சிறப்புக் கட்டுரைகள்

வாழ்வில் வெற்றி தரும் பட்டீஸ்வரம் துர்கை

Published On 2023-08-12 09:30 GMT   |   Update On 2023-08-12 09:30 GMT
  • தேவாரப்பாடல் பெற்ற சிவத்தல வரிசையில் காவிரியின் தென்கரையில் அமைந்த 23வது திருத்தலம் பட்டீஸ்வரம்.
  • துர்க்கையை வணங்குவதினால் ,ராகு மற்றும் செய்வாய் தோஷம் நீங்கும், மன அழுத்தம், துக்கம் விலகும்,காரிய வெற்றி கிடைக்கும்.

துர்க்கை புகழ் பெற்ற தமிழ்த் தெய்வம். துர்க்கை என்னும் சொல்லுக்கு வடமொழியில் "வெல்ல முடியாதவள்" என்று பொருள். தமிழில் வெற்றிக்கு உரியவள் என்பது பொருள்.

ரஜோகுணம் கொண்ட கொற்றவை வட இந்திய காளியுடன் இணை க்கப்பட்டு மகிஷாசுரமர்த்தினியானாள். பிறகு அவளே துர்க்கை எனவும் அழைக்கப்பட்டாள்.

துர்க்கம் என்றால் அகழி என்று பொருள். அகழியானது கோட்டை மதிலைப் பகைவர் அணுக முடியாதபடி காவலாக இருப்பது போல் மக்களைத் துன்பம் அணுகாதவாறு காப்பவள் என உணர்த்துவதே துர்க்கையின் வடிவமாகும்.

துர்க்கையை சோழ மன்னர்கள் தங்களையும் தமது அரண்மனையையும் பாதுகாக்க நான்குபுறங்களிலும் துர்க்கை, விநாயகர், முருகன் மற்றும் பைரவர் என்பவர்களுக்கு சன்னதிகளை அமைத்து பூஜை செய்து வந்தனராம். அவர்கள் தாம் வணங்கி வந்த துர்க்கையின் சிலையை நிறுவினார்களாம்.

தேவாரப்பாடல் பெற்ற சிவத்தல வரிசையில் காவிரியின் தென்கரையில் அமைந்த 23வது திருத்தலம் பட்டீஸ்வரம். இந்த ஆலயம் தோன்றியதே பட்டீஸ்வரருக்காக என்றாலும் துர்க்கை உருவில் உள்ள பார்வதியே அதிக முக்கியத்துவம் பெற்று உள்ளாள்.

இக்கோவில் ஏழு அல்லது ஆறாம் நூற்றாண்டில் தோன்றிஇருக்கலாம். பல காலங்களில் இந்த ஆலயம் பல்லவர்கள் சோழர்கள் மற்றும் நாயக்க மன்னர்களால் விரிவாக்கப்பட்டுக் கொண்டே இருந்துள்ளது.

சோழ மன்னர்கள் போருக்குச் செல்லும் முன் வெற்றிக்குத் துணைநிற்கும் துர்க்கையை வணங்கிச் செல்வது பழக்கம்.பாண்டிய மன்னர்களுக்கு மீனாட்சி குலதெய்வமாக இருந்ததுபோல் சோழ மன்னர் பரம்பரை முழுவதற்கும் பட்டீஸ்வர துர்க்கை குலதெய்வமாக விளங்கினாள்.

பாண்டியனை மணந்த சோழ அரசியான மங்கையர்க்கரசியும், ராஜராஜ சோழனுக்கு ஆலோசகராக விளங்கிய குந்தவைப் பிராட்டியும் பட்டீஸ்வர துர்க்கை மீது அபார பக்தி செலுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள துர்க்கையின் தொல் வரலாறு முன் சொன்ன வரலாறில் இருந்து மாறுபட்டது.வேத காலத்தில் பார்வதிக்கு ஏற்பட்ட சாப நிவர்த்திக்காக இந்த இடத்துக்கு வந்து தவம் இருக்க,அவளுக்காக தேவர்கள் அதனை வனமாக ஆக்கினார்கள். பார்வதிக்கு உதவ காமதேனு தன் பெண் பட்டியையும் அனுப்பியது. பார்வதி நின்றவாறே ஈசனுக்காய் தவம் செய்தாள். சிவன் அவள் வேண்டுகோளை ஏற்று சடை முடியுடன் காட்சி தந்து அவளை அங்கே துர்கையாக இருந்து மக்களின் துயர்களைத் துடைக்க கூறினார்.

இங்கு நீ தவம் செய்ததினால் தவவலிமை பெற்ற பூமி ஆனது. இது தெய்வ பூமியும் ஆனது. ராமரும் இங்கு வந்து புனித தீர்த்தத்தை ஏற்படுத்தி என்னையும் பூசை செய்தார். இங்கு உன்னை ராகுவும் கேதுவும் வணங்குவார்கள். மக்களுக்கு அவர்களால் ஏற்படும் தோஷங்களைக் களைவாய் எனக்கூறினார். அது முதல் துர்க்கை இங்கு தனி சன்னதியில் வடக்கு நோக்கி நின்று அருளுகிறாள்.

