சிறப்புக் கட்டுரைகள்

கடுமையான தண்டனைகளுக்கு வழிவகுக்கும் 3 புதிய சட்டங்கள்

Published On 2023-08-12 11:17 GMT   |   Update On 2023-08-12 11:17 GMT
  • தீர்ப்புக்கு எந்த மாதிரி சாட்சியங்கள் இருக்க வேண்டும் என்பதை இந்திய சாட்சிய சட்டம் தெளிவுபடுத்துகிறது.
  • பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விதவிதமாக நடப்பதால் புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த பாராளுமன்ற கூட்டத் தொடர் அமளி, துமளி, நம்பிக்கையில்லா தீர்மானம் என்று மட்டுமே பார்க்கப்பட்டாலும் கடைசி நாளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 3 புதிய சட்ட மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறது.

அதாவது இந்திய குற்றவியல் சட்டங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் மற்றும் மறுசீரமைப்புகள் செய்யப்பட்டு உள்ளன.

சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி பலர் தப்பி விடுகிறார்கள். இது நடைமுறைக்கு ஒத்து வராத சட்டம் என்று சாதாரண மக்களுக்கும் சட்டங்கள் மீது இருந்து வந்த திருப்தி யற்ற எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பல புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டு தண்டனைகளும் கடுமையாக்கப்பட்டு உள்ளன.

இந்த புதிய சட்ட மசோதாக்கள் பற்றி மத்திய அரசு வக்கீல் ஸ்ரீனிவாசன் விவரித்தார்.

இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய 3 சட்டப் பிரிவுகளின்படிதான் குற்றவியல் வழக்குகள் நடைபெறும். இந்த சட்டத்தின் கீழ்தான் தண்டனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

அதாவது எந்த குற்றத்துக்கு எந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவது என்பதை இந்திய தண்டனை சட்டம் சொல்கிறது. வழக்குகளை எந்த அடிப்படையில் நடத்துவது என்பதை இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் விவரிக்கிறது. தீர்ப்புக்கு எந்த மாதிரி சாட்சியங்கள் இருக்க வேண்டும் என்பதை இந்திய சாட்சிய சட்டம் தெளிவுபடுத்துகிறது.

ஆனால் நடைமுறையில் இருக்கும் இந்த 3 சட்டங்களும் சுமார் 163 ஆண்டுகளுக்கு முந்தையது.

இந்திய தண்டனை சட்டம் 1860-ம் ஆண்டிலும், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 1898-ம் ஆண்டிலும், இந்திய சாட்சிய சட்டம் 1872-லும் கொண்டு வரப்பட்டவை.

அதாவது கிழக்கிந்திய கம்பெனி நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த கால கட்டத்தில் இந்தியா பல்வேறு சமஸ்தானங்கள், குறுநில மன்னர்கள் ஆட்சியில் பல பிரிவுகளாக இருந்தது. அப்போது ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வசதியாக இந்தியாவில் எந்த மாதிரியான குற்றவியல் சட்டங்களை பொதுவாக வகுப்பது என்று 1834-ம் ஆண்டு லார்டுமெக்காலே தலைமையில் சட்ட கமிஷன் உருவாக்கப்பட்டு அந்த கமிஷன் பரிந்துரைப்படிதான் இந்த 3 சட்டங்களும் உருவாக்கப்பட்டது.

அந்த கால கட்டத்துக்கு ஏற்றதாகவும், அவர்களுக்கு சாதகமாகவும் உருவாக்கப்பட்டிருந்ததால் காலப் போக்கில் அவ்வப்போது சிறு சிறு திருத்தங்கள் செய்யப்பட்டு அந்த சட்டங்களையே பின்பற்றுகிறோம்.

எல்லா சட்டங்களையும் முழுமையாக எடுக்க முடியாது. ஆனால் காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் செய்வது அவசியமாக இருந்தது. பல வழக்குகளில் நடைமுறை சாத்தியமில்லாத பல பிரிவுகளை கோர்ட்டு தீர்ப்புகளே சுட்டி காட்டியும் உள்ளன. அந்த தீர்ப்புகளை மையமாக வைத்து திருத்தங்களும் கொண்டு வரப்பட்டது. பல சட்டங்கள் பாராளுமன்றம் மூலம் நீக்கப்பட்டும் உள்ளன.

இப்போது மிகப்பெரிய அளவில் மறுசீரமைப்பு செய்து இருப்பதோடு பல மாற்றங்கள் செய்து, தண்டனைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இந்திய தண்டனை சட்டம் (ஐ.பி.சி.)

