சிறப்புக் கட்டுரைகள்

ஆனை ஆனை அழகர் ஆனை!

Published On 2023-08-24 11:32 GMT   |   Update On 2023-08-24 11:32 GMT
  • பொற்றாமரைக் குளத்தில் பூத்திருந்த தங்கத் தாமரை மலர்களால் சிவலிங்கத்தை அர்ச்சித்தது.
  • ஆனைமுகக் கடவுளான விநாயகர் யானையாகவே உருமாறி வந்த கதை கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்த புராணத்தில் உள்ளது.

நம் ஆன்மிக நந்தவனத்தில் பற்பல யானைகள் கம்பீரமாக உலவுகின்றன.

ஐராவதம் என்பது இந்திரனின் வாகனமான வெள்ளை யானையின் பெயர். இந்த வெள்ளை யானை பாற்கடலை அமிர்தம் வேண்டிக் கடைந்தபோது தோன்றிய பலவற்றில் ஒன்று.

ஒருமுறை துர்வாச மகரிஷி இந்திரனைக் காண தேவலோகம் வந்தார். இந்திரனுக்கு சிவப்பிரசாதமான தாமரை மலரைக் கொடுத்தார். அந்த மலரை ஐராவதம் யானை அலட்சியத்துடன் காலில் போட்டு மிதித்தது.

சீற்றத்திற்குப் புகழ்பெற்ற துர்வாசர் விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் சென்று பிற யானைகளுடன் வாழுமாறு ஐராவத யானையைச் சபித்தார். ஐராவதம் தன் தவறை உணர்ந்து வருந்தியது.

மண்ணுலகில் பிறந்த அது, நூறாண்டுகள் கடந்த பின் இந்திரனின் தோஷம் நீக்கிய மதுரைக் கடம்பவன ஆலயத்திற்குச் சென்றது.

அங்கிருந்த பொற்றாமரைக் குளத்தில் இருந்து தும்பிக்கையில் நீர் எடுத்துவந்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தது. பொற்றாமரைக் குளத்தில் பூத்திருந்த தங்கத் தாமரை மலர்களால் சிவலிங்கத்தை அர்ச்சித்தது.

அபிஷேகத்தாலும் அர்ச்சனையாலும் மனம் குளிர்ந்த சிவபெருமான் யானைக்கு சாபவிமோசனம் அளித்து அதை மீண்டும் விண்ணுலகு அனுப்பினார் என்கிறது திருவிளையாடல் புராணக் கதை.

பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணத்தில் சிவபெருமான் நிகழ்த்திய அறுபத்து நான்கு திருவிளையாடல்களும் தனித்தனிப் படலமாகச் சொல்லப்பட்டுள்ளன. திருவிளையாடல் புராணம் விவரிக்கும் இரண்டாம் படலம், வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம் என்பது.

*ஆனைமுகக் கடவுளான விநாயகர் யானையாகவே உருமாறி வந்த கதை கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்த புராணத்தில் உள்ளது. காஞ்சீபுரத்தில் உள்ள குமரக் கோட்டத்தில் அர்ச்சகராக இருந்த காளத்தியப்ப சிவாச்சாரியாரின் புதல்வர்தான் கந்த புராண நூலாசிரியரான கச்சியப்ப சிவாச்சாரியார். கந்த புராணத்தில் இல்லாதது எந்தப் புராணத்திலும் இல்லை என்னுமளவு சொற்சுவையும் பொருட்சுவையும் மிக்க பக்தி நூல் அது.

வள்ளிக் குறத்திமேல் காதல் கொள்கிறான் முருகன். தன் காதலுக்கு உதவுமாறு அண்ணன் விநாயகனை வேண்டுகிறான். யானை முகம் கொண்ட விநாயகர் யானையாகவே உரு மாறுகிறார்.

தினைப்புனம் காக்கும் வள்ளியை அந்த யானை துரத்த, அச்சமடைந்த வள்ளி முருகனை ஓடிவந்து கட்டிப் பிடித்துக் கொள்ள, வள்ளியைத் துரத்திய யானை மறைகிறது, வள்ளிக்கு முருகன் மேல் காதல் தோன்றுகிறது என வளர்கிறது கந்த புராணக் கதை.

*கண்ணன் கதையைச் சொல்லும் பாகவத புராணத்தில் குவலயாபீடம் என்ற ஒரு யானை வருகிறது. அதன் முற்பிறவியில் அது மகாபலிச் சக்கரவர்த்தியின் புதல்வனான மந்தபாலனாக இருந்தது.

மந்தபாலன் லட்சம் யானைகளின் பலம் உள்ளவன். ஒருமுறை திருவரங்க ஷேத்திரத்தில் தரிசனம் செய்யப் போனபோது, மக்கள் வெள்ளத்திடையே அவன் கைவீசி நடந்தான். அந்தக் கை பட்டே பலர் நசுங்கினர்.

மக்களிடையே வந்த வயதான தரித முனிவர் அவன் கையசைவால் கீழே விழுந்து விட்டார். `யானைபோல் கையசைத்த நீ யானையாகப் பிறக்கக் கடவது!` என அவர் சீற்றத்துடன் சபித்தார்.

