சிறப்புக் கட்டுரைகள்

ஆளுநரா, ஆளவந்தாரா?

Published On 2023-08-18 10:48 GMT   |   Update On 2023-08-18 10:48 GMT
  • நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனைக் கேள்விக்குறியாக்கிவிடும்.
  • நீட் எழுதச் செலவே இல்லை என்று ராஜ்பவனில் ஆளுநர் சொல்வதைக் கேட்ட மாணவர்கள் மனதிற்குள் சிரித்திருப்பார்கள்.

மார்பில் அணிந்த துப்பட்டாவில் இருக்கலாம் ரகசியக் குறிப்புகள்?

தோளாடைகள் துகிலுரியப்பட்டு..

தேர்வு மையங்களில் நுழைகிறார்கள் நவீன பாஞ்சாலிகள்..

அழியப்போகின்றன அஸ்தினா புரங்கள்! - (மனுஷ்யபுத்திரன்)

நீட் எழுதச் சென்ற மாணவிகளுக்கு ஏற்பட்ட அவலங்களையும் அலங்கோலங்களையும் கண்டு பொங்கிய கவிஞரின் கோப வரிகள் இவை.

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் 12 அன்று கிண்டி ஆளுநர் மாளிகையில் ஒரு பாராட்டு விழா நடத்தபபட்டது. அப்போது கவர்னர் ஆர்.என்.ரவிக்குச் சரியான சூடு கொடுத்தார், திருவாளர் பொதுஜனம் ஒருவர்! நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவியின் தந்தை ராமசாமி (இனிஷியல் "ஈ.வெ." இல்லை) என்பவரே அவர்.

"நீட் தேர்வை எப்போது ரத்து செய்யப் போகிறீர்கள்?" என்று ஆளுநரைக் கேள்வி கேட்டு மடக்கினார் நமது ராமசாமி.

"நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனைக் கேள்விக்குறியாக்கிவிடும். பயிற்சி மையங்களுக்குச் சென்று நீட் தேர்வுக்குப் படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாணவர்களை அறிவுசார் மாற்றுத் திறனாளிகளாக்க நான் விரும்பவில்லை!" என்று பொங்கினார் ஆர். என். ரவி. "நீட் வந்தபிறகு தான் கட்டணக் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட்டது. நீட் இல்லாமல் தமிழக மருத்துவக் கல்வி அடைந்துள்ள தரம் பற்றாக்குறையானது. உட்காருங்கள்! (What we have achieved without NEET is no longer sufficient. Sit down.)" என்று அக்னி நட்சத்திரமானார் ஆர். என். ரவி.

மாட்சிமை தாங்கிய ஆளுநருக்குத் தெரியாமல் போன விஷயங்கள்:

1. இந்தியாவின் முதல் மூளை நரம்பியல் அறுவைச் சிகிச்சை அன்றைய மதராசில் செய்யப்பட்டது. வருடம் 1935.

2. இந்தியாவின் முதல் வெற்றிகரமான "திறந்த இதய அறுவைச் சிகிச்சை" தமிழ்நாட்டில் தான் நடந்தது. ஆண்டு:1962. மருத்துவரின் பெயர்: டாக்டர் கோபிநாத்.

3. இந்தியாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தமிழகத்தில் தான் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. நாள்: பிப்ரவரி 2, 1971.

என் கல்லூரிக்காலத்தில் (1965) பி.யூ.சி. மதிப்பெண்படி நேர்முகத் தேர்வு நடந்து மருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டுவந்தனர். அதில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் மாநில நுழைவுத் தேர்வு (Tamil Nadu Professional Courses Entrance Examination) நடத்தப்பட்டுத் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில் எழுந்த குளறுபடிகள் அடிப்படையில் பிளஸ் டூ மதிப்பெண் பட்டியல்படி தர வரிசை வெளியிடப்பட்டு அதன்படி மருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. அதாவது எல்லா முறைகளையும் பல வருடங்களாகப் பரிசோதித்துப் பார்த்தபின்பே நாம் "பிளஸ் டூ" அடிப்படையைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