இந்திய தண்டனை சட்டம் பாரதீய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.) என்று மாற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தில் இருந்த 511 பிரிவுகள் 356 பிரிவுகளாகி இருக்கிறது. 22 விதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 175 விதிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. 8 புதிய விதிகள் உருவாக்கப் பட்டுள்ளன.

தேச விரோத சட்டம் என்பது சுதந்திரத்துக்காக போராடியவர்கள், அரசுக்கு எதிராக போராடியவர்கள் மீது பயன்படுத்தி அதை கடுமையான குற்றமாக கருதப்பட்டது.

இப்போது அதை நீக்கி உள்ளனர். அதற்கு பதிலாக பிரிவினை வாதம், தீவிரவாதம், தேச ஒற்றுமையை குலைப்பது, ஆயுதம் ஏந்தி கிளர்ச்சி செய்வது, இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கை ஆகியவை சேர்க்கப்பட்டு தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டு உள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விதவிதமாக நடப்பதால் புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது திருமணம் செய்து கொள்வ தாக, வேலை வாங்கி தருவ தாக, பதவி உயர்வு பெற்று தருவதாக பொய்யான வாக்குறுதிகள் கொடுப்பது, அடையாளத்தை மாற்றி ஏமாற்று தல் ஆகியவை புதிதாக தண்டனைக்குரிய குற்றங்களாக சேர்க்கப்பட்டு உள்ளன.

முன்பு கற்பழிப்பு குற்றத்துக்கு 7 ஆண்டுகள் மட்டும் தண்டனை இருந்தது. கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு தனி பிரிவு இல்லை. இப்போது அது புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளது. தண்டனையும் 20 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிலும் பாதிக்கப்படும் பெண்கள் இளம் பெண்களாகவோ, மைனர் பெண்களாகவோ இருந்தால் ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை விதிக்க சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இனம், சாதி, அடிப்படையில் பலர் சேர்ந்து அடித்து கொலை செய்வது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த குற்றங்களுக்கு குறைந்தது 7 ஆண்டுகள் முதல் குற்றத்தின் தன்மையை பொறுத்து மரண தண்டனை வரை விதிக்கப்படும்.

வழிப்பறி குற்றங்கள் கடுமையாக்கப் பட்டுள்ளது. செயின் பறிப்புகளின் போது பாதிக்கப்படுபவர்கள் கீழே விழுந்து கடுமையான காயங்கள் ஏற்படுவது, உறுப்புகள் செயல் இழந்து போவது, உயிருக்கே ஆபத்து ஏற்படுவதால் கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டால் 7 முதல் 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கும் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

முன்பெல்லாம் சாலைகளில் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி ஏற்படும் உயிரிழப்புகள் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படுவ தில்லை. இப்போது இந்த மாதிரி குற்றங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பை ஏற்படுத்தியவர் கோர்ட்டு அல்லது போலீசில் சரண் அடையாமல் தலைமறைவானால் அபராதத்துடன் 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும்.

மத துவேசத்துடன் வெறுப்பை தூண்டும் வகையில் பேசினால் 3 ஆண்டுகள் ஜெயில் மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சி.ஆர்.பி.சி.)

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் பாரதீய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.) என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் 9 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிதாக 9 பிரிவுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. 169 பிரிவுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வீட்டில் ஒரு குற்ற சம்பவம் நடந்தால் அந்த சரக போலீஸ் நிலையத்துக்கு சென்றுதான் புகார் செய்து எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும். இனி சம்பந்தப்பட்டவர் அதே மாநிலத்தில் வேறு எந்த பகுதியில் இருந்தாலும் அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுக்க முடியும்.

அனைத்து மாவட்டங்களிலும் ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு குற்ற சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்கள் விவரங்களை உடனுக்குடன் அவரிடம் தெரிவிக்கப் பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கு விசாரணை முன்னேற்றம் பற்றிய தகவலை 90 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.

பாலியல் கொடுமையில் பாதிக்கப் பட்ட பெண்களிடம் அவர்களின் வீடு அல்லது தங்கியிருக்கும் இடத்துக்கு மாஜிஸ்திரேட்டு நேரில் சென்று வாக்குமூலம் பெற வேண்டும். அப்போது பெண் போலீஸ் அதிகாரி ஒருவரும், பெண்ணின் பெற்றோர் அல்லது பாதுகாவலரும் உடன் இருக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்கள் கோர்ட்டு, போலீஸ் நிலையங்களுக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் வாங்கு வதால் பெண்களுக்கு ஏற்படும் அசவுகரியம் இதன் மூலம் தவிர்க்கப்படும்.

