகக் கிரிதர் கோமாங் வாக்களித்தார். எனவே அந்த ஒற்றை ஓட்டு அவரது ஒரு வாக்கு தான் என்று சக்தி சின்ஹா தன் நூலில் சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி.க்கள் ஆரம்பத்தில் அரசாங்கத்திற்கு வாக்களிப்பதாக உறுதியளித்திருந்தனர். ஆனால் பின்னர் எதிராக ஓட்டுப் போட்டனர். இப்படிப் பல்வேறு சம்பவங்களைத் தன் நூலில் குறிப்பிட்டிருந்தார் சக்தி சின்ஹா.

கிரிதர் கோமாங் பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார் என்பதுதான் சுவாரஸ்யம்! வாஜ்பாய் அரசு கவிழ்வதற்குக் காரணமானவர் என்றாலும் அவரைக் கட்சியில் சேர்த்துக் கொண்டது பா.ஜ. தலைமை. அதே போல அன்றைய அ.தி.மு.க. வாபஸ் முடிவின் சூத்திர தாரியான சுப்பிரமணியன் சுவாமியும் பின்னர் பா.ஜ.எம்.பி. ஆனார்.

பின்னர் 1999-ல் சுப்பிரமணியன் சுவாமி சிபாரிசில் அ.தி.மு.க. வலிந்து ஆதரவு அளித்த சோனியாகாந்தியும் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையை உருவாக்கத் தவறினார். முலாயம்சிங் கடைசி நேரத்தில் முறுக்கிக் கொண்டதே காரணம்! இப்படி வடமாநில அரசியலில் எதுவும் நடக்கலாம்!

இதே போல இன்னொரு "ஒற்றை ஓட்டு சர்ச்சை" எங்கள் கல்லூரிக் காலகட்டத்தில் எழுந்தது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் 560 சுதேசி சமஸ்தானங்கள் இருந்தன. 1947 ஒப்பந்தப்படி அவை இந்தியாவுடன் இணைய சில நிபந்தனைகளுக்கு மத்திய அரசு ஒத்துக்கொண்டது. அவற்றில் ஒன்று: மன்னர் மானியம்.

மாஜி மன்னர்கள் மொத்தத்தில் கிட்டத்தட்ட 34 சலுகைகளை அனுபவித்தனர். இந்திய சட்டங்களின் செயல்பாட்டில் இருந்து விலக்கு, ஜாகிர்களை அனுபவிப்பது, ஆட்சியாளர்களின் சகோதர சகோதரிகளின் திருமணச் செலவுகளை அரசே செலுத்துதல், நீதிமன்றத்தின் சில செயல்முறைகளில் இருந்து விலக்கு ஆகியவையும் அடங்கும்.

மானியத்தொகையாக ஆண்டுதோறும் ரூபாய் 5000 முதல் 2 லட்சம் வரை வழங்கப்பட்டது. ஐதராபாத் நிஜாம், திருவாங்கூர், பரோடா, ஜெய்பூர் மற்றும் பாட்டியாலா மன்னர்க ளுக்கு 10 லட்சம் ரூபாய் வரை மன்னர் மானி யம் வழங்கப்பட்டது. மைசூர் மன்னர் ஆண்டுக்கு 26 லட்சம் ரூபாய் பெற்றார். கொத்தாரியா என்ற ராஜபுத்ர ஆட்சியாளர் ஒருவர் வெறும் 192 ரூபாய் பெற்றார். 1969-ம் ஆண்டு நிலவரப்படி மன்னர் மானியத்தின் மொத்தத் தொகை சுமார் 58 கோடி ரூபாய். மன்னர் மானிய ஒழிப்புச் சட்ட மசோதாவை இந்திரா காந்தி அரசு நாடாளுமன்றத்தில் 1969-ல் கொண்டு வந்தபோது ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றது.

அந்த ஒரு ஓட்டைச் செலுத்தத் தவறியவர் அப்போதைய தி.மு.க. எம்.பி. லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். தனக்கு வயிறு சரியில்லாமல் போனதால் பாத்ரூம் சென்றதாகவும், திரும்பி வரும்போது வாக்கெடுப்புக்காகப் பாராளுமன்ற கதவுகள் அடைக்கப்பட்டதால் தன்னால் ஓட்டுப் போட முடியாமல் போனதா கவும் காரணம் சொன்னார் எஸ். எஸ். ஆர்.