நீட் எழுதச் செலவே இல்லை என்று ராஜ்பவனில் ஆளுநர் சொல்வதைக் கேட்ட மாணவர்கள் மனதிற்குள் சிரித்திருப்பார்கள். பிரதர், ஆர்.என். ரவி அவர்களே.. நீட் கோச்சிங் கட்டணம் ஆண்டுக்கு இரண்டு முதல் மூன்று லட்ச ரூபாய் வரை.

உங்களிடம் கேள்வி கேட்டு ஒலிபெருக்கி பிடுங்கப்பட்ட மாணவியின் தந்தை நமது ராமசாமியே "என் மகளை 9-ம் வகுப்பு முதல் நீட் கோச்சிங்கில் சேர்த்துப் படிக்க வைக்க இத்தனை லட்சம் செலவு ஆனது. நான் மத்திய அரசு ஊழியன். என்னால் முடிந்தது. ஏழை எளியவர்களால் எப்படி முடியும்? நீட் வெற்றி என்பதே கோச்சிங் சென்டர் தான்!" என்று ராஜ்பவனுக்கு வெளியே நிருபர்களிடம் விரட்டி விரட்டி பேசியதை டி.வி.க்களில் பார்த்தீர்களா, இல்லையா?

"கோச்சிங் இல்லாமல் நீட்டில் நல்ல மதிப்பெண் வாங்க முடியும் என்று சொல்கிற ஆளுநருக்கு மேட்டுக்குடிப் பள்ளிகள் கோச்சிங் நிறுவனக் கூட்டணியில் கட்டணக் கொள்ளை அடித்து நீட் பயிற்சி தருவது தெரியுமா?

நீட் தேர்வு ஒரே ஒரு தாள்! அதற்குக் கட்டணம் ரூ 1700. போக்குவரத்து, முந்திய நாள் இரவுத் தங்கல் என்று இன்னும் பல செலவுகள். பிளஸ் டூ ஸ்டேட் போர்டு ஆறு தாள் தேர்வுக் கட்டணம் எழுதக் கட்டணம் ரூ 175 முதல் 225 வரை. தேர்வு மையம் அவரவர் பள்ளி. பிளஸ் டூ விடைத்தாள் திருத்த ஆசிரியர்களுக்கு அரசு தனியாக மதிப்பூதியம் தருகிறது.

நீட் கேள்வித்தாள் "ஆப்டிக்கல் ரெஸ்பான்ஸ் ஷீட்" (ஓ.ஆர்.எஸ்) முறை. விடைத்தாள் திருத்தச் செலவு இல்லை. எந்தப் பெரிய செலவும் இல்லாமல் ஒற்றைத் தாளுக்கு 1700 ரூபாய் கட்டணம் வாங்கும் தேசீய தேர்வு முகமை அதில் ஒரு பகுதியைச் செலவு செய்து குழந்தைகள் மன அழுத்தம் அடையாமல் பாதுகாப்புச் சோதனை நடத்தி இருக்கலாம். இதை ஏன் நமது ஆளுநர் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி நடைமுறைக்குக் கொண்டுவரக் கூடாது?

தமிழகத்தில் மட்டும் சென்ற ஆண்டு சுமார் 25 கோடி ரூபாய் நீட் தேர்வுக் கட்டணம் வசூல் செய்யப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கிடைத்திருக்கும். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு என்ன நன்மை செய்திருந்தார்கள்?

இவ்வளவு கட்டணம் வசூல் செய்தும் வினாத்தாள் பற்றாக்குறை அவ்வப்போது எழுகிறது. கேள்வித்தாளைப் போட்டோகாப்பி எடுத்துக் கொடுத்துத் தாமதமாகத் தேர்வு எழுத வைத்த "ததிங்கிணத்தோம்" வேலைகள் எல்லாம் நடக்கின்றன. ஆங்கிலம் மற்றும் பிற மொழி கேள்வி மொழிபெயர்ப்புகள் வேறாக இருந்தன என்று வழக்குகள் தொடரப்படுகின்றன.

