சிறப்புக் கட்டுரைகள்

சென்னைக்கு 384-வது பிறந்த நாள்

Published On 2023-08-22 11:13 GMT   |   Update On 2023-08-22 11:13 GMT
  • ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பே 11 மற்றும் 12-ம் நூற்றாண்டுகளில் சென்னை சிறு சிறு கிராமங்களாக புகழ் பெற்று இருந்தன.
  • அந்த காலத்தில் பக்கிங்காம் கால்வாயில் படகு போக்குவரத்து நடந்தது.

சென்னைக்கு 384-வது பிறந்த நாள். கடந்த 10 ஆண்டு களாக சென்னை பிறந்த தினம் பல்வேறு தரப்பு மக்களால் மிக மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கொரோனா தாக்கம் குறைந்த நிலையில் இந்த ஆண்டு சென்னை தினம் கொண்டாட்டம் மிக விமரிசையாக களை கட்டி உள்ளது. நேற்று முதலே பல்வேறு இடங்களில் சென்னை தினம் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.

சென்னை தினம் உருவானதில் மிக சுவாரஸ்யமான வரலாற்று பின்னணி உள்ளது. 1639-ம் ஆண்டு வணிகம் செய்வதற்காக ஆங்கிலேயர்களின் கிழக்கு இந்திய கம்பெனி சென்னையில் தரை இறங்கியது. அவர்கள் தரை இறங்கிய இடம் அந்த கால கட்டத்தில் மதராச பட்டிணம் என்று அழைக்கப்பட்டது.

அந்த மதராச பட்டிணத்தை உள்ளடக்கிய கிராமங்களை வெங்கடப்பா நாயக்கர் மற்றும் அவரது சகோதரர் அய்யப்பா நாயக்கர் இருவரும் ஆட்சி செய்து வந்தனர். வெங்கடப்பா நாயக்கர் வந்தவாசியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்தார். அய்யப்பா நாயக்கர் பூந்தமல்லியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்தார்.

அவர்களிடம் இருந்து கிழக்கு இந்திய கம்பெனியை நிர்வகித்த ஆங்கிலேயர்கள் தங்களுக்காக சிறிய இடம் ஒன்று வேண்டும் என்று கேட்டனர். அதன்படி வெங்கடப்பா நாயக்கரும், அய்யப்பா நாயக்கரும் மதராச பட்டிணத்தில் ஒரு சிறு கிராமத்தை ஆங்கிலேயர்களுக்கு எழுதி கொடுத்தனர்.

இந்த நிகழ்வு நடந்த நாள் 1639-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதியாகும். எனவே சென்னை உருவாக இந்த தினம் காரணமாக இருந்ததால் ஆகஸ்டு 22-ந்தேதியை சென்னை தினமாக கொண்டாடும் வழக்கம் ஏற்பட்டுள்ளது. மதராசப்பட்டிணமாக இருந்த அந்த இடத்தை ஆங்கிலேயர்கள் மெட்ராஸ் என்று அழைத்தனர்.

ஆனால் கிழக்கு இந்திய கம்பெனிக்கு நிலத்தை கொடுத்த தாமல் வெங்கடப்பா நாயக்கரும் அவரது சகோதரர் அய்யப்பா நாயக்கரும் தங்களது தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரில் புதிய இடத்தை அழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதன் அடிப்படையில்தான் சென்னை உருவானது.

காலம் காலமாக இந்த வரலாறு கூறப்பட்டு வந்த போதிலும் மெட்ராஸ், சென்னை என்ற இரண்டு பெயர்களும் பேச்சுவழக்கத்தில் இருந்தன. இதற்கு ஒரு முடிவு கட்டும் வகையில் அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி 1996-ம் ஆண்டு மெட்ராஸ் என்ற பெயருக்கு பதிலாக சென்னை என்று அறிவித்தார். அன்று முதல் நாடு முழுவதும் சென்னை என்ற பெயர்தான் அழைக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் சென்னை தினத்தை கொண்டாடும் பழக்கம் கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு ஆண்டு இந்த கொண்டாட்டம் அதிகமாகி வருகிறது.

பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், பண்பாட்டு நிகழ்வுகள் ஆகியவற்றை ஒருங்கே கொண்ட சென்னையில் பல்வேறு மாநில மக்கள் சுமூகமான நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். சென்னைக்கு என்று பல்வேறு சிறப்புகள் உள்ளன. கல்வி, ஆன்மீகம், விளையாட்டு, போக்குவரத்து, மருத்துவம், அறிவியல், அரசியல், பொழுது போக்கு, உணவு வகைகள் என்று அனைத்து வகைகளிலும் சென்னை நகரம் நாட்டின் மற்ற நகரங்களில் இருந்து தனித்துவம் கொண்டதாக திகழ்கிறது.

குறிப்பாக முக்கிய துறைகளில் சென்னை நகரம் நாட்டின் தலைநகரமாகவே திகழ்கிறது. தென் இந்தியாவின் நுழைவு வாயில் என்று வர்ணிக்கப்படும் சென்னை சில அம்சங்களில் நாட்டின் முதன்மை நகரமாக உள்ளது. இந்தியாவிலேயே அதிக ஆலயங்கள் கொண்ட சிறப்பு சென்னைக்கு உண்டு.

இந்தியாவிலேயே சிறந்த மருத்துவம் அளிக்கும் நகரமாக சென்னை திகழ்கிறது. நாட்டி லேயே அதிக கார்கள் உற்பத்தி யாகும் நகரமாக சென்னை உள்ளது. ஐ.டி. தொழில் நுட்பத்திலும் தற்போது மற்ற நகரங்களுக்கு வழிகாட்டும் இடமாக சென்னை உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் நிறைந்த இடம் என்ற பெருமையும் சென்னைக்கு உண்டு. சென்னையில் பழமை யான கட்டிடங்களே இதற்கு சாட்சியாக திகழ்கின்றன.

இந்தியாவில் எந்த நகரத்திலும் இல்லாத அளவுக்கு 25 கிலோ மீட்டர் நீளத்துக்கு அழகான கடற்கரை சென்னையில் மட்டுமே உள்ளது. சினிமா தொழிலில் அதிக வருவாயை தரும் இடமாகவும் சென்னை சிறப்பு பெற்றுள்ளது. அருங்காட்சியகங்கள், நூல் நிலையங்கள் சென்னையின் பழமைக்கு சான்றாக திகழ்கின்றன.

அன்று கிராமமாக இருந்த சென்னை இன்று பல நூறு கிலோ மீட்டருக்கு பறந்து விரிந்து மாநகரமாக மாறி உள்ளது. தொழில் முதலீட்டுக்கு மிக சிறந்த இடம் என்ற நிலையும் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பே 11 மற்றும் 12-ம் நூற்றாண்டுகளில் சென்னை சிறு சிறு கிராமங்களாக புகழ் பெற்று இருந்தன. அந்த கிராமங்களில் ஆலய வழிபாடுகள் ஓங்கி இருந்தன. சித்தர்கள் ஏராளமானோர் வாழ்ந்தனர். அவர்கள் வாழ்ந்த இடங்கள் தற்போது சென்னையில் ஆங்காங்கே ஜீவ சமாதிகளாக இருப்பது காண முடியும்.

அந்த காலத்தில் பக்கிங்காம் கால்வாயில் படகு போக்குவரத்து நடந்தது. ஆந்திராவில் இருந்து தமிழகத்தின் வட மாவட்டம் வரை அந்த கால்வாயில் மக்கள் படகுகளில் சென்று வியாபாரம் செய்த நிலை இருந்தது. தற்போது அது அடியோடு மறைந்து போனது.

அதுபோல சென்னையில் ஓடிய டிரம் வண்டிகளும் காணாமல் போய் விட்டன. இவைகளும் இருந்து இருந்தால் சென்னை மாநகரம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இவற்றை எல்லாம் நினைவு கொண்டு சென்னையின் சிறப்பை உணர்ந்து சென்னை தினத்தை கொண்டாடுவோம்.

Tags:    

Similar News