கிரிமினல் குற்றங்களில் 90 நாட்க ளுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய முடியாவிட்டால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் எளிதில் வெளியே வந்து விட முடியும் என்ற நிலை இருந்தது. இனி குறிப்பிட்ட காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாவிட்டால் காரணத்தை கூறி கோர்ட்டில் மேலும் 90 நாட்கள் கால நீட்டிப்பு பெற்றுக் கொள்ளலாம்.

குற்ற வழக்குகளில் விசாரணை முடிந்த 30 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கி விட வேண்டும். குறிப்பிடத்தக்க காரணங்கள் இருந்தால் 60 நாட்கள் வரை எடுத்துக் கொள்ள முடியும். அதற்கு மேல் தீர்ப்பு வழங்கும் நாட்களை தள்ளிப் போட முடியாது.

வழக்குகளில் சம்பந்தப்பட்ட வர்கள் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அடிக்கடி வாய்தா வாங்குவது தடுக்கப்பட்டுள்ளது. இனி 2 முறை மட்டுமே வாய்தா வழங்க வேண்டும். அதற்கு மேல் வாய்தா வழங்க நேரிட்டால் அதற்கான காரணத்தை நீதிபதி எழுத்து பூர்வமாக எழுதி வைக்க வேண்டும்.

முதல் முறையாக குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்றவர்கள் தண்டனை காலத்தில் 3-ல் ஒரு பகுதியை ஜெயிலில் கழித்ததும் ஜாமீன் போட்டு வெளியே வரலாம்.

ஆயுள் தண்டனை கைதிகள், மரண தண்டனை கைதிகளை தண்டனையை குறைத்து வெளியே விடக்கூடாது.

வழக்குகளில் சாட்சி சொல்பவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் பாதுகாப்புக்கு மாவட்ட அளவில் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் முடிவு செய்ய வேண்டும்.

குற்ற வழக்குகளில் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை பெற்று வாரண்டு பிறப்பிக்கப்பட்டும் பிடிக்க முடியாமல் தலைமறைவாக இருப்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தலைமறைவாக இருக்கும் குற்ற வாளிகளை பிடிக்க முடியவில்லை என்றால் வழக்கு விசாரணை நடத்த முடியாத நிலை இருந்தது. இப்போது அந்த விதி மாற்றப்பட்டுள்ளது. குற்றவாளிகள் இல்லாமலும் வழக்கு விசாரணை நடத்தலாம். தண்டனையும் வழங்கலாம்.

வழக்குள் தொடர்பாக கைப்பற்றப் பட்ட வாகனங்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்து விட்டு 30 நாட்களுக்கு பிறகு அப்புறப்படுத்தலாம்.

இந்திய சாட்சியங்கள் சட்டம்

பாரதீய சட்சிய சட்டம் (பி.எஸ்.) என்று மாற்றப்பட்டுள்ளது. இதில் 5 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 23 பிரிவுகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. புதிதாக ஒரு விதி உருவாக்கப் பட்டுள்ளது.வழக்குகளின் ஆவணங்கள் உடனுக்குடன் ஸ்கேன் செய்து டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

இதன் மூலம் ஆவணங்களை மாற்றுதல், திருத்துதல் போன்ற சம்பவங்கள் தவிர்க்கப்படும்.

எப்.ஐ.ஆர்., வழக்கு டைரி, குற்றப் பத்திரிகை, தீர்ப்பு, பிறப்பிக்கப்பட்ட சம்மன்கள், வாரண்டுகள், நடை முறைப்படுத்தியது, புகார்தாரர் விசாரணை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் மின்னணு முறையில் பராமரிக்கப்பட வேண்டும்.

சோதனையிடுவது, சொத்துக்கள் பறிமுதல் செய்வதை வீடியோ பதிவு செய்து உடனடியாக மாஜிஸ்தி ரேட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

7 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் குற்ற சம்பவங்களில் விசாரணைக்கு தடயவியல் நிபுணர்களை ஈடுபடுத்த வேண்டும். இதன் மூலம் 90 சதவீதம் தண்டனை பெற்று கொடுப்பது உறுதியாகும். இதற்கான கட்டமைப்பு களை அனைத்து மாநிலங்களிலும் உருவாக்க வேண்டும்.

Tags:    

Similar News