நீட் தேர்விற்கான முடிவுகளை வெளியிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைகாலத் தடை உத்தரவே பிறப்பித்தது. இப்படிப் பல்வேறு குளறுபடிகளுக்கு இடையே உச்சநீதிமன்றத்தின் தயவால் தான் நீட் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. "அடுத்த முறை இது போல் நடக்கக் கூடாது. கபர்தார்!" என்ற எச்சரிக்கை மட்டும் அவ்வப்போது எதிரொலிக்கும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் டாக்டர் பி. கே என்ற பிரேம்குமார் நீட் பேப்பருக்கு 30 லட்ச ரூபாய் வீதம் பெற்றுக்கொண்டு வினாத்தாளை முன் கூட்டியே லீக் செய்து கேள்விகளுக்குப் பதிலும் தயாரித்து விற்பனை செய்து கோடிக்கணக்கில் லாபம் பார்த்தார். நமது ஆளுநரின் மாநிலமான பீகாரைச் சேர்ந்த அந்த மோசடிப் பேர்வழி பற்றிய செய்திகள் வெளிவந்தபோது பல லட்சம் செலவு செய்து விடிய, விடியப் படித்த நமது மாணவ-மாணவியர் நொந்தே போனார்கள்.

பி.கே. பிடிபட்டார். ஆனால் அவரிடம் கேள்வித்தாள் பெற்றவர்கள் இப்போது மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டும் இப்படிப்பட்ட புகார்கள் எழுந்தன. லீக் செய்யப்பட்ட வினாத் தாள்களில் காணப்பட்ட கேள்விகள் தேர்வுக் கேள்விகளோடு பெரும்பாலும் ஒத்துப் போயின. தேசிய தேர்வு முகமை மறுப்புத் தெரிவித்துவிட்டது.

நீட் தேர்வின் தரம் பற்றிச் சிலாகிக்கும் ஆளுநர் ஆர். என். ரவிக்கு இவையெல்லாம் தெரியுமா? 7.5 சதவீதம் அரசுப் பள்ளி இட ஒதுக்கீடு இல்லையென்றால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இப்போது கிடைக்கும் இந்த வாய்ப்பும் வந்திருக்காது. அதில் இடம் பெற்றவர்களுக்கான மொத்த கல்விச் செலவையும் தமிழக அரசே ஏற்றுக் கொள்கிறது என்பதையாவது கவர்னருக்கு யாரேனும் சொன்னார்களா?

நீட் தேர்வு முறையை நிராகரித்து இந்தியத் தலைமை நீதிபதி அல்டமஸ் கபீர் ஜூலை 18, 2013 அன்று பின்வருமாறு தீர்ப்பு எழுதினார்:

"நகரங்களில் நவீன நாகரிக மருத்துவர்கள் தேவைப்படுவது போல் கிராமங்களில் ஏழை டாக்டர்கள் (bare foot doctors) தேவைப்படுகிறார்கள். நீட் முறையை அனுமதித்தால் இந்தியாவில் கிராமத்திற்கும் நகரத்திற்குமான இடைவெளி அதிகரிக்கும். எனவே நீட் நிராகரிக்கப்பட வேண்டும்!"

கபீர் ஓய்வு பெற்ற பிறகு தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதே போன்ற இன்னொரு வழக்கு அரசமைப்புச்சட்ட அமர்வில் இருந்தது. எனவே நீட் சீராய்வு மனு அதற்கு மாற்றப்பட்டது.