இங்கு கருவறையில் உள்ள துர்க்கை மகிஷாசுரன் தலை மீது நின்று, சிம்ம வாகனத்துடன் சாந்த முகத்தோடு எட்டு கைகளுடன் சுவரூபிணியாக காட்சி தருகிறாள். துர்க்கையின் சன்னதியை சுற்றி வலம் வரவும், அங்கப் பிரதட்சணம் செய்யவும் மேற்கூரை போடப்பட்ட பளிங்குக்கல் தரை மண்டபம் உள்ளது. சன்னதியின் வலதுபுறம் யாக சாலையும் இடது புறம் துர்க்கைக்கு தீபம் ஏற்றும் இடத்துடன் வடக்கு ராஜகோபுரத்தின் முன்புறம் தனி கோவில் அமைப்பாக உள்ளது.

ராகுபகவானின்அன்னையாகவே காட்சி தருகிறாளாம். அதனால் ராகுபகவான் தினமும் இங்கு வந்து தனது அன்னையான துர்காவை ராகு காலத்தில் பூசிப்பதினால் அந்த நேரத்தில் துர்கையை பூசித்தால் தனது தாயார் துர்கையின் பூசையுள் தன்னுடன் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு ஏற்படும் எந்தக் கெடுதல்களையும் தவிர்த்து நல்லதே செய்வாராம். அதனால்தான் இங்கு துர்க்கையை ராகு காலத்தில் வந்து பூசை செய்து வேண்டுவது வழக்கத்தில் உள்ளது. செய்வாய் கிரகமும் இங்கு வந்து அன்னைக்கு சிவப்பு பூக்களைக் கொண்டு பூசை செய்வதால் துர்க்கைக்கு சிவப்பு மாலை சாத்தி வேண்டுதல் செய்ய செவ்வாய் தோஷமும் விலகுமாம்.

இங்கு வந்து துர்க்கையை வணங்குவதினால் ,ராகு மற்றும் செய்வாய் தோஷம் நீங்கும்,மன அழுத்தம்,துக்கம் விலகும்,காரிய வெற்றி கிடைக்கும். பசு நெய் அல்லது நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி குங்கும அர்ச்சனை செய்தால் திருமணத் தடைகள் விலகும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகி குடும்ப வாழ்க்கை அமைதியாகும். எலுமிச்சை மாலை அணிவித்து வேண்டிக் கொள்வதின் மூலம் தீராத நோய்களும் தீரும் என்பவை மக்களால் நெடுநாட்களாக பின்பற்றப்படும் பரிகாரங்களாகும்.

பட்டீஸ்வரம் துர்கைக்கு ,தாமரை மிகவும் விருப்பமுடைய மலர். தாமரை மலர்கள் அல்லது அரளி மாலையை துர்க்கைக்கு சார்த்துவது மிகச் சிறந்தது. வீட்டில் ஏதேனும் கவலை, பிரச்சினை, சிக்கல், குழப்பம் என்றிருந்தால், உடனே பட்டீஸ்வரம் துர்க்கையை மனதார நினைத்து நெய் தீபம் அல்லது எலுமிச்சை தீபம் ஏற்றுங்கள். அந்த தீபத்தையே துர்க்கையாக வேண்டி வழிபடுங்கள். சர்க்கரைப் பொங்கல் அல்லது பால்பாயசம் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள். குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் அனைத்தும் தீரும். கணவன் -மனைவி பிணக்கு காணாமல் போகும். அமைதியற்ற சூழல் மாறி, அமைதியும் ஆனந்தமும் இல்லத்தில் குடிகொள்ளும். தனம், தானியம் பெருக்கித் தருவாள் துர்க்கை.

மகளுக்கோ மகனுக்கோ திருமணம், வீடு வாசல் வாங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க உங்கள் பிரார்த்தனை இருந்தால் வீட்டில், செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால வேளையில் தீபமேற்றுங்கள். மஞ்சள் துணியில் ஒரு காசை முடிந்து வைத்துக்கொள்ளுங்கள். அதை பூஜையறையில் வைத்து, தினமும் குங்கும அர்ச்சனை செய்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். திருமணம் இனிதே நடக்கும். வீடு வாசல்அமையும். சந்தானபாக்கியம் சம்பவிக்கும்.பட்டீஸ்வரம் செல்லும்போது, துர்க்கைக்கு அந்தக் காணிக்கையை, மஞ்சள் துணியோடுசெலுத்துங்கள்.

கோவில் நகரமாம் கும்பகோணத்திற்கு தென்மேற்கே 8 கிலோமீட்டர் தொலைவில் பட்டீச்சுரத்தில்சாந்த மனசுக்காரி துர்க்கையை வழிபடுங்கள்; மகிழ்ச்சியைத் தந்திடுவாள் மகேஸ்வரி!

தொடர்புக்கு: - இரா.இரகுநாதன் - செல்:9677222212

Tags:    

Similar News