சிறப்புக் கட்டுரைகள்

லாவணி அரசியலா, கச்சத்தீவு?- தராசு ஷ்யாம்

Published On 2023-08-26 09:50 GMT   |   Update On 2023-08-26 09:50 GMT
  • மெட்ராஸ் ராஜதானியின் மீனவர்களுக்கு கச்சத் தீவில் மீன் பிடிக்கும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
  • கச்சத்தீவில் இருந்து கொய்து வரப்பட்ட மலர்கள் ராமேஸ்வரம் அம்மனுக்குச் சூட்டப்பட்ட குறிப்புகள் உள்ளன.

நான் தனியார் நிறுவனத்தில் வேளாண் பிரதிநிதியாகப் பணியாற்றியபோது அன்றைய ஒன்றுபட்ட ராமநாதபுரம் பகுதி எனது பணியிடங்களில் ஒன்று.

கச்சத் தீவு பகுதிகளில் சங்கு எடுக்கும் உள் குத்தகை பெற்று இருந்தார் எனது முகவர். அவரது போட் மூலம் 1973ல் ஓரிரு முறை அங்கு சென்று வந்து இருக்கிறேன். ராமேஸ்வரம் பகுதிகளில் இருக்கும் பலருக்கும் இந்த அனுபவம் உண்டு.

ஒரு நாட்டின் எல்லை என்பது நிலத்தின் முடிவா? சர்வதேசச் சட்டம் வகுத்துள்ள விதி வேறு!

நில எல்லைக்குக் கீழ் கடலுக்கு அடியில் நீட்சி பெற்றுள்ள கண்டத் திட்டு வரை ஒரு நாட்டின் எல்லை ஆகும். இந்திய மாநிலங்களிலேயே தமிழகம் தான் மிகப்பெரிய கண்டத் திட்டைக் கொண்டுள்ளது.

சேதுபதி அரச மரபு கி.பி.1605-ல் மதுரை நாயக்க மன்னர்களால் தோற்றுவிக்கப்பட்டது. குத்துக்கல் தீவு, குருசடித் தீவு, ராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகியவையும் 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதிக்கு உரிமை யாக்கப்பட்டிருந்தன.

தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622-–1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. கச்சத்தீவு ராமநாதபுரம் ஜமீனுக்குச் சொந்தமானது என்று மகாராணி விக்டோரியா தன் பிரகடனம் ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

மணலி தீவு, குத்துக்கல் தீவு மற்றும் கச்சத் தீவு ஆகிய மூன்றையும் மெட்ராஸ் பிரசி டென்சியின் ராமநாதபுரம் கலெக்டரிடம் கீழக்கரை அப்துல் காதர் "லீஸ்" பெற்றுள்ளார். 1913ல் மறு ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. அதன்படி மெட்ராஸ் ராஜதானியின் மீனவர்களுக்கு கச்சத் தீவில் மீன் பிடிக்கும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

முகம்மது என்பவர் 1947ல் கச்சத் தீவை மீண்டும் குத்தகைக்கு எடுத்துள்ளார். (ஆவண எண்: 278/1948 - ராமேஸ்வரம் பதிவாளர் அலுவலகம்). சுமார் 163 ஏக்கர் பரப்பளவுள்ள கச்சத்தீவு ராமேஸ்வரத்தில் இருந்து 11 கடல் மைல் (20.4 கி. மீ) தூரத்தில் உள்ளது. இலங்கையின் தலைமன்னாரில் இருந்து அது 18 கடல் மைல் (33.4 கி. மீ) தொலைவு.

தொண்டி அருகே உள்ள நம்புதாளை ஊரைச் சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி மற்றும் ராமேஸ்வரம் ஓலைக்குடா பகுதியைச் சேர்ந்த அந்தோணிப்பிள்ளை பட்டங்கட்டி ஆகியோரால் கச்சத் தீவில் புனித அந்தோணியார் ஆலயம் 1913-ல் சிறிய ஓலைக்குடிசையில் நிறுவப்பட்டது. அது 1939-ல் படிப்படியாகப் பூர்த்தியானது.

ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் 2 நாட்கள் சிறப்புத் திருப்பலி, அந்தோணியார் தேர் பவனி என்று திருவிழா நடைபெற்று வந்தது. அந்தோணியார் மீனவர்களுக்குக் "கடல் அய்யனார்"...சமுத்திரத்தின் காவல் மற்றும் கருணை தெய்வம்.

கச்சத்தீவில் இருந்து கொய்து வரப்பட்ட மலர்கள் ராமேஸ்வரம் அம்மனுக்குச் சூட்டப்பட்ட குறிப்புகள் உள்ளன. கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட பசுக்கள் கச்சத்தீவில் வளர்க்கப்பட்டு, பால் ஆலய அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஆதாரங்களும் உள்ளன.

விடுதலைக்குப் பிறகு, ராமேஸ்வரத்தின் எல்லைக்குட்பட்ட வருவாய் கிராமம் (சர்வே எண் 1250- ஜி ஓ எண் 2009: 11.08.1949) ஆனது கச்சத்தீவு.

இலங்கை, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் கண்டத்திட்டு எல்லைகளுக்குள் கச்சத்தீவு அமைந்துள்ளது. அதைச் சுட்டிக்காட்டி அப்போது சிலோன் என்று அழைக்கப்பட்ட இன்றைய ஸ்ரீலங்கா 70 களுக்குப் பிறகு கச்சத்தீவின் மீது உரிமை கோரத் துவங்கியது. பண்டாரநாயகா அங்கு பிரதமர் பதவிக்கு வந்த பிறகு இப்பிரச்சினை கூர்மை பெற்றது.

அப்போது தமிழ்நாட்டில் கருணாநிதி முதல்வர். கச்சத்தீவு உரிமை குறித்த ஆதாரங்களை திரட்டச் சட்டப் பேராசிரியர் எஸ்.கிருஷ்ணசாமி என்பவரிடம் கூறினார். அது குறித்த அறிக்கை 1973-ல் வெளி யிடப்பட்டது. பின்னாட்களில் வழக்கறிஞர் கிருஷ்ணசாமியுடன் எனக்கு நல்ல பரிச்சயம்!

எல்லா ஆதாரங்களையும் வைத்து மத்திய அரசுக்குத் தமிழக அரசு சார்பில் ஒரு கடிதம் எழுதப்பட்டது. அதற்குப் பிரதமர் அலுவலகம் 8.10.1973 அன்று ஒரு பதிலும் அனுப்பி இருக்கிறது. "கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரங்கள் தேடப்பட்டு வருவதாக" அதில் கூறப்பட்டு இருந்தது.

கச்சத்தீவு பற்றிய பேச்சுவார்த்தை நடத்த அன்றைய வெளியுறவுத்துறைச் செயலாளர் கேவல் சிங் இலங்கை போகத்திட்டமிட்டார். முதல்வர் கருணாநிதி டெல்லி சென்று அவரைச் சந்தித்து "கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தம்!" என்பதற்கான ஆவணங்களை வழங்கினார்.

இவ்வளவு வரலாற்று உண்மைகள் மற்றும் மத நம்பிக்கைகள் இருந்தும் கச்சத் தீவு ஏன் இலங்கையிடம் தாரை வார்க்கப்பட்டது? இந்தியாவிற்கு 1974-ல் செய்த உதவிக்கு இலங்கை கேட்ட கைமாறு அது.

பாகிஸ்தான் போருக்குப் பின் (1971) இந்திராகாந்தி அரசு 18.5.1974 அன்று பொக்ரான் அணுகுண்டுச் சோதனை நடத்தி, உலக நாடுகளின் எதிர்ப்பை எதிர் கொண்டது. "சிரிக்கும் புத்தர்" என்று அதற்குப் பெயரிட்டு அது அமைதிக்கான சோதனை என்று கூறினார் இந்திரா.