ஏப்ரல் 11, 2016-ல் சீராய்வு மனு அனுமதிக் கப்பட்ட உடன், சங்கல்ப் அறக்கட்டளை எனும் நிறுவனம் நீட் நடத்தவேண்டுமென்று பொது நல வழக்கு தாக்கல் செய்தது. (Sankalp Charitable Trust v. Union of India). இவ்வழக்கில் ஏப்ரல் 28, 2016- ம் தேதி சாதகமான உத்தரவு பிறப்பித்தது உச்ச நீதிமன்றம். 2013ல் புதைக்கப்பட்ட நீட் பூதம் கொல்லைப்புற வழியாக 2016- ம் ஆண்டு உயிர்பெற்றது.

ஆனால் இதுவரை சுப்ரீம்கோர்ட் இறுதி முடிவு எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் நீட் நரபலிகள் கூடிக் கொண்டே போகின்றன. கிட்டத்தட்ட 20 தற்கொலைகள். சமீபத்திய சோகம்: சென்னை குரோம்பேட்டை மாணவன் ஜெகதீஸ்வரன் மற்றும் அவனது தந்தை செல்வகுமார் ஆகியோரின் அகால மரணங்கள்!

நீட் வந்த பிறகு மருத்துவக் கல்வியில் கட்டணக் கொள்ளை இல்லை என்ற ஆளுநரின் வாதம் அபத்தம். பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படைத் தர வரிசைப்பட்டி யலில் எப்போதுமே அரசு கல்லூரிகளில் ஒரே கட்டணம் தான்! தனியார் கல்லூரிகளில் அரசு கோட்டா போக மீதியுள்ள நிர்வாகக் கோட்டாவிற்கு லட்சக்கணக்கில் பீஸ்! இப்போதும் அப்படியே!

நீட்டில் பாஸ் அல்லது மினிமம் தகுதி மதிப்பெண் வாங்குபவன் தரமான மாணவன். எதிர்கால மருத்துவர். மாநிலப்பாடத் திட்டத்தில் அரசு பள்ளியில் படித்து 199 வாங்கி நீட் மதிப்பெண் குறைவாக வாங்கினால் மருத்துவம் படிக்கத் தகுதி அற்றவர்கள். பிரச்சினை மத்திய பாடத்திட்டமா, மாநிலப் பாடத்திட்டமா? நோ.. சார்.. நோ! இது இருப்பவனுக்கும் இல்லாதவனுக்குமான போராட்டம்.

தரம் (Quality) என்றால் என்ன? ஒரு பொருள் தரும் பயனை அல்லது சேவையை அதே முயற்சியில் அல்லது அதே செலவில் கிடைக்கும் மற்றவற்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதே தரத்தின் அளவீடு. (standard of something as measured against other things of a similar kind)

தரம் என்ற போர்வையில் மாநிலப் பாடத் திட்டத்தையும், மத்திய பாடத் திட்டத்தையும் ஒப்பிடவே முடியாது. மத்திய பாடத் திட்டத் தேர்வு எம். சி. கியூ (MCQ) என்று சொல்லபட படும் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் முறை. ஸ்டேட் போர்டு விரிவாக எழுதும் முறை. இரண்டையும் ஒரே தராசில் வைப்பது சரியா?

ஏன் பிற மாநிலங்கள் நீட் எதிர்ப்புக் காட்ட வில்லை என்று கேட்கிறார்கள். வலியும், வேதனையும் வந்தவன் தானே கதற முடியும்?

நீதி என்பது வெறுமனே வழங்கப்படுவது மட்டுமல்ல. வழங்கப்படுவதை அனைவரும் உணரச் செய்வது. உணர மறுப்பவர்களுக்கு எதிரான ஒரே ஆயுதம் போராட்டம் மட்டுமே!

ஆளுநர் மாநில அரசின் அலங்காரத் தலைவர் மட்டுமே! அவர் ஆளவந்தார் போலக் கருத்துக் கூறுவதை பெரும்பாலானவர்கள் ஏற்கவில்லை என்பதை மறக்கக் கூடாது.

Tags:    

Similar News