மனம் வருந்திய மந்தபாலன் சாபவிமோசனம் வேண்டினான். `நீ ரங்கநாதரை தரிசிக்க வந்தாயே? இந்த ரங்கநாதர் கண்ணனாக அவதரிப்பார். அப்போது அவரால் வதம் செய்யப்பட்டு நீ யானைப் பிறவியிலிருந்து முக்தி அடைவாய்!` என அவர் அருளினார்.

அதன்படியே மந்தபாலன் குவலயாபீடம் என்ற யானையாகப் பிறந்தான். கண்ணனின் விரோதியான கம்சன் அரண்மனையை அலங்கரித்தது அந்த யானை.

கம்சனை வதம் செய்ய துவாரகையிலிருந்து மதுராபுரிக்கு பலராமனுடன் வந்தார் கிருஷ்ணர். தன்னை வழிமறித்த யானையை வதம் செய்து அதற்கு முக்தி அளித்தார். அதன் இரு தந்தங்களையும் கிருஷ்ணரும் பலராமரும் ஆளுக்கு ஒன்றாக எடுத்துக் கொண்டனர் என்கிறது பாகவத புராணம்.

*மகாபாரதத்தில் கவுரவர் அணியில் அஸ்வத்தாமன் என்ற பெயருடைய ஓர் யானை இருந்தது. பார்த்தசாரதியான கிருஷ்ணர் யுத்த களத்தில் பீமன் காதோடு ஒரு செய்தி சொன்னார்.

அவர் சொன்னபடி பீமன் வீரர்களிடையே புகுந்து சென்று அஸ்வத்தாமன் என்ற யானையைக் கொன்றான். பின்னர் துரோணர் இருக்கும் இடத்திற்கு வந்து அஸ்வத்தாமன் இறப்பு நிகழ்ந்துவிட்டது எனக் கூவினான்.

துரோணரின் மகன் பெயரும் அஸ்வத்தாமன். அவன்தான் பீமனால் கொல்லப்பட்டதாக எண்ணிய துரோணர், உண்மை அறிய வேண்டி, பொய்யே பேசாத யுதிஷ்டிரரிடம் `என் மகன் மாண்டானா?` எனக் கேட்டார்.

யுதிஷ்டிரர் தயங்கியவாறே `அஸ்வத்தாமன் இறந்தது உண்மைதான். ஆனால் இறந்தது அஸ்வத்தாமன் என்ற யானைதான்!` என்றார்.

`இறந்தது அஸ்வத்தாமன் என்ற யானைதான்` என தர்மபுத்திரர் சொல்லும்போது பார்த்தசாரதி தன் பாஞ்சஜன்ய சங்கை எடுத்து உரக்க ஊதினார். அந்த ஒலியில் அஸ்வத்தாமன் யானை என்று சொல்லப்பட்ட பகுதி துரோணர் காதில் விழவில்லை. மகன் கொல்லப்பட்டதாகக் கருதிய துரோணர், உடனே யுத்தம் செய்வதை நிறுத்தி, தரையில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார்.

துருபத ராஜாவின் மகனும் துரோணரைக் கொல்லவே பிறந்தவனுமான திருஷ்டத்யும்னன் பாய்ந்து வந்து கத்தியால் துரோணரின் தலையைச் சீவி அவரைக் கொன்றான்.

உண்மையே பேசும் யுதிஷ்டிரர், எப்படியானாலும் சூழ்ச்சியால் அசத்தியத்திற்குத் துணைபோய் விட்டாரே? அதுவரை தரையைத் தொடாமல் உயரத்தில் உருண்டு கொண்டிருந்த யுதிஷ்டிரரின் தேர்ச் சக்கரங்கள், அந்தக் கணமே தரையில் இறங்கி உருள ஆரம்பித்தன என்கிறது மகாபாரதம்.

*`மரத்தை மறைத்தது மாமத யானை.

மரத்தில் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்

பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே

என்பது திருமூலரின் திருமந்திரம்.'

மரத்தால் செய்யப்பட்ட மதயானையின் உருவம் சிற்பியின் கைவண்ணத்தால் மரத்தை உணரவொட்டாமல் யானை என்றே உணரப்படுகிறது. ஆனால் சிற்பியின் வேலைப்பாடுகளை அழித்துவிட்டால் யானை மறைந்து அது மரமாகவே தென்படும்.

அதுபோல் பரம்பொருளால் இயங்குகிறது இவ்வுலகம். குருவருளால் ஞானம் பெறுகையில் உண்மை ஞானம் முன்னர் இருந்த பொது ஞானத்தை அழித்துவிடுவதால் உலகமே பரம்பொருளாய்த் தோன்றும் என்பது இப்பாடலின் தத்துவப் பொருள். மரத்தால் செய்யப்பட்ட யானை பொம்மையை உதாரணம் காட்டி, மாபெரும் அத்வைத தத்துவத்தை விளக்குகிறார் மெய்ஞ்ஞானி திருமூலர்.