அதன்பின் பாகிஸ்தான்-வங்கதேச யுத்தத்தில் வெற்றி பெற்ற கையோடு, 1972 தேர்தலை முன் கூட்டியே 1971-ல் கொண்டு வந்தார் இந்திராகாந்தி. கலைஞரும் தமிழக சட்ட மன்றத் தேர்தலை மக்களவைத் தேர்தலோடு முன்கூட்டியே அறிவித்தார். மாநில ஆட்சிக்கும் ஒரு வருட ஆயுள் பாக்கி இருந்தது.

எனக்குக் கல்லூரி வாழக்கையின் இறுதிக்கட்டம். நாங்கள் பெருந்தலைவர் காமராஜ் ஆதரவு மாணவர்கள். எனவே ஸ்தாபன காங்கிரசுக்கு ஆதரவாகத் தேர்தல் வேலை பார்த்தோம். தி.மு.க. கூட்டணி 184 இடங்களைப் பெற்று மகத்தான வெற்றி பெற்றது. மீண்டும் மன்னர் மானிய ஒழிப்பு மசோதா 1971-ல் அறி முகப்படுத்தப்பட்டு இந்திய அரசியலமைப்பின் 26-வது திருத்தமாக வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இப்படி பாராளுமன்றத்தின் "ஒற்றை ஒட்டு" இந்தியாவிலும், தமிழகத்திலும் அரசியல் அதிசயங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

மோடி அரசுக்கு எதிரான 2018 தீர்மானம் 325-126 என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டது. இப்போதைய தீர்மானத்தின் கதியும் அது தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! பிரதமரை பேச வைத்ததே சாதனை என்று எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன.

தோற்றுப் போகும் என்று தெரிந்தே ஏன் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது? ஊழல் புகார், சலுகைகள் பற்றிய சர்ச்சைகள் போன்ற சில குறிப்பிட்ட பிரச்சினைகளைப் பாராளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயங்குவது முக்கிய காரணம். நடப்பு தீர்மா னத்தின் நோக்கம்: மணிப்பூர் பிரச்சினையை மக்களவையில் விவாதித்துப் பிரதமரைப்பதில் கூற வைப்பது. அந்த வகையில் "இந்தியா" எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு இது வெற்றியே!

தகுதி நீக்கத்தால் பதவி இழந்து உச்சநீதிமன்ற உத்தரவால் மீண்டும் எம்.பி. யான ராகுல்காந்தி நம்பிக்கை இல்லாத் தீர்மான விவாதம் துவங்கும் போது "கரெக்டாக" மக்கள வைக்கு வந்து சேர்ந்தார். "இந்தியா" அணியின் அதீத உற்சாகத்திற்கு அதுவும் காரணம். கிரிக்கெட் மேட்ச்சில் வெற்றி கிடைக்கவிட்டாலும் "மேன் ஆப் த மேட்ச்" அவார்ட் ராகுல்காந்திக்குக் கிடைத்த பெருமையில் எதிர்க்கட்சிகள் கால ரைத் தூக்கி விட்டுக் கொண்டன.

ராகுல்காந்தி அவையில் இருந்து வெளி யேறும்போது "பறக்கும் முத்தம் சைகை" கொடுத்தார் என்றும் அது பெண் எம்பிக்களை அவமதிக்கும் செயல் என்றும் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி தலைமையில் சபாநாயகரிடம் புகார் தரப்பட்டுள்ளது.

பறக்கும் முத்தம் என்பது வார்த்தை அல்லாத தகவல்தொடர்பு என்றும், போற்றுதல் அல்லது பாசம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு அன்பான சைகை என்றும் சேட் ஜி.பி.டி. கூறுகிறது. நம்பிக்கை இல்லாத் தீர்மான விவாதத்தின்போது எழுந்த இன்னொரு சர்ச்சை இது. இதை வைத்து இன்னொரு ரவுண்ட் ஓடும். ராகுல்காந்தியைப் பிரபலமாக்குவதே பாரதீய ஜனதா தான் என்றும் தோன்றுகிறது.

Tags:    

Similar News