உடனே பாகிஸ்தான் ஐ.நா.சபையில் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்தது. இலங்கை இந்தியாவுக்கு அளித்த ஆதரவால் அது தோல்வி அடைந்தது. பிரதி உபகாரமாக இலங்கை இந்தியாவிடமிருந்து கச்சத்தீவைக் கேட்டது. அதற்கான ஒப்பந்தத்தில் இருநாட்டுப் பிரதமர்களும் 28.06.1974ல் கையெழுத்திட்டனர்.

கச்சத்தீவு ஒப்பந்தம் பற்றி நாடாளுமன்றத்தில் 23.07.1974-ல் விவாதம் நடைபெற்றது. தி.மு.க. கூட்டணியில் 1971, தேர்தலில் வெற்றி பெற்ற பி.கே. மூக்கையாத் தேவர் (அன்றைய ராமநாதபுரம் எம்.பி.) பலத்த கண்டனம் எழுப்பினார். அப்போது அவரை ஆதரித்துப் பேசியது அன்றைய குவாலியர் எம்.பி. முன்னாள் பிரதமர் வாஜ்பாய். ராமாயணத்தில் ஸ்ரீராமரும், வாலியும் போரிட்ட இடம் கச்சத் தீவு என்ற நம்பிக்கை அவருக்கு உண்டு

அடுத்த ஆண்டில் எமர்ஜென்சி வந்தது. 1977-ல் இந்திராகாந்தி தோற்கடிக்கப்பட்டார். இங்கு எம்.ஜி.ஆர். ஆட்சி. பின்னர் 80-களில் ஈழத் தமிழர் பிரச்சினை, 1991-ல் ராஜீவ் கொலை என்று தமிழக அரசியலில் பல மாற்றங்கள்! வரலாற்றின் இருட்டுப் பக்கங்களுக்குத் தள்ளப்பட்டது கச்சத்தீவு.

ஜெயலலிதா 1991-ல் தமிழக முதல்வரானார். ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா உரையின்போது கச்சத் தீவை மீட்பது பற்றிக் குரல் கொடுத்தார். 2001-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த போதும் கச்சத் தீவு மீட்கப்பட வேண்டும் என்று கோரினார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது ஆகஸ்ட் 2008-ல் உச்ச நீதீமன்றத்தில் கச்சத்தீவு குறித்த பொது நல வழக்கைத் தொடர்ந்தார். 2011-ல் கச்சத்தீவு மீட்பு பற்றிய தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் நிறை வேற்றினார்.

நாட்டுப் பிரிவினையின்போது மேற்கு வங்க மாநிலத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் இந்துக்கள் அதிகமாக வாழ்ந்த பெருபாரி எனும் கிராமம் இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. ஆனால் எல்லைப் பிரிப்பு ஆவணங்களில் அது குறிப்பிடப்படவில்லை. எனவே பாகிஸ்தான் தன் வரைபடத்தில் அதைச் சேர்த்துக் கொண்டது. இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

பின்னர் 1958-ல் ஏற்பட்ட ஒப்பந்தப்படி பெருபாரி கிராமம் பாகிஸ்தான் வசம் சென்றது. பசும்பொன் தேவர் உள்ளிட்ட பல தலைவர்கள் இதை எதிர்த்தனர். மக்களவையிலும் பேசியிருக்கின்றனர். அப்போது பசும்பொன் தேவர் வைத்த தீர்வு என்பது அதற்கு ஒரு மதிப்புப் போட்டு அதை அந்த அரசுக்கு வழங்கி விட்டு பெருபாரியை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது.

மேற்கு வங்க அரசின் இசைவின்றி மாநிலத்தில் உள்ள பெருபாரிப் பகுதியைப் பாகிஸ்தானுக்கு வழங்கியது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 3 (சி)படி ஒரு மாநிலத்தின் எல்லையை மாற்றி யமைப்பதற்கு மட்டுமே அதிகாரம் தரப்பட்டிருக்கிறது.. இந்திய நாட்டின் பரப்பைக் குறைக்க அதிகாரம் இல்லை என்று 14.3.1960-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. (AIR 1960 SC 845, 1960 3 SCR 250)

எனவே அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்து பெருபாரி பகுதியைப் பாகிஸ்தானுக்கு வழங்கியதைச் சட்டப்பூர்வ மாக்கியது மத்திய அரசு. அதுவே 9-வது இந்திய அரசி யலமைப்புச் திருத்தத் சட்டம், 1960. இனி இது போன்ற முடிவுகளை எடுக்கும் போது நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை வாக்குகள் வேண்டும் என்று அப்போது உச்ச நீதி மன்றம் கருத்துக் கூறியது.