*யானையை வைக்கோலோடு ஒப்பிட்டு காளமேகப் புலவர் ஒரு சிலேடை வெண்பா பாடியுள்ளார்:

`வாரிக் களத்தடிக்கும் வந்துபின்பு கோட்டைபுகும்

போரில் சிறந்து பொலிவாகும் - சீருற்ற

செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில்

வைக்கோலும் மால்யானையாம்.'

வைக்கோல் வாரிக் களத்தில் அடிக்கப்படும். யானை பகைவர்களை வாரிப் போர்க்களத்தில் அடிக்கும். வைக்கோல் கோட்டைபோல் குவித்து வைக்கப்படும். யானை கோட்டையில் அதன் கட்டுத்தறியில் புகும். வைக்கோல் போர் பார்க்கப் பொலிவாக இருக்கும். யானையும் போர்புரியும்போது பொலிவாகத் தோன்றும் என வைக்கோலுக்கும் யானைக்கும் உள்ள ஒற்றுமைகளை சமத்காரமாகப் புலப்படுத்துகிறார் சிலேடைச் செல்வர் காளமேகம்.

*அரசனுக்கு வாரிசு இல்லாதபோது, புதிய மன்னனைத் தேர்வு செய்ய, பட்டத்து யானை பயன்பட்டிருக்கிறது. அதன் தும்பிக்கையில் ஒரு மாலையைக் கொடுத்து நம்பிக்கையோடு காத்திருப்பார்கள். அது நகர்வலம் சென்று யார் கழுத்தில் மாலையைப் போடுகிறதோ அவரே அடுத்த அரசராவார்.

*வெற்றி விழா ஊர்வலங்களிலும் மணவிழா ஊர்வலங்களிலும் அலங்கரிக்கப் பட்ட யானையை நடத்திச் செல்லும் வழக்கம் உண்டு.

பல கோவில்களில் யானை உண்டு. பக்தர்கள் கோவில் யானையிடம் ஆசி பெறுவதும் வழக்கம்.

மந்திராலயம் போன்ற இடங்களில் நாள்தோறும் கஜசேவை நடைபெறும். அதாவது யானைமேல் இறைவனின் திருவுருவை வைத்து ஆலயத்தின் உள்ளே அந்த யானை ஊர்வலமாக அழைத்து வரப்படும்.

குருவாயூர்க் கோவில் அருகே குருவாயூரப்பன்மேல் பக்தி செலுத்தி வாழ்ந்த கேசவன் என்ற யானைக்குச் சிலை வைக்கப் பட்டிருக்கிறது.

திருச்சூர் வடக்குநாதன் கோவிலில் `திருச்சூர் பூரம்' என அழைக்கப்படும் திருவிழாஆண்டுதோறும் நடைபெறுகிறது. இவ்விழாவில் ஏராளமான யானைகள் கலந்துகொண்டு நடைபெறும் குடை மாற்றும் உற்சவம் மிகப் பிரசித்தம்.

லட்சக்கணக்கான மக்கள் பார்வையாளர்களாகப் பங்குபெறும் இவ்விழா, அதில் கலந்துகொள்ளும் யானைகளின் எண்ணிக்கை காரணமாக உலகப் புகழ் பெற்றுவிட்டது. விழா நடக்கும்போது அதைக் கண்டுகளிக்க ஆண்டுதோறும் ஏராளமான வெளிதேசத்தவர்களும் திருச்சூர் வருகிறார்கள்.

*கடந்த காலங்களில் யானைகள் போர்க்களங்களில் பயன்படுத்தப் பட்டன. தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என நால்வகைப் படைகளில் யானைப்படை முக்கியமான ஒன்றாக விளங்கியது.

சிங்கத்தையே எதிர்க்கக் கூடிய மாபெரும் விலங்கான யானை சைவ உணவை மட்டுமே உண்ணும் என்பது குறிப்பிடத் தக்கது. அசைவ உணவுதான் அதிக உடல் வலிமை தரும் என்ற கருத்தை எதிர்த்து நடமாடும் மாபெரும் சான்றாக யானை திகழ்கிறது.

யானையைப் பற்றி ஓர் அழகிய குழந்தைப் பாடல் வழக்கில் இருக்கிறது.

`ஆனை ஆனை அழகர் ஆனை

அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை

கட்டிக் கரும்பை முறிக்கும் ஆனை

காவேரித் தண்ணீரைக் கலக்கும் ஆனை

குட்டி ஆனைக்குக் கொம்பு முளைச்சுதாம்

பட்டண மெல்லாம் பறந்து ஓடிப் போச்சாம்!'

வெற்றி, மகிழ்ச்சி, செல்வம், ஞானம் இவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறது யானை. நம் ஆன்மிகத்தில் யானைக்குத் தனித்த பெரிய இடம் உண்டு. பார்க்கப் பார்க்க அலுக்காத யானை, அதைப் பற்றிப் படிக்கப் படிக்கவும் அலுக்காதது!

தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

Tags:    

Similar News