வங்கதேச எல்லையோரத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களை 2015-ல் இந்தியாவிற்கும், அதே போல் இந்தியாவின் மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் மேகாலயா மாநில எல்லைகளில் இஸ்லா மியர்கள் பெரும்பான்மையாக வாழும் கிரா மங்களை வங்கதே சத்திற்கும் பரஸ்பரம் மாற்றிக் கொள்ள வேண்டிய சர்ச்சை எழுந்தது. அப்போது மோடி பிரதமர். பின்னர் அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம், 2015கீழ் இந்திய நாடாளுமன்றத்திற்கு அதற்கான அதிகாரம் வழங்கப்பட்டது. கச்சத்தீவு விவகாரத்தில் இது போன்ற எந்த ஏற்பாடும் நடக்கவில்லை.

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான மீனவர் பிரிட்ஜோவின் படுகொலையைக் கண்டித்து தங்கச்சிமடத்தில் 11.3.2017-ல் பேசியபோது தி.மு.க.வின் அன்றைய செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கச்சத்தீவு மீட்பு பற்றிப் பேசியிருக்கிறார். முதல்வரானபின் 2022-ல் பிரதமர் மோடியின் சென்னைக் கூட்டத்தில் கச்சத்தீவு மீட்பு பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டார்:

"தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமுதாய மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கச்சத்தீவை மீட்டெடுத்துத் தமிழக மீனவ மக்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் அவர்களின் உரிமையை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க இது தகுந்த தருணம் என்பதைப் பிரதமருக்கு நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்."

உடனே அரசியல் சர்ச்சை எழுந்தது. கச்சத் தீவைத் தாரை வார்த்ததே தி.மு.க.வும் அதன் அன்றைய முதல்வர் கலைஞரும் தான் என்று செய்தியாளர் சந்திப்பில் தாக்கினார், தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை. அதற்குக் காரசாரமாகப் பதில் அளித்தது தி.மு.க.

இப்போது இலங்கை இந்தியாவின் உதவியை நாடித் தவம் கிடக்கிறது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால் மாவட்ட மீனவர் நலன்களைப் பாதுகாக்கவும், கச்சத்தீவை மீட்டெடுக்கவும் இதுவே சரியான தருணம்! குறைந்த பட்சம் நீண்ட காலக் குத்தகைக்காவது கச்சத்தீவை நம்மால் பெற முடியும்.

எதிர்காலத்தில் சீனா கச்சத்தீவில் கடற்படைத் தளம் அமைத்து இந்தியாவின் பாதுகாப்புக்கும், தமிழக மீனவர் நலன்களுக்கு நிரந்தரக் கேடாகவும் மாறிவிடக் கூடிய அபாயம் உள்ளது. எனவே இப்போதே இப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.

அதை விடுத்துக் கச்சத் தீவைத் தாரை வார்த்தது யார் என்று விவாதிப்பது லாவணி அரசியல். கச்சத்தீவின் கடல் அய்யனார் தான் நல்ல புத்தி கொடுக்க வேண்டும்!

விடிவெள்ளி நம்ம வெளக்கு … ஐலசா

விரி கடலே பள்ளிக்கூடம் … ஐலசா

அடிக்கும் அல நம்ம தோழன் … ஐலசா

கருமை மேகம் நமது குடை … ஐலசா

கச்சத் தீவு நமது பூமி.. ஐலசா! அய்யனாரு

மனசு வச்சா ஐலசா.. வெள்ளி மீனு தங்க மீனு

அள்ளி வரும் ஐலசா..

( நாட்டுப்புறப் பாடல்)'

Tags:    

Similar News